குழந்தைகள் இறைவனின் அற்புதப் படைப்பு, அபூர்வமான பரிசு. இந்த உலகத்தில் வந்திறங்கியவுடன் அவர்களுக்கு முதலில் இந்த உலகத்தை அறிமுகப் படுத்துகிறவர்கள், உணரவைக்கிறவர்கள் பெற்றோர்கள் தான். குழந்தைகள் பெற்றோர்களைத்தான் முதலில் கவனிக்கின்றனர், உற்றுநோக்குகின்றனர். எனவே குழந்தைகளின் முன்னால் பெற்றோர்கள் நடந்துகொள்கிற நடவடிக்கைகளை பொறுத்தே குழந்தைகளின் அகவுலக அடிக்கட்டுமானம் கட்டப்படுகிறது. குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றை தவிர்த்தால் அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.
குழந்தைகள் முன்னிலையில் தீய சொற்களைப் பேசுவதை தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும். படிப்பு விசயத்தில் குழந்தைகளை கண்டிக்கும்போது பாசிடிவ் அப்ரோச் இருக்க வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தவேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். புதிய புதிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யவேண்டும். குழந்தைகளின் சுட்டித்தனங்களை, சேட்டைகளைக் கண்டு பொதுவாக பெரியோர்கள் முகம் சுளிப்பதும், அதட்டுவதும், மிரட்டுவதும் கோபம் மிகுதியால் அடிப்பதும் கூட நிகழ்கிறது. குழந்தைகளுக்குத் தாங்கள் செய்த காரியங்களைவிட அதனால் கிடைத்த விளைவு ஆழ்மனதில் பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் பிற்காலங்களில் தன் வாழ்நாள் முழுவதிலும் அந்த நடுக்கத்தை மறப்பதில்லை.
குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுநோக்குங்கள். அதில் தெரியும் ஆவேசம். அர்ப்பணிப்பு, தீவிரம், பேராவல், இடைவிடாத முயற்சி, சிறிய முன்னேற்றத்திலும் கொள்ளும் உவகை, பிரச்சனையை புதிய கோணங்களில் அணுகுகிற அணுகுமுறை, பொறுமை, குழந்தைகள் படைப்பூகத்தின் பரிபூரண வடிவமாக திகழ்கிறார்கள். குழந்தைகளின் அறிதிறன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தவோ, இடையூறு செய்யவோ கூடாது. அவர்களின் செயல்பாடுகளின் சுதந்திரம் கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதோடு குழந்தைகள் முன்னால் தகாத எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழங்கு முறையைப் புகட்டுவதில் தான் கவலை வேண்டும். அது தான் முக்கியம். பிறகு அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படி பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம் தான் ஒரு மனிதனைப் பிறகாலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடுரமாக குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது. இது அந்த மாணவரின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினையால் உண்டானதல்ல. இதற்கு பின்னால் கல்விமுறையின் சிக்கல்களும், சமூக அமைப்பின் வன்முறைகளும் உள்ளன. தற்காலத்தில் குழந்தைகளை ஊடகங்கள் தான் வளர்க்கின்றன.
அழுகின்ற குழந்தைக்கு நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டும் அம்மாவை இன்று உலகில் எந்த மூலையிலும் பார்க்க முடியாது. டீவியைப் போட்டுவிட்டு இதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடு என்று கூறிவிட்டுச் செல்வதுதான் தற்போதைய வழக்கம். இதனால் அக்குழந்தை டி.வியில் வரும் புனையப்பட்ட கற்பனை உலகுக்கும, நிஜமான உலகுக்கும் வேறுபாடு தெரியாமலே வளர்கிறது. டி.வி மட்டுமின்றி சினிமா வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் புத்தகங்களுக்கும் இதில் பங்குண்டு உலகில் ஒவ்வொரு குழந்தையும் தினமும் குறைந்தது இருபது முதல் எழுபது முறை யாராவது கொலை செய்யப்படுவதை பார்க்கின்றன அல்லது படிக்கின்றன.
குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ஒரு மசாலா படத்தை விட அதிகளவில் வன்முறை இடம்பெறுகிறது. கொலைவெறியுடன் மவுசை துறத்தும் மிக்கி, எதிரிகளை சராமாரியாக சுட்டுத் தள்ளும் பவர் ரேஞ்சர்கள், பாய்ந்து பாய்ந்து வில்லனை துவைக்கும் ஸ்பைடர்மேன் என்று வன்முறைக்கு அவற்றில் பஞ்சமில்லை. சினிமாவில் தங்கள் விருப்ப கதாநாயகன் வில்லன்களை அறிவாள், துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களுடன் தாக்கி அழிப்பதை கண்டு மகிழ்கின்றனர். அத்துடன் அக்கதாநாயகன் செய்வது போன்ற பாவணைகளை செய்து பார்த்து மகிழ்கின்றனர். பள்ளி ஆசிரியையைக் கொலை செய்த இர்பான் “அக்னிபாத்” எனும் இந்தி படத்தை பலமுறை பார்த்ததாகவும் அதிலிருந்தே இச்செயலுக்குரிய உத்வேகத்தை அடைந்ததாகவும் சொல்லி இருக்கின்றான். குழந்தைகள் தம்மைச் சுற்றி நடப்பவற்றை போல செய்தல் (Imitation) என்னும் முறையில் தம்முடைய நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர்.
பள்ளி ஆசிரியை கொலை சம்பவத்தில் அடுத்த சிக்கல் கல்விமுறை. குழந்தைகளின் விருப்பத்திற்கு கொஞ்சமும் இடம் தராத கல்விமுறை அவர்களை வெறுப்படைய செய்கிறது. எதைப்படிக்க வேண்டும் என்பதை குழந்தைகள் தீர்மானிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களின் பெற்றோர்களும் தீர்மானிப்பதில்லை. உண்மையில் உலக முதலாளிகளே இதனை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். தங்களுடைய பொருளாதார நலனுக்கு தேவையானவற்றையே அவர்கள் கல்வி என்று போதிக்கின்றனர், அவற்றைக் கற்பதையே வெற்றிக்கான பாதையாகவும் அவ்வாறு கற்பவர்களை முன் மாதிரிகளாகவும், ஊடகங்களின் வழியாக தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனால் பெற்றோர்கள் சிலகுறிப்பிட்ட கல்வி பிரிவுகளை மட்டும் இலக்காக வைத்து டுமுபு வகுப்பிலிருந்தே குழந்தைகளை வளர்க்க தொடங்குகின்றார்கள். அக்குழந்தைகளின் விருப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய விருப்பம் என்னவென்று அந்தக்குழந்தை தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் வளர்கின்றது. தனியார் பள்ளிகள் இச்சூழலை தங்களுடைய லாப நோக்கில் பயன்படுத்தி அறுவடை செய்கின்றனர்.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை முன்வைத்து குழந்தைகளிடம் மதிப்பெண் நோக்கிய கல்விமுறையை திணிக்கின்றனர். பாடத்திட்டம் எனும் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு நல்ல மதிப்பெண் எடுக்காத குழந்தைகளை வாழவே தகுதியற்றவர்கள் போல் அவை திரும்பத் திரும்பச் சொல்லி நம்பவைக்கின்றனர். அத்துடன் அம்மாணவர்களை ஆசிரியர்களின் வழியாக தண்டிக்கவும் செய்கின்றனர்.
தன்னுடைய மனநிலைக்கு ஏற்புயைடதாக இல்லாத பாடங்களை படிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்கள், அதில் போதுமான மதிப்பெண்கள் எடுக்கமுடியாமல் போகும் நிலையில் தங்கள் வாழ்க்கை குறித்த சுய பிரக்ஞையை அழித்துக் கொள்கின்றனர். தனக்கென்று எதிர்காலம் இல்லை என்று உறுதியாக நம்பும் மாணவன் நிகழ்காலத்தை பாழாக்க தொடங்குகின்றான். தனக்காக மற்றவர்கள் உருவாக்கிய இலக்கை அவன் மதிப்பதில்லை. அதை அடைவது அவனுக்கு கடினமாதாக இருப்பதால் அதை தூக்கி எறிய துணிகின்றான். இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமிக்க ஒரு ஆளுமை மறைந்திருக்கின்றது அந்த ஆளுமை தனக்கான தருணங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. தக்க சூழ்நிலைக்காக துளிர்க்கவோ, பூக்கவோ வேண்டி மறைந்திருக்கின்றது. அந்த ஆளுமையின் முக்கியதுவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் துணை நிற்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை பள்ளிக்கூடமும, பெற்றோர்களும், சமூகம் யோசிக்க வேண்டும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது சமூகத்தில்?
யாருமே குழந்தையில் ஆளுமை குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்வதும் இல்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நினைப்பது இல்லை. வாய் திறந்து மழலை பேசும் பருவத்திலேயே குழந்தையிடம் நம்முடைய ஆசைகளைத் திணித்து விடுகிறோம். ஏனெனில் குழந்தைகள் பெரியவர்களை அலட்சியப்படுத்த முடியாது பெரியவர்களைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி குழந்தைகள் அவர்கைள நேசிக்கிறார்கள். அளவற்ற நேசத்தின் விளைவாகவே பெரியவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் அதன்படி நடக்க வேண்டும் என்ற பேரவா குழந்தைகளுக்கு எழுகிறது. அதன் விளைவாகவே தன் இயல்பூக்க உணர்வை கைவிட்டுவிட்டு பெரியவர்களின் சொல்படி கேட்கத் தொடங்குகிறது.
பாருங்கள் எல்லா குழந்தைகளும் கிளிப்பிள்ளையப் போல தாங்கள் இஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றோ அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்றோ ஒப்பிக்கும் அந்தக் குழந்தைகளுக்கு பொறியாளர் என்றால் யார் என்றோ மருத்துவர் என்றால் யார் என்றோ சற்றும் தெரியாத பருவத்தில் மந்தைபுத்தியின் விளைபொருளான நம் ஆசையை குழந்தையிடம் திணிக்கிறோமோ! உலகம் பூரா வெறுமனெ பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும் நிறைந்து விட்டால் போதுமா? ஏன் இப்படி? நம்முடைய சமூக அமைப்பு சில திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் பொறியாளர், மருத்துவர் என்ற கல்வியை மதிப்புமிகு வியாபார பொருட்களாக்கி அதை விற்பனை செய்யும் தந்திரங்களில் ஒரு சமூகத்தையே சிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரு சமூகத்துக்கு அறிவியல் அறிஞர்கள் தேவையில்லையா? ஓவியர்கள் தேவையில்லையா? கணித மேதைகள் தேவையில்லையா? வுரலாற்று ஆய்வாளர்கள் தேவையில்லையா? தொல்லியல் அறிஞர்கள் தேவையில்லையா? சுற்றுச்சூழல் அறிஞர்கள் தேவையில்லையா? நிர்வாகவியல் அறிஞர்கள் தேவையில்லையா? வேளாண்துறை விஞ்ஞானிகள் தேவையில்லையா? மெக்கானிக்குகள் தேவையில்லையா? விளையாட்டு வீரர்கள் தேவையில்லையா? இது போல எண்ணற்ற துறைகளும் தானே இந்த உலகம் அப்புறம் எப்படி மந்தைபுத்தி உருவாகிறது? குழந்தைகள் வளரும் போதே அவர்களது ஆளுமைத் திறனின் முளைகள் மலரத்தான் செய்யும் அது ஓவியத்தில் இருக்கலாம் பிரித்து இணைக்கும் செயல்பாடாக இருக்கலாம் கணிதத்திலாக இருக்கலாம், கதை சொல்வதாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இடையூறு செய்யாமல் அடக்கி ஒடுக்காமல் அந்தந்த துறையில் வளர்வதற்கான உதவிகள் புரிந்தாலே போதும் குழந்தைகளின் அடிப்படையான அன்பு எல்லோரையும், எல்லாப்பொருட்களையும் நேசிக்கிற மனோபாவம் எந்தக் காயமுமின்றி, அடக்குதலும் இன்றி வெளிப்படும் எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைக்கும், புதிய சமுதாயம் மலரும். உண்மையில் குழந்தைகள் வளர்ந்த மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும் குட்டி மனிதர்கள். அவர்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
|