விளம்பர வெளிச்சமின்றி சேவை செய்தவ உத்தமர்! posted byS K Shameemul Islam (Chennai)[18 February 2020] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46493
காயல்பட்டனத்தின் எஸ்.எம்.செய்யத் அஹ்மது என்ற SMS காக்கா அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று உலகைப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்பற்றிய பற்பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது;
மனம் கனக்கிறது.
இரவு இரண்டு மணி ஆகும் போது தூக்கம் களைந்து அவரது சிந்தனைகள், அதாவது கடந்த 40 ஆண்டுகால தஃவா பணியில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பேச்சும் எல்லாமும் நம் மனக்கண்முன் வந்துகொண்டே இருக்கிறது.
அது 1980 -ஆக இருக்கலாம். ஏகத்துவ கொள்கையில் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பில் அஷ்ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் செயல்பட்டவர். காலத்துக்கேற்றாற்போல அமைப்புகள் மாறிக்கொண்டு இராமல் இன்றுவரை அவ்வமைப்பிலேயே இருந்து வந்தார்.
1990- களில் காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் ஆரம்ப காலக்கட்டங்களில் பலவகையிலும் பெரும்பங்காற்றியவர் இவர்.
அதே காலங்களில் அல்-ஜாம்வுல் அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதின் பணிகளிலும் தன்னை வெகுவாக இணைத்துக்கொண்டார்.
கொள்கை என ஒன்றை விளங்கிவிட்டால் கூட்டம் சேரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். தனியாளாக அதை முன்னெடுப்பதில் தயங்கவும் மாட்டார். மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்டுவதில் இவரது பங்களிப்பு அக்காலத்தில் மிக அதிகமாக இருந்துவந்தது.
இவரது இளம் வாலிப பருவத்தின்போது மாணவர்கள் மத்தியில் சீர்திருத்தப்பணிகளையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அன்று விதைத்து வந்த இந்தியமாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பேராதரவாளராக இருந்துவந்தார்.
சென்னை என்.எஸ்.சி. போஸ்ரோடில் உள்ள பாரிஸ் எல்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பங்காளியாக இருந்தபோது அவரது இருக்கையைச்சுற்றி எப்போதும் மார்க்க அறிஞர்களும் அறிவுசான்றோரும் அமர்ந்த வண்ணமிருப்பார்கள். முறைப்படி அவர்களை உபசரித்து ஊக்கப்படுத்தி மார்க்க விடயங்களை அவர்களிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்.
சென்னையில் சிலதினம் தங்கி தமது மார்க்கப் பணிகளையும் சொந்த வேலைகளையும் செய்வதற்காக வரும் பல அறிஞர்களுக்கு தனது சொந்த இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவார்.
எல்லோரிடமும் பேசும் இயல்புடையவர் அல்ல இவர். ஆனால் பேசவேண்டிய ஆள்களிடம் பேசும் விசயத்திற்காக மணிக்கணக்கில் உரையாடவும் செய்வார்.
அல்லாஹ் அவருக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு வெறும் இலாபக்கணக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்காமல் அப்போதைக்கப்போதே நற்பணிகளுக்காகவும் நற்செயல்கள் புரிவோருக்காகவும் வாரிவழங்கி மகிழ்ந்தவர்.
இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிற்காக அதிகளவு பொருளுதவி செய்தவர்.
இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிந்தனைகளையும் தான்மட்டும் படித்துவிட்டு விட்டுவிடாமல் பல நூல்களை மூல மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு கொண்டுவந்தார். அதற்காக ஃபுர்கான் பப்ளிகேஷன் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தையும் சென்னை மண்ணடியில் அமைத்து பற்பல இஸ்லாமிய நூல்கள் வெளிவர காரணமாக இருந்தார்.
வட்டியில்லா பொருளாதாரத்திட்டத்தை 1990-களில் நடைமுறைப்படுத்த விளைந்தோரில் இவரும் நினைவு கொள்ளத்தக்கவர்.
பிறகு காயல்பட்டணத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட இவர் துஃபைல் காம்ப்ளக்ஸ் வளாகத்தை தனது வருவாய்க்காக கட்டி அதில் ஓர் உள்ளரங்கையும் ஏற்படுத்தினார். ஆக்கப்பூர்வமான பல சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு அதை விட்டுவந்தார்.
நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவி மூலமும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் உண்மையை உரக்கச் சொல்வதில் அவர் ஓய்ந்திருக்கவில்லை. இப்படி இவர் பற்றிக்கூற இன்னும் பல உண்டு.
இவரது திடீர் மரணச்செய்தி எம் போன்ற அனைவருக்கும் தாங்கவியலாத வழியை ஏற்படுத்தி விட்டது. அல்லாஹ் வழங்கியதை திரும்பப்பெறும் அதிகாரமும் தகுதியும் அவனுக்கே உரியதாகும்.
கருணையாளனாகிய அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி, அவரது நற்செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு, அன்னாரது கேள்வி கணக்குகளை எளிதாக்கி, கப்ருடைய வாழ்வை விசாலமாகவும் சுவனப்பூங்காவாகவும் மாற்றி, மறுமை வாழ்வில் உயரிய சுவனபதியில் அன்னாரை நிரந்தரமாக ஒய்வெடுக்கச் செய்வானாக.
அன்னாரின் பேரிழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் - ‘ஸப்ரன் ஜமீலா’ என்னும் அழகிய பொறுமையைக் - கொடுத்து அருள்வானாக.
அன்னார் விட்டுச்சென்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்யும் மன உறுதியை அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலோன் அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross