Re:...அமீரகத்தில் அமீருத்தீன் posted bymackie noohuthambi (kayalpatnam )[11 May 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45516
1999 ஆண்டு அது. அரபகத்தில் பணி ஒய்வு பெற்று அமீரகம் வழியாக தமிழகம் வரும் எனது பயணம்.
அமீருத்தீன் ஆலிம் அவர்களை பார்க்க வேண்டுமே என்று என் நண்பர் ஒருவரை கேட்டேன். 6 ஆம் நம்பர் பேருந்தில் செல்லுங்கள் துபாயையும் சுற்றி பார்க்கலாம் அமீருத்தீன் வீட்டையும் பார்க்கலாம் என்றார். சொன்ன விலாசம் புதிது என்றாலும் சொன்ன செய்தி உண்மையானது. பேருந்து கடைசியாக தனது வழி தடத்தை முடித்துக் கொண்டபோது அமீருத்தீன் அவர்கள் வீட்டுக்கு வழி மிக இலகுவாக இருந்தது. முகமன் கூறி வரவேற்றார். அவருக்கு இரண்டாவது மகன் பிறந்திருக்கும் செய்தியுடன் பிள்ளையையும் கையில் தந்தார். து ஆ செய்து விட்டு புறப்பட ஆரம்பித்தபோது எனது பசியை உணர்ந்தவர்போல் பசியாறி விட்டு போகலாமே என்றார். அந்த நேரத்தில் அது தேவையாகவும் இருந்தது.
இடைவேளையில் எங்கள் பேச்சு மார்க்க விஷயத்துக்கு திரும்பியது. ஒரு ஆலிமுடன் பேசுகிறோம் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் தம்பியுடன்தானே பேசுகிறோம் என்ற தைரியம் மறுபக்கம். ''அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசுவது அவர்கள் உள்ளதை உடைப்பது புனிதமான கஃபத்துல்லாவை உடைப்பதை விட கொடுமையானது'' என்கிறார்களே என்றேன். எந்த நூலில் படித்தீர்கள் என்று கேட்டார். நூல் பெயர் ஞாபகம் இல்லை. உண்மைதானா என்றேன். உண்மைகளை உரக்க சொன்னாலுமா என்றார். உண்மைகள் சொன்னால் சிலவேளை கசக்கும் சிலவேளை உறைக்கும் இப்போது அவர் கேட்டது எனக்கு இனித்தது. பசியாறி விட்டு புறப்பட்டபோது அவர் முக வசீகரம் குரல் வசீகரம் அவர் குத்பா பேருரை அதிலுள்ள அழுத்தம் எல்லாமே என் கண் முன்னால் வந்து சென்றது.
மிராஜ் தினத்தில் புகாரி ஷரிஃப் நிகழ்வுகள் முடிந்தபிறகு அவர்களது சகோதரருடன் அவரை பார்க்க அவர் இல்லத்துக்கு வந்தபோது அவரது படுக்கையில் அவரை பார்த்தபோது பகீரென்றது. அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு அவருக்கு சமாதானம் கூறி ஊரிலிருந்து முதன் முதலாக உமராபாத் சென்று ஓதி பட்டம் பெற்று வந்தவர் என்ற குறிப்பையும் அவர் வாப்பாவுக்கும் எனக்கும் சாச்சப்பா மகன் என்பதையும் தாண்டி ஒரு பாச உணர்வு இருந்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு எனது உடல் நலத்துக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்படி வேண்டிக் கொண்டேன். நோயாளிகளின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் அவர்கள் துஆ க்களை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் என்ற உண்மை என்னைவிட அவருக்கு நன்கு தெரியும். ஆனாலும் அதுதான் அவரது மரணப் படுக்கை என்று எனக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை ஏனென்றால் மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. DEATH DOES NOT BLOW A TRUMPET.
அவரது வபாத் செய்தி கேட்டு அவரது ஜனாஸா வை பார்த்து விட்டு வந்த பிறகு என் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தான் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். ஆனால் எல்லோருடனும் சமமாக சகோதர வாஞ்சையுடன் பழகுபவர். அவர் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது. அவ்வளவு தான தருமங்கள் செய்வார் என்று மனதார புகழ்ந்தார்கள். எனது கண்கள் குளமாகின.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளை பொறுத்துக்க கொள்வானாக. அவரது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவருக்கு மேலான சுவர்க்க பதியை தங்குமிடமாக ஆக்கி வைப்பானாக. அவர்களை இழந்து வாடும் மனைவி மக்களுக்கும் சகோதரர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross