நம் ஊருக்கு அவசியமற்றது இந்த சாக்கடை திட்டம். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[02 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6614
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகராட்சியில் நீண்ட காலமாக பணி புரிந்து வரும் தற்கால பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் கூடுதல் ஊதியம் கொடுப்பதாக தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலுக்கும், விலைவாசிகளுக்கும் ஏற்றவாறு கால சூழ்நிலையை அனுசரித்து ஊதியத்தை கூடுதலாக கொடுப்பதால் அவர்கள் முழுமனதோடு பணியை செவ்வனே செய்ய வழி வகுக்கும் - மேலும் அவர்கள் பணியில் ஏதும் குறை ஏற்பட்டால் நிர்வாகமும் முறையாக அதை தட்டி கேட்க, கண்டிக்க ஏதுவாகும்.
நடப்பு நகராட்சியின் பதவி காலம் முடியும் முன்பு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்திருப்பது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும்.
------------------------------------------
பாதாள சாக்கடை திட்டம் விளக்கம்:
பாதாள சாக்கடை திட்டம் என்பது " மிகவும் சிறந்த திட்டம் " என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பார்கள் உண்மைதான். பாதாள சாக்கடையை முறையாக உருவாக்கி , முறைப்படி உபயோகித்தால் அது சிறந்ததாகும்.
பாதாள சாக்கடை என்பது பூமிக்கடியில் போடப்படுவது அதுவும் குறிப்பிட்ட அடிகள் அளவுக்கு கீழே (மறைவிடம் - HIDING PLACE) இராட்சசக் குழாய்களை பொருத்துவார்கள். அது பல மைல்கள் தூரம் சென்று ஊருக்கு வெளியே போய் கழிவுகளை கொட்டும். அது போகின்ற வழியில் எல்லாம் பல சந்திப்புகள் ( JUNCTION - MAN HOLE ) உருவாக்கபட்டிருக்கும் அடைப்புக்கள் ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்காகவும் - பல திசைகளிலுமிருந்து வரும் குழாய்களை இணைப்பதற்காகவும்.
ஒவ்வொரு தெருக்களிலிருந்தும் இந்த இராட்சசக் குழாய்கள் வரும் - இந்த இராட்சசக் குழாயில்தான் வீடுகளிலிருந்து வரக்கூடிய கழிவு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த திட்டத்தில் செயல்படக்கூடிய எந்த குழாயும் வெளியே தெரியாது மிக குறைந்த பட்சம் மூன்று அடி ஆழமிருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குடிநீர் குழாய் வருவதுபோல் வராமல் பல வீடுகளிலிருந்தும் கூட்டாக பெரிய குழாய் வழியாக வந்து தெருவில் உள்ள இராட்சச குழாயில் இணைக்கப்பட்டு வெளியேறும்.
ஊருக்கு வெளியே விடக்கூடிய அந்த சாக்கடைக் கழிவுகளை முறைப்படி சுத்திகரித்து அழிக்கணும் இல்லாவிட்டால் பெரும் வியாதிகள் வரும். அப்படி முறையாக சுத்திகரிக்காவிட்டால் நமது ஊரும் நம்மை சுற்றியுள்ள ஊரும் துர்நாற்றத்தால் நிறைந்து காணப்படும். சுருக்கமாக சொன்னால் சென்னையிலே கூவம் (ஆறு) துர்வாடையை வீசுகிறதே! அதைவிட மேலாக இங்கே வீசும்.
------------------------------------------------
நம் நாட்டிலே எங்கே இருக்கிறது பாதாள சாக்கடை ?????
தலைநகர் சென்னையிலே கூட செயலில் இல்லை இந்த திட்டம். எங்கேயுமே பாதாளத்தில் இல்லை - மேல் தளத்தில்தான் இருக்கிறது.
உதாரணத்திற்குகூட ஓர் ஊரையும் காட்ட முடியாது. எங்கு பார்த்தாலும் தெருக்களின் இரு பக்க ஓரமும் சாக்கடைகளை உருவாக்கி அதன் மேலே கருங்கல்லால் அல்லது காங்கிரிட்டால் மூடி போட்டு மூடி இருப்பார்கள் அதுவும் பெரும்பாலான இடங்களில் திறந்தேதான் இருக்கும்.
எனவே நம் நாட்டிலே பாதாள சாக்கடை என்பது எங்குமில்லை சாதாரண சாக்கடை அதாவது தொடர் சாக்கடைதான் செயலில் இருக்கிறது. எல்லா இடங்களும் திறந்த வழி சாக்கடையாக இருப்பதால் பொறுப்பற்ற மக்கள் குப்பையைக் கூட சாக்கடையில்தான் கொட்டுகிறார்கள்.
தலைநகர் மட்டுமல்ல பெரிய நகரமோ , சிறிய நகரமோ எதிலும் இந்த சாக்கடையால் யாரும் முழுப் பயனடைந்ததில்லை. மாறாக துர்நாற்றமும் , கொசுக்களும் - ஏன் பன்றிகளின் ஆதிக்கமும்தான் பெருகி இருக்கிறதே தவிர பயனில்லை.
மழை வந்துவிட்டால் தெருக்களிலே யாரும் நடக்க முடியாத அளவிலே ஜலங்கள் அல்ல மலங்கள்தான் அதிகமாக மிதக்கும். இந்த சாக்கடை முறைதான் இன்று நமது நாட்டிலே இருக்கிறது.
---------------------------------------
நம் ஊருக்கு அவசியமற்றது இந்த சாக்கடை திட்டம்.
நம்முடைய ஊரின் , சுகாதாரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மற்றும் ஊரின் அமைப்பிற்கும் பொருந்தி வராது இந்த திட்டம்.
சுகாதாரம் : நம்ம ஊரைப் பொறுத்தவரை குப்பைகளை தெருக்களிலே முறையற்றபடி கொட்டி கேடு விளைவிக்கிறார்களே தவிர மற்றபடி பன்றி, நாய் போன்ற மிருகங்களின் தொல்லைகள் இல்லை எனலாம். மேலும் மற்ற ஊர்களை ஒப்பிடும்போது நம்ம ஊர் ரொம்ப மோசமில்லை. இருந்தாலும் இந்த சாக்காடை திட்டம் வந்தால் நிலைமை தலை கீழாகும்.
கலாச்சாரம்: நம்ம ஊரின் கலாச்சாரத்திற்கு இந்த திறந்த வெளி சாக்கடை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உதாரணத்திற்கு திருமணம், மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் பல விசேசங்களுக்கு நாம் தொன்று தொட்டு தெருக்களையே பயன்படுத்தி வருகிறோம். இந்த சாக்கடை திட்டம் வந்தால் நம்முடைய கலாச்சாரத்திற்கு குந்தகம் ஏற்படும்.
ஊரின் அமைப்பு: நம்முடைய ஊரின் அமைப்பிற்கும் நம் நாட்டில் உள்ள பிற ஊர்களின் (ஒரு சிலதை தவிர) அமைப்பிற்கும் பெரும்கொண்ட வித்தியாசமிருக்கிறது.
வீடுகள் 'அளவிலே' சிறிதாக இருந்தாலும் மற்ற ஊர்களைவிட கட்டுமான அமைப்பிலே வேறுபாடுகள் இருக்கிறது.
எந்த ஒரு வீடும் (ஒரு சிலதை தவிர) மூன்று பக்கமும் வாசல், ஜன்னல் இல்லாமல் இருக்காது.
ஊரில் நான்கு அல்லது ஐந்து வீடுகள் தவிர மற்ற எல்லா வீடுகளும் இரண்டு, இரண்டாக ஒட்டிய வீடுகளாகவே இருக்கும்.
இரண்டு வீடுகளுக்கு ஒரு இடை வெளி நான்கு, ஐந்து அடியில் இருக்கும் அது அல்லாது தொடர் வீடுகள் எங்கும் இல்லை.
இன்னும் பல விசேச அமைப்புகளை பெற்ற ஊராக இருப்பதால் இந்த சாக்கடை திட்டம் செயல் வடிவம் பெறாது.
மேலும் முறையான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதனுடைய செலவு திருச்சி மாநகருக்கோ அல்லது மதுரை மாநகருக்கோ சாக்கடை திட்டத்திற்கு செலவாகுவதை விட கூடுதல் செலவே இதற்கு ஆகும் என்பதை உணர வேண்டும்.
நம் ஊரின் மண்வளம் சிறப்பு மிக்கது இப்போது நடைமுறையில் இருக்கும் கழிவு நீர் தொட்டிகளினால் அதிக அளவிலே எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை பாதிப்பு இருக்குமானால் அதற்கு வேறு வழியில் தீர்வு காணலாமே தவிர பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத , எங்குமே எந்த ஊரிலுமே நன்மையையை உண்டு பண்ணாததை புதியதாக நம் ஊருக்கு அறிமுகப்படுத்த வேண்டாம்.
இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று பக்கங்களிலிருந்தும் வரக்கூடிய (சுகாதார) காற்றை துர்வாடையும் , நச்சும் கூடிய காற்றாக மாற்றிட வேண்டாம்.
--------------------------------------------
நகர் மன்ற அங்கத்தினர்களே!.
காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து கடிதம் பெறப்பட்டு இருப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறீர்கள்.
நிர்வாக ஆணையரிடமிருந்து வந்திருக்கும் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் - பதில் கொடுக்காமல் கிடப்பில் போட முடியாது என்றாலும் ஊரின் கலாச்சாரத்தையும் அதற்கும் மேலாக ஒட்டு மொத்த மக்களின் சுகாதாரத்தையும் மனதில் கொண்டு இந்த திட்டம் நம் மக்களுக்கு அவசியமில்லை என்பதை விளக்கி கூறி அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவர்மீதும் கடமையாகும்.
அரசாங்கமும் , மேல் அதிகாரிகளும் போடக்கூடிய ஆணைகளை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள்தான் நகராட்சி ஆணையர்கள். அவர்கள் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட சூழ்நிலை சந்தர்ப்பங்கள் அவர்களை நல்லது செய்ய விடாமல் தடுக்கும். ஆனால் மக்கள் பிரதிநிதியாகிய நீங்கள்தான் மக்களின் நன்மையைக் கருதி செயல்பட வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.
இப்போதுள்ள நகராட்சியின் பதவி காலம் முடியும் முன்பு உங்களால் ஊருக்கும் , மக்களுக்கும் என்னென்ன நன்மைகளை செய்ய முடியுமோ அவைகளை செய்து வருங்காலத்திலே நல்லதொரு நகர் மன்றம் செயல்பட ஒத்துழையுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross