முதல் பாகம் காண இங்கே சொடுக்குக
எஸ். ராமச்சந்திரன் - தொல்பொருள் ஆராய்ச்சியாளர். கொற்கை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்துள்ள இவர், காயல்பட்டினத்தில்
சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட தனது ஆய்வுகளின் முடிவில் சில கல்வெட்டுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்தகவல்கள்
கீழே தரப்பட்டுள்ளன. தான் கண்ட கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள தகவல்களுடன், அவைகள் குறித்த தனது கருத்தையும் இணைத்து
இவ்வாய்வறிக்கையை அவர் தயார் செய்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டணம் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் ஊராகும். இவ்வூரில்
உள்ள மீஸான் (ஸமசான மயானம் எனப் பொருள்படும்) கல்வெட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் அறியப்பட்ட செய்திகள் தொகுத்துத்
தரப்படுகின்றன.
(1)
காயல்பட்டணம் கல்லறைக் கல்வெட்டுகள் காயல்பட்டணம் பெரிய குத்பா பள்ளிவாசல் மீசான் கல்வெட்டுகள் கொற்றக்குடை உருவம்
பொறிக்கப்பட்டுளள், கொல்லம் 752 (கி.பி. 1587) ஆம் வருடக் கல்வெட்டில் 8 தலைமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. முதல் தலைமுறையைச்
சேர்ந்தவர் அசனா நைனா ஆவார். (இப்பெயர் ஹஸன் நாயகனார் என்பதன் திரிபாகும்) இக்கல்லறையில் அடக்கமாகியிருப்பவர் எட்டாம்
தலைமுறையைச் சேர்ந்த அப்துல் கபாரான இம்மடி செண்பகராம முதலியார் ஆவார்.
கி.பி. 1587 இல் போர்ச்சுக்கீஸியர்களே இப்பகுதியிலிருந்த இஸ்லாமியக் கடற்படை வீரர்களுக்கும் வணிகர்களுக்கும் முதன்மையான எதிரிகளாக
இருந்ததால், கேரள அரசர்களின் (திருவிதாங்கூர், கொச்சி, கோழிக்கோடு) பெயரான செண்பகராமன் என்ற பெயரையும், விஜய நகர அரசர் சிலரின்
பட்டப்பெயரான இம்மடி என்ற பெயரையும் இவர் தமது பட்டப் பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார் எனலாம். கொற்றக் குடை
சித்திரிக்கப்பட்டிருப்பதால் இவர் கடற்படைத் தலைவராக இருந்திருக்க வாய்பு உள்ளது. முதலியார் என்பது படைமுதலி எனப் பொருள்படும் சாதிப்
பட்டமாகும். திருவனந்தபுரம் பகுதியில் ஈழவர் குல வீரர்கள் முதலியார் என்ற சாதிப் பட்டம் புனைந்து கொள்வது வழக்கம். எனவே, இவர்கள் ஈழவர்
சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து அரபுக் கலப்பினை ஏற்று மதம் மாறியவர்களாக இருக்கலாம். முக்குவர், கரையார் இனத்தவர்களாகவும்
இருக்கலாம்.
(2)
பெரிய குத்பா பள்ளிவாசலிலே உள்ள மற்றொரு மீசான் கல்வெட்டு, 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியை அல்லது 16ம் நூற்றாண்டின்
தொடக்கத்தைச் சேர்ந்தது. ஜமால் முதலியாரான பராக்ரம பாண்டிய முதலியார் மகளார் மகதூம் நாச்சியார் - இன் பெயர் இக்கல்லறைக் கல்வெட்டில்
இடம் பெற்றுள்ளது.
பராக்ரம பாண்டிய முதலியார் என்ற பெயர், கி.பி. 1420-62 காலகட்டத்தில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அரிகேசரி பராக்ரம
பாண்டியனின் கடற்படைத் தலைவராக இருந்தவர் இவர் என்பதை உணர்த்தும். அரிகேசரி பராக்ரம பாண்டியனின் கடற்படை வெற்றிகள் அம்மன்னனின்
மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படுகின்றன. சிங்கை, அநுரை, வீரை, முதலை ஆகிய ஊர்களில் நிகழ்ந்த போர்களில் அரிகேசரி பராக்ரம பாண்டியன்
பெற்ற வெற்றிகள் இக்கடற்படையின் துணையுடனே நிகழ்ந்தன எனலாம்.
(3)
பெரிய குத்பா பள்ளியின் வெளியே தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில், கொல்லம் 596 ஆம் ஆண்டில் (கி.பி. 1420) மகமூது
என்பவரின் மகள் மதலியா நாச்சியார் இறந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.
(4)
பெரிய குத்பா பள்ளியிலுள்ள வேறொரு கல்லறைக் கல்வெட்டில், கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலுக்கவெட்டி மரக்காயர் என்பவரின்
பெயர் குறிப்பிடப்படுகிறது. எதிரியின் உடலில் பெரிய அளவில் வெட்டு விழாமல் உடல் முழுதும் சிறு கீறல்கள் விழும் வகையில் வெட்டுதல் சிலுக்கு
வெட்டு எனப்படும் என்று 1836-37ஆம் ஆண்டில் வெளிவந்த ஜே.பி. ராட்லரின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. படை வெட்டும் போர்ப்பயிற்சியின்
போதும், போட்டிகளின்போதும் இத்தகைய மெச்சத்தக்க வாள் வீச்சு முறை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மெய் சிலிர்க்கும்வண்ணம் அல்லது
எதிரிக்கு மயிர்க் கூச்செறியும் விதத்தில் வெட்டுதல் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
(5)
காயல்பட்டணத்திலுள்ள சிறு பள்ளியிலிருந்த ஒரு கல்லறைக் கல்வெட்டு கொல்லம் 671 (கிபி. 1496) -ஐச் சேர்ந்தது. சாது நாயினா, அவர் மகன்
செயிதி அகமது நாயினாரான வீர பாண்டிய முதலியார், அவர் மகன் ஜமால் நாயினார், அவர் மகன் செய்யது அகமது நாயினார், அவர் மகன் ஜமால்
நாயினார், அவர் மகன் சேகாலி நாயினாரான செண்பகராம முதலியார் என 6 தலைமுறைகள் இக்கல்வெட்டிஎல் குறிப்பிடப்படுகின்றன. இரண்டாவது
தலைமுறையினராக குறிப்பிடப்படும் செயிதி அகமது நாயினாரான (சையத் அகமத் நாயகனாரான) வீரபாண்டிய முதலியார் என்பவர், கி.பி. 1334-
1380 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்த மாறவர்மன் வீரபாண்டியனின் கடற்படைத் தலைவராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
காயல்பட்டணத்தில் பெரிய அளவிலான இஸ்லாமிய மதமாற்றம் மதுரை சுல்தான்களின் ஆட்சிக் காலத்தொடக்கத்தில் (கி.பி.1327) நிகழ்ந்ததென்றும்
1335இல் தில்லி சுல்தான்களின் மேலாதிக்கத்தை உதறிவிட்டு மதுரை சுல்தானான சையத் ஜலாலுதின் அசன் சா சுயாட்சி அமைத்தபோது, கி.பி.
1358-59 இல் மதுரை சுல்தானியத்தில் பாமினி சுல்தான்களின் தலையீடு நிகழ்ந்தபோதோ காயல்பட்டணத்திலிருந்த இஸ்லாமியக் கடற்படை வீரர்கள்
சிலர் பாண்டியரின் மறு எழுச்சிக்கு ஆதரவாகத் திரும்பியிருக்க வேண்டும் என்றும் நாம் ஊகிக்கலாம். இது அழகான சமூக வரலாற்றாய்வுக்குரிய
குறிப்பாகும்.
(6)
ரெட்டைக்குளம் பள்ளிக் கல்லறைக் கல்வெட்டு கொல்லம் 644-க்கு (கி.பி.1468) உரியது. அய்யமுதலியார் மகன் வாலிசலார் மரக்காயர் மரித்த
செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
கருப்புடையார் பள்ளியில் உள்ள இரண்டு கல்லறைக் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.
(7)
முதற் கல்வெட்டு கொல்லம் 688 (கி.பி.1512) ஆம் ஆண்டுக்குரியது. நொளம்பாதராய முதலியார் மகன் கார்த்தியார் அவர் மகள் பீவியார் என 3
தலைமுறையினர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்டுகின்றனர். நொளபம்பாதராய முதலியார் என்பவரே இவ்வம்சத்தவரில் முதன் முதலில் இஸ்லாமியராக
மாறியிருக்க வேண்டும். அவர் வாழ்ந்தது 15ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகலாம். (பீவியார், உத்தேசமாக 60 வயதில் இறந்தார் எனக்
கொண்டால் அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் - கி.பி.1482 அளவில் நொளம்பாத ராய முதலியார் இந்திருக்கலாம்.)
தென்திருப்பேரையிலுள்ள கைலாசநாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் மானவீர வளநாட்டை
திருச்செந்தூருக்குத் தெற்கே குலசேகரன்பட்டினத்தை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த வீர நுளம்பாத ராயன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கருப்புடையார் பள்ளிக் கல்வெட்டில் குறிப்பிடபப் டும் நொளம்பாதராய முதலியார், அவ்வீரநுளம்பாத ராயனின் வம்சத்தாரோடு உறவுடைய கடற்படை
வீரராக இருக்க வாய்புள்ளது.
(8)
இப்பள்ளியிலுள்ள மற்றொரு கல்வெட்டு கொல்லம் 701 (கி.பி. 1526) க்குரியது. கோசாலி நயினா அவரது மகன் கச்சி நயினா அவரது மகன் மகமது
நயினா அவர் மகனார் சேரா முதலியார் ஆகியோர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர். கோசாலி நயினா என்பது கொச்சாலி நயினா என்பதன்
திரிபாகலாம். குஞ்சு அலி, கொச்சு அலி என்பன மலையாள வழக்கிலமைந்த பெயர்களாகும். கச்சி நயினா (கச்சி நாயகனார்) என்ற பெயர் கச்சி
கொண்ட பாண்டியன் எனப்பட்ட பாண்டியர் பட்டப்பெயருடன் தொடர்புடையதாகலாம்.
குலசேகரபட்டினத்திலுள்ள சிவன் கோயிலின் பெயர் கச்சி கொண்ட பாண்டீச்சுரம் ஆகும். மேலும், இப்பகுதியில் ஆற்றூரையடுத்து உள்ள
முக்காணியில் கச்சி நாச்சியார் தர்கா உள்ளது. கச்சிநாச்சி விளை (கச்சிநாவிளை) என்ற ஊர் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ளது.
இப்பெயர்களெல்லாம் கச்சிகொண்ட பாண்டியன் என்ற பட்டப் பெயருடன் தொடர்புடைய பதவிப் பெயர்களின் அல்லது ஆட்பெயர்களின் பிற்காலத் திரிபு
வடிவங்களெனலாம்.
காயல்பட்டணம் இஸ்லாமியக் கல்லறைக் கல்வெட்டுகள் மேலும் ஆய்வு செய்வதற்கு உரியவை. கி.பி. 1400 தொடங்கி, 20ஆம் நூற்றாண்டின்
முற்பகுதிவரை கொல்லம் ஆண்டுக் குறிப்புடனும், தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை 100க்கும்
மேற்பட்டதாகும்.
--------------------------------------------------------------------------------------------
அடுத்து வரும் பாகத்தில் இங்கிலாந்து நாட்டு பேராசிரியர் ஒருவர் - காயல்பட்டினத்தில் 1980களின் பின்பகுதியில் மேற்கொண்ட ஆய்வினை தொடர்ந்து - வெளியிட்ட கல்வெட்டுகள்
குறித்த தகவல்கள், புகைப்படங்களுடன் வெளியிடப்படும்.
முதல் பாகம் காண இங்கே சொடுக்குக |