காயல்பட்டினத்திற்கும் கேரள மாநிலத்தின் கண்ணூர்,
தலஸ்ஸேரி, கோழிக்கோடு தெக்கேபுரத்தில் உள்ள குட்டிச்சிறா போன்ற பகுதிகளுக்கும் நிறைய வாழ்வியல் ஒற்றுமைகள் உண்டு என ஒரு
உரையாடலின் போது கூறினார் எழுத்தாள நண்பர் அப்துல் ஹமீத். கோழிக்கோடு செல்லும் திட்டம் உடனே மனதில் முளைத்து விட்டது.
கோழிக்கோட்டில் கடை நடத்தி வரும் மலபார் காயல் நல மன்றத்தின் தலைவர் மசூத் காக்கா அவர்களிடம் இது பற்றி விசாரிக்கையில் எப்போது
வேண்டுமானாலும் வாருங்கள், நான் குடியிருப்பதே குட்டிச்சிறாவில்தான் என்றார். இந்த வருட ரமழானுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு
அதிகாலையில் நானும், நண்பர் முஹம்மத் தம்பியும் நேரே கோழிக்கோடு போய் இறங்கினோம். தொடர் வண்டி நிலையத்தின் கோபுரங்களின்
பின்னணியில் கருத்து இருண்ட மழை மேகங்கள் சூழ்ந்து உயர்ந்து நின்ற காட்சி இதமாக இருந்தது.
கோழிக்கோடு தொடர்வண்டி நிலையத்தின் பின்புறம்தான் குட்டிச்சிறா பகுதி அமைந்துள்ளது. மஸூத் காக்காவின் வீட்டிற்கு போய் குளித்து
உடைமாற்றி உணவுண்டு குட்டிச்சிறாவை உலா வந்தோம்.
முதலில் வரலாற்று பெருமை வாய்ந்த மிஷ்கால் மஸ்ஜித் சென்றோம். இந்த பள்ளியானது நாஹூதா மிஷ்கால் என்ற யமன் நாட்டு வணிகரால் 14
ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. கேரள கோயில் பாணி கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மஸ்ஜிதின் தரைத்தளம் தவிர நான்கு
தளங்களும் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்டதாகும். கி.பி. 1510 இல் போர்த்துக்கீஸீய ஆக்கிரமிப்பாளர்களால் இதன் ஒரு பகுதி
கொளுத்தப்பட்டது. பின்னர் மறு சீரமைப்பு செய்யப்பட்டது.
மிஷ்கால் மஸ்ஜித் வெளிப்புறம் ...
மிஷ்கால் மஸ்ஜித் உள்புறம் ...
மிஷ்கால் மஸ்ஜித் உட்புற வேலைபாடுகள் ...
கப்பல் போன்ற அழகிய தோற்றமுடைய இந்த பள்ளிக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது அதன் வரலாறு பொறிக்கப்பட்ட கல்வெட்டும் கோழிக்கோடு
நகர காழிகளின் வரிசைத்தொடர் பட்டியலும்தான். இந்த பட்டியலில் 11 வது இடத்தில் ஸதக்கத்துல்லாஹ் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இவரின்
காலம் கி.பி.1720-1775.
இது குறித்து கோழிக்கோடு நகர காழியும் குட்டிச்சிறா பள்ளியின் தலைமை இமாமாகவும் பணியாற்றுகின்ற இம்பீச் கோயா அவர்களிடம் கேட்ட
போது “எங்கள் காழி தலைமுறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த சமயம் மகான் ஸதக்கத்துல்லாஹ் காஹிரீ இங்குள்ள முச்சந்தி
மஸ்ஜிதில் மார்க்க பாடம் (தர்ஸ்) நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்காக ஸதக்கத்துல்லாஹ் காஹிரீயிடம் கொண்டு
சென்றபோது அவர்கள் தனது பெயரையே அந்த குழந்தைக்கு சூட்டினார்கள். அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் எங்களது தலைமுறையில்
ஸதக்கத்துல்லாஹ் என்ற பெயர் இருந்ததில்லை “ எனக்கூறினார்.
முச்சந்தி மஸ்ஜித்
அங்குள்ள முச்சந்தி மஸ்ஜிதிலும் சென்று ஸதக்கத்துலாஹ் அப்பா பற்றி விசாரித்ததில் மேலதிக தகவல் ஒன்று கிடைத்தது. நாஹூர் ஷாஹூல்
ஹமீத் நாயகம் அவர்களும் இந்த முச்சந்தி பள்ளியில் இறை தியானத்தில் வீற்றிருந்ததாகவும் கூறி அந்த இடத்தையும் பள்ளி நிர்வாகிகள்
காட்டினர்.
வரலாறும் பண்பாட்டுச்செழுமையும் நிறைந்த இந்த மூன்று நகரங்களும் இணையும் வரலாற்று கண்ணியாக விளங்கும் இந்த பள்ளியின் பெயரும்
முச்சந்தி என்றிருப்பது தற்செயலான - ஆனால் வியப்புக்குரிய - செய்தி.
குட்டிச்சிறா, கண்ணூர், தலஸ்ஸேரி உள்ளிட்ட இடங்களில் நமதூரைபோலவே திருமணம் முடிந்து மாப்பிள்ளைகள் பெண் வீட்டிற்கு செல்லும் வழமை
இன்றளவிலும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த பகுதிகளில் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைகளுக்காக தனி வீடு என கட்டமாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் பரந்த வீட்டில் தனி அறையை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
மிகச்சிறிய விதிவிலக்கை தவிர்த்து கேரளத்தின் பெரும்பகுதியானவர்கள் ஷாஃபி மத்ஹபை
பின்பற்றுகின்றனர். அத்துடன் நம்மைப்போலவே அரபு வணிகர்களினாலும் மார்க்க பரப்புரையாளர்களினாலும்தான் இங்கு இஸ்லாம் பரவியுள்ளது.
நமதூரின் சில மண்ணறை கல்வெட்டுக்களில் (மீஸான் கற்கள்) கொல்லம் ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆண்டானது கி.பி.824 முதல்
கேரளத்தில் பின்பற்றப்பட்டு வரும் வருட கணக்கீட்டு முறையாகும்.
ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் என்பவர் எழுதிய துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் -- கேரளமும் போர்ச்சுக்கீசிய காலனிய ஆதிக்கமும் (16 ஆம்
நூற்றாண்டின் வரலாற்று ஆவணம், அடையாளம் வெளியீடு) என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது கீழ்க்கண்ட தகவல் கண்ணில் பட்டது.
மீன்பிடி உரிமை தொடர்பாக காயல்பட்டின முஸ்லிம்களுக்கும் பரதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவில் போர்த்துக்கீசிய படையெடுப்பாளர்கள்
பரதவர் பக்கம் நின்றனர்.
இந்த போரில் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்து அலி இப்றாஹீம் மரைக்காயர், ஃபகீஹ் அஹ்மத்
மரைக்காயர், அவரது சகோதரர் குஞ்ஞு மரைக்காயர் உள்ளிட்டோர் 42 மரக்கலங்களில் நமதூர் வந்து போராடி ஷஹீதாகினர். அனைத்து
மரக்கலங்களும் போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டன. இது நடந்தது ஹிஜ்ரி 944 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம், கி.பி.1538.
மேற்கண்ட நூலின் ஆசிரியரான ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்களின் மத்ரஸா பஹ்ருல் உலூமில் {கேரள மாநிலம், பொன்னானி}
ஸதக்கத்துல்லாஹ் அப்பாவின் தந்தை சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள் ஓதி பட்டமும் (ஸனது) பெற்றுள்ளார்கள். {தகவல் நூல்: நினைவு
மலர்கள் – எம்.இத்ரீஸ் மரைக்காயர்}
பிரபல ஷாஃபீ மத்ஹப் சட்ட நூலான பத்ஹூல் முயீனை உருவாக்கியதும் ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்களின் முன்னோர்களான ஷேஹ் அலீ பின் அலீ பின் அஹ்மத் அல் மஃபரி, அவரது சகோதரர் ஷேஹ்
இப்றாஹீம் ஆகியோர் யமன் நாட்டைச் சார்ந்த மார்க்க பரப்புரையாளர்கள் ஆவர். இவர்கள் தமது பணிக்காக தென் தமிழகத்திற்கு வந்த சமயத்தில்
கடைசியாக தங்கிய இடம் நமதூராகும்.
நமதூரின் அறப்போர், கல்வி, மார்க்கம், மரணம் என வரலாற்றின் பண்பாட்டின் பயணத்தில் கேரளம் இணைந்திருந்த புள்ளிகள் ஏராளம் என
இதிலிருந்து தெளிவாகின்றது. அரபகம் > காயல்பட்டினம் > கேரளம் என வரலாறானது தொடர்ந்து சுழலும் வளையமாக இருந்திருக்கின்றது.
ஷவ்வால் மாதத்தின் ஆறு பிறைகள் கழிந்த பிறகு கேரளத்திலிருந்து புறப்படும் நினைவிட காணுதல் பயணிகள் கூட்டம் நமதூரின் மஹ்லறா, பெரிய
பள்ளியைக் காணாமல் செல்வதில்லை. அவர்கள் நமதூர் நினைவிடங்களுடன் தமிழகத்தில் உள்ள ஏனைய நினைவிடங்கள் அமைந்திருக்கும்
ஊர்களான ஏர்வாடி, முத்துப்பேட்டை, நாஹூர் வரை செல்கின்றனர். அவர்கள் வேறு மாநில நினைவிடங்களுக்கு செல்வதில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது. இது போன்ற பயணங்கள் கூடுமா கூடாதா என்ற விவாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஒரு வரலாற்று மாணவன் என்ற
அடிப்படையில் ஒருக்கால் இது அன்றைய பண்பாட்டு தொடர்ச்சியின் நீட்சியோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
2009 ஆண்டு பிப்ரவரி மாதம் கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா [PFI] அமைப்பின் சார்பில் ஒரு தேசிய அரசியல் மாநாடு நடந்தது.
அதில் பண்பாட்டு கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த கண்காட்சியில் கேரளத்தில் இஸ்லாத்தின் வருகை பற்றிய ஒலி ஒளிக் காட்சி ஒன்றை
நடத்தினார்கள். மகத்தான அந்த வரலாற்று வளையத்தில் காயல்பட்டினத்தின் கண்ணியை தெள்ளிய மலையாளத்தில் விவரித்துக் கொண்டே
செல்கையில் மனமும் கண்களும் நிறைந்தன.
நமதூரின் வரலாற்றை அரபுலகத்துடனும், கீழக்கரையுடனும், இலங்கையுடனும் இணைத்து பார்க்கும் அளவிற்கு கேரளத்துடன் சேர்த்து பார்க்காதது
நாம் இழைத்து வரும் ஒரு வரலாற்றுக் குறைபாடேயாகும். வரலாறு என்பது மனித குலத்தின் சென்ற கால நினைவுகள் பதிவுகளின் அடுக்காகும்.
அதனை நாம் தக்க வைக்கவும் மீட்டெடுக்கவும் தவறும்போது மாபெரும் மனித குல சங்கிலியிலிருந்து நம்மை நாம் அறுத்துக் கொண்டு
பெருங்கடலில் தனித்து நிற்கும் மணல் திட்டு போல் ஆகி விடுவோம்.
வரலாற்றை மீட்டுவது என்பது அதன் வழியாக பயணித்து சென்று பழங்கால பெருமிதங்களுக்குள் தேங்குவதற்காகவோ அல்லது மத இன
மாச்சரியங்களை பாராட்டுவதற்காகவோ அல்ல. வரலாற்றை மீட்டு எடுக்கும்போது அதை எவ்வித சாய்மானங்களும் கூடுதல் குறைவுகளும் இல்லாமல்
உள்ளது உள்ளபடி செய்ய வேண்டும் என்பதும் மிக முக்கியமாகும். இவ்வாறு செய்யும்போது வாழ்வின் உண்மையான திசை வழியில் நடக்க
முனையும் நமது விருப்பம் உறுதிப்படுத்தப்படும்.
கிட்டதட்ட 500 வருடங்களுக்கு முன்னர் மொழி, இனம், பிராந்தியம் என்ற எல்லைகளை கடந்து போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக
மலையாளக்கரையிலிருந்து காயல்பட்டினத்தின் கடற்கரை வரை வந்தனர் மாப்ளாக்கள். அன்று அவர்ளை வழி நடத்திய உணர்வும் நோக்கமும் எது
என்பதை நாம் உணர்ந்து அறிவதற்கு வரலாற்றை தவிர வேறு ஊடகம் இல்லை.
நமதூரின் மீது ஆக்கிரமிப்பை நடத்திய போர்த்துக்கீசீயர்களை எதிர்த்து இந்த மண்ணில் மலையாள மாப்ளாக்கள் நடத்திய போர் என்பது உண்மையில்
முதலாவது விடுதலைப்போராகும். ஏனென்றால் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவை அரசியல், பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற காலனி நாடாக
மட்டுமே பார்த்தனர். அந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே அவர்கள் தமிழக, கேரள, கோவா, இலங்கை கடற்கரைகளின் வழியாக தங்களது
அழிச்சாட்டியங்களை நிகழ்த்தினர். தங்களின் மத அடையாளத்தை சுரண்டல் நோக்கங்களுக்காக தவறாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியில்லை. ஒரு நினைவுச்சின்னத்தை நமதூர்
கடற்கரையின் வடக்கு எல்லையில் அமைக்கலாம். அவ்வாறு அமைப்பதன் மூலம் வரலாற்றின் கடந்த கால கண்ணியை நிகழ்கால நம் நினைவுகளின்
ஓட்டத்தோடு இணைத்த மாதிரி இருக்கும்.
நினைவுச்சின்னம் அமைப்பது என்பது வரலாற்றை தக்க
வைப்பதற்கான முயற்சியின் ஒரு தொடக்கமே. கேரளத்திற்கும் நமதூருக்கும் இடையேயான வரலாறு என்பது பல புள்ளிகளில் சிதறி கிடக்கின்றது.
அந்த புள்ளிகளை அதனதன் இடத்தில் கோர்க்கும்போது அழகிய வரலாறானது தேர்ந்த ஓவியம் போல நம் முன் எழுந்து நிற்கும். கேரளத்தில் இது
போன்றதோரு நினைவுச்சின்னங்கள் உள்ளது.
இந்தியாவின் முதல் அய்ரோப்பிய காலனிய ஆதிக்கவாதியான வாஸ்கோடகாமா கோழிக்கோட்டின் காப்பாடு கடற்கரையில் வந்து இறங்கினார்.
அவர்தான் முதல் போர்த்துக்கீசிய படையெடுப்பாளரும் கூட. அந்த வரலாற்று நிகழ்வை நினைவூட்டும் வகையில் நினைவுத்தூண் ஒன்று அங்கு
அமைக்கப்பட்டுள்ளது. கேரளம், கோவா, தமிழக நிலபரப்புகளில் அவர்கள் நடத்திய கொடூரங்களை தன்னுள் சுமக்கும் நினைவுத் தூணானது
உப்புக்கரிக்கும் கடல் காற்றில் அந்த நினைவுகளை மெலிதாக தவழ விட்டுக் கொண்டே இருக்கின்றது.
கல்வெட்டு ஆய்வாளரான சென்னையைச் சார்ந்த திரு.ராமச்சந்திரன், மானிடவியல் ஆய்வாளரான பாளையங்கோட்டையைச் சார்ந்த பேரா. திரு.
தொ.பரமசிவம் ஆகியோர் நமதூரின் வரலாறு முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதை பல்வேறு தருணங்களில்
வலியுறுத்தியுள்ளனர்.
கொல்லம் ஆண்டு, மரைக்கார், மக்தூம், சுலைமான் வலீ, சதக்கத்துல்லாஹ் அப்பா, மக்தூம் பள்ளி, நூஹ் வலீ, பூவார் என்ற குறிச்சொற்கள்
கேரள – காயல்பட்டினம் வரலாற்று பெட்டகத்தின் திறவு கோல்கள் போன்றவை. இந்த தலைப்புக்களில் விரிவான ஆய்வும் தேடலும்
நடத்தப்படும்போது பல உள்ளறைகளை தன்னுள் கொண்ட வரலாற்று பெட்டகமானது பல புதிய பேழைகளை நமக்கு திறந்து தரும்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 5:45pm/08.08.2014]
[கட்டுரை திருத்தப்பட்டது @ 12:00 pm / 15.1.2015] |