வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாளின்போது, பல்வேறு கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பங்களின் நிலை குறித்து, இணையதளம் மூலம் எளிதில் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் திங்கட்கிழமைதோறும் பெறப்படும் குறைகளைவு மனுக்கள் தற்போது 08.08.2011 முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்படுகிறது.
மனுதாரர் தங்களது கோரிக்கை சம்பந்தமான பதிலினை http://onlinegdp.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேற்படி இணையதளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைத் தெரிவு செய்து, கோரிக்கை நிலவரம் என்பதைத் தெரிவு செய்து, தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டில் உள்ள கோரிக்கை எண்ணை மேற்படி இணையதளத்தில் Petition No. என்ற கட்டத்தில் பதிவு செய்து, View / Print என்பதைத் தெரிவு செய்து, தங்களது கோரிக்கையின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |