தங்கமான தோழப்பா... posted byS.K.Salih (Kayalpatnam)[20 December 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45002
அனைவருக்கும் எஸ்.கே.மாமாவான - என் தந்தையின் மிக நெருக்கமான நண்பர்களுள் ஒருவர்...
என்னைக் காணும்போதெல்லாம், என் தந்தையுடன் - நண்பர்களாக தாங்கள் செய்த குறும்புகளை நகைச்சுவையாகச் சொல்லி மகிழ்வார்கள்... மகிழ்விப்பார்கள்...
என் தந்தையின் மறதியை வசதியாகக் கொண்டு இவர்கள் செய்த குறும்புகள் ஏராளமாம்!
அவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு, புதிதாகத் தைத்துக் கொண்டு வந்த சட்டைகளை நன்றாக சுருக்கம் போக்கி இஸ்திரி செய்து, சட்டைக் கொக்கியில் தொங்கவிட்டு வைத்திருப்பார்களாம். நண்பனைக் காணச் செல்லும் அவர்களது நெருங்கிய நண்பர்களான முட்டை மாமாவும் - மர்ஹூம் ஜமீல் மாமாவும் அந்தப் புது சட்டைகளை எடுத்து அணிந்துகொண்டு, தாங்கள் ஏற்கனவே அணிந்திருந்த சட்டையை மறைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் என் தந்தையுடன் அரட்டையிலிருப்பார்களாம். ஆனால் தன் சட்டையைத்தான் அணிந்திருக்கிறார்கள் என்பதை என் தந்தை கடைசி வரை உணரவே மாட்டார்களாம். பற்றாக்குறைக்கு, தான் சொருகி வைத்திருந்த கொக்கியில் புது சட்டையைத் தேடுவார்களாம்.
“புதூ சட்டைன்னு வச்சது மட்டும்தான் உங்கப்பனுக்கு நினைவில் இருக்குமே தவிர, அது என்ன கலரு... என்ன சைஸ்...ன்னு எதுவுமே அவனுக்குத் தெரியாதுடா...” என்பார்கள் முட்டை மாமா அவர்கள்.
இப்படி பலப்பல நிகழ்வுகளை மாமா சிரித்த முகத்துடன் கூறி மகிழ்வார்கள்.
அவர்களுக்கு சுகவீனம் ஏற்படுவதற்கு முந்தைய நாளிலும் இதுபோன்று என்னிடம் பேசத் தவறவில்லை.
“மாமா... காயல்பட்டினத்தில் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்றாங்க... அவங்கள்ல யாரு பூர்விகம், யார் வந்து குடியேறியவர்கள் என்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும்தான்! ஆனா... உங்க விஷயத்துல மட்டும் என்னால கண்டே புடிக்க முடியல மாமா...” - இது நான்!
“அடி செருப்பால! அடேய்... நா அசலூர் காரன்னா உங்கப்பனும் அசலூர் பயதான்டா...” என்று, அவர்களுக்கே உரிய ஸ்டைலில் உடனே விடையளிப்பார்கள்.
என் தந்தையின் ஒத்த வயதுடைய நெருங்கிய தோழரான இவர்களை, அவர்கள் வயதுக்காரர்கள் தமாஷ் செய்வது போல செய்யும் அளவிற்கு எங்களுக்கு உரிமை தந்து மகிழ்ந்தவர்கள்...
“15 வருஷங்களுக்கு முன்பு இவங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் ஏற்பட்டது... அன்னைக்கி டாக்டர்கள் அறிவுறுத்திய படி, இன்னை வரைக்கும் ஒரு கல்யாண சாப்பாட்டில் கூட தலை காட்டியதில்லை... அப்பேர்பட்ட பக்குவசாலிக்கும் இப்படியெல்லாம் நோய் வரத்தானே செய்கிறது...?” என்று நேற்று நல்லடக்கத்தின்போது பெரியவர் ஒருவர் என்னிடம் ஆதங்கத்துடன் கூறியது என்னவோ போல இருந்தது.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் மஹ்மூத் தீபி காக்கா, நண்பன் நூஹ் ரமளீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross