எங்குமில்லை முழுமையான பாதாள சாக்கடை திட்டம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[12 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6808
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் செய்து அஹ்மது அவர்களின் கருத்துக்களை விமர்சிக்கவில்லை (செய்தி ID 6887 கருத்து எண் 1 )அதே நேரத்தில் விளக்கம் தர விரும்புகிறேன். பாதாள சாக்கடை திட்டம் என்பது நீங்கள் விளக்கமாக , விலாவாரியாக எழுதியிருக்கும் - பூமிக்கடியில் காற்றுக்கூட புகாத - இடத்தில் அமைக்கப்படும் சாக்கடை ஓட்டம்தான் அதிலே கருத்து வேறுபாடு இல்லை.
இதை என்னுடைய வேறு ஒரு பதிவில் தாங்கள் எழுதியிருப்பது போன்றே ஓரளவு விளக்கமாக கூறியிருக்கிறேன் ( செய்தி I.D.6826 வாசகர் கருத்து எண் 11 ) தாங்கள் அதை படித்துப் பார்ப்பது நல்லது.
என்னுடைய விளக்கம் நம் நாட்டிலே போடக்கூடிய திட்டத்திற்கானது - உங்களுடைய விளக்கம் உலக (International) அளவிலே செயல்படக்கூடிய முறையான திட்டம்.
-------------------------------------------
சகோதரரே! உங்களுடைய விளக்கப்படி " முறையான திட்டம் " நம்ம ஊருக்கு நீங்கள் கூறி இருக்கும் அத்தனை அம்சங்களையும் சேர்த்து அமல் படுத்த வேண்டும் என்றால் அதற்கு தேவையானவை :
திட்டத்திற்கான மொத்தத் தொகை தோராயமாக = 13 ஆயிரம் கோடி ரூபாய்.
திட்டத்திற்கான ஆய்வு பணியின் காலம் ...............= 2 - 3 வருடங்கள் ஆகும்.
திட்டம் அனுமதி, திட்டத் தொகைக்காக அரசாங்கம் மற்றும் வெளிநாட்டுக்கடன் பெற ஏற்பாடு இப்படியாக அதிலிருந்து இன்னும் 2 வருடம்.
ஆக ஐந்து வருடம் கழித்து பணிகள் துவங்கிய பின் அதை அரசாங்கம் சில காரணங்களுக்காக நிறுத்தி மீண்டும் தொடங்கி, அதன் பின் பொது மக்கள் சில காரணத்தை காட்டி பணியை நிறுத்த இப்படியாக அதிலே குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடமாகும் ஆக மொத்தம் பத்து அல்லது பதினோரு வருடமாகும்.
அப்படி காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை ஊருக்கு நல்லதுதானே என்கிறீர்களா ? ஆனால் நம்ம ஊருக்கு அவ்வளவு தொகையை அரசாங்கம் தராதே. ஏன் என்றால் மொத்த தமிழகத்துக்கும் அந்த தொகைக்குள் திட்டத்தை நிறைவேற்ற போகிறார்களே!!.
--------------------------------------------
இப்பொழுது நம் அரசாங்கம் அறிவித்து இருக்கின்றபடி பாதாள சாக்கடை திட்டம் - " முறையாக ,முழுமையாக " - செயல்படவேண்டும் என்றால் அதற்கு தேவையானவை :
திட்டத்திற்கான மொத்தத் தொகை தோராயமாக (நம்ம ஊர் அமைப்புக்கு) = 150 - 200 கோடி ரூபாய்.
திட்டத்திற்கான ஆய்வு பணியின் காலம் = 1 வருடம்
திட்டம் அனுமதி, திட்டத் தொகைக்காக அரசாங்கம் மற்றும் கடன் பெற ஏற்பாடு இப்படியாக அதிலிருந்து இன்னும் 2 வருடம்.
ஆக மூன்று வருடம் கழித்து பணி துவங்கினாலும் பல இடர்பாடுகளுக்குப் பிறகு எப்படியும் "அரைகுறையாக" முடிவடைய ஏறத்தாழ நான்கு வருடங்களாகும்.
ஆக மொத்தம் ஏழு வருடங்கள் பாதாள சாக்கடையை பற்றி மக்கள் முணு,முணுத்துக் கொண்டே இருப்பார்கள்.
---------------------------------------------
நம்ம ஊருக்கு 200 கோடியை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்குவார்களா? என்பது கேள்வி குறி ?
காரணம் பக்கத்தில் உள்ள திருச்செந்தூருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 14 கோடியே 48 இலட்சம் ; கடலூருக்கு 65.14 கோடி ; இராமநாதபுரம் நகராட்சிக்கு 30 கோடி ; சேலம் மாநகராட்சிக்கு 149.39 கோடி ; நாகர்கோவிலுக்கு 76.04 கோடி ; விருதுநகர் நகராட்சிக்கு 23.25 கோடி ; பல்லாவரம் நகராட்சிக்கு 72.10 கோடி மற்றும் ஈரோடு மாநகராட்சிக்கு (பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து) ரூ.209.22 கோடி என்று இப்படியாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் நம்ம ஊருக்கு இந்த பெருந்தொகை கிடைக்குமா? என்பது கேள்விக் குறியே.
அது மட்டுமல்ல இந்த பெருந்தொகை இல்லாமல் ஊர் முழுவதும் அரைகுறையாக கூட பாதாள சாக்கடை போட முடியாது என்பது கண்கூடு.
ஏன் என்றால் இதுவரை தமிழகத்திலே எந்த ஊரிலும் ஊர் முழுக்க முழுமையாக பாதாள சாக்கடை போடப்படவில்லை என்பது நிதர்சனம்.
மேலும் எங்கும் ஒதுக்கப்பட்ட தொகையோடு பணியை முடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு கடலூரை எடுத்துக்கொள்ளலாம் - கடலூருக்கு முதலில் ஒதுக்கப்பட்ட தொகை 40 கோடி இப்பொழுது அது 65.14 ஐ தாண்டி 70 ஐ எட்டிக்கொண்டிருக்கிறதாம். இன்னும் முடிந்தபாடில்லை.
இந்த திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ???.........
அரசாங்கம் மக்களுடைய நன்மைக்காக , சுகாதாரத்திற்காக வேண்டி இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என்பதில் மாற்று கருத்துக் கிடையாது.
ஆனால் அதை முறையாக மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பூரணமான திட்டமாக தரவில்லையே என்பதும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் கஷ்டத்தையும் , மன உளைச்சலையும் கொடுத்து மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறதே! என்பதுதான் மக்களின் ஆதங்கம்.
முதலிலே இந்த திட்டம் எங்கும் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.
சென்ற அரசு அல்ல அதற்கு முந்திய அரசே! திட்டத்தைத் துவக்கி வைத்தது அதைத் தொடர்ந்து வந்த அரசும் முழுமைப் படுத்தாமல் மீண்டும் தொடங்கி வைத்த அரசே ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது.
திட்டம் தோல்வியடையக் காரணம் ஆட்சியாளர்களே! முறையான வாரியம்/காண்ட்ராக்டர்களிடம் இந்த திட்டம் கொடுக்கப்படவில்லை.
கொடுக்கப்பட்ட திட்டம் ஒப்பந்தங்களின் விதிகளின்படி பூர்த்தியாகவில்லை அல்லது பூர்த்தி செய்ய முடியவில்லை - இதை அடியேன் மிகைப்படுத்தவில்லை காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கடலூர் திட்டம் முடியடையவில்லை என்பதும் ; விருதுநகரில் பணி தொடங்கி ஐந்து ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை;தாம்பரம் மற்றும் பல்லாவரம் போன்ற நகரங்களிலும் நிறைவு பெறவில்லை.
இவைகளெல்லாம் ஏன் ? தாமதமாகிறது அதனுடைய உண்மை நிலை என்ன என்பதை அரசாங்கம் அறிந்து அதை களைய முற்படுவதில்லை ஏன்???.
அதற்கு மக்களின் பதில் " தகுதி வாய்ந்த - பாதாள சாக்கடை அமைப்பதில் திறமை வாய்ந்த - எவரையும் அரசாங்கம் நியமிக்கவில்லை என்பதுதான்".
வேலையை திட்டமிட்டு செய்யத் தொடங்குவதில்லை காரணம் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டும்போது அதிலே பல குழப்பங்கள் குடி நீர் குழாய்கள் உடைபட்டு தண்ணீர் வருவதில்லை பல மாதங்களாக ஏன் வருடங்களாகவும் வருவதில்லை.
டெலிபோன் வயர்கள் பூம்மிக்கடியில் செல்வதால் நிறைய லேண்ட் லைன்கள் கட்டாகி இருக்கிறது.
போக்குவரத்து மொத்தமும் வருடக்கணக்கில் பாதித்திருப்பது மட்டுமின்றி - பாத சாரிகளுக்கும்கூட மிகுதமான இடையூறுகள்.
இதன் காரணமாக பல இடங்களில் கடை அடைப்பு, போராட்டம் , கைது.
பாதாள சாக்கடை திட்டம் செயல்படப்போகுது என்ற காரணத்திற்காக ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை வருடக்கணக்கில் சீர் படுத்தாமல் மக்கள் அவதி உதாரணத்திற்கு : இராமநாதபுரம் ; தாம்பரம் ; கடலூர் ; விருதுநகர் இன்னும் பல ஊர்களில் மக்கள் இதற்காக போராட்டம் நடத்துகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தினால் தமிழ் நாட்டிலே மிகவும் பாதிக்கப்பட்டது கடலூர் நகராட்சிதான் இங்கே தோண்டப்பட்ட குழியில் விழுந்து இறந்தோர் 8 நபர்கள். திட்டத் தொழிலாளி 3 பேர்உட்பட. ஆனால் இந்த குழிலே விழுந்து காயமடைந்தவர்களோ இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள்.
-------------------------------------------------
கடந்த ஜூலை மாதம் கடலூரில் காவல்துறை களத்தில் இறங்கியது செய்தி :
பொதுமக்கள், மாணவ மாணவியர் படும் அவதி, சொல்லி மாளாது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறையினருக்கு ஏற்பட்டு இருக்கும் சிரமங்களும் ஏராளம்.
சாலைகளை சரிசெய்து கொடுங்கள் என்று, குடிநீர் வாரியத்தையும், நெடுஞ்சாலைத் துறையையும் கெஞ்சிக் கேட்டும் பயனில்லை, என்ற நிலைக்குக் கடலூர் காவல்துறை தள்ளப்பட்டது.
இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வனிதா, ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கினார்.
தனியார் பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து, சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டார்.
அவரே நேரில் பார்வையிட்டு, பணிகளைக் கண்காணித்தார். இதனால் சாலைகள் பளிச்சென ஆகாவிட்டாலும், குறைந்த பட்சம் தடையற்ற போக்குவரத்துக்கு ஏதுவாக, மேடு பள்ளங்களாவது சரிசெய்யப்பட்டு உள்ளதை, பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
---------------------------------------
கடந்த ஜூன் மாதத்தில் வந்த செய்தி:
பாதாள சாக்கடை நீர் கலப்பு : துர்நாற்றத்துடன் பவனி வரும் நெல்லை கால்வாய்
பாசனத்திற்காக பாதாள சாக்கடை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் துர்நாற்றத்துடன் நெல்லை கால்வாய் நகரில் பவனி வருகிறது,இதனால் காலரா பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது, கழிவு நீர் அனைத்தும் தச்சநல்லூர் அருகே உள்ள புறவழிச்சாலை பம்பு ஸ்டேசனில் பம்ப் செய்யப்பட்டு ராட்சத குழாய் மூலமாக ராமையன்பட்டி தனியார் பழப் பண்ணைகளுக்கு பயன்படுகிறது ,
கடந்த சில தினங்களாக நெல்லை கால்வாயில் பாசனத்திற்காக பாதாள சாக்கடை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குடலை புரட்டும் நாற்றத்துடன் நெல்லை கால்வாய் ஊருக்குள் பவனி வருகிறது.
இதனால் பால பாக்கியாநகர்,தெற்கு பால பாக்கியா நகர், பாலாஜிஅவென்யூ உடையார்பட்டி, மணி மூர்த்திஸ்வரம்,போன்ற ஊர்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மக்கள் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போது பம்ப் ஸ்டேசன் மோட்டார் பழுதடைந்துள்ளது அதை சரி செய்து வருகிறோம் என ஊழியர்கள் கூறுகின்றனர் ,கழிவு நீர் கலக்கும் நெல்லை கால்வாயை நம்பி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது உண்மை.
தற்போது கோடை நேரம் என்பதால் கால்வாய் வறண்டு உள்ளது.இந்த வறட்சியை பயன்படுத்தி பாதாள சாக்கடை நீரை வாய்க்காலில் மாநகராட்சி ஊழியர்கள் திறந்து விட்டுள்ளனர் ஆனால் பொது மக்கள் நிலையோ மிகவும் பரிதாபமானது.
நெல்லை கால்வாய் வழியாக கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் சென்று கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது.எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடுமா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த 7.8.2011 மாலை முரசு நெல்லை பதிப்பில் வந்த செய்தி:
"கழிவறையில் புகுந்த பாதாள சாக்கடை நீர்" - நெல்லை உடையார்பட்டி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொப்பளிக்கும் பாதாள சாக்கடை நீரை படத்தில் காணலாம் - என்று செய்தியை எழுதி படமும் போட்டு இருந்தார்கள்.
-------------------------------------------------
கடந்த ஜனவரியில் வெளியான செய்தி:
விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் நடந்த குளறுபடிகள் காரணமாக, விருதுநகர் நகராட்சிகமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் அரசு சஸ்பெண்ட் செய்து உள்ளது. எதனால் என்பதை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள் ...
விருதுநகரில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவு நீரை பாதாளச் சாக்கடை மூலம் ஊருக்கு வெளியே கொண்டுவந்து, புதிதாக நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வெளியேற்றுவதுதான் திட்டம்! இதற்காக 23.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை நிறைவேற்றும் பொறுப்பு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 2006 டிசம்பரில் தொடங்கி, 2008 டிசம்பருக்குள் முடித்துத் தரவேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
'ப்ரியா கன்ஸ்ட்ரக்ஷன், சேகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. ஆனால், பல பிரச்னைகளினால் சுணக்கம் ஏற்பட்டு, முயல் வேகத்தில் ஆரம்பித்த பணி, நத்தை வேகத்துக்குப் போனது! பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே பாதியில் விடப்பட்டது.
இந்த நேரத்தில், விருதுநகர் நகராட்சி நிர்வாகம் திடீரென ஒரு காரியத்தில் இறங்கியது. வீடு, தெருக்களில் உள்ள கழிவு நீர்க் குழாய்களைப் பாதாள சாக்கடையில் இணைத்து, அதை அருகே ஓடும் கவுசிகா நதியில் கலக்க வைத்தது. இந்த முறைகேட்டினை, விருதுநகர் நகர்நல அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதாரத்துடன் புகார் அனுப்பியது. அதனால், 'பாதாள சாக்கடை திட்டம் முடிவடையாத நிலையில், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பது தவறு. உடனே இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்’ என்று நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். ஆனால், 'கனெக்ஷனை கட் பண்ணினால்... கழிவு நீர் ரோடுகளில் ஓடும்’ என்பதால் நகராட்சி நிர்வாகம் செயலற்று நின்றது. இதனால் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் அரசு சஸ்பெண்ட்செய்து உள்ளது ...''
-------------------------------------
இவைகளெல்லாம் பிறபகுதிகளில் மக்கள் அவதியுறும் பாதாள சாக்கடை திட்டம் பற்றிய செய்திகள்.
எனக்கு தெரிந்த சிலதை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன், இது கருத்துப் பகுதி இதை கட்டுரைப் பகுதிபோல் ஆக்கி விட்டேன் இதற்கு மேலும் தொடர்ந்தால் "நாவல்" போன்றாகிவிடும் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
எனவே மக்களே! இவ்வளவு சிரமும், சிக்கலும் இருக்கையில் இந்த திட்டம் நமது ஊருக்கு தேவையா? என்பதை சிந்தியுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross