“CORRUPTION – COMMISSION – COLLECTION” இவைதான் இன்று பொதுவாழ்வில் செயல்படுவதாக கூறிக்கொண்டு வயிற்றை நிரப்பும் சிலரின் தார மந்திரம். இச்செயலை திருக்குர்ஆன் (2:188), ஹதீஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
“அன்றியும் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும் நீங்கள் அறிந்து கொண்டே மக்களின் பொருள்களிலிருந்து ஒரு பகுதியை அநியாயமாகத் திண்பதற்காக அதிகாரிகளிடம் (லஞ்சம்கொடுக்க) நெருங்காதீர்கள்”
லஞ்சம் வாங்குபவரையும் லஞ்சம் கொடுப்பவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள். திர்மிதி 1257, அபுதாவூத் 3109, இப்னுமாஜா 2304.
முந்தைய காலங்களில் பஞ்சாயத்து போர்டு, பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடம் பராமரிப்புக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பொழுது தப்புத் தவறுகள் ஏதும் தன்னாலோ, பிறராலோ ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து பலர் முன்வர மாட்டார்கள். மக்களின் வற்புறுத்தலின் பேரில் பதவி ஏற்றவர்கள் தனது உடலில் ஹராமான உணவு சேர்ந்து விடக்கூடாது என்று பயந்து பணியாற்றுவார்கள். நீதி, நியாயமாக ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் கடமை புரிவார்கள்.
இதனால் லஞ்சம், கொள்ளை, ஏமாற்று வேலை நடைபெறவில்லை. ஊர் நன்மைக்காக சொத்துக்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டி தாராளமாக தானமாக வழங்கினார்கள். அதன் நன்மையை அவர்கள் வாழையடி வாழையாக அனுபவிக்கிறார்கள்.
ஆனால் இன்று பஞ்சாயத்து போர்டுக்கு உறுப்பினராக நிற்க துடிப்பவர்களில் ஒரு சாரார் அங்கு என்ன பணி செய்ய வேண்டும் என்பதை அறிய மாட்டார்கள். மாறாக அங்கு என்ன கிடைக்கும் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள்.
“காலுக்கு செருப்பாகுவேன்! கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்!! அல்லாஹ்வின் மீது சத்தியமாக லஞ்சம் வாங்க மாட்டேன்!!!” என்பார்கள். பள்ளிவாசலில் 5 வேளை என்ன, 50 வேளை தொழுவார்கள், வெற்றி பெற்ற பின் அல்லாஹ்வையும் வாக்களித்தவர்களையும் மறந்து விடுவார்கள்.
ஒரு பகுதி வாக்காளர்களோ அவனுடைய திறமையை, கல்வியை, நன்னடத்தையை, சேவையை பார்க்க மாட்டார்கள். குடும்பம், மதம், கட்சி, பணம், குவாட்டர்தான் அவனை தேர்வு செய்கிறது. இத்தகையோரைத் தேர்வுசெய்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தனது காரியத்தை நடத்தும் முதலாளிகள் பல லட்சங்களைப் பறக்க விடுகிறார்கள்.
கட்சி வேஷ்டி உடுத்திக்கொண்டு காண்ட்ராக்ட்காரர்களை பயமுறுத்தி கமிஷன் அடிக்கிறார்கள். சுமார் 55 சதவிகிதம் வரை அதிகாரிகள், அரசியல்வாதிகள், உறுப்பினர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால் ஆற்று மணலோடு அஸ்திவாரத்துக்கு தோண்டப்படும் மணலையும் சேர்த்து கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடம் 5 வருடங்களுக்குள் ஆடி விடுகிறது.
தவறைச் சுட்டிக்காட்டினால் பயமுறுத்துகிறார்கள். “இங்கு என்ன கலீஃபா. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியா நடக்கிறது?” என்று லஞ்சத்திற்கு லாவண்யம் பாடுபவர்கள் பலர் உண்டு.
வீடு கட்டாமலே பிளேனைக் காட்டி தீர்வை வழங்குதல், இறந்தவரின் பெயரில் உள்ள நிலத்தில் வணக்கஸ்தலம் என்று கூட பார்க்காமல் பிளேன் அப்ரூவல் செய்தல், ஒருவரின் பெயரில் நீண்டகாலமாக தீர்வை செலுத்தி வரும் வழிபாட்டுத்தலத்திற்கு அடுத்தவரின் பெயரில் தீர்வை மாற்றம் செய்தல், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்ட அனுமதி வழங்குதல், ஏழைகளில் வீடுகளை ஒரு இன்ச் விடாமல் அளந்து தீர்வையிடும் நிர்வாகம் பணக்காரர்களின் வீடுகளை மட்டும் பார்வையிடாமலேயே குறைந்த தீர்வை போடுதல் போன்ற தவறான காரியங்கள் லஞ்சத்தின் மூலம் அரங்கேறுகிறது.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்க ஆயிரக்கணக்கில் லஞ்சம். சிறுபான்மையினர் நடத்தும் சில கல்விக்கூடங்களில் சிறுபான்மையினருக்கு ஆசிரியர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் லஞ்சம் கேட்பது. வெளியில் தெரிந்துவிடும் என்பதால் மாற்று சமூகத்தினருக்கு வேலை கொடுக்கிறார்கள்.
பள்ளி கட்டுமான வேலைகள், கட்டுமான பொருட்கள் தரமற்றதாக இருந்தாலும் பரவாயில்லை, தான் குறிப்பிடும் நபருக்கே கொடுக்க வேண்டும் என்று பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் கூறுகிறார்கள் இதனால் கல்விக்கூடம் தரமற்றதாகவும், கல்வித் தரம் குறைந்தும் காணப்படுகிறது. சில இடங்களின் பள்ளிக்கூடம் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.
வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் கட்டுமான வேலைகள், கடைகளை வாடகைக்கு விடுதல், வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வக்ஃபு வாரியத்தின் அனுமதியுடன் நடக்க வேண்டும் என்பது விதி.
சில வட்டி மூஸாக்களும், தொழுகையே இல்லாதவர்களும், ஹராமாக அடுத்தவர் சொத்தை ஆட்டை போடுபவர்களும் பள்ளி நிர்வாகத்தில் பங்கு வகிக்கிறார்கள்.. கஞ்சி போடுவதில் கடைக்காரர்களிடம் கையூட்டுகள், உள்ஹிய்யா மாடு வாங்குவதில் உள்ளடி, மய்யித் அடக்க வாங்கும் சாமன்களிலும் கமிஷன், கந்தூரி, கல்யாண நிகழ்ச்சிகளில் முன்டியடித்துக் கொண்டு சிலர் சில்லரைக்காக அலைவது அன்றாட நிகழ்ச்சிகள்.
பள்ளி கட்டுமானங்களை டென்டர் விட்டு கட்ட வேண்டும். முஸ்லிம் மேஸ்திரிகளுக்கு கொடுத்தால் கமிஷன் வாங்க முடியாது என்பதால் டென்டர் விடாமல் மாற்று மதத்தினருக்கு கொடுத்து கமிஷனைக் கரந்து விடுகிறார்கள். இதனால் நமது சமுதாயம் வேலையில்லாமல் ரோட்டை அளக்கிறது.
ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டா என்ன??
என்றிருந்தால் ஊர் லஞ்சத்திலும், கமி‘னிலும், கொள்ளையிலும் ஊறிப்போகும். பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும். அத்தியாவசியமான தேவைகள் நடைபெறாது. லஞ்சமில்லாமல், கமிஷன் இல்லாமல் 60 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட நமதூர் பஸ் ஸ்டான்ட் வாட்டர் டேங்கைப் பாருங்கள்! மற்ற வாட்டர் டேங்களையும் பாருங்கள் - உண்மை புரியும்!!
அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டிய பொதுமக்களே! விழிப்புடன் இருந்து, பஞ்சாயத்து போர்டு, பள்ளிக்கூடம், பள்ளிவாசல்கள் மற்ற இதர இடங்களில் ஹராமான வழியில் வயிற்றை வளர்க்கத் துடிப்பவர்களை ஒதுக்குங்கள்! நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்!! |