Re:...பேஷ் இமாம் - அவர் அதிகம் பேசாத இமாம் posted bymackie noohuthambi (kayalpatnam )[25 January 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45165
இன்றிரவு குருவிதுறைப் பள்ளி முன்னாள் இமாம் ஷேக் அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் வீட்டில் கத்முல் குர் ஆன் ஓத சென்று விட்டு திரும்பும்போது அவ்வளவு கூட்டத்திலும் ஒரு ஓரமாக நின்ற என்னை ஒரு சகோதரர் அடையாளம் கண்டு கொண்டு கொண்டு
''என்ன பேஷ் இமாம் அவர்கள் பற்றி உங்கள் பதிவுகளை காணவில்லையே அதை மிகவும் எதிர்பார்த்தேன்'' என்றார்.
உண்மைதான் சிலர் மனங்களில் சிலர்களின் தாக்கம் நம்மையும் அறியாமலே படர்ந்திருக்கும். அது நமக்கே தெரியாது. பேஷ் இமாம் அவர்களும் அப்படி பட்டவர்கள்தான். குருவிதுறைப் பள்ளி பேஷ் இமாமாக என் நினைவு தெரிந்த காலம் முதல் சில வருடங்கள் வரை அவர்கள் அந்த ஏரியாவில் வலம் வந்தது எனக்கு தெரியும். எங்கள் முஹல்லாவில் நடக்கும் சுக துக்கங்கள், விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சியை து ஆ ஓதி ஆரம்பித்து வைப்பார்கள் அல்லது அந்த நிகழ்ச்சியை து ஆ ஓதி முடித்து வைப்பார்கள். அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் நடையும் கூட பூமிக்கு வலிக்காத நடைதான். சதுக்கை தெருவிலிருந்து சொலுக்கார் தெருவுக்கு நடப்பதென்றாலே எவ்வளவு கஷ்டமாக தெரிகிறது இந்த காலத்தில். ஆனால் வாழ் நாளில் அதிகம் நடந்து இந்த நடை பயணத்தில் வெற்றி கண்டவர்கள் அவர்கள். அதுவே அவர்களின் நீண்ட ஆரோக்கியமான வாழ்வுக்கும் காரணமாக அமைந்திருந்தது.
பெருநாள்களில் நான் மணம் முடித்துள்ள முஹல்லாவில் தொழுது விட்டு பிறந்த முஹல்லாவிலும் போய் தொழுது நண்பர்களுடன் உறவாடுவது என்எ பெற்றோர்களை ஸியாரத் செய்வது என் வழக்கம். அப்போது மறந்து விடாமல் பேஷ் இமாம் அவர்களை என் கண்கள் தேடும். அவர்களை பார்த்தவுடன் அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தவர்கள் போல், ''அட, உன்னைக் காணோமே என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்பார்கள். எங்கள் கரங்கள் இணையும் முஸாபாஹாவுடன் சில சங்கைகளும் நடக்கும். இந்த வருடம் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை. ஏனோ அவர்களை சென்று பார்க்க நினைத்திருந்தும் கைகூடாமல் போய்விட்டது. உடல் நலம் குன்றியவர்களை உடனே பார்த்து விட்டு வரவேண்டும் என்ற உணர்வுகள் சில நேரம் மழுங்கி விடுகின்றன...எங்கள் தந்தை அவர்களுடன் மர்ஹூம் பேஷ் இமாம் அவர்களுக்கு இருந்த தொடர்பு நேசம் பழைய உறவுகளை பேசிக் கொண்டிருக்கும் பாங்கு என்னை கவர்ந்த காலங்கள் உண்டு...இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
95 வயது என்று நிறைவான வாழ்வை வாழ்ந்து நூற்றாண்டின் விளிம்பில் நின்று கொண்டு இன்று விடை பெற்றுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குருவித்துரைப்பள்ளி, புகாரி ஷரீப் இருக்கும் காலமெல்லாம் பேஷ் இமாம் அவர்களின் பேரும் நிலைத்திருக்கும். என்னதான் 95 வயது வரை வாழ்ந்து மறைந்தாலும் ஒரு குடும்பத்தலைவரை இழந்து விடுவது என்பது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி விரிவாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross