பதினேழு வயதே நிரம்பிய இளம் நங்கை அவள். அழகும், அமைதியும் அருளப் பெற்றவள் .இஸ்லாமிய ஒழுக்க
மாண்புகளைப் பேணி வந்த அவள் பிறர் துன்பம் கண்டு ஈரம் சுரக்கும் இதயத்தின் எஜமானி .இறை மறையை
கற்றறிந்த இறை விசுவாசி .பாடசாலையில் கல்வி கற்ற போது தனது வகுப்பில் முதல் தர மாணவி.
அறிவுக் கூர்மையால் சக மாணவியரின் அன்பைப் பெற்ற அருமையான நண்பி .மட்டுமல்லாமல் எகிப்திய
வரலாற்றில் முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும்
சகோதரத்துவ கட்சியின் செயலாளரும், முன்ணணித் தலைவருமான Dr. முஹம்மத் அல் பெல்டஜியின்
அருமைப் புதல்வி. எளிய பண்பினால் எகிப்திய மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் .அவரே அஸ்மா அல்
பெல்டஜி.
2011ஆம் ஆண்டு எகிப்திய வரலாற்றில் முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய
சகோதரத்துவ கட்சி, முஹம்மத் முர்ஷியின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு வருடங்களே
நீடித்த இந்த ஆட்சி ஜனாதிபதி முஹம்மத் முர்ஷியால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட அப்துல்
பதாஹ் அல் சிசி (தற்போதைய ஜனாதிபதி ) இன் தலைமையிலான இராணுவத்தாலேயே ஜூன் 2013 ல்
கவிழ்க்கப்பட்டது. 2 வருட காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த கட்சித் தலைவர்கள் தேடப்படும்
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் .அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திட இராணுவ அரசு
தீவிரமாகத் தேடி வந்தது.
இதற்கிடையில் ஜனாதிபதி முஹம்மத் முர்ஷியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் கிளர்ந்து எழுந்த மக்கள் கிழக்கு
கெய்ரோவின் ரபா அல் அதவியா சதுக்கத்தில் பெருந்திரளாக ஒன்று கூடி இராணுவத்திற்கு எதிரான
போராட்டத்தை முன்னெடுத்தனர். இரவு பகலாக வீரியத்துடன் தொடர்ந்து வந்த இந்தப் போராட்டத்தில்
அஸ்மாவும் ஆர்வத்துடனும் தைரியத்துடனும் இணைந்து கொண்டார் . மார்க் ஷிப்ட் பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் தொடர்ச்சியாக தங்கி இருந்த சக பெண்களுடன் அஸ்மாவும் தங்கி
இருந்தார். அச் சமயம் கெய்ரோ நகரின் முக்கிய வீதிகளுக்கு போராட்டத்தை பரவலாக்ககும் படி தலைவர்கள்
அழைப்பு விடுக்க , அது வரை ரபா அல் அதவியா சதுக்கத்தை முற்றுகையிட்டிருந்த இராணுவம் மக்களை
நோக்கி கண் மூடித்தனமாக சுடத் துவங்கியது.
சொற்ப நேரத்திற்குள் 525 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக் கணக்கானோர் கடுமையான
காயங்களுக்கும் உள்ளானதை அறிந்து பதறிப்போன அஸ்மா அவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்திட
அருகிலுள்ள மேக் பீல்ட் மருத்துவமனை நோக்கி விரைந்து முன்னேறினார்.
ஆயினும் அஸ்மாவின் அந்த முயற்சி கைகூடவில்லை.அடுத்து நடந்த சம்பவங்களை இரவு பகலாக மேக் ஷிப்ட்
கூடாரத்தில் அஸ்மாவுடன் தங்கி இருந்த அவரது மாமி ஹுதா இப்படிக் கூறினார்.
"திடீரென்று இராணுவம் எங்களை நோக்கி மூர்க்கத்தனமாக தாக்குதலைத் துவங்கியது.நிலைமை
மோசமடைந்தது. நாங்கள் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சினோம். ஒவ்வாருவரும் அல்லாஹ்விடம்
உதவி தேடி பிரார்த்தனை புரிந்தோம்.சில நிமிடங்கள் கழிந்த நிலையில் இராணுவம் எய்த அடுக்கடுக்கான
கண்ணீர் புகை எங்களை சூழ்ந்ததால் நிலை குலைந்த நான் என்னோடு இருந்த அஸ்மாவை தவற விட்டு
விட்டேன்.
நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்க அஸ்மாவை அங்கும் இங்கும் தேடி அலைந்த நான் சற்று தொலைவில்
துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட குற்றுயிராய் தரையில் வீழ்ந்திருந்த
அஸ்மாவைத்தான் என்னால் காண முடிந்தது.ஒவ்வாரு வினாடியும் எங்களைச் சுற்றி யாராவது ஒருவர்
இராணுவத்தின் துப்பாகிச் சூட்டுக்கு இரையாகி வீழ்ந்து கொண்டிருக்க , நானும் இன்னும் சிலரும் இரத்தம் அதிக
அளவில் வெளியான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஸ்மாவை அவசர அவசரமாக மேக்
ஷிப்ட் தள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம்.
அந்த மருத்துவமனையின் தரை தளம் முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்ட உடல்களாலும் ,காயம் பட்டு உயிருக்கு
போராடிக் கொண்டிருப்பவர்களாலும் நிரம்பி வழிந்தது. அஸ்மாவை தரையில் கிடத்தி வைக்கக்கூட ஒரு
இடத்தை தேடிக்கொள்ள எங்களுக்கு முடியாமல் இருந்தது .இராணுவத்தின் கண்ணீர் புகை மருத்துவ
மனையையும் விட்டு வைக்கவில்லை.
மேலும் அஸ்மாவின் சகோதரர் அனஸ் அல் பெல்டஜி கூறும் போது அஸ்மா காயம் பட்ட மக்களுக்கு உதவி
புரிய மருத்துவமனை சென்ற போதே கலவரத்தில் சிக்குண்டு மார்பிலும் மண்டையிலும் காலிலும் துப்பாக்கிச்
சூட்டுக்கு ஆளானார் .அஸ்மாவுக்கு இரத்தம் தேவைப்பட்டது.ஆனால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.
மருத்துவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கவே அஸ்மாவின் உயிர் இந்த உலகை விட்டும் பிரிந்தது .
(இன்னாலில்லாஹி ஒ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹுக்காகவே வாழ்கிறோம் மேலும் நாம்
அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்).
2013 ஆகஸ்ட் 14 புதன் அன்று அஸ்மா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அவரின் தந்தை முஹம்மத் அல்
பெல்டஜியிடம் தெரிவிக்கப்பட்டது .உடனடியாக ரபா அல் அதவியா சதுக்கத்தின் மேக் ஷிபிட் மருத்துவமனை
நோக்கி விரைந்தார் .தனக்கு முன் கிடத்தி வைக்கப் பட்டிருந்த தனது நேசத்துக்குரிய மகளின் உயிரற்ற உடலை
கண்ணுற்ற அந்த தந்தையின் உள்ளம் சோகத்தால் உறைந்து போனது. நாவிலிருந்து வார்த்தைகள் பிறக்காமலே
மரித்துப்போனது. கவலையை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போதைக்கு
அவரால் தன் செல்ல மகளுக்காக இதனை மட்டுமே செய்ய முடிந்தது.
அடுத்த நாள் வியாழனன்று அல் ஹுசைன் மஸ்ஜிதுக்கு வெளியே உறவினர்கள் குழுமி இருக்க
கடைசிப் பயணத்திற்காக அஸ்மாவின் உடல் தயார் நிலையில் கிடத்தப்பட்டிருந்தது .
இராணுவத்தால் தேடப்பட்டு வரும் தந்தை தலை மறைவான நிலையில் நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை
அஸ்மாவின் சகோதரர்கள் அனஸ் மற்றும் மலிக் முன்னின்று செய்திருந்தனர் .
நெருக்கடியான சூழலில் நேரம் மெல்ல மெல்ல கரைந்து கொண்டே சென்றது . அத்தனை கண்களும் எதிர்
பார்ப்புடன் காத்திருக்க இறுதி வரை தந்தையால் வர முடியாமல் போகவே தந்தை இன்றியே அவரது அன்பு
மகள் அஸ்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த உலகில் எந்த தந்தையும் பெறக்கூடாத ஒரு கசப்பான அனுபவத்தை இந்த தந்தை பெற்று விட்டார். அல்
குர் ஆன் சொல்கிறது இந்த பூமியில் ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியதே(55:26) . எனவே எல்லா
மனிதர்களும் மரணத்தை சுவைத்தே வேண்டும் என்பதர்க்கிணங்க மகளின் இழப்பை ஒரு இறை விசுவாசியாக
பொறுமையுடன் பொறுந்திக்கொண்டார்.ஆனாலும் இந்த தந்தையால் 17 வருட காலமாக பார்த்துப் பார்த்து
வளர்த்த தனது மகளின் வாழ்வில் நடந்த அடுக்கடுக்கான நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில்
பூட்டி வைக்க முடியாமல் போனது.
திணறினார். தன் கவலைகளை பகிர்ந்து கொள்ள வழி தேடித் தவித்தார். முடிவில் மகளிடம் சேர்க்கவே
முடியாது என்று அறிந்திருந்த போதும், வேறு வழியின்றி தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தன் மீது
அளவிலா நேசமும் பாசமும் கொண்ட தன் செல்ல மகளுக்கே கடிதம் எழுதினார்.
என் அன்புக்குரிய ஆருயிர் மகளே! எனது மரியாதைக்குரிய ஆசானே அஸ்மா அல் பெல்டஜி!
உயர்ந்த இலட்சியங்களுடனும், நற் பண்புகளுடனும்,அமைதியை விரும்பி வந்தாய்.
கண்ணியமான கௌரவமான ஒரு சிறந்த வாழ்க்கையை நீ இவ்வுலகில் வாழ்ந்தாய் .
நீ இந்த உலகைப் பிரிந்து சென்று விட்டாய் .உன்னை நான் வழியனுப்பி வைத்திருகிறேனே தவிர
உன்னிடமிருந்து விடை பெற்று விடவில்லை .நான் சொல்கிறேன் மீண்டும் நாளை நாம் சந்திப்போம்!
உன் வயதினை ஒத்த இளம் பருவத்தினரை ஆக்கிரமித்திருந்த அவசியமற்ற பழக்க வழக்கங்கள் ஒருபோதும்
உன்னை ஆக்கிரமித்து விடாமல் அவதானத்துடன் விலகிக் கொண்டாய்.
தொன்று தொட்டு வரும் கல்வி முறை உனது எதிர் பார்ப்புகளையும் ஆர்வத்தையும் பூர்த்தி செய்ய தவறிய
போதும் உனது வகுப்பில் எப்போதும் நீ முதல் இடம் பெற்று வந்தாய்.
இந்த குறுகிய கால உலகில் உனது பெறுமதி மிக்க பாசத்தை ,அருகாமையை என்னால் பெற்றுக்கொள்ள
முடியாமல் போனது. குறிப்பாக எனக்கு போதிய நேரம் கிடைக்காமையினால் உன்னோடு நேரம் ஒதுக்கி
உரையாடி உன் தோழமையை அனுபவித்து மகிழ்ந்திடத் தவறிவிட்டேன் அஸ்மா!
சென்ற முறை நானும் நீயும் ஒன்றாக ரபா அல் அதவியா சதுக்க போராட்டக் களத்தில் கலந்து கொண்ட
நேரம் "நீங்கள் எங்களோடு இருக்கும் இந்த வேளையிலும் கூட வெவ்வேறு அலுவல்களில் உங்களை நீங்கள்
அர்பணித்துக் கொள்கிறீர்களே ? என்று நீ வினவிய போது "நாம் இருவரும் அருகருகே இருந்து பாசத்தையும்
நேசத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்திட இந்த உலக வாழ்வும்,அதன் ஆயுட்காலமும் நமக்கு
போதாது அன்பு மகளே! எனவே நானும் நீயும் சொர்க்கத்தில் அருகருகே இருந்து நமது தோழமையை ,பாசத்தை
பரிமாறிக் கொள்ள அருள் செய்ய வேண்டும் என வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்தனை புரிகின்றேன்" என்றேன்
அல்லவா?
என் அருமை மகளே ! நீ அக்கிரமக்காரர்களால் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு தினங்கள் முன்பாக
உன்னை என் கனவில் கண்டேன் .வெள்ளை நிறத்திலான திருமண உடையை அணிந்திருந்த நீ, அழகின்
வடிவாய் என் முன் வந்து நின்று அருகில் வந்திருந்து என் தோள் மீது மெதுவாய் சாய்ந்திருக்க "இது
உன்னுடைய திருமண இரவா மகளே ? என்று ஆவலாய் நான் கேட்க "எனது திருமணம் இரவில் நடக்காது அது
நண்பகலில் தான் நடக்கும் என பதிலுரைத்தாயே .அப்படிச் சொன்னதின் அர்த்தத்தை புதன் கிழமை நண்பகல்
பொழுதில் நீ சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி என்னிடம் சொல்லப்பட்ட போதே என்னால் புரிந்து கொள்ள
முடிந்ததது.
இன்ஷா அல்லாஹ் சுட்டுக்கொல்லப்பட்ட உன் ஆன்மாவை அல்லாஹ் ஷஹீதாக பொருந்திக் கொள்வான்
என்பதனையும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இருக்கிறார்கள்
என்கிற எனது நம்பிக்கையை நீ உறுதிப்படுத்தி விட்டாய்.
நீ கடைசியாக இவ்வுலகைப் பிரிந்து பயணப்பட்ட வேளையில் கூட உன் அருகாமையில் இருந்து உன்னை
வழியனுப்பி வைத்திட என்னால் முடியாமல் போனது மகளே !.உன்னைக் கடைசியாக ஒரு முறை என்
கண்களால் காண முடியாமல் போனதும், உன் முன் நெற்றியில் இறுதியாக ஒரே ஒரு முத்தம் கொடுத்திட
வாய்ப்பில்லாமல் போனதும் உனது ஜனாஸா தொழுகையை முன் நின்று வழி நடத்திட முடியாமல் போனதும்
என்னை சொல்லொன்னா வேதனையில் ஆழ்த்தி விட்டது என் அன்பு மகளே!
அல்லாஹ்வின் மீது ஆணையாக என் செல்ல மகளே அஸ்மா ! எனது இவ்வுலக வாழ்க்கையை நினைத்தோ,
நீதமற்ற சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விடுவேன் என்றோ நான் அஞ்சவில்லை. எந்த நோக்கத்திற்காக உன்
உயிரை நீ அர்ப்பணித்தாயோ அதனை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கவிழ்க்கப்பட்ட ஆட்சியை
மீண்டும் நிலை நிறுத்திட வேண்டும் .அதில் வெற்றி பெற வேண்டும் .அதனுடைய நோக்கத்தை அடைந்தே தீர
வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தெளிவான நெஞ்சுறுதி மிக்க கள்ளங் கபடமற்ற உன் இதயத்தை அந்த காட்டிக் கொடுக்கப்பட்ட துப்பாக்கி
ரவைகள் துளைத்தெடுத்து விட்டன . கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த அறப் போராட்டத்தில்
சுட்டுக் கொல்லப்பட்ட உனது ஆன்மா கண்ணியமாக மேலே உயர்த்தப் பட்டு விட்டது .இவ்வுலகில் வாழ்ந்த
காலமெல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டு நேர்மையாய் வாழ்ந்து வந்தாய் .அந்த இறைவனே ஷஹீதுகளின்
அந்தஸ்தை வழங்கிடவே எங்களிலிருந்து உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நான் நம்புகிறேன்.
கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து களமிறங்கும் போராட்ட குணம் உள்ள நீ அசைக்க முடியாத மன உறுதியுடன்
சுதந்திரத்தை வேட்க்கை கொண்டிருந்தாய் .முன்னேறிய நாடுகளில் ஒன்றாக தனது தாய் நாட்டை
கட்டியெழுப்பும் புதிய யுகத்தை கண்டிட ஆவலாய் இருந்து வந்தாய்.
இறுதியாக என் அன்புச் செல்லமே! என் உள்ளம் கவர்ந்த ஆசிரியையே!
உனக்கு நான் விடை கொடுத்து விடவில்லை,வழியனுப்பியே வைத்துள்ளேன் .நாம் விரைவில் சந்திப்போம்
.எங்களுடைய நேசத்துக்குரிய தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களுடனும் அன்னாரது தோழர்களுடனும்
நாமெல்லாம் சுவர்க்கத்தில் ஒன்றாக இணைந்திருப்போம் . நம் இருவரது ஆசைப்படி நானும் நீயும், நாம் நேசித்த
ஒவ்வொருவரும் நம்மோடு ஒன்றிணைந்து அருகருகே அமர்ந்திருந்து, அகம் மகிழ்ந்திருக்கும் காலம்
உண்மையாகவே வரும்.
என்று முடிகின்ற மேற் கண்ட கடிதத்தை தொலைக்காட்சி நேர் காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து
கொண்டிருந்த துருக்கிய பிரதம மந்திரி ரிஷப் தய்யிப் எர்டோகன்னிடம் நிகழ்ச்சியின் நடுவே வாசித்து
காண்பிக்கப்பட, செவியேற்ற அவர் துயரம் தாளாமல் கண் கலங்கி அழுதார்.
ஒரு நாட்டின் தலைவரை மனம் நெகிழச் செய்த இக்கடிதம், இதனை வாசித்த ஒவ்வொரு தந்தையரையும்
எவ்வாறான மன நிலைக்கு உள்ளாக்கியது? என்பதை அவர்களால் தான் சொல்ல முடியும்.
[Administrator: புகைப்படங்கள் இணைக்கப்பட்டன @ 9:40pm / 2.7.2014] |