கரூர் மாவட்டம் கடவூர் - சுருமான்பட்டியிலுள்ள ‘வானகம்’ எனும் ‘நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவத்தில் (Nammalvar Ecological Foundation) சென்ற மாதம் (மார்ச் 2016) 26-27 தேதிகளில் நடைபெற்ற சிறப்பு அறிமுகப் பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ் (சுபுஹ) எனக்கு வழங்கினான். “கெட்டும் பட்டணம் சேர்” என்பது முதுமொழி; “கெட்டும் வானகம் சேர்” என்பது புதுமொழி. இரசாயண உரங்களினாலும், இயற்கை வாழ்வியலை விட்டும் வெகுதூரம் விலகி சென்றதனாலும் ஏற்பட்ட நெருக்கடி / அழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும் இடமாக வானகம் விளங்குகிறது. – ‘வானகம்’ எனும் சொல்லுக்கு ‘விடுதலை’ என்று பொருள்.
அய்யா நம்மாழ்வார் வாழ்ந்த காலத்திலேயே, நமதூரிலிருந்து அன்பின் சகோதரர் எஸ். கே. சாலிஹ் (மற்றும் குழுவினர்) வானகத்தில் பயிற்சி பெற்று, அதனை ‘கம்பங்கூழும், கரட்டு மேடும்!’ என்ற அழகிய தொகுப்பின் கீழ் இருபாகங்களாக இவ்விணையதளத்தில் (2013-ஆம் ஆண்டு) கட்டுரைகளைப் பதிவிட்டிருந்தார்.
‘கம்பங்கூழும், கரட்டு மேடும்!’ பாகம் 1 கட்டுரையை காண இங்கே சொடுக்குக!
‘கம்பங்கூழும், கரட்டு மேடும்!’ பாகம் 2 கட்டுரையை காண இங்கே சொடுக்குக!
கடற்கரையில் அமர்ந்து தனது சகாக்களுடன் திட்டமிட்ட கதை தொடங்கி வானகத்தில் பயிற்சி பெற்று ஊர் திரும்பியதும் போட்ட ‘கற்றாழைக் குளியல்’ வரை ஒன்று விடாமல் அனனத்தையும் ஒரு திரைக்காவியம் போல் அவருக்கே உரித்தான அழகிய எழுத்து நடையில் வரிசை மாறாமல் விளக்கியிருப்பதால், அதே பயிற்சியில் பிரிதொரு நாளில் நான் கலந்துகொண்டதை வைத்து - அந்த பயிற்சியின் நிகழ்வுகளை மீண்டும் விவரிப்பதை விடுத்து - சற்று மாறாக, எனக்கு கிட்டிய அனுபவத்தையும் கற்றலையும், நமது அன்றாட வாழ்கையோடு ஒப்பிட்டு, ‘கெட்டும் வானகம் சேர்…’ எனும் பெருந்தலைப்பின் கீழ் வெவ்வேறு சிறு கட்டுரைகளாக தருகிறேன், இன்ஷா அல்லாஹ்.
தொழில் நுட்ப வளர்ச்சியில் தொலைந்து போன பழமை – வானகத்தில் கண்ட காட்சி
செய்நன்றி மறவேல்
இறைநாட்டத்திற்குப் பின், எனது வானகப் பயிற்சிக்கும், இயற்கை வாழ்வியலில் உள்ள ஆர்வம் அதிகமாவதற்கும் பலரும் காரணமாக இருந்தனர் / இருக்கின்றனர்; அதில், ஒரு சிலரது பங்களிப்பை இந்த அறிமுக கட்டுரையிலேயே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
அ) முஹம்மது முஹியத்தீன்
நான் மருந்தியல் (B. Pharmacy) படிப்பில் சேர முஹம்மது மச்சான்தான் முன்மாதிரி (role model). அவர் பயின்ற கல்லூரியில்தான் நானும் பயின்றேன் [KM College of Pharmacy (KMCP), மதுரை]. தற்போது சென்ணையில் பணிபுரியும் இவர், நமதூரில் இருந்து உருவான முதல் “மருந்துகள் ஆய்வாளர்” (drug inspector) என்பது குறிப்பிடத்தக்கது. இறைவழி மருத்துவம் மற்றும் இயற்கை வாழ்வியல் குறித்து நான் முதலில் அதிகம் கேள்வியுற்றது இவரது வார்த்தைகளில்தான். இவரது மார்க்கம் சார்ந்த வாழ்வியல் ‘பயான்’கள் குடும்பத்தில் அனைவரிடமும் பிரசித்தம். அலோபதி மருத்துவமுறையில் பயின்றவர்கள் இயற்கை வாழ்வியலின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.
ஆ) எஸ்.கே.சாலிஹ்
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. அனைவருக்கும் பரிச்சியமானவர். இவரது ‘கம்பங்கூழும், கரட்டு மேடும்!’ கட்டுரைத் தொகுப்பே எனக்கு வானகம் செல்ல உந்துசக்தியாக இருந்தது. ஒரு கடற்கரை உரையாடலில் ‘வானகம் போங்க, சுயவாழ்வில் மாற்றம் வரும்’னு அறிவுறுத்தினார். காயலர்களின் வாழ்வில் கடற்கரை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதற்கு இக்கட்டுரையிலேயே இது இரண்டாவது எடுத்துக்காட்டு.
இ) ராஜசேகர் (மதுரை)
கல்லூரி நண்பர் (இவரும் KMCP தான்); கல்லூரி நாட்கள் முதல் இந்த வானகப் பயிற்சியில் உடன் பங்கேற்றது வரை, எந்த நல்ல விஷயங்களுக்கும் உடனே ஆதரவு தருபவர். பயணத்தின் போது, கல்லூரி வாழ்க்கையையும், மதுரையில் செய்த சேட்டைகளையும் நிணைவுகூர்ந்தது ஒரு சுகமான அனுபவமே!
ஈ) வானகம்
பயிற்சியாளர்கள் அனனவரும் (அரச்சலூர் செல்வம், குமார், வெற்றிமாறன், பாஸ்கர் ஆறுமுகம், செந்தில் குமரன், கருப்பசாமி, ‘இடுபொருள் வல்லுநர்’ மாரி அக்கா மற்றும் சிலர்) நம்மாழ்வார் அய்யாவின் கருத்துக்களை தங்களுக்கே உரித்தான அழகிய பாணியில் எத்திவைத்தனர். ’தம்மைப் போல் 100 நம்மாழ்வார்களை உருவாக்குவது’ என்ற அய்யாவின் வாழ்நாள் குறிக்கோளை அவரது வாழ்நாளுக்குப் பிறகும் இவர்கள் அனனவரும் தத்தம் வாழ்வியல் கொள்கைகளாக ஆக்கிக்கொண்டனர். இத்தொகுப்பின் தலைப்பு முதல் அதன் கீழுள்ள அனைத்து கட்டுரைகளிலும் வரும் வார்த்தைகள் யாவும் வானகத்தின் வார்த்தைகள் அல்லது அவர்களது சிந்தனைகளை உள்வாங்கிய எனது வார்த்தைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.
பயிற்சியாளர்கள் அரச்சலூர் செல்வம் மற்றும் குமார் அவர்களுடன் நான், நண்பர் ராஜசேகர் மற்றும் பிற மாணவர்களும்
உ) உற்றார்
எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் இருந்தே துவங்குகிறது. கற்றவைகளை அன்றாட வாழ்வில் செயல்படுத்த, மனைவி முதல் இல்லத்தின் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது; அது இல்லையேல், இன்று இக்கட்டுரைத் தொகுப்பு எனக்கு சாத்தியமில்லை.
இன்னும் பலரது உதவிகளை, இன்ஷா அல்லாஹ், இனி வரும் கட்டுரைகளில் (தேவைப்படும் இடங்களில்) பதிவு செய்கிறேன். இத்தொகுப்பின் முதல் கட்டுரைக்குப் போகும் முன், அழகிய இறைவசனங்களை நினைவுகூர்வோம்.
“அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள். அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனி வர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.”
(அல் குர்ஆன், 16:10-11; அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்; தமிழ் குர்ஆன் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பானையைத் தேடி… புதயலைத் தேடி…
வானகம் செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு நீண்ட காலமாக மனதில் இருக்கும் நவீனத்தின் மீதுள்ள சலிப்பு காரணமாக, இயற்கை வழியிலான பொருட்களின் மீதான எனது தேடலைத் துவக்கினேன்... அதில் முதலிடம் வகிப்பது மண்பாண்டங்கள்!
சந்தைக்கும் கடைவீதிக்கும் பெயர்போன ஏரலில், பானைகள் வாங்குவதற்கான எனது புலன் விசாரணையை உறவினர்களுடன் துவக்கினேன். பலரின் ஆலோசனைகளைக் கேட்டவர்களாய், ‘வாழவல்லான்’ எனும் சிறிய கிராமத்தை வந்தடைந்தோம். ஆத்தூர் / முக்கானியில் இருந்து ஏரல் செல்லும் வழியில், உமரிக்காட்டை அடுத்துள்ளது இந்த வாழவல்லான். சிற்றூருக்கே உரித்தான நிரந்தர அரசு-சாரா (தனியார்) தகவல் சேகரிப்பு / பரிமாற்ற மையத்தில் (அதனை பேருந்து நிறுத்த தேனீர் அங்காடி என்றும் சொல்வர், அதாங்க ‘bus stop டீக்கடை’) விசாரித்து, திரு. நாராயணன் அவர்களின் களிமண்ணால் கட்டப்பட்ட சிறிய (ஆனால் அழகிய) வீட்டிற்கு வந்தோம்.
தெருக்கோடியிலுள்ள அந்த வீட்டின் பின்புறம், மரங்களும் செடிகளும் நிறைந்திருந்தன. அந்தக் கிராமத்தில், அவரது குடும்பம் மட்டுமே இந்தத் தொழிலைச் செய்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், நெகிழிப் (plastic) புரட்சியும் இவர்களைப் போன்றோரது தொழில்களை கொஞ்சங்கொஞ்சமாக முடக்கிவிட்டன என்றே சொல்லலாம்.
மண்பாண்டங்கள் மீதுள்ள நமது ஆர்வமின்மையும், மக்காத (non-biodegradable) ஏனைய பொருட்களின் மேலுள்ள அளவு கடந்த மோகமும்தான் இந்த இழிநிலைக்குக் காரணம்.
தேடி வந்தவர் வீட்டில் இல்லாததால், அவரது அண்டை வீட்டார் (சொந்தக்காரர்கள் போலும்) பின்புற ஓலைக் குடிலை திறந்தனர் – மண்சாமான்களைச் செய்வதும், அவற்றைக் காய வைத்துப் பாதுகாப்பதும் இந்த சிறிய குடிலில்தான். எதிர்வரும் கோடைகாலத்திற்காக பதநீர் கலையங்கள் அதிகம் தயார் செய்து வருவதால், வெறும் மூன்று பானைகளையே காண முடிந்தது. அதில் மனதிற்குப் பிடித்த ஒரு பானையை தேர்வு செய்தோம். நியாயமான விலை என்பதால் மிக்க மகிழ்வுடன் வாங்கினோம்.
நகரங்களின் பல்பொருள் அங்காடிகளில் (super market), பொருள்களின் மீது ஒட்டியிருக்கும் விலைக்கு எந்த ஒரு பேரமும் பேசாமல் வாங்கிப் பழகியதால், இது போன்று குறுந்தொழில் செய்பவர்களிடம் ஏனோ பெருநிறுவன பயிற்சிகளில் (corporate training) கற்ற பேரம்-பேசும் திறனை (negotiation skills) உபயோகிக்க மனமில்லை. அருகில் இருந்த சிறுவர்களின் உதவியால், கொங்சம் புளியங்காய்களைப் பறித்து – புசித்து (அதைப் பற்றி எழுதும்போதும் நாவில் எச்சில் ஊறுகிறது), மிகுந்த மகிழ்வுடன் விடைபெறும் வேலையில், கதையில் திருப்புமுனை… அதாங்க twist…
பதநீர் கலையங்கள்
கதாநாயகன் இல்லாமல் கதை எவ்வாறு பூர்த்தியாகும்? ஆம்! திரு. நாராயணன் அவர்கள் மிதிவண்டியில் எங்களை நோக்கி வந்தவராய், “நீங்கள் பானை வாங்க வேண்டுமென டீக்கடையில் விசாரித்ததாக சொன்னார்கள்... அதான் வேகமாக வருகிறேன்...” என புன்னகைத்தார். ஊரின் தகவல் சேகரிப்பு / பரிமாற்ற மையம் சிறப்பாக செயல்படுகிறதே என நினைத்துக்கொண்டேன். எங்களிடம் இருந்த பானையைக் கையில் வாங்கியவராய் தனது வலது கை ஆள்காட்டி விரலைக் கொண்டு அதன் கீழ்புறம் சுண்டிப் பார்த்து, “இந்தப் பானை மூச்சு வாங்கிவிட்டது... தண்ணீர் நிக்காது... நீங்கள் இதைக் கொண்டு செல்ல வேண்டாம்...” என அமைதியாகக் கூறினார். நாங்களும் அந்தப் பானையை உயர்த்தி சூரியனை நோக்கி பார்த்தபோதும் துளைகள் ஏதும் எங்கள் கண்களுக்கு மட்டும் அகப்படவில்லை.
“சத்தம் சரியில்லை. நிச்சயம் இதில் கண்ணுக்கு தெரியாத சிறு துளைகள் இருக்கும்” என்றவர், எங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுத்தார். பணத்தை விடுத்து மனிதர்களை சம்பாதித்தார் அக்கணம். பத்து வருட பெருநகர வாழ்வில் கண்டிராத ஒன்று – ஒரு புதைலைக் கண்ட மகிழ்ச்சி எனக்கு. நியாயமான விலையும், நேர்மையான குணமும் வியாபாரத்திற்கு அவசியம் என்றுதானே இஸ்லாமும் நமக்கு கற்றுக் கொடுக்கிறது? நான்கு பானைகள், நான்கு உண்டியல்கள் மற்றும் இரண்டு தொகுப்பு (set) செப்பு சாமான்கள் (90-களில் காயலை விட்டும் காணாமல் போன குழந்தைகளுக்கான சமையலறை மாதிரி விளையாட்டுப் பொருட்கள்) ஆகியன செய்வதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து, அந்த நேர்மையாளரைச் சந்திக்க மீண்டும் வாழவல்லான் சென்றோம். (இம்முறை தகவல் சேகரிப்பு / பரிமாற்ற மையத்தின் உதவியை நாடாமல்!) வாங்கிய பொருட்களுடன் இரு மூட்டை மணலையும் கொடுத்து அனுப்பினார்.
செப்பு சாமான்கள்
மண்பாண்டங்களின் தேவைகள் குறைந்து, நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகமாகி, புதுப்புது வியாதிகளை விரும்பிப் பெற்றுக்கொண்டோம். திருமணங்களிலும், மசூதிகளிலும் பெரிதும் உபயோகிக்கப்பட்ட மண்சட்டிகளையும், கலையங்களையும் இனி நாமும் நம் தலைமுளைகளும் காண்போமா? “காக்கா, சிட்டி கறி கொடுங்க!” என்று மண்சட்டிக்காக ஸஹனிலுள்ள மூன்றாவது நபர் கையை நீட்டிய காலம், உண்மையில் நமது வாழ்வில் பொற்காலம்தான்.
நாகர்கோவிலில் (மற்றும் பிற பகுதிகளிலும்) கிடைக்கும் நவீன மண்பாண்டங்களைப் பற்றி சகோதரர் எஸ்.கே.சாலிஹ் மற்றும் எனது உறவினர்கள் மூலமாக தெரிந்துக் கொண்டேன். வாங்கிய மண்பாண்டங்களின் பயன்பாட்டையும், நவீன மண்பாண்டங்களுக்கான தேடலைப் பற்றிய தகவல்களையும் இன்ஷாஅல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன்... |