நடப்பு கல்வியாண்டு முதல் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) முடிக்கும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 06.08.2011 அன்று 16.00 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மன்றத்தின் ஆலோசகர் முனைவர் முஹம்மத் லெப்பை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் அப்துல் கஃபூர் பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகை நடத்த வருகை தந்திருக்கும் ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, சிங்கப்பூரில் தராவீஹ் தொழுகை நடத்த வருகை தந்திருக்கும் காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஒதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துவக்கமாக நன்றி தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு:
பின்னர் மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களையும், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரையும் மனதார வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவரித்த மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத், காயல்பட்டினத்தில் வறுமை நிலையிலுள்ள 38 குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்கப்பட்ட விபரம் குறித்தும் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
மாதாந்திர சந்தா தொகை நிலுவையிலுள்ள மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை விரைந்து வழங்குமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
எஸ்.கே.ஸாலிஹ் உரை:
பின்னர், சிறப்பு விருந்தினர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.
‘அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டம்‘, ‘ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை‘ என புதுப்புது திட்டங்களை காலத்திற்கேற்ப அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதில் சிங்கப்பூர் காயல் நல மன்றம் உலக காயல் நல மன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அத்துடன், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் காலத்தின் கட்டாயம் என்றும், அதே நேரத்தில் உழைக்கும் நிலையிலுள்ள மக்களை சோம்பலுறச் செய்திடாதிருக்கும் பொருட்டு தகுதியான பயனாளிகளை அந்தந்த பகுதி ஜமாஅத்தின் அத்தாட்சியுடன் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று தனதுரையில் அவர் தெரிவித்தார்.
அவரது ஆலோசனையை கருத்திற்கொள்வதாகவும், வருங்காலங்களில் இத்திட்டத்தை இன்னும் முறைப்படுத்தி செயல்படுத்த ஆவன செய்வதாகவும் அப்போது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மவ்லவீ ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ உரை:
ஆலிம்களுக்கும் ஊக்கத்தொகை...
பின்னர், சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ உரையாற்றினார். திருக்குர்ஆனை மனனம் செய்து முடிக்கும் காயல்பட்டினம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க மன்றம் முடிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், வரவேற்கக் கூடிய நல்லதொரு திட்டம் அது என்றும் தனதுரையில் புகழ்ந்துரைத்த அவர், ஆலிம் கல்வி பயிலுவதற்கு காயல்பட்டினம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் ஏழு ஆண்டுகள் ஆலிம் கல்வி கற்கும் காலங்களில் குறிப்பிட்டதொரு தொகையை அவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கடற்கரை கண்காணிப்பு...
காயல்பட்டினத்தின் கண்ணியமிக்க கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் கடற்கரையில் சமூகத் தீமைகள் நடைபெறாது கண்காணிக்கும் பொருட்டு, கடற்கரையை நகரின் ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்தும் தினம் மூவர் வீதம் கண்காணிப்பு செய்து, அவர்களின் கருத்தை கடற்கரைக்கருகிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (ஒய்.யு.எஃப்.) பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டுமென்றும், அப்பதிவுகளை மாதமொருமுறை நகரின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்கான முன்முயற்சியை சிங்கப்பூர் காயல் நல மன்றம் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் தைக்காக்களில் சமூக நலப்பணிகள்...
அதுபோல, நகரின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பெண்கள் தைக்காக்கள் ரமழான் காலங்களில் மட்டுமே உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், இதர காலங்களிலும் தைக்காக்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் பொருட்டு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைப் பரிசோதிக்கும் கருவிகளை காயல் நல மன்றங்கள் தைக்காக்களுக்கு வாங்கிக் கொடுத்து, அங்குள்ள படித்த மாணவியர் சிலருக்கு முறையான பயிற்சியளித்து, அந்தந்த தைக்காவைச் சுற்றியுள்ள மக்களுக்கு வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யலாம் என்றும், இயலா நிலையிலுள்ளோருக்கு அவர்களின் இல்லம் சென்று பரிசோதனை செய்யலாம் என்றும், இவ்வாறு செய்வதால் இந்நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வை பொதுமக்கள் அதன் துவக்க நிலையிலேயே பெற்றுக்கொண்டு, பேராபத்துகளைத் தவிர்த்திடவியலும் என்றும் அவர் தனதுரையில் ஆலோசனை வழங்கினார்.
கல்வி, மருத்துவ உதவிகள்:
கல்வி, மருத்துவ உதவி கோரி நகரிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து மன்றச் செயலர் கூட்டத்தில் விளக்கினார். பின்னர், இவ்வகைக்காக ரூபாய் ஐம்பதாயிரம் நிதியொதுக்கீடு செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதுடன், அத்தொகையை நடப்பு ரமழான் மாத இறுதிக்குள் வினியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் பிரதிநிதி:
மன்றத்திற்கு உள்ளூர் பிரதிநிதியை நியமிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிறைவில், அடுத்த செயற்குழுவில் இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
வீடு புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு:
காயல்பட்டினத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள வீடொன்றைப் புனரமைப்பதற்காக உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பம் குறித்து இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், இவ்வகைக்காக ரூ.1,50,000 நிதியொதுக்கீடு செய்வதெனவும், நடப்பு ரமழான் மாதம் நிறைவுற்றதும் கட்டிடப் பணியைத் துவக்குவதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், இவ்வகைக்காக உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை தாராளமாகத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஹாஃபிழ்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை:
எந்த மத்ரஸாவிலேனும் ஓதி திருக்குர்ஆன் மனனத்தை (ஹிஃப்ழு) முடிக்கும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றத்திற்கு நன்றி:
‘சேவைச் செம்மல்‘விருது பெற்ற காயல்பட்டினம் ஹாமிதிய்யா முதல்வருக்கு கடந்த 25.07.2011 அன்று காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி அருகில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியின்போது, மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற காயல்பட்டினம் மாணவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கவும், வருங்காலங்களில் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) முடிக்கும் மாணவ-மாணவியருக்கான மன்றத்தின் பரிசுத் திட்டத்தை அறிவிக்கவும் வாய்ப்பளித்தமைக்காக, விழா ஏற்பாட்டாளர்களான ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றத்தினருக்கு கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
வேலைவாய்ப்பு பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
சிங்கப்பூரில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ள காயல்பட்டினத்தைச் சார்ந்த ஜக்கரிய்யா, நிஃமத்துல்லாஹ் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்காக ஒத்துழைப்புகளை வழங்கிய மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு பெற்றதையடுத்து அவ்விருவரும் இனி மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஹஜ் பயணம் செல்லும் உறுப்பினர் குடும்பத்திற்கு வாழ்த்து:
இவ்வாண்டு தன் குடும்பத்துடன் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மன்ற செயற்குழு உறுப்பினர் ஸூஃபீ ஹுஸைன் கூட்டத்தில் தெரிவித்தார். இதற்காக அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களது ஹஜ் கிரியைகள் அனைத்தும் அல்லாஹ்வால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட கூட்டம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தது.
பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு:
காயல்பட்டினம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கூட்டம் வன்மையாகக் கண்டித்தது. இத்திட்டத்தால் நகரின் சுற்றுப்புறச் சூழல் இன்னும் மாசுபடும் என்பதைக் கருத்திற்கொண்டு, இத்திட்டத்தைக் கைவிடுமாறு இது தொடர்பான துறை அதிகாரிகளுக்கு மன்றத்தின் சார்பில் கடிதம் மூலம் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன், 17.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |