கத்தர் காயல் நல மன்றத்தின் 12ஆவது பொதுக்குழு மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி, 05.08.2011 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, கத்தர் அல்முன்தஸா பகுதியிலுள்ள ஆலிஷான் ஹோட்டல் கேளரங்கில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், மொகுதூம் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் நைனார், சிங்கப்பூர் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.நஸ்ருத்தீன் இறைமறை வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார். பாடகர் ஏ.எச்.ஃபாயிஸ் இஸ்லாமிய கீதம் பாடினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
பின்னர், மன்ற துணைத் தலைவர் முஹம்மத் யூனுஸ் துவக்கவுரையாற்றினார். மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து தனதுரையில் விவரித்த அவர், காயல்பட்டினத்தில் பெருகி வரும் புற்றுநோயின் தாக்கம் குறித்து பேசியதோடு, கத்தர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை இலவச முகாம் வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘தர்மத்தின் சிறப்பு‘ என்ற தலைப்பில், மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர், மன்றத்தின் பொருளாளர் ஜனாப் எம்.ஆர். ஷாகுல் ஹமீத் மன்றத்தின் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
அடுத்து, சிறப்பு விருந்தினர் டாக்டர் நைனார் உரையாற்றினார். வள்ளல் சீதக்காதி வாழ்ந்த காயல் நகரில் பிறந்து வளர்ந்த மன்றத்தின் உறுப்பினர்கள் அவருடைய வழியைப் பின்பற்றி ஏழை - எளிய மக்களுக்கு உதவி வருவது குறித்து அவர் தனதுரையில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இவ்வுதவிகள் இன்னும் அதிகளவில் தொடர வேண்டுமென வாழ்த்தினார்.
தொடர்ந்து, ‘நோன்பின் மாண்பு‘ என்ற தலைப்பில் மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ உரை நிக்ழ்த்தினார்.
நிறைவாக, மன்றச் செயலாளர் ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன் நன்றி கூற, உறுப்பினர் ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர் செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா நெறிப்படுத்தினார்.
கூட்ட ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர் செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, மன்ற செயற்குழு உறுப்பினர் முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகாண்டனர்.
கூட்டம் நிறைவுற்றதும் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின், பஃபே முறையில் அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்,
செய்தித் தொடர்பாளர்,
கத்தர் காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர். |