பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் திரும்பப் பெறாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் காயல்பட்டினம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். காயல்பட்டினம் நகருக்கு சிறிதும் தேவையில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இந்நகரைச் சுற்றியுள்ள இதர பகுதிகளைப் போல துர்நாற்றம் வீசும் பகுதியாகவும், நாய் - பன்றிகள் பெருக்கத்திற்கு வழிகோலும் வகையிலும் இந்நகரும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமின்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், காயல்பட்டினம் மற்றும் இதர ஊர்களின் அனைத்து சாக்கடைகளும் காயல்பட்டினம் கடலில் கலக்கச் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால், இதுவரை சுத்தமாகக் காணப்படும் காயல்பட்டினம் கடற்கரையும் முற்றிலும் மாசடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் தகுதியில்லாத நிலையிலாகிவிடும். அது மட்டுமின்றி, சாதாரண மக்கள் தாங்க முடியாத அளவுக்கு வரிவிதிப்பும் செய்யப்படும்.
பெரும்பான்மை இல்லாமல் நகர்மன்றத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எமக்கு வியப்பளிக்கிறது. இத்தீர்மானத்தை எமது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், எங்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |