செய்தி: ஜூலை 06 புதன்கிழமை ரமழான் 30! ஜூலை 07 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள்!! மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வதந்திகளைப் பரப்புவது பாவம்!!! posted byS.K.Salih (Kayalpatnam)[06 July 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44226
வாட்ஸ் அப் மூலம் நமதூர் காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு அடியேன் தெரிவித்த தகவல்களை இங்கும் பகிர்ந்துகொள்கிறேன்...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்!
காயல்பட்டினத்திலிருந்து எஸ்.கே.ஸாலிஹ்!!
நமதூர் காயல்பட்டினத்தில் இன்றும் (ஜூலை 06 புதன்கிழமை), நாளையும் (ஜூலை 07 வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்களில் இரு சாராரால் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அது அவரவர் கோட்பாடுகளைப் பொருத்தது. அதில் தலையிட எனக்கு எந்தத் தகுதியுமில்லை.
ஆனால், நேற்று மஹ்ழரா - ஜாவியா & நகர உலமாக்களின் - ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சிறிதும் ஆராயாமல், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் பல்வேறு உண்மையற்ற தகவல்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வழியே பரப்பபட்டு வருவதோடு, அடியேன் சார்ந்துள்ள www.kayalpatnam.com இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதுகுறித்த செய்தி(http://www.kayalpatnam.com/shownews.asp?id=18060)யின் கீழும் கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தின் துவக்கம் முதல், கூட்டம் நிறைவுற்று அனைவரும் கலைந்து செல்லும் வரை அங்கிருந்தவன் என்ற அடிப்படையில், பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பான எனது மனப்பதிவுகள் சிலவற்றைப் பணிவுடன் முன்வைக்கிறேன்...
“ஒரு கொள்கை சார்ந்தவன்” என்ற நிலையில் எனது இப்பதிவைப் பரிசீலிக்காமல், “எக்கருத்தையும் சாராத ஒரு செய்தியாளன்” என்று கருதி படித்தால் மட்டுமே இதை விளங்க இயலும் என்ற முன் தகவலோடு துவக்குகிறேன்...
(1) விமர்சனம்:
இவர்கள் தமிழக அரசின் தலைமை காழீ என்ன முடிவை அறிவிக்கிறாரோ, அதை அப்படியே இங்கு அறிவிப்பார்கள். அம்முடிவு தவறாக இருந்தாலும் சரியே!
விளக்கம்:
கடந்த சுமார் 6 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரமழான் தலைப்பிறை, ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக நடைபெறும் மஹ்ழரா - ஜாவியா & நகர உலமாக்களின் கலந்தாலோசனைக் கூட்டுக் கூட்டத்தில் ஒரு செய்தியாளனாகக் கலந்துகொண்டிருக்கிறேன்.
தலைப்பிறை பார்க்கப்படவில்லை என சென்னை தலைமை காழீ பெருநாள் அல்லது நோன்பு தலைப்பிறை குறித்து அறிவித்த சில அறிவிப்புகளுக்கு மாற்றமாக, தலைப்பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்ற நேரங்களில் அதனடிப்படையில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
(2) விமர்சனம்:
தம் கொள்கையைச் சாராதவர்களின் தகவல்களைக் கண்டுகொள்வதேயில்லை.
விளக்கம்:
கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது தகவல்கள் - அவை யாரிடமிருந்து பெறப்பட்டாலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில், சந்தேகத்திற்கிடமளிக்கும் தகவல்கள் பெறப்பட்டால், எங்கிருந்து பிறை பார்க்கப்பட்டதாக தகவல் பெறப்பட்டதோ அப்பகுதியிலுள்ள ஜமாஅத்துல் உலமா சபைக்குத் தொடர்புகொண்டு தகவலை உறுதி செய்த பின்பே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
05.07.2016. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்திலும், தம் கொள்கையைச் சாராத சிலர் கன்னியாகுமரி அருகே பிறை பார்த்ததாக தகவல் பெறப்பட்டது. அது மாற்றுக்கொள்கையினரின் தகவல் என்று கண்ணை மூடிக்கொண்டு புறக்கணிக்காமல், அதன் உண்மை நிலை குறித்து குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையிடம் அத்தகவலை உறுதி செய்யக் கோரப்பட்டது. அவர்கள் முயற்சித்த பின், உறுதி செய்ய இயலவில்லை என்று தகவல் தந்த பின்பே அது நிராகரிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் பார்க்கப்பட்டதாக பெறப்பட்ட தகவலும் அங்குள்ள ஜமாஅத்துல் உலமா சபையால் உறுதி செய்யப்படாத நிலையிலேயே நிராகரிக்கப்பட்டது.
(3) விமர்சனம்:
05.07.2016. செவ்வாய்க்கிழமை இரவில் மஹ்ழராவில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஆலிம்களுக்கிடையே ஒத்த கருத்துக்கள் இன்றி, கருத்து மோதல் அதிகமாக இருந்தது.
விளக்கம்:
(அ) கூட்டத்தின் துவக்கம் முதல், பல பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆலிமும் தத்தம் அறிமுகத்தின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்து வந்தனர். 20.30 மணியான பின்பும் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், விரைவாக அறிவிப்பை வெளியிட சில பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
(ஆ) “தலைப்பிறை காணப்பட்ட தகவல்கள் பெறப்படாததால், சுமார் 19.30 மணியளவில் வெளியான - தமிழக அரசின் தலைமை காழீ உடைய அறிவிப்பு அடிப்படையில் முடிவை அறிவிக்கலாமே?” என்று முன்வைக்கப்பட்ட கருத்து பொறுமையுடன் நிலுவையில் வைக்கப்பட்டு, “பிறை பார்க்கப்பட்ட உறுதியான தகவல்கள் எப்படியேனும் கிடைத்திடாதா...? அதன்படி அறிவிப்பை வெளியிட்டு விடலாமே...??” என்ற ஏக்கம் கடைசி வரை இருந்தது. அதன் காரணமாகவே, கூட்டம் 20.45 மணி வரை நீடித்தது.
(4) விமர்சனம்:
காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளிக்கு வழமையாகத் தொழ வரும் ஒருவர் (பின்னர் இருவர் என்று கூறப்பட்டது) பிறை பார்த்த தகவலை கூட்டத்தில் தெரிவித்த பின்பும் அது கண்டுகொள்ளப்படவில்லை.
விளக்கம்:
கூட்டம் துவங்கியது முதல் நிறைவடைந்து அனைவரும் வெளியே கலைந்து செல்லும் வரை அடியேன் அங்குதான் இருந்தேன். வெளியிடங்களிலிருந்தெல்லாம் சில தகவல்கள் பெறப்பட்டு, அவற்றை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன.
இப்படியிருக்க, கூட்டம் முடிந்து கலைந்து செல்லும் வரை ஊரிலிருந்து யாரும் அங்கு வந்து பிறை பார்த்ததாக தகவல் தெரிவிக்கவுமில்லை; அவற்றை ஆலிம்கள் புறக்கணிக்கவுமில்லை. பொதுமக்களின் பலத்த எதிர்பார்ப்பு, அழுத்தங்களுக்கிடையே - உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்காத நிலையில், மறுநாள் நோன்பு என்று அறிவித்து கூட்டம் கலைந்தது. அதற்குப் பிறகு யாரோ வந்ததாகவும், சொன்னதாகவும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் பரப்பப்படுகிறது.
அடியேனின் மனதில் எழும் சில கேள்விகள்:
(1) ஆர்வத்துடன் பிறை பார்க்கும் யாருக்கும், அதற்கான முடிவு அறிவிக்கப்படும் இடம் மஹ்ழரா அல்லது ஜாவியா என்று கண்டிப்பாகத் தெரியும். அப்படியிருக்க, மஃரிப் தொழுத சில நிமிடங்களிலேயே பிறையைப் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகு 21.00 மணியளவில் வந்து தெரிவித்தது ஏன்?
(2) பிறை பார்த்தவருக்கு எங்கு சென்று சொல்வது என்று தெரியவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அதைக் கேட்டு உறுதி செய்தவர்களாவது குறித்த நேரத்தில் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே...?
இப்படியான அடியேனின் கேள்விகளையடுத்து, “ஏன்? பிறை பார்க்கப்பட்ட தகவல் தாமதமாகப் பெறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அனைவரின் அமல்களையும் பாழாக்கலாமா?” என்று கேட்கப்படலாம். (சிலர் கேட்டும் உள்ளனர்.)
இரவின் துவக்கத்திலேயே பார்க்கப்பட்ட பிறை குறித்து, ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை சொல்லாமலிருந்தது, மார்க்க அறிஞர்களுக்கு சந்தேகத்தைத் தராதா? எந்த அடிப்படையில் - அறிவித்த தமது முடிவை மறு பரிசீலனை செய்வர்? அவர்கள் இடத்தில் இருந்துகொண்டு சிந்தித்தாலேயொழிய இதற்கு விடை கிடைக்காது.
தமிழக அரசின் தலைமைக் காழீ உடைய தகவல்கள் பெருநாள் அறிவிப்பாக இருந்தால், அது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, எதனடிப்படையில் அவர் அறிவிப்பை வெளியிட்டாரோ அத்தகவலை தாமும் உறுதி செய்த பின்பே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அதே நேரத்தில், “நாளை பெருநாள் இல்லை” என்ற ரீதியில் யாரிடமிருந்து அறிவிப்பு பெறப்பட்டாலும், அது தொடர்பாக அவசரம் காண்பிக்காமல், பலத்த எதிர்ப்புகள் - மன உளைச்சல்களுக்கிடையிலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக நேரம் எடுத்து, வேறு எங்கிருந்தேனும் பிறை பார்க்கப்பட்ட தகவல் கிடைக்கிறதா என்று பார்த்த பின்பே பக்குவமாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவையனைத்தும், கடந்த சில ஆண்டுகளாக அடியேன் அவதானித்த அம்சங்கள். மனதில் பட்டதைத் தெரிவித்துவிட்டேன்.
யாரையும் தூக்கிப் பிடிக்கும் நிலையில் ஒரு செய்தியாளன் இருக்க மாட்டான் என்ற வரையறை அடியேனுக்கும் பொருந்தும்.
“பிறை பார்த்துதான் முடிவு எடுக்கப்பட வேண்டுமா?” என்பன போன்ற சர்ச்சைகளில் தலையிட இச்சிறியவனுக்கு எந்தத் தகுதியுமில்லை. ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டேன்... அங்கு அவதானித்தவற்றுக்கு முரணாக தகவல்கள் பரப்பப்பட்டதாலேயே இவற்றைக் கூற வேண்டியதாயிற்று!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross