இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளுள் முஹம்மத் காஸிம் சித்திலெப்பை (1838-1898), அவர்களும் மாப்பிள்ளை
ஆலிம் செய்யித் முஹம்மத் லெப்பை (1816-1898) அவர்களும் காலத்தால் முந்தியவர்களும் சமகாலத்தவர்களுமாவர்.
சித்திலெப்பை இலங்கையில் மத்திய மலைநாட்டில் கண்டி மாநகரில் பிறந்தார். எனினும் அவர் அறபுப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர்களது பரம்பரை
வணிக நோக்கத்தோடு மேற்குக்கரை நகரான அலுத்கமவில் குடியேறி, பின்னர் ஸ்ரீவிக்கிரம ராச சிங்க காலத்தில் கண்டியில் குடியேறினர். இவரின்
குடும்பம் முழுக்க படித்த பரம்பரையைச் சேர்ந்தது.
சித்திலெப்பையின் தந்தை 1838 இல் இலங்கையின் முதல் முஸ்லிம் புரக்டராக பதவியேற்றார். மூத்த சகோதரர் முஹம்மத் லெப்பை ஓர் ஆலிமாக
இருந்தார். சகோதரி முத்து நாச்சியாவும் ஓர் ஆலிமாவாவார்.
மாப்பிள்ளை ஆலிம் தென்னிந்தியா காயல்பட்டணத்தில் பிறந்தார். இவரது பரம்பரை உமையா கவர்னர் ஹஜ்ஜாஜின் காலத்தில் எகிப்தில் இருந்து
வெளியேறி தென்னிந்தியாவில் குடியேறினர். ஒரு பிரதேசத்தை விலைகொடுத்து வாங்கி தம்முடைய காஹிரா நகரை நிலைப்படுத்தும் வகையில் தமது
பிரதேசத்துக்குப் பெயரிட்டனர் என்பது திரிந்து காயல் (பட்டினம்) என வழங்கிவருகிறது என்பர்.
சித்திலெப்பை கண்டி General School இல் ஆங்கிலம் கற்றார். 1864 இல் உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார். 1874 முதல் 1878 வரை இடைக்கால
நீதிபதியாகவும் பணியாற்றினார். எட்டு ஆண்டுகள் கண்டி மாநகர சபை உறுப்பினராகவும் இருந்தார்.
1884-1887 காலப்பகுதியில் கொழும்பில் வசித்த போதுதான் முஸ்லிம் கல்விக்கான ஒரு முன்னோடியாக தீவிர செயற்பாட்டில் இறங்கினார். அவரது
தீவிர பிரசாரத்தின் காரணமாக 1884 இல் கொழும்பில் மத்ரஸதுல் லானிய்யா இஸ்லாமிய்யா என்ற முதல் முஸ்லிம் (ஆங்கில மொழி)
பாடசாலையையும், 1892 இல் மத்ரஸதுஸ் ஸாஹிரா என்ற ஸாஹிராக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன. இம் முயற்சிக்கு ஒராபி பாஷாவின்
ஆதரவும், வாப்பிச்சி மரிக்காரின் ஒத்துழைப்பும் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்களின் பங்களிப்பும் அவருக்குக் கிடைத்தன.
மாப்பிள்ளை ஆலிம் தமது ஆரம்பக் கல்வியை காயல் நகரில் கற்றார். பின்னர், 18 ஆவது வயதில் கீழக்கரை சென்று தைக்கா ஸாஹிப் எனப்பட்ட
செய்கு அப்துல் காதிர் லெப்பை ஆலிம் அவர்களின் மத்ரஸாவில் கற்றார்.
இக்காலத்தில் அவருக்கு கேரளாவில் வாழ்ந்த பல உயர் ஆலிம்களின் தொடர்பும் கிடைத்தது. அந்த வேளை தனது ஆசிரியர் தைக்கா ஸாஹிப்
அவர்களின் மகளை மணமுடித்தமை அவரது தரத்தை மேலும் உயர்த்தியதோடு ஆலிமுல் அரூஸ் (மாப்பிள்ளை ஆலிம்) என்ற பட்டத்தையும்
கொடுத்தது.
இவர் பெயர் பெற்ற ஆலிமாகவும், கவிஞராகவும், உயர்வடைந்தாலும் வணிகத்துறை மூலமே தனது சீவனோபாயத்தை சமைத்துக் கொண்டார்.
மதுரையில் தைக்கா ஹாட்வெயார் என்ற வணிக நிலையததை நடத்தியதோடு, கீழக்கரையிலும் ஒரு கிளையை வைத்திருந்தார். வியாபார நோக்கோடு
இலங்கை வந்து சென்றவர் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் சமய வாழ்வில் பங்களிப்புச் செய்த ஒரு பிரசாரகராக மாறினார்.
சித்திலெப்பை வாழ்ந்த காலம் இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டமாகும். ஆங்கிலக் கல்வி மூலம் கிறிஸ்தவ பிரசாரம் வளர்ந்து
கொண்டிருந்தது. சுதேச சமயங்களான பௌத்தர்களும் இந்துக்களும் இதற்கெதிராக மாற்றுவழி முறையைக் கையாண்டனர். பௌத்த, ஹிந்து
பாடசாலைகளை நிறுவி தமது சமயத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பணியை முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு
சென்றவராக சித்திலெப்பை காணப்படுகிறார்.
"இக்கால கட்டத்தில் சமய கலாசார துறைகளில் ஏற்பட்ட விழிப்புணர்வின் வழியாகவே அரசியல் சுயநிர்ணய வேட்கை வளர்ந்து இலங்கைக்கு சுயாட்சி
மலர்வதற்கு ஏதுவாயிற்று.
இத்தகைய விழிப்புணர்வை முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்தியவர்களுள் சித்திலெப்பை முதல்வராவார் என எஸ்.எம் கமால் தீன் குறிப்பிடுகிறார்.
ஜமாலுத்தீன் ஆப்கானி, சேர் செய்யித் அஹ்மத் கான் ஆகியோரின் சிந்தனைத் தாக்கத்துக்கு சித்திலெப்பை உட்பட்டார். ஒராபி பாஷாவின்
வழிகாட்டலும் அவருக்குக் கிடைத்தது. எனவே மரபு ரீதியான சிந்தனைகுட்பட்டோரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஆங்கிலம் படித்த மக்களின் ஆதரவோடு
மேனாட்டுக் கல்வியை சமயச் சூழலில் வழங்க முயற்சித்தார். அதற்கான செயல்பாடுகளையும் எடுத்துக்காட்டினார். முஸ்லிம் நேசன் என்ற தனது
பத்திரிகை மூலம் மக்களை தட்டியெழுப்பினார்.
கொழும்பு முஸ்லிம்களால் அவர் வரவேற்கப் பட்டபோது பின்வருமாறு கூறினார். "இந்த ஸமானில் இஸ்லாத்துடைய தேசங்கள் எல்லாவற்றிலும்
கல்வியில் தேர்ச்சியடைய வேண்டும் என்ற உற்சாகம் உண்டாகியிருக்கிறது. உங்கள் மனதிலும் அப்படி உண்டாகியிருக்கிறது. எனது நாட்டமும்
தேட்டமும் அப்படியே இருந்தால் அல்லாஹு தஆலா என்னை இங்கு (கொழும்பு) வரவும் நீங்கள் என்பேரில் கட்சம் வைக்கவும் செய்திருக்கிறான்.
என் சினேகிதர்களே, கல்வி விடயத்தில் நாங்கள் அசட்டையாக இருந்து விட்டோம். இனிமேல் நாங்கள் எல்லாம் தெண்டிப்போம். (முஸ்லிம் நேசன்
1884) அவர், முஸ்லிம் நேசனில் தனது கருத்துக்களை முன்வைத்தார். பொதுப் பிரசங்கங்கள் மூலமும் மக்களை தனது சிந்தனை மூலம் ஈர்த்தார்.
1891 இல் அவர் கொழும்பு மருதானைப் பள்ளியில் ஆற்றிய உரை வாப்பிச்சி மரைக்கார் போன்றோரை செயற்படத் தூண்டியமை தான், ஸாஹிராக்
கல்லூரியின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆனால், மாப்பிள்ளை ஆலிமின் சிந்தனை வேறுவிதமாக அமைந்தது. அவர், சித்திலெப்பையில் திருப்திகாணவில்லை. இலங்கை முஸ்லிம்களின்
சமய உணர்வை பயன்படுத்த மாப்பிள்ளை ஆலிம், அறபி மொழி மூல, அறிஞர்களை உருவாக்க முயற்சித்தார். தென்னிந்திய பாணியில் இலங்கையில்
அறபு மத்ரஸாக்களை உருவாக்க முயற்சித்தார். தென்னிந்திய பாணியில் இலங்கையில் அறபு மத்ரஸாக்களை நிறுவுவதன் மூலம் மேற்கத்திய கல்வி
முறையின் பாதிப்பிலிருந்து இலங்கை முஸ்லிம்களை விடுவிக்கலாம் எனக் கருதினார். அவர் ஒரு வணிகராக வந்து சென்றாலும் ஆன்மீக
சிந்தனையும், மார்க்க அறிவுமுடைய குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், தனது பணியை ஆரம்பித்தார்.
சித்திலெப்பையின் முதல் பாடசாலை ஆரம்பிக்கப் பட்ட அதே ஆண்டு (1884) தென்னிலங்கை வெலிகம நகரில் மத்ரஸதுல் பாரி என்ற ஷரீஆ பீடம்
ஆரம்பிக் கப்பட்டது.
"உலமாக்கள் அருகி, அறிவு உதாசீனம் செய்யப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் மார்க்கக் கல்வியில் உறுதியாக நிற்பது பர்ளு ஐன் ஆகும். மஷ்ரிகு
முதல் மக்ரிபு வரையுள்ள பல்வேறிடங்களில் மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டு மார்க்க கல்வி ஊட்டப்படுவதை நாம் அவதானிக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள சென்னை, வேலூர், திருநெல்வேலி, காயல்பட்டிணம் போன்ற இடங்களில் மத்ரஸாக்கள் நடைபெறுகின்றன. இங்கெல்லாம்
ஆசிரியர், மாணவர்களது அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. இப்படியான வசதியான மத்ரஸாக்கள் இலங்கையில் இல்லை." என்று
மாப்பிள்ளை ஆலிம் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு எழுதிய கடிதம் அவர்களை செயல்பட வைத்தது.
வெளீயீடு:
வைகறை வாழ்வியல் சஞ்சிகை, இதழ்: 35,
மீள்பார்வை ஊடக மையம்,
49, சிறீ மஹிந்த தர்ம மாவத்த தெமட்டகொட,
கொழும்பு – 09.
சிறீலங்கா
இணையதளம்: www.meelparvai.net
முதன் முதலாக இக்கட்டுரை வைகறை என்ற இலங்கை பத்திரிகையில் வெளிவந்தது. வெளியீட்டாளர்களின் அனுமதியுடன், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் இக்கட்டுரை மறுபதிப்பு செய்யப்படுகிறது.
|