எங்கள் குடும்பத் தலைவி! posted byS.K.Salih (Kayalpatnam)[20 January 2017] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45143
எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் - என் தாய் வழியில் எங்கள் குடும்பத் தலைவி உம்மு ஹபீபா பெருமா அவர்களது இழப்பு எங்கள் குடும்பத்திற்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
கடந்த இரண்டாண்டுகளாக படுக்கையில் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு அல்லாஹ் நிம்மதியை வழங்கியுள்ளதாகவே நாங்கள் இதனை எடுத்துக்கொண்டோம்.
என் தாய்மாமா மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, பெண்கள் தைக்காவுக்காக அவர்கள் தனது நிலத்தையே நன்கொடையாக வழங்கியுள்ளது - இக்காலத்தில் பெரும் பெரும் செல்வந்தர்கள் கூட இலகுவாகச் செய்து விடாத பெரும் போற்றுதலுக்குரிய செயல்!
நம் முன்னோர்கள் - தமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இறையில்லங்களுக்கும், நற்காரியங்களுக்கும் நன்கொடையாக (வக்ஃப்) அடிப்படையில் வழங்கினார்கள். காலப் போக்கில் அவையெல்லாம் மறைந்து, இன்றோ... இருக்கும் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்பதே போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இப்படியான இன்றைய சூழலில், தன் குடும்பத்தில் பெண் மக்கள் அதிகமிருந்தும், வருங்காலத் தேவைகள் நிறைய இருந்த நிலையிலும் - அதையெல்லாம் சிறிதும் கருத்திற்கொள்ளாமல் எங்கள் பெருமா அவர்கள் - பெண்கள் தைக்காவிற்காக தாமாக முன்வந்து தன் நிலத்தை வழங்கினார்கள். அதில் இயங்கி வருவதுதான் எங்கள் நஹ்வியப்பா பெண்கள் தைக்கா.
அங்கு செய்யப்படும் அனைத்து நல்ல செயல்களும் என் பெருமாவும் செய்ததாகவே இறையேட்டில் எழுதப்படும் என்பதை நினைக்கையில் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க என் பெருமா அவர்கள் மர்ஹூமாவாக தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
மர்ஹூமா அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மகன் - எனதன்புத் தம்பி - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, என் அன்பு லாத்தாமார், தங்கை உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross