சவூதி மன்னர் அப்துல்லா அவர்கள் சுமார் 1.4 பில்லியன் சவூதி ரியாலை (1 பில்லியன் என்பது 100 கோடியாகும்) பயனாளிகளுக்கு கிடைக்கும் படி அரசு கருவூலத்திற்கு ஆணையிட்டுள்ளார். இதன் படி இப் பயன்பெறும் தகுதி உள்ளவர்களின் ரமழான் மற்றும் ஈத்பெருநாள் செலவீனங்களையும் ஈடுகட்டக் கூடிய முறையில் இது இருக்கும்.
இதுபற்றி சமுக நலத்துறை அமைச்சர் யூசுப் அல் - ஒதைமீன் கூறும்போது, இவ்வுத்தரவு கிடைத்து 72 மணித்தியாலயங்களில் அப் பணம் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்றார்.
“இது வறியவர்களுக்கு மாதா மாதம் தரும் உதவிப் பணத்திலிருந்து வேறுபட்டது. நோயாளிகள், வயதில் மூத்தவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், அனாதைகள், சிறையில் இருப்பவர்களின் குடும்பங்கள் போன்ற நலிந்த மக்கள் பலர் இதன்மூலம் பலன் அடைவர். இவர்கள் சமுகநல அலுவலங்களுக்கு வந்து இப்பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய வங்கி கணக்கிற்கு உடனடியாக அது செலுத்தப்பட்டு விடும்” என்றார் யூசுப் அல் - ஒதைமீன்.
இது நிற்க, மன்னர் அப்துல்லா 250,000 குர்ஆன் பிரதிகளை, சவூதி அரசின் இஸ்லாமிய விவகார அமைச்சோடு தொடர்புடையை வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய மையங்களுக்கு பகிர்ந்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி சவூதி தூதுவராலயங்கள் மூலம் அவை வெளிநாடுகளில் விநியோகிக்கப்படும்.
இக்குர்ஆன் பிரதிகள் மதீனாவில் உள்ள மன்னர் பஹத் பெயரில் உள்ள அச்சத்தில் அச்சிடப்படும். இவ் அச்சகத்ததை இஸ்லாமிய விவகார அமைச்சு நேரடியாகக் கவனிக்கிறது. இங்கு குர்ஆன் பிரதிகள் அச்சிடலோடு, அதன் மொழி பெயர்ப்போடு வேறு பல இஸ்லாமிய நூல்களும் இங்கு அச்சிடப்படுகின்றன. மன்னர் அப்துல்லா சவூதி எயார்லைனுக்கு இப்பிரதிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
மத்தஃப் மேம் பாலம் திறப்பு
கஃபதுல்லாவைப் பொறுத்தவரையில் இந்த வருட ரமழானின் சிறப்பு அம்சம் யாத்திரீகர்கள் தவாபு செய்வதற்கான மத்தஃப் எனும் மேம் பாலம் திறக்கப்பட்டதாகும். மன்னர் அப்துல்லாவின் பணிப்புரையின் கீழ் மஸ்ஜிதுல் ஹரம் பெரிய பள்ளியின் கத்தீபும், புனித பள்ளிகள் இரண்டின் நல விவகார சபையின் தலைவருமான ஷேக் அப்துல் ரஹ்மான் அல் - சுதைஸ் அவர்களால் பிறை 17 வியாழன் அன்று திறந்து வைக்கப்பட்டது.
12 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மேம்பாலம் 1700 சக்கர நாற்காலியாளர்களை ஒரு மணி நேரத்தில் கொள்ளும் வசதி கொண்டது என்று சுதைசி தனதுரையில் குறிப்பிட்டார். இப்பாலம் தற்போது மூத்த வயதினர்களுக்கும், சக்கர நாற்காலி பாவிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட் டுள்ளது.
சென்ற நவம்பர் 15ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் முடிவடைந்து தற்போது தற்காலிகமாக இது திறக்கப்பட்டுள்ளது. முழு வேலையும் 2015 பூரண மாகியதும், ஒரு மணித்தியாலயத்திற்கு சுமார் 105,000 யாத்திரிகர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். இதனால் ஹஜ் காலங்களிலும் பெருமளவு சனநெரிசலை தவாபு செய்பவர்கள் தவிர்க்கமுடியும்.
இதே வேளையில் 12,000 சக்கர நாற்காலிகளும் 110 மின்சார சக்கர நாற்காலிகளும் தவாபு செய்பவர்களுக்கு கட்டணமின்றி தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை போக மேலதிகமாக 521 மின்சார சக்கர நாற்காலிகளை வாடகைக்கு எடுக்கவும் முடியும். இந்த நாற்காலிகளை தள்ளுவதற்கு இரவு பகல் எந்நேரமும் போதியளவு தொண்டர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
“இந்த பாலம் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. பின்னால் இருந்து சக்கர நாற்காலிக்காரர் மோதிவிடுவார் என்ற பயமில்லாது கஃபாவைச் சுற்றி நாங்கள் தவாபு செய்ய இது வசதியாக இருக்கிறது” என்று கூறியவர் துருக்கியைச் சேர்ந்த முதியவர் கரீம் அஹ்மத்.
‘தவாபை இலகுவாக்க சவூதி அரசு செய்த இந்தப் பணியை நான் மிகவும் மெச்சுகிறேன். சக்கர நாற்காலிகாரர்களையும் கால்நடைக்காரர்களையும் பிரித்து வைத்துள்ளதானது நடப்பவர்கள் விரைவாக தங்கள் தவாபை செய்து முடிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறியவர் வேறு யாருமல்ல இலங்கையைச் சேர்ந்த முகம்மது அக்பர்.
நாற்காலி தள்ளும் இளம் தொண்டன் அப்துல்லா தான் செய்யும் பணி தனக்கு மனநிறைவத் தருகிறது என்றார். முதியவர்களையும் இயலாதவர்களையும் தவாபு செய்வதற்கு நான் உதவுவது மூலம் அல்லாஹ் எனக்கு நிறையக் கூலி தருவான் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
மக்கா ஹரம் பாதுகாப்பு குழுவின் கமாண்டர் மேஜர் ஜெனரல் யஹ்யா அல் ஸஹ்ரானி கூறும் போது பாலமும் அதனை பாவிப்பவர்களும் அதன் சுற்றுப்புறமும் எங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டே வரும். பாதுகாப்பு பணியாளர்கள் நிறைய எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். மேலும் பாலத்தை கட்டிய நிறுவனம் தனது பொறியியலாளர் குழு ஒன்றையும் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது என்று சொன்னார்.
இதுபோக அரசு தந்த ஒரு குறிப்பின்படி இந்த புனித ரமழான் காலத்தில் 50 லட் சம் நோன்பாளி யாத்திரிகர் களை எதிர்பார்ப்பதாக அது விளம்பியது.
Friday Mosque
மதீனா செல்லும் யாத்திரி கர்கள் விரும்பி விஜயம் செய்யும் இடங்களில் முக்கிய மானது, ஆங்கிலத்தில் Friday Mosque என்றும் முன்பு Atekam Mosque என்றும் அதற்கு முன்பாக பள்ளத்தாக்கு மஸ்ஜித் என்றும் அழைக்கப்படும் மஸ்ஜித் ஆகும். இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் மக்காவை விட்டு ஏகியபின் முதல் முதலாக ஜூம்மா தொழுகையை நடாத்திய மஸ்ஜித் இதுவே ஆகும். இது கூபா மஸ்ஜிதிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. ரனவ்னா பள்ளத்தாக்கின் அடியில் இயற்கை வனப்புமிக்கதாக இது அமையப் பெற்றுள்ளது.
இந்த மஸ்ஜிதீன் கூரையானது ஹிஜ்ரி 09ம் வருடம் (கி.பி 630)ஷம்ஸ் அல்தின் கவூன் என்பவரால் திருத்தம் செய்யப்பட்டது. இம்மஸ்ஜித் முதலாவதாக புனருத்தானம் செய்து மீளக்கட்டப்பட்டது உமர் பின் அப்துல் அசீசின் ஆட்சியில், இரண்டாவதாக அப்பாசித் அவர்களின் ஆட்சி காலத்தில், அதாவது ஹிஜ்ரி 155 முதல் 159 வரை, மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இம்மஸ்ஜித் ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது 8 மீட்டர் நீளம், 4.5மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரம் என்ற அளவிலேயே இருந்தது. செங்கற்களால் செய்யப்பட்ட 8 மீட்டர் நீளத்தில் மீனாராவும் இதற்கு இருந்தது. வடபுறத்தில் 8 மீட்டர் நீளம் 6 மீட்டர் அகலம் கொண்ட சிறிய மண்டபமும் இருந்தது.
துருக்கி ஒட்டமான் ஆட்சி காலத்தில் சுல்தான் பேசயித்தின் பணிப்புரையில் 14ம் நூற்றாண்டின் மத்தியில் இந்த மஸ்ஜித் விஸ்தரிக்கப்பட்டு புனருத்தானம் செய்யப்பட்டது. பின்பு ஹிஜ்ரி 1412ல் சவூதி ஆட்சியாளரின் கட்டளைப்படி இம்மஸ்ஜித் பெரிதாக வடிவம் பெற்றது. இன்றைய இம் மஜ்லிஸின் தோற்றமானது ஆரம்ப கால மஜ்லிஸைவிட பல மடங்கு பெரியது, நவீனமானது.
கியாம் அல்லை தொழுகை
ரமழான் 20 முதல் சவூதியெங்கும் உள்ள பள்ளிவாயல்களில் “கியாம் அல்லை” தொழுகை ஆரம்பமாகிவிட்டது. மஸ்ஜிதுகள் அனைத்தும் பராமரிப்பிற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் ஊழியர்களை முழுநேர பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். மஸ்ஜிதுகளை சுத்தமாக வைப்பதோடு எந்த நேரமும் மின்சாரமும் தண்ணீரும் தடையில்லாது கிடைக்கும்படி செய்வது இவர்களது பிரதான கடமை.
ரமழான் கடைசி 10 தினங்களில் சகல மஸ்ஜிதுகளும் இரவு பகலாகத் திறந்திருக்கும். இரவு நேரத்தில் குர்ஆன் ஓதுபவர்களும் வணக்கங்களில் ஈடுபடுவர்களும் எந்த இடையூறும் இன்றி தங்களது பணியைத் தொடரலாம். பெண்களுக்கென தனியாக இடவசதி இல்லாத மஸ்ஜிதுகள், தற்காலிக தடுப்புகளை அமைத்து கொள்ளலாம்.
சுமார் 1,500 மஸ்ஜிதுகளில் பராமரிக்கும் ஒரு தனியார் நிறுவன முகவர் கூறும் போது “எங்களது ஊழியர்களுக்கு இரவில் கடைசி வரை பணியில் இருக்கும்படி கட்டளையிட்டு இருக்கிறோம். இவர்களது பணி மஸ்ஜிதுகளை சுத்தமாக வைத்திருப்பது, சகல மின் விளக்குகளும் சரியாக எரிகிறதா எனப்பார்ப்பது, மின்சாரத்தை தடை ஏற்படாது கவனிப்பது, ஒவ்வொரு குழாயிலும் தொடராக தண்ணீர் வருகிறதா என்று கவனிப்பதுமாகும்” என்று குறிப்பிட்டார்.
பெரிய மஸ்ஜிதுகளுக்கு 10 ஊழியர்களும் சிறிய மஸ்ஜிதுகளுக்கு இரண்டு ஊழியர்களும் போதும் என்று அவர் மேலும் கூறினார். தலைநகர் ரியாத்திலும் மற்றும் உள்ள பிரதான நகரங்களில் சில பெரிய மஸ்ஜிதுகள் அரச குடும்பத்தவர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுவது குறிப்பிடப்படவேண்டும். முஸ்லிம் விவகார அமைச்சு 5,000 மஸ்ஜிதுகளை தங்கள் பொறுப்பில் பராமரிக்கிறது. |