சொற்பொங்கல்! posted byS.K.Salih (Kayalpatnam)[30 January 2017] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45174
பொங்கும் பெருவெள்ளமாய், தங்குதடையின்றி தமிழ் உணர்வு மழையாய்ப் பொழிந்துள்ளது!
சகோதரியின் வழமையான கட்டுரைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளதாகவே நான் உணர்கிறேன். மற்ற கட்டுரைகளெல்லாம் - அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ப உருவான சிந்தனைகளின் வெளிப்பாடாக இருந்திருக்க, இதுவோ உணர்வுப் பெருக்கால் தானாக தட்டச்சானது போல் தெரிகிறது.
பேச்சுப் போட்டியில் முதற்பரிசுக்குத் தகுதியான எட்டாம் வகுப்பு மாணவி ஓங்கி ஒலிப்பது போலுள்ளது வாசகங்கள்!
முந்தைய கருத்தில் ஒரு சகோதரி சொன்னது போல, பலரது எண்ணங்களில் உள்ளதை அனைவர் சார்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!
தொடரட்டும் தங்கள் எழுத்துச் சேவை!
இதே உணர்வின் வெளிப்பாட்டால்தான், காயல்பட்டினத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலில் (எனக்குள்ள சில அலுவல்களுக்கிடையிலும்) 4 நாட்களிலும் என்னால் இயன்றளவுக்கு மாணவர்கள் - இளைஞர்களுடன் அமர முடிந்தது.
நிறைவு நாள் போராட்டத்தின் நிறைவில் நள்ளிரவின் விளிம்பில் - அனைவரும் கருத்துரையாற்றிய வரிசையில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“அன்பார்ந்த சகோதரர்களே...!
ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இருந்துவிட்டால் இந்தப் போராட்டம் பொருளற்றதாகிவிடும். எனவே, இந்த சங்கமத்தை தமிழர் என்ற அடிப்படையில் நமது - நமதூரினது - நம் நாட்டினது மேம்பாட்டிற்காக ஏதோ ஒரு வகையில் சிந்தித்தவர்களாக - தெளிவான முடிவோடு இங்கிருந்து நாம் கலைந்திட வேண்டும்.
அந்த வகையில், இப்பந்தலில் இருப்பவர்களேனும் இனி வருங்காலங்களில் பன்னாட்டுக் குளிர்பானங்கள், உள்நாட்டு உணவுப் பொருட்களின் சந்தையை நாசமாக்கும் வகையிலான பன்னாட்டு வரவுகள் அனைத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்திட உறுதி எடுப்போம்!
யாரும் அழைக்காத நிலையில் - உணர்வு மேலீட்டால் கடந்த 4 நாட்களாக நாம் இப்பந்தலில் இரண்டறக் கலந்துள்ளோம். நம்மில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், மதங்களை நம்பாதோர் என அனைவரும் உள்ளோம். இத்தனை மத - ஜாதி வேறுபாடுகளுக்கிடையில் நம்மை இணைத்துள்ளது தமிழன் என்ற உணர்வு ஒன்றுதான்!
இந்த உணர்வு போராட்டம் முடிந்த பின்பும் தொடர வேண்டும்.
குறிப்பாக, (இறைவன் காப்பாற்ற வேண்டும்!) இந்த ஊரில் இரு சாராருக்கிடையில் ஒரு பிரச்சினை உருவாகிறது என்றால் - அதைத் தூண்டுபவர் ஒருபோதும் களத்தில் நிற்க மாட்டார். மாறாக, உங்களுக்கெதிராக எம்மையும், எங்களுக்கெதிராக உங்களையும்தான் தூண்டி விடுவார்கள். நாமும் அறிவுக்கு வேலை கொடுக்காமல், உணர்ச்சிக்கு அடிமையாகி நமக்குள் பகைத்துக்கொள்வோம். நமதூரில் இது அடிக்கடி இல்லை என்றாலும், ஓரிரு முறை இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.
இனி இந்நிலை தொடரக் கூடாது. அநியாயமாக நம்மில் ஒரு சாரார் பாதிக்கப்பட்டால், மறு சாரார் திரண்டு வந்து பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும். அவ்வாறு நாம் இருந்துவிட்டால், நம்மை எந்தத் தீய சக்திகளும் பிரிக்க இயலாது...
மற்றொன்று: எந்த ஒரு பொருளையும் - அது நமக்குத் தேவையா என்று முதலில் சிந்தித்து முடிவெடுத்த பின்னரே அதைப் பயன்படுத்த முயல வேண்டும். பார்ப்பது எல்லாம் வேண்டும் என்று ஆசைப்பட்டவன் வாழ்க்கையில் தோற்றுப் போவான்.
இயன்ற வரை நமக்குத் தேவையான பொருட்களை - எடுத்த எடுப்பிலேயே கடைக்குச் சென்று வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நம் உழைப்பைக் கொண்டே அவற்றைப் பெற இயலுமா என்று சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக, ஒரு தக்காளியோ அல்லது கத்தரிக்காயோ வேண்டுமென்றால், அதை ஏன் நம் வீட்டு மாடியிலேனும் பயிரிடக் கூடாது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இதுபோன்ற சிந்தனைகள் நம்மை ஆட்கொண்டால், நம் வாழ்வு சிறக்கும்! நம் பொருளாதாரம் தேவையற்ற செலவுகளிலிருந்து பாதுகாக்கப்படும். நம் விருப்பப் படி வாழ முடியும்! எந்தவொரு சூழலும் நம் வாழ்வைக் கடுகளவும் பாதிக்க முடியாது!”
இவ்வாறு பேசினேன். அதை, பந்தலிலிருந்த அனைத்து சமயத்து இளைஞர்களும், மாணவர்களும் மனதார ஏற்று, அதை வழிமொழிந்தும் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross