| |
ஆக்கம் எண் (ID #) 18 | | | ஞாயிறு, செப்டம்பர் 2, 2012 | | என் பார்வையில் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம்! தலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை
|
| இந்த பக்கம் 4200 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய | |
ஏலக் கடையா? மீன் கடையா? இல்லை கள்ளுக் கடையா? இப்படித்தான் எனது மன ஓட்டம் இருந்தது 30.08.2012 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம். அதில் பார்வையாளராக இருந்த எனக்கு வேதனைக்குப் பஞ்சமில்லை.
அரசியல் நாகரிகத்தின் அரிச்சுவடியே அங்கு இல்லை. அவை நெறி, ஒழுக்கம் என்பன அறவே அங்கு பேணப்படவில்லை. கூட்டத்தின் துவக்கமே உச்சகட்ட தொனியில் இருந்துதான் பிறந்தது. இது ஏற்கனவே அங்கு நடந்து வரும் நாடகத்தின் ஓர் அங்கம் என்றுதான் எண்ணத் தூண்டியது.
கூட்டம் முறையாகக் கூட்டாமலேயே கலைந்துவிட்டது. கரு கொள்ளாமலேயே கரு கொல்லப்பட்டுவிட்டது. வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பலர் உள்நடப்பு செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது.
காயல் நகரமோ வீதியெங்கும் குப்பையும் - கூளமுமாக, பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. இன்னும் பலப்பல உள்ளன. இவற்றைப் பேசுவதை விட்டுவிட்டு ஒருவரையொருவர் ஏசுவதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்?
இங்கு கொதிநிலையில் இருப்பது ‘நெட் என்று இவர்கள் குறிப்பிடும் இன்டர்நெட் செய்தியாகும். தலைவியைத் தூக்கியும் - மற்றவர்களைத் தாக்கியும் இந்த அமைப்பு எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே, வரும் விமர்சனக் கடிதங்கள் பல உறுப்பினர்களின் “நற்பெயருக்கு” இழுக்கு சேர்ப்பதாகக் கூறி ஓர் அணியில் “நெட்டுக்கு” தாழ்ப்பாள் போடக் கோரி - கூறி இரண்டு முறை வெளிநடப்பு செய்துள்ளார்கள். ரஜினி பாடலின்படி இவர்கள் அந்தப் பிரச்சினையைத்தான் முதலில் “சுத்தி சுத்தி வந்தாக..."
ஆனால், வீடியோ கேமராவுடன் பலர் இங்கு இருந்தனர். அவர்கள் அழையா விருந்தாளிகள் என தலைவி முழக்கமிட்டார். சுய விருப்பின்படி பத்திரிக்கை சுதந்திரத்தின் பேரில் அவர்கள் வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், வாசலுக்கு நேரே இருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த உறுப்பினர் “உள்ளே வாருங்கள்” என்று கையால் - வாயால் அவர்களை அழைத்ததை நான் கண்டேன்.
ஒளிப்பதிவாளர்களின் வருகையோடு கூட்ட நிகழ்ச்சி தடம் புரண்டுவிட்டது எனலாம். எதை எதையோ பேசினார்கள் என்று சொல்வதை விட கத்தினார்கள் - கூச்சலிட்டார்கள் எனலாம். ஒரே நேரத்தில் பலரும் பல விஷயங்களைப் பற்றி ஆர்ப்பரித்ததால் என்னால் எந்த வார்த்தையையும் சரியாகப் புரிய முடியவில்லை.
ஒழுக்க நெறிக்கு அப்பாற்பட்டு - தரக்குறைவாக பல வார்த்தைகள் அங்கு பேசப்பட்டாலும், தலைவியோடு வெளிநாட்டு காயலர்களையும், நெட் அமைப்பாளர்களையும் இணைத்து ஓர் உறுப்பினர் பேசிய வார்த்தை பெரிய களேபரத்தை உண்டாக்கியது. நான் தலை குனிந்தேன்.
ஊளையிடும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு வெள்ளாடு இருப்பது போன்ற காட்சியே அங்கு இருந்தது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டி அஞ்சவில்லை. கணீர் என்ற குரலில் தனது வாதத்தை எடுத்து வைத்தது. பெண் உறுப்பினர் ஒருவர் “நீ ராஜினாமா செய்டீ" என்று திருப்பித் திருப்பி கோபத்தின் உச்சியில் இருந்து கேட்டதை என் கண்களால் நம்ப முடியவில்லை.
தலைவியிடமும் தவறு இருக்கலாம். உறு்பபினர்களிடமும் தவறு இருக்கலாம். அவற்றை முறையாக பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய கூட்டத்தை இரத்து செய்து வெளிநடப்பு செய்வது தவறு.
உறுப்பினர்கள் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். மக்கள்தான் அவர்களின் எஜமானர்களே தவிர வேறு யாருமல்ல! மக்களுக்கு பணி செய்யாது சம்பளம் வாங்குவது முறையாகுமா? சிந்திக்க வேண்டும்.
நகர்மன்றம் நகராத மன்றமாக இருந்தால் காயல் நரகமாகி விடும். உள்ளூரில் பல வித அரசியல் இருப்பது போல் தெரிகிறது. வெளிநாடுவாழ் காயலர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும். நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒருநாள் இம்மண்ணுக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆகவே சிந்தியுங்கள்!
இறுதியாக...
காயல் நகர மன்றத்தில் நடப்பது ஒரு பொம்மலாட்டம் என்றே பலரும் பேசுகின்றனர். ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ?
ஏலக் கடையா?
மீன் கடையா? இல்லை
கள்ளுக் கடையா?
இந்நிலை என்று மாறும்???
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|