“அவளைக் கட்டிப்பிடித்து நான் அழுவேன்... அல்லாஹ் என்னுடைய பிரார்த்தனைப் படி நான் இறக்கும் முன்பு அவளைக் காட்டியுள்ளான்... நான் அதற்கு நன்றி சொல்கிறேன்... நாங்கள் வெகு காலமாகவே அவளை எதிர்பார்த்து இருக்கிறோம்...” என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட 88 வயது பாட்டி ஹஸ்னா அப்துல் வஹ்ஹாப் - தனது சகோதரி சித்தி ஆயிஷா லண்டனில் 30 வருடங்கள் கொத்தடிமையாக ஒரு வீட்டில் வாழ்ந்து விடுதலை பெற்ற செய்தி கேட்டு கூறினார்.
யார் அந்த சித்தி ஆயிஷா அப்துல் வஹ்ஹாப்? தெற்கு மலேசியாவில் பிறந்து வளர்ந்தவள் அவள். தந்தை கல்வியதிகாரியாகக் கடமையாற்றினார். ஆகவே, குடும்பத்தவர்கள் கற்றவர்களாகவே இருந்தனர். பாட்டி ஹஸ்னா சுத்தமான ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசுகிறார். ஆயிஷா படிப்பில் படுசுட்டி. சகல வகுப்புகளிலும் திறமையானவளாகவே இருந்தாள். ஆகவே, கல்லூரிப் படிப்பு முடிந்ததும் லண்டனில் மேற்படிப்புக்காக கொமன்வெல்த் உபகார நிதி கிடைத்தது. பொறியியல் துறையில் நாட்டம் கொண்டு லண்டன் சென்றாள். அப்போது அவளுக்கு வயது 24.
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகன் உமர் முனீரூம் ஆயிஷாவோடு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றான். அது வருடம் 1968. வியட்நாம் யுத்தம் மிகவும் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். உலகின் பல பாகங்களிலும் இளைய சமுதாயம் அமெரிக்காவிற்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது - அமெரிக்காவில் உட்பட. இடதுசாரி கொள்கைகள் பெருமளவில் இவர்களைக் கவர்ந்தன. லண்டனில் அப்போது செயல்பட்டு வந்த (MALAYSIAN AND SINGAPORIAN STUDENTS FORUM - MASS) என்ற மலேசிய சிங்கப்பூர் மாணவர் அமைப்பில் அவர்கள் இணைந்தனர்.
இந்த அமைப்பானது, மார்க்ஸ் - லெனின் - மாசேதுங் ஆகிய மூவரின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்த மிகவும் தீவிரமான ஒரு தீவிரவாத அமைப்பாகும். இதற்குத் தலைமையேற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்பவர். அவருக்கு உதவி - அவரது மனைவி சந்திரா பட்னி. ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த இவர் ஓர் இந்திய வம்சாவளிப் பெண். இந்த அமைப்பு லண்டனில் வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
சித்தி ஆயிஷா இடதுசாரி கொள்கைகளில் மிகவும் தீவிரமான பிடிப்புள்ளவளாக மாறினாள். முனீரும் அவளோடு இணைந்தான். இயற்கையாகவே கல்வி - கேள்வியில் சிறந்து விளங்கிய ஆயிஷா ஒரு புதுமைப் பெண். சமுதாயப் பார்வை கொண்டவள்.
தலைவர் பாலகிருஷ்ணன் – CHAIRMAN ARA, COMRADE BALA என்றும் அழைக்கப்பட்டார். இடையில் 1970வாக்கில் பாலாவிற்கும், மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, பாலா தனியாக மாவோயிஸ்ட் அமைப்பொன்றை உருவாக்கினார். 25 உறுப்பினர்கள் அவர் வழியில் இணைந்தனர். அதில் ஆயிஷாவும், முனீரும் இருந்தனர். பின்பு, தீவிர சமுதாயவாதியான ஆயிஷாவைத் தன் வசம் வைக்க விரும்பிய பாலா, அவளுக்கும் - முனீருக்கும் பகையை உண்டாக்கி, முனீரை அமைப்பை விட்டு நீக்கினார். ஆயிஷா திருமண மோதிரத்தை ஆற்றில் வீசினாள். இப்போது ஆயிஷா, பாலாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாள்.
இந்தக் கூட்டம் தங்கள் பிரச்சாரத்திற்கென ஒரு புத்தகக் கடையை நடத்தியது. லண்டன் காவல்துறையினர் ஒருமுறை கடையைச் சோதனையிட்டு, பாலகிருஷ்ணனையும் - அவர் மனைவி சந்திராவையும் கைது செய்து, பின்பு விடுவித்தனர்.
மலேசிய அரசு ஆயிஷாவோடு தொடர்புகொண்டு, இந்த அமைப்பிலிருந்து வெளியேறி விடுமாறும், இல்லாவிடில் அவர் மலேசியா திரும்புவதற்கு தடை வரும் என்றும் எச்சரித்தது. அக்காலத்தில், மலேசிய - சிங்கப்பூர் அரசுகளுக்கு எதிராகச் செயல்பட்டு, நாட்டிலிருந்து தலைமைறைவான பலரும் லண்டனில் இந்த அமைப்பில் இருந்தனர்.
ஆயிஷா, லண்டனில் வசித்த தன் சகோதரனைப் பார்க்க பாலகிருஷ்ணனோடும் - ஒரு வெள்ளைக்காரப் பெண்ணோடும் சென்றார். சகோதரர் அவர் வரவை விரும்பவில்லை. இடதுசாரி அரசியல்வாதியாக உருவாகி வரும் ஆயிஷாவினால் தனது குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு வரும் என்று நம்பிய அவர், தனது கருத்தை ஆயிஷாவிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவள், “உனக்கு நான் வேண்டாம் என்றாள் எனக்கு என் குடும்பம் வேண்டாம்” என்று கூறி வெளியேறினாள். அதன்பின் ஆயிஷா தன் குடும்பத்தினரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை.
பின்பு தனது கருத்திற்காக வருந்திய சகோதரர், இசாமுத்தீன் ரயீஸ் என்ற வேறொரு மலேசிய தீவிரவாதியிடம் - தனது சகோதரியோடு தொடர்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டார். ஆனால், ஆயிஷா எங்கிருக்கிறார் என யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. நாளாவட்டத்தில் இடதுசாரிக் கொள்கையிலேயே ஒன்றிப் போன ஆயிஷா, தனது வேலையையும் விட்டுவிட்டு - கொள்கைக்காகவே வாழலானாள். தொழில் பார்த்த காலத்தில் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை அமைப்பின் செயல்பாட்டிற்காக பாலாவிற்குக் கொடுத்த அவள், தற்போது வேலையை விட்டதும், வாழ்வாதாரத்திற்காக பாலாவையே முழக்க நம்பினாள் - அவரிடமே தங்கிவிட்டார்.
நவம்பர் 23ஆம் திகதி லண்டன் பத்திரிக்கைகள் பரபரப்பான செய்தியொன்றை வெளியிட்டன. 30 வருட காலம் ஒரு வீட்டில் கொத்தடிமையாக இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் முறையே வயது 67, 57, 30 என்றும் குறிப்பிட்டன. அதில் மூத்தவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்றும், 30 வயது பெண் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்றும் கூறின. மலேசிய பெண் சித்தி ஆயிஷா அப்துல் வஹ்ஹாப் என்பது தெளிவாகியது.
அந்த வீட்டின் உரிமையாளராக 73 வயது கொண்ட - குள்ளமான - மீசை வைத்த பாலகிருஷ்ணனையும், அவரது மனைவி சந்திராவையும் கைது செய்துள்ளதாக காவல்துறை அறிக்கை கூறியது. இவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றும், ஆனால் வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாக கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியது. ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டவர்களாக ஒரு வேலிக்குள் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பது புரிகிறது.
பாலகிருஷ்ணன் கூறிய உலகப் புரட்சி ஏற்படவில்லை. வியட்நாம் யுத்தம் முடிந்துவிட்டது. அமெரிக்காவும் வெளியேறிவிட்டது. ஆனால், தாங்கள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டங்களுக்காக - அரசு எதிர்ப்பிற்காக, தாங்கள் வெளியில் சென்றால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் பாலாவின் வீட்டில் கொத்தடிமைகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும், 30 வயது பெண் - பாலாவிற்கும் அவ்வீட்டில் வசித்து இறந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் பிறந்ததாக இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.
இவர்கள் வெளியேறியது எப்படி? தொலைக்காட்சியில் குடும்ப வன்முறைகளை எதிர்க்கும் அமைப்பு பற்றி அறிந்த - இவர்களுள் ஒருத்தி, தொலைபேசி வழியே இரகசியமாக அந்த அமைப்பிற்குத் தந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்களை ஒக்டோபர் மாதம் விடுவித்ததாகவும், பின்பு தீவிர விசாரணையின் பின் பாலகிருஷ்ணன் தம்பதியை நவம்பர் 22இல் கைது செய்ததாகவும் கூறியது.
பட்டப்படிப்பிற்காக லண்டன் சென்ற ஆயிஷா - குறிக்கோளை மறந்து தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டாள். அவளது சகோதரியும் - ஓய்வுபெற்ற ஆசிரியையுமான கமர் மஹ்தூம் இதுபற்றிக் கூறும்போது, “ஆயிஷா மிகவும் திறமையானவள்... ஆனால் பிடிவாதப் போக்கு கொண்டவள்... எனது தாயாரின் செல்ல மகள் அவள். மரணப் படுக்கையிலும், எனது தாய் – ஆயிஷாவிற்கு என்ன நடந்தது என்று பாருங்கள் என்றுதான் கூறினார்... அந்த நேரத்திலும் ஆயிஷாவை எங்களோடு தொடர்புகொள்ளத் தூண்டினோம்... ஆனாள் அவள் மசியவில்லை...” என்று வருத்தத்தோடு கூறினார்.
கமரின் கணவர் முஹம்மது நூகு முஹம்மது தொய் கூறும்போது, “ஆயிஷா உயிரோடு இருக்கிறாள் என்ற செய்தி அறிந்ததும் எனது மனைவி தேம்பித் தேம்பி அழுதாள்...” என்றார். கமர், ஆயிஷாவின் சிறு வயது - இளம் வயது புகைப்படங்கள், பாடசாலை அத்தாட்சிப் பத்திரங்கள், அவள் பாவித்த உடுதுணிமணிகள் என்று எதையெதையெல்லாமோ எடுத்துக்கொண்டு லண்டன் பறந்துள்ளார். அவரது பயம், ‘ஆயிஷாவிற்கு என்னை அடையாளம் தெரியாவிட்டால் என்ன செய்வது?’ என்பதுதான். அதற்காகவே இத்தனை பொருட்கள்.
“எனது மௌத்திற்கு - இறப்பிற்கு முன்பு ஆயிஷாவை அல்லாஹ் எனக்குக் காட்டிவிடுவான்...” என்று நம்பிக்கையோடு மலேசியாவில் ஹஸ்னா பாட்டி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே நம்புகிறோம்.
இதற்கிடையில், ஆயிஷாவின் உடல்நிலை பலவீனமாக உள்ளது என்ற செய்தியும் வருகிறது. பக்கவாதத்தால் சில காலம் முன்பு அவர் தாக்கப்பட்டவர். ஆகவே மருத்துவ சிகிச்சையில் உள்ளார். கமர் கூறுகிறார்: “ஆயிஷா இறக்கும் முன்போ, நான் இறக்கும் முன்போ ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும்...”. நல்லதே நடக்கும் என்று நாம் நம்புவோம் - பிரார்த்திப்போம். |