சிங்கப்பூர் காயல் நல மன்றம் உள்ளிட்ட, இந்திய முஸ்லிம்களின் 16 அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றம் உள்ளிட்ட, சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய முஸ்லிம்களின் 16 அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் 06.08.2011 அன்று மாலையில், சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக, அன்று 17.30 மணிக்கு சிங்கப்பூர் பென்கூலன் பள்ளி கூட்ட அரங்கில் அனைவரும் சங்கமித்தனர். 18.20 மணிக்கு அதிபர் எஸ்.ஆர்.நாதன் கூட்டரங்கை வந்தடைந்தார்.
சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொடர்புத்துறை, கலை, முஸ்லிம் விவகாரத்துறை அமைச்சர் யஃகூப் இப்றாஹீம், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும், சிங்கை இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் ஆலோசகருமான ஜெய்னுல் ஆபிதீன் ரஷீத் ஆகியோர் அவருடன் வந்திருந்தனர்.
துவக்கமாக சிங்கப்பூர் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் 46ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், துவக்கமாக இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் உரையாற்றிய ஜெய்னுல் ஆபிதீன் ரஷீத், சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தின் நடப்பு கல்வி நிலை குறித்து விளக்கிப் பேசியதோடு, முஸ்லிம் சமுதாய நலனுக்காக இன்றளவும் அதிபர் பல்வேறு நற்சேவைகளாற்றி வருவதாக புகழ்ந்துரைத்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் துவக்கமாக சில நிமிடங்கள் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் உரையாற்றினார்.
பல்லாண்டுகளுக்கு முன், இந்திய முஸ்லிம்கள் பல்வேறு ஊர்களின் பெயர்களைச் சொல்லி, அங்குள்ள அமைப்புகளின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் தெரிவித்தனர்… அவர்களிடம், “இப்படி தனித்தனியே வராமல், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஓரமைப்பாக வாருங்கள்! உங்கள் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன்... என்ற அப்போது நான் தெரிவித்தேன்.
இன்று நீங்கள் பல்வேறு அமைப்புகளை ஒரே குடையின்கீழ் அமைத்து, இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் என்னை அழைத்ததும், மிகவும் மகிழ்ச்சியுடன் நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன்...
இந்நிகழ்ச்சி நடைபெறும் இந்த பென்கூலன் பள்ளிக்கு இதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்துள்ளேன். இன்று பல்வேறு மாற்றங்களைக் கண்டு அது பிரம்மாண்டமாகக் காட்சியளிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...
இவ்வாறு சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் உரை நிகழ்த்தினார்.
பின்னர், இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் 16 அமைப்புகளின் நிர்வாகிகள் ஜனாதிபதியுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
உஸ்தாத் ஷாஹுல் ஹமீத் துஆவுடன் 19.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. அடுத்து நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில், ப்ரியாணி, சமோஸா, குளிர்பானம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாட்டு நடப்பு குறித்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடையளித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் ஆலோசகர்களான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை, தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், பொருளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, ரமழான் சிறப்புத் தொழுகை நடத்துவதற்காக சிங்கப்பூர் வந்துள்ள மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |