பறக் ஹுசைன் ஒபாமா ஐக்கிய அமெரிக்க நாட்டின் 45ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அப்படித்தான் ஊடகங்கள் அறிவித்தன. அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அவரது முழுப் பெயர் அப்படித்தான் இருக்கிறது. ஆகவே சட்டப்படியான விடயங்களுக்கு அவர் ஹுசைனைக் கைவிட முடியாது. பொதுவான விஷயங்களுக்கு அவர் ஹுசைனைத் தவிர்க்கிறார். காரணம், எதிரணியினர் தேவையில்லா பிரச்சினைகளை உண்டாக்குவர் என்பதால்.
NOTHING IS EASY என்பர். அதாவது இவ்வுலகில் எதுவுமே இலகு இல்லை. இந்த வெற்றி ஒபாமாவிற்கு இலகுவில் கிடைக்கவில்லை. சென்ற முறையை விட பன்மடங்கு கடினமாகவே இருந்தது. காரணம்? சென்ற தேர்தலில் தன்னைப் பற்றிய பல சுய விமர்சனங்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அமெரிக்காவில் அவர் பிறக்கவில்லை... ஆகவே ஜனாதிபதியாக முடியாது என்று வாதிட்டனர் சிலர். ஆகவே, நாட்டு மக்களுக்கு தன் பிறப்புச் சான்றிதழை கண்காட்சியாக்கினார்.
இஸ்லாமியன் இவன் என்று மதவாதத்தைக் கிளப்பினர் சிலர். அவர்களுக்கும் பதில் தந்தார். எனது தகப்பன் கென்யாவில் இருந்து வந்த முஸ்லிம் என்பது உண்மை. எனது தாயும், தந்தையும் திருமணம் செய்வதற்கு முன்பே நான் கருவில் உருவானது உண்மை. கிறிஸ்தவரான எனது தாய் என்னைக் கிறிஸ்தவனாகவே பதிவு செய்துள்ளார்... அப்படியே வளர்த்துள்ளார் என்று பகிரங்கமாகக் கூறினார்.
அடுத்து, இந்தோனேசியாவில் இவர் மதரசா கல்வி பயின்றார்... ஆகவே இவர் ஒரு தீவிரவாதி என்று தீப்பற்றி வைக்க முனைந்தனர் சிலர். தனது தாய் இரண்டாம் கணவனாக ஓர் இந்தோனேசியனைத் தெரிவு செய்ததையும், அதனால் ஜகர்தாவில் சில வருடங்கள் வாழ்ந்ததையும் ஒப்புக்கொண்ட அவர், தான் கற்ற பாடசாலையில் இருந்து அத்தாட்சிகளைப் பெற்று அதனை உலகிற்குக் காட்டினார்.
ஒரு கறுப்பன் நம்மை ஆளலாமா என்று நிற துவேசம் சிலர் செய்தபோது, சற்றும் சளைக்காது, “நான் கறுப்பனுமல்ல! வெள்ளையனுமல்ல!! ஒரு சாமானிய மனிதன்... உங்கள் இரத்தம் சிவப்பு... என் இரத்தமும் சிவப்பு... ஆகவே நமக்கிடையே உயர்வு - தாழ்வு இல்லை” என்று நிதானமாகப் பேசி, அனைத்து ஏவுகணைகளையும், ஆள் இல்லா விமானத் தாக்குதல்களையும் சமாளித்தார்.
ஆனால், 2012 தேர்தல் மிகவும் வித்தியாசமானது. இங்கும் ஒரு வர்க்கப் போட்டி இருந்தது. அதாவது, பணமுதலைகள் இவருக்கு எதிராக அணிவகுத்து நின்றனர். காரணம், ஒபாமா தன்னை ஏழைப் பங்காளனாக இனம் காட்டியதால். நமது அரசியல்வாதிகளைப் போல மேடையில், “உழைப்பவனின் நண்பன்” என்றும், மறைவில் முதலாளிகளோடு பேரம் பேசுபவனாகவும் அவர் இல்லை. “நடுத்தட்டில் இருந்து வந்தவன் நான்... ஆகவே நேரே பார்க்கிறேன்... கீழே பார்க்கிறேன்... மேலே ஆகாயத்தைப் பார்ப்பவன் அல்ல!” என்ற அவரது மக்கள் திட்டங்கள் பணக்காரர்களை எரிச்சலடையச் செய்தது.
குறிப்பாக, அமெரிக்காவில் மருத்துவக் காப்புறுதி இல்லாவிட்டால் மருத்துவ செலவு விண்ணை முட்டும். மருத்துவமனை சென்று நோயைக் குணப்படுத்தி வீடு வருவதை விட அங்கேயே மரணிப்பது செலவு குறைவு. காப்புறுதி கட்ட வசதியில்லாத மக்கள் நோய் காலத்தில் படும் சிரமம் சொல்ல முடியாதது. ஆகவே, அரசு செலவில் பொதுமக்களுக்கு இலவச காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எதிரணியினர் அதனை எதிர்த்தனர். குடியரசுக் கட்சி எப்போதும் பழமைவாதிகளையும், பணக்காரர்களையுமே கொண்டிருக்கும்.
அமெரிக்க அரசியல் அமைப்பின்படி, ஜனாதிபதி சில அதிமுக்கியமான - அவசரமான விடயங்களைத் தவிர, மற்றவற்றை தன் ஆணைப்படி நிறைவேற்ற முடியாது. மக்கள் சபைகளின் அங்கீகாரம் வேண்டும். காப்புறுதி வர்த்தக்ம்தான் உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகம். இதில் முதலிடம் பெற அமெரிக்காவும், பிரிட்டனும் போட்டியிடும். இதுபற்றி ஒரு குட்டிக் கதை உண்டு.
ஓர் அமெரிக்க காப்புறுதி பிரதிநிதியும் பிரிட்டிஷ் காப்புறுதி பிரதிநிதியும் ஒரு விடுதியில் சந்தித்துக்கொண்டபோது, இருவரும் தங்கள் நிறுவனங்களைப் பற்றியே பிதற்றினராம். பிரிட்டிஷ்காரர் சொன்னார்... “எங்கள் வாடிக்கையாளர் 14ஆம் மாடியில் இருந்து கீழே விழுவதாக இருந்தால் நாங்கள் அவர் கீழே விழுந்து இறக்கும் முன்பே எங்கள் காசோலையை (செக்) அவர் கையில் கொடுத்து விடுவோம்” என்றாராம். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்கன், “எங்கள் வாடிக்கையாளர் 14ஆம் மாடியில் இருந்து கீழே விழுவதாக இருந்தால், நாங்கள் 04ஆவது மாடிக்குச் சென்று அவர் கையிலேயே செக்கைக் கொடுத்து விடுவோம்” என்றானாம். எப்படி இருக்கிறது?
இவ்வாறு, போட்டியான அமெரிக்க காப்புறுதி வியாபாரம் ஒபாமாவின் இலவச காப்புறுதி திட்டத்தால் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்துவிட்டது. பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாமே காப்புறுதி நிறுவனங்களோடு நெருக்கமான சினேகத்தைக் கொண்டிருக்கும். ஆகவே, அவர்கள் தூண்டுதலால் கோடி மேல் கோடி சம்பாதிக்கும் வர்த்தக உலகம் ஒபாமாவை எதிர்க்கத் துவங்கியது. மேலும், வைக்க இடம் இல்லாது பணம் சம்பாதிக்கும் பணக்காரர்கள் அதிக வரி செலுத்தி தங்கள் பணம் மக்கள் நலனுக்குப் பயன்பட வைக்க வேண்டும் என்று வரிவிதிப்பை அதிகப்படுத்தினார் அதிபர். கொதித்து எழுந்தனர் அவர்கள் கொலை வெறியோடு.
CASINO சூதாட்ட வர்த்தகத்தில் இருக்கும் ஒரு லாஸ் வெகஸ் நிறுவனம், ஒபாமாவின் புதிய வரிவிதிப்புக் கொள்கையால் 2000 மில்லியன் டாலர்களைக் கட்ட வேண்டி வந்தது. அந்த நிறுவனம் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் நிதியாக 200 மில்லியன் கொடுத்தது. ரொம்னி அந்த வரியை இரத்து செய்வேன் என்றார். அத்தோடு, மருத்துவக் காப்புறுதியையும் இரத்து செய்வதாகச் சொன்னார். தேர்தல் நிதி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது குடியரசுக் கட்சி அலுவலகத்தில்.
பணம்தான் அமெரிக்கத் தேர்தலையும் முடிவு பண்ணுமோ என்று பலரும் பயந்தனர். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு அல்ல! பெரிய அளவில் பிரச்சாரம் பண்ண அது ரொம்னிக்கு உதவியது. தொலைக்காட்சி விளம்பரங்கள் பல கோடி ரூபாய்களைத் தொடும். திரும்பும் திசையெல்லாம் ரொம்னி சார்பு விளம்பரங்கள் கண்ணைப் பறித்தன. செய்திகள் சொல்லுவது போல் சில பிரச்சார உத்திகளைக் கையாண்டனர்.
அதாவது, உதாரணத்திற்கு தொலைக்காட்சியில் தலைப்புச் செய்திகள் என்று கூறி, பின்பு மற்ற செய்திகளுக்குச் செல்கிறார்கள் அல்லவா? அதுபோல அமெரிக்கத் தேர்தல் என்று சொல்லி, குடியரசுக் கட்சி உருவாக்கிய அந்த பிரச்சார செய்தித் தொகுப்பைக் காட்டுவார்கள். அதில் ரொம்னிக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, எந்தெந்த விடயங்களை - திட்டங்களை குடியரசு கட்சி விமர்சிக்கிறதோ அதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மக்கள் மனதில் திணிக்க முயல்வர். 10 நபர்களைப் பேட்டி கண்டால் அதில் 2 பேர் ஒபாமாவை ஆதரித்துப் பேசுவர். 8 பேர் அவரை எதிர்த்துப் பேசுவர். அவர் செய்வது - சொல்வது - செல்வது தவறு என்று கருத்தை விதைக்க முனைவர். இந்தப் பிரச்சாரத்திற்கு விளம்பர அடிப்படையில் நிமிடத்திற்கு இவ்வளவு என்று பெரிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
பொருளாதாரம் கெட்டுவிட்டது... இன்னும் கெடும் என்பது ரொம்னி தரப்பாரின் வாதம். ஆனால், மக்கள் அதனை ஏற்கவில்லை. வில்லியம் (பில்) க்ளிண்டன் 8 ஆண்டுகள் ஆட்சி செய்த காலத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் பலம் பெற்றது. அவருக்குப் பின் வந்த ஜோர்ஜ் புஷ், ஆப்கான், ஈராக், தலிபான், அல்கொய்தா என்றே பேசி - யுத்தத்திலேயே மூழ்கியதால் யுத்த செலவு பூதாகரமாகி, அதுவே பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்தது என்றே மக்கள் நம்பினர்.
ஜோர்ஜ் புஷ் எப்போதும் பின் லாடனைப் பற்றியே பேசுவார். எல்லா குறைகளுக்கும் அவர்தான் காரணம் என்பது போல் பேசுவார். ஊடகத்துறையினர் அதனைக் குறை கூறுவர். இதுபற்றி ஒரு கதையும் உலவியது. ஒரு கூட்டத்தில் ஜோர்ஜ் புஷ் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது பைப்பில் தண்ணீர் வராததற்கு பின்லாடனே காரணம்... தெரு விளக்கு எரியாததற்கு பின்லாடனே காரணம் என்பது போல் அவர் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அவரது உதவியாளர் புஷ்ஷின் காதில், “மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது... உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்...” என்று சொல்ல, உடனே புஷ் கூட்டத்தைப் பார்த்து, “பார்த்தீர்களா? இதற்கும் பின்லாடனே காரணம்” என்றாராம்.
அமெரிக்க அரசியலில், நம்மவர்கள் போல் - ஒருவர் செய்த காரியத்தை மற்றவர் கிழிகிழியென்று கிழிப்பதில்லை. நாசூக்காகவே பேசுவர். வெற்றிபெற்ற ஒபாமாவிற்கு தோல்வியடைந்த ரொம்னி வாழ்த்து தெரிவித்து, “தேச நலனே முக்கியம்... போட்டி அரசியல் அல்ல! ஆகவே, ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் ஒத்துழைப்பு தருவோம்” என்றார். அதேபோல ஒபாமாவும், ரொம்னி தனக்கு நல்ல போட்டியைத் தந்தார் என்றும், முக்கிய விடயங்களில் அவருடன் கலந்து செயல்படப் போவதாகவும் தெரிவித்தார்.
ஆசிய வாக்காளர்கள், இலங்கை - இந்திய வாக்காளர்கள் உட்பட பலர் ஒபாமாவையே ஆதரித்தனர். அவர்களிலும் உள்ள சில பெருந்தனக்காரர்கள் வரிக்குப் பயந்து ரொம்னி பக்கம் சாய்ந்தனர். பி.பி.சி. தமிழ் ஒலிபரப்பிற்கு பேட்டியளித்த திருநெல்வேலிக்காரர் ஒருவர், “நான் ஒரு கட்சிக்கும், என் மனைவி ஒரு கட்சிக்கும் வாக்களிக்கப்போம்” என்று சிரித்தபடி கூறினார்.
நமது பகுதிகளில் சாதாரண மக்களிடம் அமெரிக்க எதிர்ப்பு என்பது ஊறிப்போன ஒன்றாக உள்ளது. இடதுசாரி அரசியல்வாதிகள் உண்டாக்கிய மயக்கம் அது. இலங்கை - இந்திய மக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வெளியே அமெரிக்காவில்தான் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணர்வதில்லை. திறமைசாலிகளை அமெரிக்கா அரவணைப்பது போல வேறெந்த நாடும் வரவேற்பதில்லை.
முஸ்லிம்களுக்கு அமெரிக்காவோடு கசப்பு இருப்பதற்குக் காரணம் உண்டு. அதுவும் அரசியல். அமெரிக்காவில் யூத சமூகத்தை எதிர்க்கும் எந்த ஜனாதிபதியும் வெற்றிபெற முடியாது. பெரும் பொருளாதாரத்தை அந்த மக்களே கையில் வைத்துள்ளார்கள். ஊடகத்துறையை மொத்தமாகவே வாங்கிவிட்டார்கள். தேர்தலுக்கு பணத்தை அள்ளி வீசியவர்கள் அவர்களே. இம்முறை ஒபாமாவிற்கு அதிகளவு யூத நன்கொடை வரவில்லை. இஸ்ரேல் அவரை ஏற்கவில்லை. யூத சங்கத்தில் அவர்களை ஆதரித்துப் பேசாதவர் வெள்ளை மாளிகை பக்கமே போக முடியாது என்பது அங்குள்ள நிலை. சென்ற முறை அவர் யூத சங்கத்தில் பேசினார். ஆனால் இம்முறை போனாரா என்று தெரியவில்லை. போயிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். காரணம், சென்ற ஜூலையில் வாஷிங்டனில் நடந்த ADC என்று சொல்லப்படும் ARAB - AMERICAN DISCRIMINATION COMMITTEE - அதாவது அறபு அமெரிக்கர்களால் உண்டாக்கப்பட்ட இஸ்ரேல் எதிர்ப்பு - பாலஸ்தீன ஆதரவு சங்கத்தின் 2012 வருடாந்த மகாநாட்டிற்கு இவர் தனது ஒலி - ஒளிப்பதிவு செய்தியைக் கொடுத்ததோடு, தனது முக்கிய இரு ஆலோசகர்களான பென் றோட்ஸ், அலி மடுசியக் ஆகியோரைப் பேசும்படியும் அனுப்பினார். அவர்கள் முறையே DEPUTY NATIONAL SECURITY ADVISOR, EXECUTIVE DIRECTOR OF THE WHITE HOUSE BUSINESS COUNCIL பதவி வகிப்பவர்கள்.
இது யூத சமூகத்தையும்,இஸ்ரேலையும் ஆத்திரப்பட வைத்ததோடு, யூதர்கள் கையில் இருக்கும் பிரதான ஊடகங்கள் இந்நிகழ்வைக் கண்டுகொள்ளாதது போல் இருட்டடிப்பு செய்தன.
இறுதியாக... ஒபாமாவின் வெற்றி சாதாரணமானது அல்ல. கடைசி நிமிடம் வரை அவரது தேர்தல் பணிக்குழு அசரவில்லை. தங்கள் ஆதரவு வாக்காளர்கள் வாக்களித்தார்களா, நண்பர்கள் வாக்களித்தார்களா என்பது போன்ற பல வேண்டுகோள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொண்டே இருந்தனர். மெய் வருத்தம் பாராத உழைப்பு பலன் தந்தது.
ஒபாமா மனித நேயம் மிக்கவர். தான் சென்ற முறை வெற்றிபெற்றதும், தனது தந்தை வழி உறவினர்களைப் பார்க்க கென்யா சென்று, தனது தந்தையின் கடைசி மனைவியையும், தன் சகோதர - சகோதரிகளையும் பார்த்து வந்தார். வாழ்க்கையில் உச்சத்திற்குச் சென்ற சிலர் கீழே குனிந்து பார்ப்பதேயில்லை. வளம்பெற்ற குழந்தைகள் தம் வறிய பெற்றோரைக் கவனிப்பதில்லை. அவர்களை தம் பெற்றோர் என்று சொல்லவே வெட்கப்படுவர். ஆனால் இந்த மாமனிதன் மண் குடிசைக்குச் சென்று, “நான் உங்களின் இரத்தம்” என்று உலகிற்கு உரத்துச் சொன்னான்.
ஆண்டியும், அரசனும் சமம் என்று சொல்லும் அந்த இஸ்லாத்தின் ஹுசைன் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருப்பதாலா? |