செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byJaved Nazeem (Chennai)[07 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 7758
http://wp.me/p1tjVx-u
தனிப்பட்ட பலன்களை எதிர் பாராமல், நகராட்சி நன்றாக அமைய வேண்டும் என்கிற ஒரே நோக்கோடு, பலரும் தங்கள் உழைப்பை வழங்குவது ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. உண்மையிலேயே ஒரு சிறப்பான நகராட்சி அமைந்தால் மட்டுமே இந்த உழைப்பிற்கான பலன் கிடைத்ததாக அர்த்தம் ஆகும்.
இது வரை நான் அறிந்த செயல் திட்டங்கள் என்னவெனில்:
1. ஜமாஅத் சிறந்த வேட்பாளரை அடையாளம் காட்டும்
2. MEGA மற்றும் இதர அமைப்புக்கள் அந்த வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்
இத்தனை முயற்சிக்குப் பின் வெற்றி பெரும் வார்டு உறுப்பினர், காலப்போக்கில் தவறானவராகவோ, நன்மை செய்யாதவராகவோ மாறி விட்டால்? நல்லதோர் வீணை செய்து, அதை நலம் கெட புழுதியில் எறிந்த கதை ஆகி விடும் அல்லவா? இந்த நியாயமான கேள்வி பலரது மனதிலும் தொக்கி நிற்பதை உணர முடிகிறது. இதற்கான பதில் அல்லது வழிமுறை எங்கேனும் குறிப்பிடப் பட்டிருந்தால் எனக்கு சுட்டிக்காட்டவும். இல்லையேல் இதை எப்படி அணுகலாம் என்கிற எனது கருத்தை பதிய விரும்புகிறேன்.
முதலில், ஜமாஅத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களும், ஜமாஅத் அடையாளம் காட்டும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இது விஷயத்தில் திட்டமிடல் மற்றும் செயல் படுத்துதல் ஆகியவற்றை ஜமாஅத்தின் முடிவிற்கு விடுவதே நல்லது. இத்தகைய சக்தி ஜமாஅத்திற்கு இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இருக்க வேண்டும். Period. இப்படி ஒரு உறுதிமொழி கிடைக்கும் பட்சத்தில் ஜமாஅத்தை தாண்டி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்து மண்ணைக் கவ்வ விரும்ப மாட்டார்கள்.
சரி, துவங்கிய விஷயத்திற்கு வரலாம். சிறந்த வேட்பாளரை அடையாளம் காட்டுவதோடு எங்கள் பணி முடிந்து விட்டது என்று யாரேனும் கூறுவார்களேயானால் அது சரியான வாதம் அல்ல. கால் கிணறு தாண்டுவதால் என்ன பயன்? மேலும் அப்படி கூறும் ஒரு அமைப்பிற்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் வாக்களர்களுக்கு இல்லாமல் போய்விடும். வெற்றி பெற்ற பின்னரும், வார்டு உறுப்பினர்கள் சரியாக செயல் படுவதற்கான வழி முறைகளை அமுல் படுத்த வேண்டும். இந்த வழி முறை, ஒருவர் வேட்பாளர் ஆக விருப்பம் தெரிவித்து மனு தரும் போதே செயல் படுத்தபட வேண்டும்.
வேட்பாளர் மனு பெறப் படும் போது கீழ் காணும் விவரங்கள் பெறப்பட வேண்டும்:
1. சொத்து விவரம்
2. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, status update / future plans பற்றி ஜமாஅத்திடம் விளக்கம் அளிப்பதற்கான உறுதி மொழி
3. தேதி குறிப்பிடப்படாத ராஜினாமா கடிதம்
மற்றுமொரு முறை இத்தகைய சக்தி ஜமாஅத்திற்கு இருக்கிறதா என்கிற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் எந்த நம்பிக்கையில் வேட்பாளர் அடையாளம் காட்டப்படுகிறார்? கடந்த காலத்தில் நல்லவராக இருந்தார் எனும் வாதம் உதவாது. இது நாள் வரை பெரும்பாலானோர் ஜமாஅத்தினால் அடையாளம் காட்டப் பட்டவர்கள் தாம். அவர்கள் எல்லாம் செவ்வனே பணி புரிந்திருந்தால் நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லையே!
வார்டு உறுப்பினரின் பொருளாதார நிலை பற்றியும் இங்கே நாம் அலச வேண்டும். பொருளாதார நிலை சரியாக இருந்தால் தான் அவரால் வார்டு விஷயங்களில் முழுமையாகவும் நேர்மையாகவும் கவனம் செலுத்த முடியும். இதற்கான செயல் திட்டங்கள் கீழ் காணும் வகையில் அமையலாம்:
1. நகராட்சி தரும் மாதந்திர சம்பளம் மிக சொற்பம் என எண்ணுகிறேன். சம்பளத்தை உயர்த்தும் அதிகாரம் நகராட்சியிடம் இருந்தால் நியாயமான ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
2. வார்டு உறுப்பினர் போன்ற பதவிக்கு வருபவர்கள், பெரும்பாலும் பணியாளர்களாக இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களால் செவ்வனே செயல் பட முடியாது.
a. தொழில் இல்லாதவராக இருப்பின், ஜமா அத் அல்லது பைத்துல் மால் மூலம் லோன் வழங்கி தொழில் அமைத்து தரலாம். இது போன்ற விஷயங்களில் காயல் நல மன்றங்களும் பங்கெடுக்கலாம்.
b. ஏற்கனவே தொழில் செய்பவராக இருந்தால், நம்முடைய தேவைகளில் இவர்களுடைய தொழிற் சேவைகளுக்கு முதலிடம் தரப்பட வேண்டும்.
இது விஷயத்தில் வேறு சிறப்பான வழிகளை யாரேனும் பரிந்துரைத்தாலும் அவற்றையும் பரிசீலனை செய்து ஒரு முழுமையான செயல் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். நம் அனைவரின் விருப்பம் நிறைவேறும் வகையில் ஒரு சிறப்பான நகராட்சி அமைய வேண்டும் அதன் மூலம் நமதூருக்கு பல்வேறு வளங்களும் நலன்களும் கிடைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross