காயல்பட்டினம் - சுற்றுச்சூழல் பாதுகாப்போடு இருந்த நன்னகரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்நகரில் - எல்லா இடங்களையும் போல அங்கொன்றும், இங்கொன்றுமாகவே நோய்களும், வியாதிகளும் வலம் வந்தன. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட சாதாரண நோய்களுக்கு சிறப்பு வைத்தியங்களெல்லாம் பார்க்கப்பட்டு வந்தது. தீராத வியாதிகள் ஏதேனும் யாரையாவது தீண்டினால், அதுகுறித்து ஊர் முழுக்க பேசப்படும் நிலையும் இருந்தது.
ஆனால், தற்காலத்தில் இந்நிலை முற்றிலும் மாறிவிட்டது என்றே கூறலாம். அந்தளவுக்கு பல விதமான நோய்கள் நகரில் வலம்வந்து, மக்களின் உடமைகளையும், உடல் நலனையும், உயிரையும் நொடிப்பொழுதில் மாய்த்து விடும் கொடுமை இன்று காயல்பட்டினத்தில் சர்வசாதாரணமாகிப் போய்விட்டது.
குழந்தைகளுக்கு ஏற்படும் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் நோய் முதல், அனைவருக்கும் ஏற்படும் கண் பார்வைக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, ஓட்டம் - நடை உள்ளிட்டவற்றில் ஏற்படும் உடலியக்கக் குறைபாடுகள் என பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் நம் மக்களை ஆட்டுவிக்கின்றன.
இவை அத்தனையையும் தாண்டி இன்று நகரில் சாதாரணமாகிப்போன ஒரு நோய்தான் உயிர்க்கொல்லி ‘புற்றுநோய்’. ஆம்! பத்தாண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கோ - எங்கோ ஏற்பட்ட இந்நோய் குறித்து ஊரே பேசும். ஆனால் இன்றோ, “அவருக்கு காய்ச்சலாம்... இவருக்கு இருமலாம்...” என்று கூறுவதைப் போல சர்வ சாதாரணமாக, “அவருக்கு கேன்சர் இருக்காம்” என்று கூறும் வழக்கம் உண்டாகிவிட்டது.
புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படுவதையொட்டி, அடர்ந்த கூந்தலைக் கொண்ட பெண்களெல்லாம் ‘கீமோதெரபி’ கொடுக்கப்படுவதால் தலை மொட்டையாகி, அதனால் அவமானப்படும் அவர்கள் தம் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிடுகின்றனர். அழகு முகங்களைக் கொண்ட ஆண்களும் - பெண்களும், ‘கரண்ட் ஷாக்’ கொடுப்பதன் மூலம் அவர்களின் சதை சிதைக்கப்பட்டு முகங்கள் அலங்கோலமாகி விடுகிறது. நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் கூட அவரைப் பற்றிய விபரம் அறியாத வரை அனைவரோடும் அவர்களால் சாதாரணமாகப் பழக இயலும்போது, இந்த உயிர்க்கொல்லி புற்றுநோய்க்குள்ளானவர்களின் நிலையோ தனிமைப்படுத்தப்பட்டு விடுகிறது.
பொதுவாக நோயாளிகளை நலம் விசாரிப்பதென்பது நல்ல பழக்கம். ஆனால், இந்த புற்றுநோயாளிகள் விஷயத்தில் அவ்வாறு நோய் விசாரிப்பதற்காகக் கூட பெரும்பாலும் யாரும் செல்ல முடிவதில்லை. அந்தளவுக்கு தனக்கோ / தன் குடும்ப அங்கத்தினருள் ஒருவருக்கோ ஏற்படும் இந்நோயை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
புற்றுநோய் ஒருவருக்கு இருப்பதாக அறியப்பட்டுவிட்டாலே, அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழந்து, மரணத்தின் விளிம்பிற்கே தாங்கள் சென்றுவிட்டதாக உணர்ந்துகொண்டு, அதற்கான நாட்களை எண்ணத் துவங்கிவிடுகின்றனர். மனம் நலமாக இருந்தால் அதுவே உடல்நலனைக் காக்கும் என்ற உண்மையை அறிந்திருந்தும் - உணர முடியாத இவர்கள், அனுதினமும் - ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதுகுறித்து சிந்தித்து - சிந்தித்து தங்கள் மன - உடல் நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர்.
புற்றுநோயாளிகள் படும் பாட்டைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொள்ளும்போது, “நம் பரம எதிரிக்குக் கூட இந்த பாழாய்ப்போன நோய் வரக்கூடாது” என்று மனதாரக் கூறும் நிலை உள்ளது.
அண்மையில், நமதூர் காயல்பட்டினத்தில், ரியாத் - தம்மாம் - ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கத்தால் - காயல்பட்டினத்திலுள்ள 40 பெண் தன்னார்வச் சேவையாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் தகவல் சேகரிப்பில் (Cancer Survey), சுமார் 450 பேருக்கு புற்றுநோய் ஆரம்ப நிலையிலும், முற்றிய நிலையிலும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது நம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்களை நடத்தி வருகின்றனர். இம்முகாம்களில் சுமார் 250 பேர் பங்கேற்றால், அவர்களுள் குறைந்தபட்சம் 10 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கே நமக்கும் புற்றுநோய் இருக்கு என்று ரிப்போர்ட் தந்து விடுவார்களோ...” என்ற பீதியில் பலர் விபரமறியாமல் இம்முகாமில் பங்கேற்பதையே தவிர்க்கின்றனர். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? புற்றுநோயானது பெரும்பாலும் முற்றிய பிறகுதான் அது வெளியில் தெரியும். அதன்பிறகு சிகிச்சையளிக்கப்பட்டாலும், உலகை விட்டும் அவர் பயணிக்கும் நாட்கள் தள்ளிப்போடப்படுமேயொழிய, வேறொன்றும் நடக்கப்போவதில்லை. அதே நேரத்தில், இதுபோன்ற முகாம்களில் பங்கேற்பதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் அதன் துவக்க நிலையிலேயே கண்டறியப்படுவதால், சிறிய மருத்துவ சிகிச்சையிலேயே இறையருளால் அவர் குணப்பட முடியும். இந்த உண்மையை நமதூர் காயல்பட்டினம் நகர மக்கள் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற முகாம்களில் பங்கேற்போர் எண்ணிக்கை 250 என்ற நிலையிலிருந்து 2,500 என்று கூட மாறலாம். அதற்குத் தேவை மனோதிடம் மட்டுமே.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் கத்தர் - ஹாங்காங் மன்றங்களால் நடத்தப்பட்ட புற்றுநோய் முகாமின்போது, ஏற்பாட்டுப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த தன்னார்வலர் ஒருவர், தனக்கு பரிசோதனை செய்துகொள்ளாததை அறிந்துகொண்ட மருத்துவர், “என்ன நீங்க டெஸ்ட் பண்ணிக்கலையா?” என்று கேட்க, “ஐயோ... வேணாம்! ஒருவேளை இருக்குன்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா...??” என்றார். அதற்கு மருத்துவர், “ஒருவேளை உங்களுக்கு இருப்பதாக அறியப்பட்டால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! You are blessed! ஆம், உங்களுக்கு இந்த நோய் இருப்பது ஆரம்ப நிலையிலேயே அறியப்பட்டுவிடுவதால், இலகுவாக அதைக் குணப்படுத்திட இயலும். ஆனால், பயத்திலேயே நீங்கள் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து, உங்களுக்கு நோயும் இருந்தால், அது முற்றிய நிலையில் நீங்கள் அதனை அறிந்துகொண்டாலும் அதனால் உங்கள் உயிருக்கு ஆபத்துதானே...?” என்று கேட்க, உண்மையைப் புரிந்துகொண்ட அந்த தன்னார்வலரும் பரிசோதனைக்கு இணங்கினார்.
சரி, இந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை காயல்பட்டினத்தில் அதிகரிப்பதற்கான காரணங்கள்தான் என்ன?
உணவுப் பழக்கவழக்கம், கைபேசி கோபுரங்கள், சுற்றுச்சூழல் மாசு... இன்னபிற.
இதில், உணவுப் பழக்கவழக்கத்தைப் பொருத்த வரை, அதனால் பாதிப்பு உண்டுதான் என்றாலும், இதே உணவுப் பழக்கவழக்கம்தான் அக்காலத்திலிருந்து நமதூரில் உள்ளது. ஆனால், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் அன்றிருந்ததை விட அதிகளவிலேயே உள்ளது.
கைபேசி கோபுரங்களைப் பொருத்த வரை, உலகில் அது இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவுக்கு உள்ளது. அதனாலும் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றாலும் அது எல்லோருக்கும் பொதுவானது.
இவ்விரண்டு காரணங்களும் நீண்ட ஆய்வுக்குப் பின்பே உறுதிபடுத்த இயலும்.
ஆனால், சுற்றுச்சூழல் மாசு என்பதைப் பொருத்த வரை, அது நம் கண்ணுக்கு முன் தெரியும் தெள்ளத்தெளிவான காரணி. காயல்பட்டினத்தில் சுற்றுச்சூழலை முழுமுனைப்புடன் கெடுத்துக்கொண்டிருப்பது அந்த நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையே.
இத்தொழிற்சாலையிலிருந்து காற்று வழியாக ஒவ்வொரு நாளும் மாசு வெளிப்படுத்தப்படுகிறது. மழைக்காலங்களின்போது, கடல் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, அதனால் காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு வரை கடல் செந்நிறமாகக் காட்சியளிப்பது வழமையான ஒன்றாகிவிட்டது.
கடந்த ஆண்டு திருச்செந்தூர் கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் புனிதம் நாடி, (DCW தொழிற்சாலையின் கழிவு நீர் கலக்கப்பட்ட செங்)கடலில் குளித்ததால் உடலில் அரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்ததாக அன்றைய தினகரன் நாளிதழில் செய்தி வெளிவந்தது.
அதுபோல, சில மாதங்களுக்கு முன், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலும் இந்த ஆலைக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் ஆவணப்படமாகக் காண்பிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த தொழிற்சாலையினால் ஆபத்து விளையப்போவதை நம் மக்கள் 1985இல்தான் உணரத் துவங்கினர். அக்காலையில், போபால் விஷவாயு கசிந்த விபத்து காரணமாக அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி கூட்டங்கூட்டமாக தமதூரை விட்டும் வெளியேறிய காட்சிகளைக் கண்ட நமதூரின் மூத்தவர்கள், எனது அன்புத் தந்தை - காலஞ்சென்ற தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் அவர்களின் தலைமையில் சென்னையில் ‘சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபர் அசோஸியேஷன்’ என்ற பெயரில் அமைப்பை நிறுவி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் - DCW தொழிற்சாலை குறித்த சில சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டனர். நமதூரில் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் முயற்சியில், தற்போது இறையருளால் நம்முடனிருக்கும் பக்ரீன் ஹாஜியார், ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் அங்கம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நகர மக்களில் ஏழை - எளியோருக்கு உதவுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உலகெங்கும் உள்ள காயலர்களால் - சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, இலங்கை, ஜித்தா, தம்மாம், ரியாத், துபை, அபூதபீ, குவைத், கத்தர், பஹ்ரைன், ஓமன், ஜெய்ப்பூர், மலபார், திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் காயல் நல மன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மன்றங்களுக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவ உதவித்தொகை கோரி விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் வரத்துவங்கியதையடுத்து, அதன் காரணியைக் கண்டறிவதற்காக Cancer Fact Finding Committee - CFFC என்ற பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, பல்வேறு ஆதார ஆவணங்களை உள்ளடக்கிய 51 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை, உலக காயல் நல மன்றங்கள் அவரவர் நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் சமர்ப்பித்து கோரிக்கை மனுவும் அளித்தன.
அதன் தொடர்ச்சியாக தற்போது ‘காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - Kayalpatnam Environmental Protection Association (KEPA) என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பில் தற்போது, நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக்கமிட்டிகள் - வணிக நிறுவனங்கள் - நகரின் சர்வகட்சியினர் - வேன், கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் - அமைப்பு சாரா நிறுவனங்கள் ஆதரவுடன் எதிர்வரும் 29.11.2012 வியாழக்கிழமையன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அன்று மாலை 04.30 மணிக்கு, DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டமும், அன்றிரவு 07.00 மணிக்கு விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக பல்வேறு துறைவாரியான நடவடிக்கைகளைக் கோரி, மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய - மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் மனுக்கள் பல அளிக்கப்பட்டாலும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எதுவுமே நடக்காதது போல் இருப்பது வேதனையளிக்கிறது.
இந்நிலையில், ஓரணியில் நின்று - நமது உணர்வுகளை ஒரே குரலில் வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையுணர்ந்து, 29.11.2012 அன்று நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் காயல்பட்டினத்தின் அனைத்து பொதுமக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுமாய் உங்களை அன்போடு வேண்டியவனாக நிறைவு செய்கிறேன்.
எல்லாம்வல்ல இறைவன் நமதூர் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை சீர்குலைத்து, அவற்றை வேரோடும் - வேரடி மண்ணோடும் அழித்து, மக்கள் வாழ்வைக் காத்தருள்வானாக.
நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை |