ஆகஸ்டு 17ஆம் திகதி 2012ஆம் வருடம், நியூயோர்க் நகரிலுள்ள இந்திய துணை தூதரகத்தில் உதவி அதிகாரியாக அவள் நியமிக்கபட்டாள். 23 நவம்பரில் பொறுப்பு ஏற்க நியூயோர்க் வந்தபோது, தனது வீட்டுப் பணிகளைச் செய்வதற்காக,
டெல்லியிலிருந்து ஒரு பெண்ணையும் அழைத்து வந்தாள். பெயர் சங்கீதா பிலிப் ரிச்சர்ட். வயது 39. கேரளாவைச் சேர்ந்தவள்.
அவளது தந்தை மற்றும் கணவரது உறவினர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வேலை பார்த்தவர்கள் - பார்க்கிறவர்கள். கணவர் பிலிப் ரிச்சர்ட் மொசம்பிக் தூதரகத்தில் ஓட்டுநராக வேலை செய்தார்.
சங்கீதாவிற்கு மாத சம்பளமாக இந்திய ரூபாவில் 30 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. தூதரக அதிகாரி தேவயானி கொபரகெடவின் கூற்றுப்படி, தனக்குப் பணிப்பெண் ஒருவரைத் தேடியபோது, பிலிப் தம்பதிகள் தன்னைச் சந்தித்து, தாங்கள்
வேலையில்லாது இருப்பதாகவும், குழந்தைகளைப் படிக்க வைக்க சிரமப்படுவதாகவும் கூறி, அமெரிக்காவில் தனக்கு வேலை தரும்படி கேட்டதால், 30 ஆயிரம் சம்பளத்தில் சங்கீதாவை ஏற்றுக்கொண்டதாகக் கூறினாள்.
அதன்படி சங்கீதாவிற்கு அரசாங்க உத்தியோகப்பூர்வ கடவுச்சீட்டு - passport அதாவது அரசு ஊழியரின் பணியாள் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டது. பின்பு, விமானச் செலவையும் இந்திய அரசே செலுத்தியது.
கடவுச்சீட்டு கைக்கு வந்ததும் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனை அவளே செய்தாள் தனது கணினி மூலம். முதலாவதாக செப்டம்பர் 27இல் A-1 விசாவிற்கு மனு செய்தாள். இது அரசால் நியமிக்கப்பட்டு, அரசு அலுவலகத்தில்
அரசிற்காக வேலை செய்பவர்கள் மட்டும் பெறத்தக்கது. தேவயானி இதை அறியாதவள் அல்ல.சங்கீதா அரசுக்காக வேலை செய்யவில்லை. அரசு அதிகாரிக்காகவே அவள் வேலை செய்யவுள்ளார். ஆகவே அது மறுக்கப்பட்டது.
மீண்டும் அக்டோபர் 15ஆம் திகதி A-3 தகுதி விசாவிற்கு மனு செய்தாள். இது A-1 விசா பெற்ற அதிகாரிகளுக்குப் பணிபுரியும் சிற்றூழியர்களுக்குத் தருவது. இவர்கள் நேரில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அதன்படி சங்கீதா - நவம்பர் முதல்
திகதி சென்றபோது, மற்றுமொரு தினத்தில் வருமாறு அவள் அறிவிக்காபட்டாள்.போதிய ஆவணங்கள் அவள் வசம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது. முக்கியமாக, பணிப்பெண் வேலைக்கான உறுதிப்பத்திரம் இல்லை.
நவம்பர் 11ஆம் திகதி, தேவயானியின் வீட்டில் வைத்து அந்த உறுதிப்பத்திரம் தயாரிக்கப்பட்டது. அதன்படி - வேலை நேரம், ஓய்வு நேரம், மருத்துவம், விடுமுறை போன்ற சகலவைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, ஒரு மணித்தியாலத்திற்கு
அமெரிக்க டாலர் 9.75 வீதம் சம்பளம் தரப்படும் என்று இரு சாராரும் கைச்சான்றிட்டனர். சாட்சியாக, சங்கீதாவின் கணவர் பிலிப் கைச்சான்றிட்டார்.
அதில், வாரம் 40 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை என தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அத்தோடு, அமெரிக்க தொழிலாளர் சட்டத்திற்கமைய சகல நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் தேவயானி விண்ணப்ப பத்திரத்தில்
உறுதியளித்திருந்தாள். நவம்பர் 14ஆம் தேதி தேவயானியும், சங்கீதாவும் அமெரிக்க தூதராலயம் சென்றனர். ஒப்பந்தத்தை ஒப்படைத்தனர். அடுத்த நாளே சங்கீதாவிற்கு விசா கிடைத்தது.
நவம்பர் 23ஆம் தேதி தேவயானி இன்னொரு வேலை உறுதி ஒப்பந்தத்தை தயாரித்து, அதில் சங்கீதாவிடம் கைச்சான்று வாங்கினாள். அது அமெரிக்க தூதரகத்திற்கு சமர்ப்பித்த ஒப்பந்தத்தில் பல பகுதிகளைக் கொண்டிருக்கவில்லை. மாத சம்பளம்
இந்திய ரூபாய் 30 ஆயிரம் என்று குறிப்பிட்டதோடு, வேலை நேரம் மற்றும் வசதிகள் எதையும் அது இயம்பவில்லை.
இதன்படி, அமெரிக்காவில் வேலை செய்யும் சங்கீதாவிற்கு, மணித்தியாலத்திற்கு டாலர் 3.31 வீதம் மட்டுமே கிடைக்கும். மாதம் 480 டாலர் தேறலாம். இது அடிமை முறை. ஆகவே அதிகாரி கொதித்ததில் ஆச்சரிரயம் இல்லை.
இந்தியாவின் நகரங்களில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் சராசரி சம்பளத்தை விட இது மூன்று மடங்கு பெரிதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் தொழிலாளர் சட்டம் அதனை ஏற்பதில்லை. 8 மணி நேரம் உழைப்பு என்ற கோட்பாட்டை
உலகிற்குத் தந்ததே அமெரிக்காதானே!
ஆறு மாத பணிக்குப் பின் சங்கீதா பல்வேறு ராகங்களைப் பாட ஆரம்பித்தாள். தனது ஓய்வு நேரத்தில் தான் வெளியில் வேறிடங்களில் வேலை செய்ய அனுமதி கேட்டாள். மறுத்தாள் தேவயானி. அவள் வைத்திருக்கும் கடவுச்சீட்டு, பெற்றுள்ள விசா
அனைத்தும் அரசு சம்பந்தமானது. ஆகவே வெளியில் வேலை செய்வது சட்ட விரோதம் என்றாள் அவள்.
பின்பு இவள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தன்னை வெளியில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றாள். எரிச்சலடைந்த தேவயானி, “இந்நகரில் உன் பாதுகாப்பிற்கு நானே பொறுப்பு. விருப்பம் இல்லாவிடில் நீ இந்தியா திரும்பலாம்”
என்றாள். ஒருமுறை இந்திய தூதரக உயரதிகாரியைப் பார்த்து சங்கீதா, தேவயானி தன்னை அதிகம் வேலை வாங்குவதாக முறைப்பாடும் செய்தாள்.
இரண்டு நாள் ஓய்விற்காக நியூஜெர்ஸி சென்ற தேவயானி குடும்பம் ஜூன் 22ஆம் திகதி திரும்பியது. வீட்டில் சங்கீதா இல்லை. அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அவள் தேவாலயம் சென்றிருக்கலாம் என்று
தேவயானி சும்மா இருந்துவிட்டாள்.
இரவு அவள் வீடு திரும்பாததால், மன்ஹெட்டன் பகுதியில் கிழக்கு 43 தெருவில் உள்ள காவல் நிலையத்தில், ‘காணவில்லை’ என்ற அடிப்படையில் புகார் கொடுத்தாள். அது ஏற்கப்படவில்லை. காரணம், காணாமல் போனவர்களைப் பற்றி உறவினர்கள்
மட்டுமே புகார் கொடுக்கலாம் - எஜமானர்கள் அல்ல என்பதுதான் அங்கு சட்டம்.
டெல்லியிலுள்ள சங்கீதாவின் கணவர் பிலிப்பிற்கு பேசி, கணினி வழி கடிதம் ஒன்று அனுப்பித் தரக் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். ஆகவே, அமெரிக்க உள் விவகார அமைச்சிற்கு தேவயானி புகார் ஒன்றை அனுப்பினாள். அடுத்த நாள் மீண்டும்
நியூயோர்க் நகர காவல் அதிகாரி ஜேம்ஸ் செரீனுக்கு - 'தனது பணியாள் தலைமறைவாகிவிட்டதாகவும், புகார் பதியும்படியும், இரு நாட்டு சட்டப்படி இது குற்றம்' என்றும் கடிதம் ஒன்றை அனுப்பினாள். இரண்டாவது நாள் இரண்டு அதிகாரிகள் அவள்
இல்லம் வந்து புகாரைப் பதிவு செய்தனர்.
ஜூன் இறுதியில் தேவயானியின் கணவர் ஆகாஷ் சிங், தனது இரு குழந்தைகளையும் விடுமுறைக்காக தென்பகுதிக்கு எடுத்துச் சென்றவர் 8 ஜூலைவாக்கில் திரும்பினார். அன்றே காவல் நிலையம் சென்ற அவர், சங்கீதா சில பொருட்களைத்
திருடிவிட்டதாக முறைப்பாடு செய்தார். “என்னென்ன பொருட்கள்? எங்கிருந்தன? எவ்வளவு பெருமதி?” எனக் கேட்டபோது, அவரால் சரியாக விடையளிக்க இயலவில்லை. “மீண்டும் விபரத்தோடு வருவேன்” என்று சென்றவர் வரவில்லை. காவல்துறை
தொடர்புகொண்டபோதும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இது தேவயானி பக்கம் இருந்த ஒரு தவறு. இரண்டாவது தவறு என்றும் சொல்லலாம்.
அப்படியானால் முதல் தவறு என்ன? விசா பெறுவதற்காக அமெரிக்க தூதரகத்தில் மணிக்கு 9.75 டாலர் சம்பளம் கொடுப்பேன் என உறுதியளித்து, அதனை மாதம் இந்திய ரூபாய் 30 ஆயிரமாக மாற்றியது. கீழ் நாடுகளிலிருந்து மேல் நாட்டிற்கு
பணியாளர்களை எடுத்துச் செல்லும் அரசு ஊழியர்கள் பலரும் தங்களது சமையல்காரர், ஓட்டுநர், குழந்தையைப் பார்ப்பவர் போன்ற பலருக்கு தங்கள் நாட்டு அளவு சம்பளத்தைக் கொடுப்பதே உண்மை. அவர்களில் பலர் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.
பிரச்சினைப்படுத்துவதில்லை.
ஜூலை 8 அன்று - தேவயானியும், சங்கீதாவும் நேருக்கு நேராக சந்தித்தார்கள்; இல்லை! மோதிக்கொண்டார்கள். குடியேறுபவர்களுக்கு உதவும் ஓர் அமைப்பு மூலம் இவர்கள் சந்திப்பு நடந்தது. இருவரும் சூடாக வார்த்தைகளைப்
பரிமாறினார்கள்.
கேரளத்து சங்கீதா சரளமாக ஹிந்தியும், ஓரளவு ஆங்கிலமும் பேசினாள். தேவயானி சங்கீதாவை இந்தியா திரும்பும்படி கேட்டாள். அவளோ - தனக்கு 10 ஆயிரம் டாலரும் வேறு கடவுச்சீட்டும் தர வேண்டும் என்று முரண்டு பிடித்தாள். தேவயானி
சங்கீதாவின் கடவுச்சீட்டை செல்லாததாக்கிவிட்டாள். இந்தியா மட்டுமே செல்லலாம். வாக்குவாதம் எல்லை மீறிப் போனதால் சங்கீதாவை வெளியில் கொண்டு செல்ல காவல்துறை உதவி நாடப்பட்டது.
பின்பு சங்கீதா - ஆள் கடத்தலுக்கு எதிரான இயக்கம் ஒன்றின் உதவியை நாடி, தனது கதையைக் கூறலானாள். அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக இவள் கூறியது அவர்கள் மனதை உருக்கவே, அவர்கள் சில அரசுத் துறைகளோடு தொடர்புகொண்டு,
தேவயானி மீது வழக்குப் பதிவு செய்ய வழி செய்தனர்.
இதற்கிடையில் தேவயானி டெல்லி நீதிமன்றம் ஒன்றில், சங்கீதா - பிலிப் தம்பதிகளுக்கு எதிராக வழக்கொன்றைப் பதிவு செய்து, தனக்கெதிராக அவர்கள் அமெரிக்காவில் வழக்கு எதுவும் போட முடியாதவாறு தடை வாங்கினாள். அதே நேரம், டெல்லி
காவல்துறைக்கும், வெளி விவகார அமைச்சிற்கும் விபரங்களைச் சொல்லி, விசாரணை செய்யக் கேட்டாள். காவல்துறை வழமை போல் தூங்கியது. அவர்கள் துரித நடவடிக்கை எடுத்திருந்தால் சங்கீதாவை நாடு கடத்தியிருக்கலாம்.
அதை விட முக்கியமாக, அடிப்படைக் குற்றம் - அமெரிக்க சட்டப்படி, தேவயானியிடம் இருப்பதை, இந்திய வெளி விவகார அமைச்சு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பிரச்சினை வந்தவுடனேயே தேவயானியை இடமாற்றம் செய்திருந்தால் அவள் இந்த
வழக்கிலிருந்து தப்பியிருப்பாள்.
அமெரிக்காவில் எப்போதும் கண்ணகிகளின் சிலம்பு வீச்சிற்கு மதிப்பு அதிகம். அதாவது - பெண்கள் முறையிடும் குற்றங்களில் அவர்களை முதலில் நிரபராதிகளாகவே பார்ப்பார்கள். IMF தலைவர் ஸ்ட்ராஸ் கஹ்ன் ஜூலை 2011ல் பாலியல் குற்றசாட்டில்
விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமும் உண்டு. இந்த வழக்கு தொடர்ந்து செல்லுமாயின், தேவயானிக்கு 10 அல்லது 15 வருட தண்டனை கூட கிடைக்கலாம்.
தேவயானி தவறு செய்யவில்லை, நிரபராதி என்று இந்திய அரசு வாதிடவில்லை. அவளை கைது செய்த முறை சரியில்லை என்றே கூறுகிறார்கள். இதனை பல அமெரிக்கர்கள் ஒப்புகொள்கிரார்கள்.
இந்தியாவை கொதிப்படையச் செய்த செய்தி, தேவயானி உடல் சோதனை செய்யப்பட்டாள் என்பது. பொதுவாக அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பலர் போதைப் பொருள் பாவிப்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களை கைது செய்து
சிறைக்கு அழைத்துப் போகும்போது, போதைப் பொருட்களை மலத்துவாரத்தில் வைத்து எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
இதனைத் தவிர்க்க காவல்துறையினர் இவர்களை ஆடைகளைக் களைந்து, இரண்டு கால்களையும் விரித்து, Jump செய்து உட்கார வேண்டும் என்பர். உள்ளே ஏதுமிருந்தாள் கீழே விழுந்துவிடும். பெண் கைதிகளை பெண் அதிகாரிகள் சற்று தள்ளி நின்றே
கவனிப்பர்.
இதேவேளை, சங்கீதா குற்றமற்றவளா? அப்படிச் சொல்ல முடியாது. சங்கீதா தேவயானியை ஏமாற்றினாள் என்று கூட குறிப்பிடலாம். அவளது குடும்பம் அமெரிக்க அதிகாரிகளுக்கு டெல்லியில் சேவகம் செய்த குடும்பம். ஆகவே, அமெரிக்காவின்
குடிவரவு சட்டதிட்டங்களை அவள் அறியாதவளாக இருந்திருக்க முடியாது. மேலும், டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நாலு பேரையும்
அவர்கள் அறிந்தவர்களாகவே இருப்பர்.
தேவயானி மாறலாக அமெரிக்கா நுழைந்த பின் தனது கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று சங்கீதா திட்டமிட்டிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. மேலும், தேவயானியை சிக்க வைப்பதற்கு, அவள் எடுத்த முயற்சிகளைப் பார்க்கும்போது,
அவளுக்கு நல்ல பின்புலம் - பலம் இருப்பது தெரிய வருகிறது. அவளது உறவினர்கள் சிலர் அமெரிக்காவில் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்கீதாவை சந்தேகிக்க நிறைய இடம் உண்டு.
அமெரிக்கா செய்த தவறு என்ன? பணிப்பெண்கள் கொடுமை என்பது அமெரிக்காவில் பெரிய விஷயம். அடிமை முறையை அவர்கள் ஒழித்துவிட்டாலும், ஆசிய நாடுகளில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவமாகவே உள்ளது. அரபு அரச குடும்பத்தினர்கள்
கூட அங்கு தண்டனை பெற்றுள்ளார்கள். சில பணக்கார இந்தியக் குடும்பத்தினரும் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், தேவயானியின் வழக்கு சற்று வித்தியாசமானது. பணிப்பெண் உடல் ரீதியாகக் காயப்படுத்தப்படவில்லை. நோய்ப்படவில்லை. சம்பளப் பிரச்சினைதான். அது குற்றம்தான். ஆனால்,
இந்தியாவில் அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் ஒரு இந்தியர்க்கு கொடுக்கும் அதே சம்பளம்தான் பிரிட்டனில் அதே வேலையை செய்யும் வெள்ளைகாறர்க்கு கொடுக்கப் படுகிறதா? இல்லையே. அந்த தகவலைத் தர அமெரிக்கா மறுப்பது ஏன்?
ஜூலை மாதத்திலேயே கருவில் உருவான இவ்வழக்கு டிசம்பர் வரை தாமதப்படுத்தப்பட்டது ஏன்?
அதுவும், பணிப்பெண்ணை அழைத்தவர் அவளை வேண்டாம் என்று எப்போது சொல்கிறாரோ அப்போதே அப்பெண் நாட்டை விட்டும் வெளியேற வேண்டும். அவரது விசா செல்லாததாகிவிடும். ஆகவே, அவரைக் கைது செய்வதுதான் முறை. அவருக்கு
விசா நீட்டிப்பு வழங்க எங்கும் இடமில்லை.
ஆனால், அதற்கு மாறாக டெல்லியிலுள்ள பிலிப்பிற்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் T தகுதி விசா - அதாவது அகதிகள் விசா வழங்கி, அவர்கள் பத்தாம் திகதி அமெரிக்கா வந்திறங்கிய பின், பன்னிரெண்டாம் திகதி தேவயானியைக் கைது
செய்து இருக்கிறார்கள். விமான பயண செலவை அமெரிக்க தூதரகமே செலுத்தியுள்ளது.
T விசா முறையானது இன்று ஆப்கானிஸ்தானத்திற்குத்தான் பொருந்தும். இந்தியாவும் ஆப்கானிஸ்தான் நிலையில்தான் உள்ளதா? ஆகவே, இச்செயலால் பலரும் சந்தேகம் கொள்கிறார்கள். பிலிப் குடும்பம் நாளாவட்டத்தில் அமெரிக்க பிரஜையாகிவிடும்.
இது முறைதானா? இதற்கெல்லாம் அனுமதி வழங்கியது யார்?
அமெரிக்க அதிபர் ஒபாமா அல்ல. 1968ஆம் ஆண்டில், பஞ்சாபில் - சீக்கிய தந்தைக்கும், ஹிந்து தாய்க்கும் பிறந்த பிரிதிந்தர் சிங் பராரா என்ற பிரித் பராராதான். தெற்கு நியூயோர்க் நகரின் சட்டமா அதிபராக இருக்கும் இவர், சமீப காலத்தில் பங்குச்
சந்தை ஊழல்கள் பலவற்றைக் கண்டறிந்து, கோடீஸ்வரர்களையும் உள்ளே தள்ளியவர். ஒபாமாவால் பாராட்டப்பட்டவர்.
நிற்க தேவயானியும் ஒரு விசா அதிகாரிதான். இந்தியாவிற்குரிய விசா படிவத்தில் ஒருவர் தவறான தகவல்களைத் தந்தால் அவர் ஒப்புக்கொள்வாரா? அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய மாட்டாரா?
தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் ஆர்ஷெக், தேவயானியின் கைது விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள், ஒப்பந்த ஆவணங்களை சரியாக படிக்காததால் பணிப்பெண் சங்கீதாவிற்கு ஆதரவாக தேவயானியை தவறாக கைது செய்து விட்டதாகவும், தேவயானி குற்றமற்றவர் எனவும் தெரிவித்துள்ளார். மாதம் 4500 டாலர் என்பது தேவயானியின் சம்பளம். சங்கீதாவின் சம்பளம் அல்ல என்றார் டேனியல்.
மாதம் 4500 டாலர் என்பது தேவயானியின் சம்பளம். சங்கீதாவின் சம்பளம் அல்ல என்றார் டேனியல்.
தேவயானி ஒரு தவறு செய்தார். அதை தெரிந்தே செய்தார். ஆகவே, தேவன் என்றாலும்
விடமாட்டேன் என்கிறார் பராரா. ஆனால் பலரும் இத்தவறை செய்யவே செய்கிறார்கள்.
சங்கீதா 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு கைச்சான்றிட்ட பின் முரண்படுவது எப்படி சரியாகும்? அமெரிக்கா, சங்கீதா குடும்பத்திற்கு எப்படி அகதி அந்தஸ்து கொடுக்க முடியும்? எல்லோருமே தவறு செய்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா, டெல்லி தூதரக பாதுகாப்பு பற்றி அதிகம் சிந்திப்பதால் தேவயானி தப்ப வாய்ப்புண்டு!
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 5:45 pm / 26.12.2013] |