சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை சந்திப்பில் தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் தி.மு.க. ஆட்சியின் போது
கட்டப்பட துவங்கியது. மார்ச் 13, 2010 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் - புதிய தலைமை
செயலக வளாகத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்தார். தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை - சட்டசபை கூட்டங்களும், அமைச்சரவை
கூட்டங்களும் அவ்வளாகத்திலேயே நடைபெற்றன.


இவ்வாண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை தழுவிய பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு - மீண்டும் தலைமை செயலகம் -
காமராஜர் சாலையில் உள்ள பழைய வளாகத்திற்கு செல்லும் என அறிவித்தது. அதற்கு முக்கிய காரணமாக - முற்றிலும் கட்டிடப்பணிகள்
நிறைவுபெறாத சூழலில், - தி.மு.க. அரசு - சட்டசபையை புதிய வளாகத்திற்கு மாற்றியதாகவும், அரசு பணியாளர்கள் அலுவலகங்கள் - 2 கிலோ
மீட்டர் தூரத்தில் - பழைய வளாகத்திற்கு அருகில் இருக்கும் நிலையில் அரசு பணிகள் பாதிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர்மன்ற நீதிபதி
எஸ்.தங்கராஜ் அடங்கிய ஓர்-நபர் விசாரணை குழுவினையும் ஜூன் 22 அன்று தமிழக அரசு நியமித்தது.
முழுவதுமாக கட்டிமுடிக்க 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் என தற்போது கணிக்கப்பட்டுள்ள இவ்வளாகத்திற்கு இதுவரை ஏறத்தாழ 500 கோடி
ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலக வளாகம் - பயன்படுத்தப்படாத நிலையில் - பழுதடைந்து விடும் அபாயத்தில் உள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள்
வரிப்பணம் விரயம் ஆகும் நிலை உள்ளதால் - இக்கட்டிடம் குறித்து இறுதி முடிவு தெளிவாகும் வரை, இக்கட்டிடத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்
என மக்கள் கருத்து அறிய - தி ஹிந்து நாளிதழ் - போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.


தெரிவிக்கப்படும் கருத்து - இவ்வளாகத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தி ஹிந்து செய்தி
தெரிவித்துள்ளது. மேலும் - இதுவரை, அவ்வளாகத்தில் நடந்து முடிந்துள்ள பணிகளையும், கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களை ourbuilding@thehindu.co.in என்ற ஈமெயில் முகவரிக்கோ
அல்லது
Project ‘Our Building',
The Hindu,
Kasturi Buildings,
859 & 860 Anna Salai,
Chennai 600002.
என்ற விலாசத்திற்கோ அனுப்பலாம்.
சிறந்த ஆலோசனைகள் தி ஹிந்து நாளிதழில் வெளியிடப்படும். மேலும் - மூன்று சிறந்த ஆலோசனைகள் தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி ஹிந்து நாளிதழின் அலுவலகத்திற்கு எதிரே புதிய தலைமை செயலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தி ஹிந்து செய்தியினை காண இங்கு
அழுத்தவும்.
|