கணக்காசிரியர்! posted bySK Salih (Kayalpatnam)[04 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5750
எனதன்பிற்குரிய ஆசிரியர் இருதயராஜ் அவர்களிடம், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்றாண்டுகள் கணக்கு பாடம் கற்றுள்ளேன். எங்கள் பள்ளிக்காலத்திற்குப் பின்புதான் தமிழாசிரியராக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். சகோதரர்கள் குறிப்பிட்டது போல, கண்டிக்கத் தெரிந்த அவர் கனிவின் இலக்கணமாகவும் திகழ்ந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹனீஃபா சார் அவர்களின் மகனது திருமணம் ஆறுமுகநேரி அன்னை கல்யாண மண்டபத்தில் நடந்தது. (பழைய சாந்தி திரையரங்கம்தாங்க அது! வாரந்தோறும் வியாழன் மதியம், சனி மதியம் மட்டும் எங்களுக்கு அங்குதான் க்ளாஸ் நடக்கும்... ஒரு வாரம் கூட ஆப்சண்ட் ஆனதேயில்லைன்னா பார்த்துக்கோங்க...)
அங்கு எமதன்பு வாத்தியார் இருதயராஜ் அவர்களை அவர்களது மனைவி மற்றும் மகள் சகிதம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. “அம்மா, உங்க ஆத்துக்காரரிடம் நாங்கள் கற்ற காலம் பொன்னானது... அப்போது பெற்ற படிப்பை விட, நான் வாங்கிய அடி அதிகம்...” என்றேன். அனைவரும் சிரித்தனர். “எலே... அந்த அடியைப் பத்தி இப்ப என்னலே சொல்றே...?” என்று கேட்டார் சார் அவர்கள். “இன்றைய மாணவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் சார்... அந்த அடிதான் எங்களை இந்தளவுக்காவது கட்டுப்படுத்தியது... இன்று அதற்கு அரசு தடை விதித்து விட்டதால், மாணவர்களின் கட்டுப்பாடு வெகுவாகக் குறைந்து வருகிறது...” என்றேன்.
“என் பையன் சொல்றத கேட்டுக்கிட்டீங்களா...?” என்று தன் குடும்பத்தாரிடம் அவர் மகிழ்வோடு சொன்னார்.
அதே திருமணத்தில், நான் பாடாய்ப்படுத்திய என் அன்பு (அப்போதைய) தலைமையாசிரியர் திரு.ஞானய்யா அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது... பார்த்ததும் கட்டியணைத்துக் கொண்டார். சுமார் 2 நிமிடங்கள் அந்த இதமான அணைப்பு கிடைத்தது. “நாம மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக நடந்திருந்தால், நமது மாணவப் பருவத்திலேயே இந்த அணைப்ப கிடைத்திருக்குமே...” என்று அப்போதுதான் உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.
அங்கு, என் வாழ்வில் ஒளியேற்றிய மற்றோர் ஆசிரியரையும் தேடினேன்... தேடினேன்... கடைசி வரை காணக் கிடைக்கவேயில்லை.... அங்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தபோதுதான் அவர் சில காலங்களுக்கு முன்னர்தான் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கண் கலங்கினேன். அந்தத் திருமுகம், எங்களுக்கு ஆங்கில அரிச்சுவடியை மனதிலேற்றிய அன்பு ஆசான்... பெயரிலேயே “திரு”வைக் கொண்ட திருமலை சார் அவர்கள்...
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்காக திருநெல்வேலி ரயிலுக்குக் காத்துக்கொண்டிருந்தோம் நானும், எனது சாச்சப்பா ஹாஜி கம்பல்பக்ஷ் பாக்கர் சாஹிப் அவர்களும். அப்போது திருமலை சார் அங்கு வந்தார்கள்... என்னைப் பார்க்கும் முன் என் சாச்சப்பாவைப் பார்த்துவிட்ட அவர்கள், “என்னப்பா பாக்கர் ஸாஹிப், நல்லா இருக்கியா...?” என்று கேட்டதும், “சாச்சப்பா எங்க சாரை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று நான் கேட்க, “அட, அது சரி... அவங்க முதல்ல எங்களுக்கு சார்... நீயெல்லாம் அப்புறம்தான்....” என்றார்கள். அதுதான் நான் திருமலை சாரை கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு எனக்கு அவர்களைக் காணக் கொடுத்து வைக்கவில்லை.
அன்பின் ஆசிரியர் இருதயராஜ் அவர்கள், தனது எஞ்சிய வாழ்வை வழமைபோல சமூக நலப்பணிகளில் கழிப்பார்... அவரும் எங்களுக்கு கற்றுத் தந்ததுதான் இந்த சமூகப்பணிகள்... நேரான வழியில் அவர் சீரான நடைபோட்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross