இது பிரியாவிடை அல்ல. பிரியமானவர்களைப் பிரியும்போது நெகிழும் மனத்தின் மடல்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகு - எதிர்பாராத விதமாக ஒரே விஜயத்தில் இரண்டு பெருநாட்களை இம்மண்ணில் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே. வழக்கமாக ஒரு ஜும்மாவிற்கு பிறகு அடுத்தது கிடைப்பது அரிது. ஊர்ப்பயணம் எனக்கு அவ்வளவு சுருக்கமாகவே இருக்கும். வேலை நிமிர்த்தமாக மதுரைக்கு திருச்சி வழி வந்து, மதுரையில் தாமதமாகிவிடட காரணத்தால் இரவு 08.00 மணிக்கு ஊர் வந்து, அதிகாலை 05.00 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றதும் உண்டு. காரணம், குடும்பம் என்னோடேயே தங்கிவிட்டதால். குடும்பம் ஊரில் இல்லாத காயல் உப்பில்லாத சோறு போன்றதுதான்.
22/08 அன்று நடந்த உலக காயலர் + நகர்மன்ற உறுப்பினர் ஒன்றுகூடலில் நான், எனக்கு முன்பு பஞ்சாயத்து உறுப்பினராக - பின்பு சட்டமன்ற உறுப்பினராக வர வந்த வாய்ப்பை மறுத்தேன் என்று கூறியதற்கு சில அன்பர்கள் விபரம் கேட்டனர்.
அதாவது, 1967இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அப்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தேன். காரணம், காங்கிரஸ் பிடிக்கவில்லை என்பதில்லை. ஒரு மாற்றம் வரட்டும் என்பதற்காகவே.
அதோடு, 1965இல் நான் ஹாங்காங்கில் இருந்தபோது அறிஞர் அண்ணாதுரை அவர்களும், இரா. செழியன் அவர்களும், Facts Finding Tour என்ற அடைமொழியின் கீழ் - தூர கிழக்கு நாடுகளுக்கு வந்தனர். அப்போது ஹாங்காங்கில் இருந்த நம்மவரில் வயதில் குறைந்தவன் நான்தான். எனது ஹாங்காங் வருகை, 1963இல் - இலக்கம் 9. அதாவது, ஹாங்காங்கிற்கு முதன்முதலில் என்ற ஒன்பதாவது காயலன் நான். இப்போது அது 900 என்றிருந்தாலும் ஆச்சரியமில்லை.
டோக்கியோவிற்கும், ஹாங்காங்கிற்கும் முதன்முதலாக விஜயம் செய்த காயலர் கே.டி.எம். தெரு சாகிபு காக்கா அவர்கள். இரண்டாவது நபாராக டோக்கியோவிற்கு விஜயம் செய்த காயலர் புதுகடைத் தெரு பாட்டா சதக்கு உமர் காக்கா அவர்கள்.
விளக்கு ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை அவர்கள், ஏ.எஸ்.சுலைமான் அவர்கள், ஹாஜி மூஸா அவர்கள், பி.ஏ.சதக்கு ஹாஜி அவர்கள், ஹாஜி எஸ்.ஓ.புகாரீ அவர்கள், ஹாஜி எஸ்.ஓ.சுலைமான் அவர்கள், கத்தீபு காசிம் சாச்சப்பா அவர்கள், கத்தீபு சலீம் ஹாஜி அவர்கள் ஆகியோர் ஹாங்காங்கிற்கு துவக்கமாக விஜயம் செய்தவர்கள் ஆவர்.
ஆகவே, ஒரு வாரம் அறிஞர் அண்ணாவின் உதவியாளனாக நான் இருந்ததால் அவர் மீது பிடிப்பும், சினேகிதமும் உண்டாயிற்று. மேலும் அண்ணா அவர்களும், “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று அடிக்கடி கூறினார். அதன் பயனாக ஊர் வந்து தேர்தல் பணியில் ஈடுபட்டேன்.
அடுத்து நடந்த பஞ்சாயத்து சபை தேர்தல் போட்டியின்றி ஒற்றுமையாக நடைபெற்றது. சதுக்கைத் தெரு வார்டுக்கு என்னை நியமிக்கும்படி அப்பகுதி மக்களே விரும்பியதால், எங்கள் பகுதி பெரியவர்கள் என்னை செய்யிது ஆலிம்சா பட்டறை என்ற அந்த வர்த்தக நிலையத்திற்கு அழைத்து பேசினர். நான் ஹாங்காங் புறப்பட தயாராக இருப்பதாகக் கூறி மறுத்தேன்.
பின்பு, 1971இல் வந்த சட்டசபைத் தேர்தலின்போது, அப்போதைய நம் தொகுதி உறுப்பினர் - சொந்தக் காரணங்களால் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பியதால், தனக்கு மாற்றாக என் பெயரை சிபாரிசு செய்துள்ளார். அண்ணாவிற்குப் பிறகு எனக்கு நன்கு சினேகிதமான - செல்வாக்கான இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு எனது பெயரை ஏற்றுக் கொண்டார்.
அப்போது நான் பம்பாய் வந்திருந்தேன். பல்லாக் கொமர்ஷியல் கம்பெனியில் தங்கி இருந்தேன். 'நீலம்'புயலாக பல போன் அழைப்புகள் காயலிலிருந்து வந்தன. முடியாது என்றே மறுத்தேன். நான் கூறிய காரணம், “அரசியலுக்கு நான் வந்தால் குடும்பத்தைக் கவனிப்பது யார்?” என்பதே. இன்று இதே கேள்வியை நான் மீண்டும் கேட்டால் மற்றவர்கள் என்னைப் பார்த்துக் கேட்பார்கள் - “எப்போது இவர் வெளியே வந்தார் - கீழ்ப்பாக்கத்தில் இருந்து?” என்று. காலம் மாறிவிட்டது.
முன்பு குறிப்பிட்ட அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர், 1968இல் ஹாங்காங் வந்தபோது எனக்கு அறிமுகமானார். பிரபல தொழிலதிபர் ஹாஜி பீ. எஸ்.அப்துர்ரஹ்மான் போன்றவர்கள் அவரை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வர். இவர் என்னை அவரது அறையில் வந்திருக்கும்படி சொல்வார். அவர் வந்ததும் இருவரும் கலாச்சார நடனங்கள் நடக்கும் விடுதிகளுக்குச் செல்வோம்.
அப்போது அவர் தயாரித்துக் கொண்டிருந்த ‘எங்கள் தங்கம்’ என்ற படத்திற்கு புதுமையான ஒரு கலாச்சார நடனத்தைத் தேடினார். இறுதியாக மிராமர் ஹோட்டலில் நடந்த பிலிப்பைன் நாட்டின் மூங்கில் நடனத்தைத் தெரிவு செய்தார்.
பின்பு, இருவரும் சினிமா உலகைப் பற்றி நிறைய பேசுவோம்.மக்கள் திலகத்தின் முன்னணி கதாநாயகிகளைப் பற்றி பேச்சு வந்தபோது, ஒளிவு மறைவு இன்றி அவர் கூறிய செய்திகள் பல கோடி பெறும். இன்றும் கூட சில நண்பர்கள் அந்தச் செய்திகளைக் கூறும்படி கேட்பர். நான் சிரித்தே மழுப்பி விடுவேன். அண்ணாவிற்கு அறிமுகமானவன் என்ற நிலையில் இருந்து, இப்போது ‘மருமகனின் நண்பன்’ என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன்.
50 ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று இந்திய திருநாட்டில் அரசியல் - ஆட்சியியல் எல்லாமே மாறிவிட்டன. எவையெவை தவறுகள் என்று முன்பு குறிப்பிடப்பட்டவையெல்லாம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்றாட விடயங்களாக மாறிவிட்டன. இல்லையில்லை... நாம் மாற்றிவிட்டோம்.
மர்ஹூம் டாக்டர் சுலைமான் அவர்கள் என் தங்கையின் கணவர். நான் அவர் தங்கையின் கணவன். மேலும் அவர் என் தாய்மாமன் மகனும் கூட. 1961ஆம் வருடம் சென்னை புதுக்கல்லூரியில் பி.யு.சி. வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேறினார். அதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்தார்.
ஏற்கனவே கொழும்பில் கல்வி கற்ற அவர், லண்டன் மருத்துவக் கல்லூரிக்கு தெரிவானார். ஆனால் குடும்பத்தவர்கள் அன்று லண்டன் அனுப்பத் தயங்கியதால் சென்னைக்கு வந்தார். ஆகவே அவருக்கு பி.யு.சி. ஒரு ஜுஜுபிதான். மதுரை மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. அதன் பொருட்டு, மறைந்த ஹாஜி எச்.எம்.புகாரீ அவர்கள் அக்கறை எடுத்து காரியமாற்றினார். பின்பு அதற்காக ரூபாய் 3,000 செலவு என்று வந்தபோது எனக்கு எரிச்சலாக இருந்தது.
விளக்கம் தந்தார்கள். அதாவது அப்போது சுகாதார அமைச்சராக இருந்த திருமதி லூர்தம்மாள் மற்றும் ஊழியர்களுக்கு - உதவியவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக ஏற்பட்ட செலவு என்றார்கள். அக்காலத்தில் பணம் கொடுப்பது குற்றம். இக்காலத்தில் பணமில்லாது வேறு ஏதும் கொடுப்பது குற்றம்.
அத்தோடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது இளைய மகள் தனது மருத்துவப் படிப்பை இந்தியாவில் தொடர விரும்பியதால் நான் சென்னை வந்து, கோட்டையில் ஏறி இறங்கினேன். அங்கு நான் அறிந்தவர்கள் யாருமில்லை. புரட்சி தலைவரின் பாசறையில் எனக்குப் பழக்கமானவர்கள் பலர் இருந்தனர். சபாநாயகர் ராஜாராம், உணவு அமைச்சர் விசுவநாதன் போன்றவர்கள். ஆனால் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியோ - ஓரங்கட்டப்பட்டோ இருந்தனர்.
நம் தொகுதி உறுப்பினர் தன்னால் ஆன உதவிகளைச் செய்வதாகச் சொன்னார். பலரிடம் என்னை வி.ஐ.பி என்று சொல்லி அனுப்பினார். சென்றேன்... பேசினேன்... வந்தேன்... எதுவும் நடக்கவில்லை. திசை தெரியவில்லை. ‘பொறுங்கள்’, ‘பொறுங்கள்’ என்ற பதில்தான்.
பொறுமையிழந்த நான் தனியார் கல்லூரியை நாடினேன். 40 ஆண்டு கால குடும்ப நண்பரும் - சென்னையில் தலைசிறந்த காது - மூக்கு - தொண்டை நிபுணருமான டாக்டர் என்னை பிரபல தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். இடம் தர ஒப்புக்கொண்ட கல்லூரி தலைவி கேட்ட பணம் கொஞ்சமல்ல. டாக்டர் சுலைமானுக்காக செலவழித்த பணத்தை விட 3330 மடங்கு அவர் மருமகளுக்குக் கேட்டார். அதுவும் ஒரே தவணையில். உண்மைதான். இந்தியா வளர்ந்துதான் இருக்கிறது!
மகள் விரும்பவில்லை. வேஸ்ட் என்பது அவள் கருத்து. மேலும் அக்கல்லூரியில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவு. ஆகவே, மனைவிக்கும் பிடிக்கவில்லை. என் ஒப்புதலுக்கு ஆதரவில்லை. மகள் SIETயில் விஞ்ஞானத்தில் நுழைந்து, பின்பு விசுவநாதனின் வேலூர் V. I. T. யில் தலைசிறந்த மாணவியாகி, அடுத்து பெங்களூரில் ஆராய்ச்சிகள் செய்து, சென்னை ஐ.ஐ.டி.யில் கற்பித்து, தற்போது சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி.க்காக சேர்ந்து, இரு மாதங்களுக்கு
முன்பாக மருத்துவ மாணவ சங்கத்தின் வரலாற்றில் முதல் பெண்ணாக - முதல் முஸ்லிமாக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள்.
“மருந்து கொடுக்கும் டாக்டராக வருவதை விட, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டராவதே என் லட்சியம்” என்பதுதான் அவளது குறிக்கோள். டாக்டர் சுலைமான் பெயரில் அவரது கண்டுபிடிப்பு என்று மருத்துவ நூலில் குறிப்பு உண்டு. மருமகளும் அவ்வழியில் வந்து காயல் நகருக்கு பெயர் தருவாள் என்று நம்புகிறேன்.
2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்திய வழித்தோன்றல்களின் மகாநாட்டிற்கு வந்தபோது, அமைச்சர் வயலார் ரவி அவர்களைச் சந்தித்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை பணம் கேட்பதைப் பற்றியும் நான் விவாதித்தேன்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்நாட்டு மாணவர்களுக்குக் கேட்கும் கட்டணம் போலவே வெளிநாட்டு இந்திய வழி மாணவர்களுக்கும் கேட்க வேண்டுமே தவிர, பன்மடங்கு உயர்த்திக் கேட்பது சரியல்ல என்றும், எங்களுக்கு மட்டும் பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்றும் காரமாகப் பேசினேன். எழுத்திலும் கொடுத்தேன். எனது கருத்து சரி என்ற அவர், ‘கவனிப்போம்’ என்றார். அவ்வளவுதான். இதுதான் இந்திய அரசியல்.
ஆனால், குஜராத்தின் நிர்வாகம் வித்தியாசமாக உள்ளது. இம்மகாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் மாநிலத்திற்கான முதலீடு ஊக்குவிப்பைப் பற்றிப் பேசினர். சில முதலமைச்சர்களும் பேசினர். அனைவரையும் கவர்ந்தவர் நரேந்திர மோடிதான். தன் மாநிலம் தரும் வசதிகளையும், அதன் சிறப்பையும் அவர் கூறியதற்கு இணையாக யாராலும் பேச முடியவில்லை. திட்டங்களுக்கு பட்டென ஒப்புதல் தருவேன் என்றார். தடையில்லா மின்சாரம் ஊழி ஊழி காலம் தருவேன் என்று அடித்துச் சொன்னது தமிழக அமைச்சர்களுக்கு எப்படியோ இருந்தது.
மோடி வித்தைக்காரர்தான். சந்தேகமில்லை. தெளிவாக புள்ளி விபரங்களுடன் பேசுகிறார். சொன்னதைச் செய்கிறார்... செய்வதைச் சொல்கிறார். நேரில் இனிமையாக - கோர்வையாகப் பேசுகிறார். துவேஷமில்லை. ஆனால் இப்போது பிரச்சினை என்னவென்றால், செய்ததை மறுக்கிறார் - மறைக்கிறார். அந்த நெருடல் நம் மனதை விட்டு அழிவதில்லை
நரேந்திர மோடி அடுத்த பிரதமரா என்ற கேள்வி எங்கும் உள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள்
இல்லை என்று சொல்வதை நிறுத்திவிட்டன. குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதி. அடுத்து மோடியின் கனவு டெல்லி. நான் அமர்ந்து ஆட்சி செய்த செங்கோட்டையில் - (மன்னிக்கவும்... ஷாஜஹான் மன்னர்) அமர அவர் விரும்புகிறார். கட்சியில் ஆதரவு தளம் அமைக்கும் பணி செந்தூர் குமரன் பெயர் கொண்ட அரசியல்வாதியிடம் விடப்பட்டுள்ளது. நாரதர் அவர். நினைத்ததை முடிப்பவர். முன்னாள் மதுரை எம்.பி.
ஆனால் நம் மனம் சஞ்சலப்படுகிறது. குஜராத் கலவரத்தைப் பற்றி கொழும்பின் தினகரன் பத்திரிக்கையின் ஞாயிறு இதழில் தொடர்ந்து நான்கு வாரங்கள் நான் எழுதினேன். இப்போது 28 வருடம் சிறைவாசம் பெற்றிருக்கும் முன்னாள் துணை அமைச்சர் மாயா கொட்னானி, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழிக்கச் சொல்லியதையும் விரிவாக எழுதினேன். அந்த அனர்த்தத்திற்கு ஆதரவாக - ஆதாரமாக இருந்தவர் நாட்டின் பொறுப்பிற்கு வருவாரா? வாய்ப்பு உள்ளதா? தவறின் ஒரு தமிழர் வருவார் என்கின்றனர். அவர் யார்? அது ரகசியம். சிதம்பர ரசகியம்.
முன்பு பா.ஜ.க.வின் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா அவர்களுக்கு, சென்னையில் தாஜ் ஹோட்டலில் நடந்த விருந்து ஒன்றில் நண்பர் ஒருவர் என்னை அறிமுகப்படுத்தியபோது, என் பெயரைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு சலிப்பு தெரிந்தது. அச்சந்திப்பு பலன் தரவில்லை.
இப்போது இலங்கையில் இந்திய தூதராக இருப்பவர் சின்ஹாவின் மகளின் கணவர்தான். அவர் எனக்கு நல்ல நண்பர். சமீப காலங்களில் நான் அடிக்கடி கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும் வரவேண்டும் என்று சண்டை போடுவேன். ‘வரும்’, ‘வரும்’ என்பார் அவர். “எனது வீடு கடலுக்கு முன்பாத்தான் உள்ளது... எங்கே காணோமே...?” என்று ஒருநாள் நான் சொல்ல அனைவரும் சிரித்தனர். அவரும் சிரித்தார்.
இது நிற்க, வழக்கமாக காயல் நகரத்திற்கு நான் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. ஆனால் இம்முறை அது உலகமெலாம் வெளிச்சமாகிவிட்டது. காரணம்...? நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எதிர்பாராத நிகழ்வுதான் அது. இருந்தாலும் ஏற்கனவே நெஞ்சை உறுத்திக்கொண்டிருந்த விடயம்தான்.
காயல் நகரம் தொழல்நுட்பத்தில் இன்று இமயம் அளவு முன்னேறியுள்ளது என்று கூறலாம். ஒரு காலத்தில் சென்னைக்கோ, கொழும்புவிற்கோ தொலைபேசி அழைப்பிற்காக தபால் நிலையத்தில் மணிக்கணக்காக - சில நேரங்களில் நாட்கணக்காகக் காத்திருந்து தொண்டி கிழிய கத்திப் பேசினோம். எங்கள் தெருவில் எங்கள் வீட்டிற்குத்தான் முதல் தொலைபேசி இணைப்பு கிடைத்தது. இன்று நிலை என்ன? ஒரு நொடியில் உலகில் எங்கும் பேசும் வாய்ப்பு வந்துவிட்டது.
அடுப்பங்கரையில் இருந்து அமெரிக்காவுக்கு SKYPEஇல் படம் தெரிய பேசுகிறார்கள்... குழந்தைகளைக் காட்டுகிறார்கள்... பார்க்கிறார்கள்... வளமான வாழ்விற்கு வர்த்தகமே துணை என்ற நிலை மாறி, கல்வி சார் வேலைவாய்ப்புகளும் அதற்கிணையாகப் பெருகியதால் இளவல்கள் பலர் கடல் தாண்டி - விண்ணைத் தொட்டுப் பறக்கிறார்கள்.
அவ்வாறு பறக்கிறவர்கள் மறக்கவில்லை காயல் நகரை. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று போராடும், வசதி குறைந்த மாணவர்களுக்கு கைகொடுக்க அவர்கள் தங்கள் நேரத்தை - பணத்தை செலவழிக்கிறார்கள்... முகம் தெரியாதவர்களுக்கு உதவுகிறார்கள் - பிரதிபலன் எதிர்பாராது.
பிணி தீர்ப்பதும் எம் பணியே என்று மேலும் மருத்துவ உதவிகளுக்கும் வழி செய்கிறார்கள்... பண்டிகை காலங்களின்போது தேவையானவற்றைக் கொடுக்கிறார்கள்... மொத்தத்தில், வெளிநாடு வாழ் காயலர்கள் இம்மண்ணிற்குச் செய்யும் சேவைகளை ஓரிரு வரிகளில் அடக்கிவிட முடியாது.
இந்த உதவிகளுக்கு - காயல் நகரமே நீ அவர்களுக்குத் தரும் நன்றிக்கடன் என்ன - என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் அப்படி என்னதான் கேட்டுவிட்டார்கள்? எதுவுமேயில்லை. ஆனால் ஒன்று. நகரசபையில் நல்ல நிர்வாகத்தைக் கேட்கிறார்கள். நேர்மை - திறமை அடிப்படையில் பணிகள் விரைவாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் இன்று போய் நாளை வா என்ற மனப்போக்கு மாற வேண்டும் - மறைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். “ஆபிசர் இல்லை... ஃபைல் இல்லை... கமிஷனர் இல்லை... கரண்ட் இல்லை... கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை...” என ‘இல்லை’, ‘இல்லை’ என்ற முகாரி ராகம் இல்லாத நகரசபையாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வெளிப்படையாகவே கூறுகிறேன். நகரசபை ஊழியர்கள் நம்மை மதிப்பதில்லை என்றே பலரும் என்னிடம் குறைபட்டார்கள். என்ன காரணம்?
அரசு சம்பளம் பெறுபவர்களை வெள்ளைக்காரன் Public Servant - அதாவது மக்கள் சேவகன் என்று அழைத்தான். ஆனால் இந்தியாவிலும், சில அண்டை நாடுகளிலும் அவர்கள் மக்களின் எஜமானர்கள் போல்தான் நடக்கின்றனர். அப்படித்தான் ஆங்கிலேயன் பயிற்றினான் அவர்களை.
நம்மை ஆள்வதற்கு ஐரோப்பியனை நாம் பூவும், தண்ணியும் வைத்து அழைக்கவில்லை. 1505இல் கள்ளிக்கோட்டைக்கு வந்த வாஸ்கொடகாமா வாசனைத் திரவியங்கள் வாங்கவே வந்தான். ஆனால் ஒரு கையில் வாளும், மறு கையில் பைபிளும் ஏந்தி வந்தான். தனது பீரங்கி பலத்தினால் நமது சிற்றரசர்களை சின்னாபின்னமாக்கிய ஆங்கிலேயனின் நோக்கம் இந்நாட்டின் வளத்தைச் சுரண்டுவதே. “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ” என்று பாரதியார் இதைத்தான் சொன்னார்.
பிறர் மண்ணை ஆளும் நமக்கெதிராகப் போராட்டம் ஒருநாள் வரும் என்று காலமெல்லாம் பயந்த வெள்ளையன, மக்களைக் கண்காணிக்க கிராம மட்டத்திலிருந்து பெருநகரம் வரை ஏற்படுத்திய அமைப்புதான் இந்த சிவில் நிர்வாக அமைப்பு. மக்கள் கேட்பதை உடனே கொடுக்காதே... இழுத்தடி! அப்போதுதான் பெற்றது கடினமான விடயம் என்று நினைப்பர். இல்லாவிடில் கோரிக்கைகள் கோடிக்கணக்கில் வரும் என்று கூறுவான்.
ஊழியனின் தேவைக்கேற்ப சம்பளம் தர மாட்டார்கள். ஓரளவு தந்து, மற்றதை “சம்பாதித்துக் கொள்” (அல்லது கொல்) என்று விட்டுவிடுவர். அதில் உதயமாகியதுதான் இந்த அரசு ஊழியர் லஞ்சம். அன்று ஊதிய உயர்வு கேட்டோ, போனஸ் கேட்டோ, படி கேட்டோ எந்த வேலை நிறுத்தமோ - ஆர்ப்பாட்டமோ கிடையாது. ஆனால் இன்று, காலத்திற்கேற்ற சம்பளம் உண்டு. ஆனால் தேவைகளைப் பெருக்கும்போது எந்த வருமானமும் கட்டுப்படியாகாது. சம்பாதிப்பதில் அரசு ஊழியர் கவனம் செலுத்தினால் எந்த நிர்வாகமும் சரிவராது. ஒரு தவறு பல தவறுகளுக்கு வழி வகுக்கும். நமதூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
ஒரு சபையில் நேர்மையான நிர்வாகம் இருக்க வேண்டுமானால், நேர்மையான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அல்லது உறுப்பினர்கள் நேர்மையாக நடக்க வேண்டும். அத்தகையவர்களின் கண்காணிப்பில்தான் நகர் நலம் பெறும்.
‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பர். அதாவது, பொதுமக்களுக்கு செய்யும் சேவையானது மகேசன் - கடவுள் - இறைவன், அவனுக்குச் செய்யும் சேவை என்பதே பொருள். இறைவனுக்குச் செய்யும் சேவையில் குறை வைக்கலாமா? அது சாமி குத்தம் என்று தமிழக கிராமங்களில் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா? யாரும் குறை வைக்க விரும்புவதில்லை.
கடவுள் - இறைவன் பணத்தைத் திருடுவது அடுக்குமா? இல்லை என்றே எல்லோரும் சொல்வர். அப்படியானால் மகேசன் என்று வர்ணிக்கப்படும் அந்த பொதுமக்களின் பணத்தைத் திருடுவது தர்மமாகுமா? சிந்தியுங்கள்.
“நேர்மையைப் புகழ்கிறார்கள்... ஆனால் அது பசியில் சாகிறது என்பான் புத்திசாலி". தினத்தந்தியின் சாணக்கியன் (09.11.2012) கூறுவது எவ்வளவு உண்மை. இன்று பத்திரிக்கையைப் பிரித்தால், தொலைக்காட்சியைத் திறந்தால் வருவது எல்லாமே ஊழல் - முறைகேடு - லஞ்சம் - வரவுக்கு மீறி சொத்து சேர்த்தது போன்ற செய்திகள்தான். நேர்மைக்குப் பெயர்போன இந்தியா எங்கே போகிறது? நேர்மை நம்மை விட்டும் போய்விட்டதா?
ஒரு பசுவுக்காக மகனை இழந்த மனு நீதிச் சோழன், “யாமே அரசன் யாமே கள்வன்” என்று - கண்ணகிக்கெதிராக தான் செய்த தவறையுணர்ந்து உயிர் நீத்த பாண்டியன், ஒரு புறாவிற்காக தன் சதையைக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி... இவர்களெல்லாம் இம்மண்ணில் மறக்கப்பட்டுவிட்டார்களா?
காமராஜரின் நேர்மையை அறிவோம். தன் தாய் என்ற காரணத்தினால் அம்மாவிற்குத் தந்த விசேட தண்ணீர் பைப் இணைப்பை முறைகேடு என்று கூறி, தாய் முன்னாலேயே அதனை வெட்டும்படி அதிகாரியிடம் கூறியவர் அவர்.
மூதறிஞர் இராஜாஜி ஓர் இலக்கியவாதி. ஆளுநராக அவர் இருந்த காலத்தில், தான் கதை - கட்டுரை எழுதும்போது, அரசு பேனாவைப் பயன்படுத்தாது தன் சொந்தப் பணத்தில் வாங்கிய பேனாவையே பயன்படுத்துவார். ஒருமுறை சேலத்தில் தன் பக்கத்துக்கு வீட்டு நண்பன் சுகவீனமாக இருப்பதறிந்து, அவரைப் பார்ப்பதற்காக வீதியில் நடக்கத் துவங்கினார்.
டிரைவர், “ஐயா, வண்டி இருக்கிறது” என்றார். “வேண்டாம்” என்றார் அவர். பாதுகாப்பு அதிகாரி அவர் கூடவே நடக்கலானார். ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா? “அரசு வேலைக்கு நான் சென்றால்தான் எனக்கு பாதுகாப்பு... இப்போது என் நண்பனைப் பார்க்கச் செல்கிறேன்... எனவே நீ வருவது முறையல்ல” என்றார். இன்றோ... தலைவர்கள் கக்கூசுக்குப் போனாலும் கறுப்புப் பூனைப்படை கூடவே போகிறது.
ஜவகர்லால் நெஹ்ரு (நேரு அல்ல. கழகத்தார் வடமொழி ‘ஹ’ எழுத்தைத் தவிர்த்ததால் அவர் நேருவானார்.) சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவர்கள், ஐக்கிய நாட்டு சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து, ஓய்வுபெற்று இந்தியா திரும்புகையில், தான் நியுயோர்க்கில் பாவித்த Volks Wagen சிறிய காரையும் கொண்டு வந்தார். அதற்கு சுங்க வரி கட்ட வேண்டுமென அதிகாரிகள் கூறியபோது, தான் பாவித்த காருக்கு சுங்க வரி இல்லை என்று கூறி மறுத்தார்.
அதிகாரிகள் அப்போது தங்கள் அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் விடயத்தைக் கூற, அவர் பிரதமர் நெஹ்ருவிற்குக் கடிதம் எழுதினார். அதில், “விஜயலட்சுமி பண்டிட் கூறுவது உண்மை... ஆனால் கப்பலில் காரை ஏற்றும் முன் இங்கு அதற்கு அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆகவே இந்த கார் தீர்வை வரம்பிற்குள் வருகிறது” என்று விளக்கினார். உடனே நெஹ்ரு தனது சொந்தப் பணத்தில் ரூ.1500க்கு செக் எழுதிக் கொடுத்தனுப்பினார்.
இறுதியாக, அறிஞர் அண்ணாதுரை அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒரு வாரத்தில், அவர் மனைவி அவருக்கு கோட்டைக்கு போன் செய்து,
“வீட்டிற்கு அரசால் சோபா கொண்டு வந்துள்ளார்கள்... அதை எங்கு போட வேண்டும்?” என்று கேட்டார்.
அண்ணா சற்றும் தயங்காது, “அந்த சோபா நமக்கு வேண்டாம் என்று சொல்” என்றார். “ஏன்?”
“நாளைக்கு நம்மிடமிருந்து இந்த ஆட்சி போய்விட்டால் அவர்கள் சோபாவையும் கொண்டு போய்விடுவார்கள்... அப்போது உனக்கு அது சங்கடமாக இருக்கும்... ஆகவே வேண்டாம்”. “அப்ப சரிங்க”.
சோபா திரும்பிச் சென்றுவிட்டது. தம்பிமார் இப்படியா செயல்படுகிறார்கள்?
ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிலைக்கும் என்றோ, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருவோம் என்றோ அண்ணா கர்வம் கொள்ளவில்லை. ஆனால் 45 ஆண்டுகள் அண்ணாவின் பெயரில்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. பாரத திருநாட்டில் இத்தகைய சிறப்புச் செய்திகள் நிறைய உண்டு. தனக்கென வாழாதவர் மக்கள் மனதில் வாழ்வர்.
இஸ்லாமிய வரலாற்றில் கலீஃபாக்களின் ஆட்சி இதற்கெல்லாம் முன்னோடியானது - முன்மாதிரியானது. அதனால்தான் காந்தியிடம், “சுதந்திர இந்தியா எத்தகைய ஆட்சியைப் பின்பற்றும்?” என்று கேட்டபோது, “கலீஃபா உமரின் ஆட்சியைப் பின்பற்றுவோம்” என்றார்.
விருத்தாச்சாலத்தில் ஒரு நேர்மையான நிர்வாகம் நடைபெறுமென்றால் காயல்பட்டினத்தில் ஏன் அது முடியாது? நாம் கலீஃபாக்களின் வழி வந்தவர்கள்தாமே...? சிந்தியுங்கள். அவ்வாறான திறமையான - பொறுப்பான - நேர்மையான - இன்று போய் நாளை வா என்று சொல்லாத நிர்வாகத்தைக் கொண்ட காயல் நகரைக் காண மீண்டும் வருவேன். மீண்டும் மீண்டும் வருவேன்.
கவின்மிகு காயல் நகரே...! உன்னிடமே உறங்கவும் வருவேன்...
இப்போது, சென்று வருகிறேன் காயல் நகரே...!! |