காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளும், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் இருபுறங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இத்திட்டம் இந்நகரின் அமைப்புக்குப் பொருத்தமானதா என்பதை விளக்குவதே எனது இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்:-
(1) நிலத்தடி நீரின் அளவு குறையாதிருக்க...
பண்டைய காலம் தொட்டு நமதூரில் சாக்கடைத் தொட்டி (Septic Tank) System உள்ளது. நமது முன்னோர், அறிவியல் சார்ந்த வழியில் செப்டிக் டேங்க் அமைத்து வழிகாட்டியுள்ளனர். அத்தொட்டியில் தேக்கப்படும் கழிவு நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் (filtration) நமதூரின் நிலத்தடி நீர் மட்டம் 05 முதல் 12 அடியில் உள்ளது. இதற்குத் துணை புரிவது இந்த Septic Tank Systemதான்.
பாதாள சாக்கடைத் திட்டம் (Underground Drainage System) நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த Septic Tank System ஒழிக்கப்படும். அதனால், கழிவு நீர் மறுசுழற்சியால் சுத்திகரிக்கப்படுவது இல்லாமல் போகும். நிலத்தடி நீர் மட்டம் மிகவும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். இதுநாள் வரை கிணற்று நீர் கூட நல்ல தண்ணீராகவே கிடைத்து வருகிறது. ஆனால் செப்டிக் டேங்க் முறை ஒழிந்தால், இனி நம் வீட்டு கிணறுகளிலும் (கிட்டத்தட்ட கடல் நீர் சுவையில்) உப்பு நீரே வந்து சேரும்.
புரிந்துகொள்வதற்காக ஓர் அளவுக் குறிப்பீடு: தற்போது நமதூரிலுள்ள கிணற்று நீர், boring waterஇல் ஏறக்குறைய 500 மில்லி கிராம் / லிட்டர் என்ற முறையில் உப்பின் அளவு உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், உப்பின் அளவு ஏறக்குறைய 25,000 - 35,000 மில்லி கிராம் / லிட்டர் என்ற நிலையில் ஆகிவிடும்.
நமது நிலத்தடி நீர் கடல் நீர் போன்று உப்பாக இருக்க வேண்டுமா அல்லது இப்போது இருப்பது போல் நல்ல நீராக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
(2) விபத்து, பன்றி, கொசு, மலேரியா, விஷக்காய்ச்சலுக்கு வரவேற்பு:
நமதூரின் வீதிகள் தற்சமயம் பாராட்டத்தக்க அளவில் முழுமையாக இல்லாவிட்டாலும், இகழத்தக்க அளவில் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த வீதிகளில் (ஆங்காங்கே தேக்கப்படும் குப்பைகள் தவிர) நீக்க முடியாத அசுத்தங்கள் எதுவுமில்லை என்பதால் துர்நாற்றம் இல்லை... எனவே, நாம் உடுத்தியிருக்கும் உடையில் எவ்வித அசுத்தமும் படாமல் நம்மால் சுத்தமாகவே வெளிச்சென்று வர முடிகிறது.
ஆனால், இந்த பாதாள சாக்கடைத்திட்டம் நமதூரில் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்நிலை முற்றிலுமாக மாறிவிடும். பெருநகரங்களிலேயே இந்த பாதாள சாக்கடையை மாநகராட்சிகள் கூட சரிவர பராமரிக்காமல், மனிதக் கழிவுகள் நடுவீதியில் கரைபுரண்டு ஓடும் நிலையுள்ளது. இந்நிலையில், நமதூர் நகராட்சி இந்த பாதாள சாக்கடையை முறைப்படி பராமரிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கவே இயலாது. (தற்போது நகரில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் குப்பைகள் கூட இதுநாள் வரை சுத்தப்படுத்தப்படாமல் இருப்பதே இதற்கு சாட்சி.)
பாதாள சாக்கடை பராமரிப்பிற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக அமைக்கப்படும் manholeகள் பெரும்பாலும் மூடப்படாமல், திறந்த நிலையிலேயே அலட்சியமாக வைக்கப்படும். அதனால் பல விபத்துகள் அடிக்கடி நிகழும். கொசுக்கள் பெருகும். அதனால் மலேரியா உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் எளிதில் பரவும். அசுத்தத்தையே உணவாகக் கொண்ட பன்றியும் குடியிருக்கும்.
இவ்வளவையும் தாண்டி, மழைக்காலத்தில், இந்த drainage manhole மூலமாக உட்செல்லும் மழை நீர் நிறைந்து, backwash ஆகி, drainage waterஉம், சாக்கடையும் வீடுகளுக்குள் வரும்.
இவை ஒருபுறமிருக்க, இந்த சாக்கடைக் கழிவுகள் அனைத்தும் இறுதியில் கடலில் கலக்கச் செய்யப்படும். நமதூர் கடல் ஏற்கனவே நமதூரிலுள்ள DCW தொழிற்சாலையால் polluted (மாசு) அடைந்துள்ளது. இது போதாதென்று சாக்கடையும் நமது கடலில் கலக்கப்பட்டால் நம் கடல் இன்னும் மாசுபடுத்தப்பட்டு, அதிலுள்ள மீன்களும் உண்ணத் தகுதியற்றதாகிவிடும். இதனால், மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிக்கும்.
(3) அரசு அதிகாரிகள் ஏன் இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கின்றனர்?
“மக்களுக்கு இத்தனை கேடுகள் இதுபோன்ற திட்டங்களால் இருக்கிறது என்பது நம்மைப் போலவே அரசு அதிகாரிகளுக்கும் தெரியும்தானே? ஆனால், அவர்கள் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மிகுந்த ஆர்வம் காண்பிக்கின்றனரே...?” என்ற கேள்வி எழுந்தால் அது நியாயமானதே!
நகரசபை அதிகாரிகளைப் பொருத்த வரை இன்று ஒருவர் இருப்பார். நாளை மற்றொருவர் வருவார். அவர்களுக்கு இந்த ஊரின் நலன் குறித்து அக்கறை இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் பொருளில்லை. இதுபோன்ற பலகோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களின் வேறு எதிர்பார்ப்புகள் இதன்மூலம் நிறைவேறும் என்பதை அவர்களின் இந்த ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கும்.
ஆனால், இந்த நகர சபையில் மக்கள் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்கும் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் இதுபோன்ற திட்டங்களால் ஏற்படும் தீவினைகளை உணர்ந்தே இருப்பார்கள் என்பதால், வேறு பயன்களை நாட மாட்டார்கள்.
(4) காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடை திட்டம் - பலரது எதிர்பார்ப்பு:
இன்று சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களைச் சார்ந்த அதிகாரிகள், காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் என்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவ்வாறு பாதாள சாக்கடைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இங்கு கடலில் கலக்கும் குழாயுடன் அவர்களது குழாயையும் இணைத்து கடலில் கலக்க அந்த அதிகாரிகள் முனைவர். இதனால் அவர்களுக்கு வேண்டுமானால் பணிச்சுமை குறையும். ஆனால், நமதூர் கடலின் மாசு கணக்கின்றி பெருமளவில் உயரும்.
இன்னும் இத்திட்டத்தால் விளையும் தீவினைகள் பலவற்றை அறிவியல்பூர்வமாக என்னால் பட்டியலிட முடியும். விரிவஞ்சி முடிக்கிறேன்.
நிறைவாக...
நம்மையும், நமது வருங்கால சந்ததியினரையும் கடல் நீரில் குளிக்க, துணி துவைக்க, வீட்டைக் கழுவ, ஏன் குடிக்க நாமே காரணமாகலாமா...? ஒருவேளை, கடல் நீரை குடிநீராக்கும் (என்னைப் போன்ற) திட்ட வல்லுனரை அணுகி, ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சங்கள் செலவழித்து, கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியில் இறங்கும் நிலை தேவைதானா? ஒருவேளை அந்நிலை வந்தால், எல்லோராலும் அவ்வளவு பெரிய தொகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள இயலுமா?
இவற்றை, பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளாகிய நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கருத்திற்கொண்டு செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இறைக்கட்டளைப்படி எனக்குத் தெரிந்த தகவல்களை, எனது பொறுப்பாகக் கருதி உங்களிடம் சேர்த்துவிட்டேன். இனி இதுவிஷயத்தில் இறைவனின் நாட்டம் நன்மையாகவே அமைந்திட பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன், நன்றி. |