அது யாழ்ப்பாண நகரம். அக்டோபர் 30 - 1990 காலை மணி 10.30. LTTE விடுதலைப் புலிகளின் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி அலறியது. நகரில் முஸ்லிம்கள் வசிக்கும் மூலை முடுக்குகள் எல்லாம் சென்ற அது, குடும்பத்தில் ஒருவராவது கட்டாயமாக - கண்டிப்பாக பகல் 12.00 மணிக்கு உஸ்மானியா கல்லூரியில் உள்ள ஜின்னா ஸ்டேடியத்திற்கு வருமாறு கட்டளையிட்டது. திரும்பத் திரும்ப - வாகனம் திரும்பிய பகுதியெல்லாம் பலத்த குரலில் அந்த ‘அரச கட்டளை’யை அது அறிவித்தவாறு சென்றது.
துப்பாக்கிகளை ஏந்திய போராளிகள் அதிகமாக தெருக்களில் குவியத் துவங்கினர். சிலர் கால்நடையாக வீடு வீடாகச் சென்று அச்செய்தியை அறிவித்தனர். ஏன், எதற்கு என்று எதுவுமறியாத மக்கள் தங்கள் கைகளில் இருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு, ஜின்னா ஸ்டேடியம் நோக்கி நடக்கலாயினர். 12.30 மணியளவில் ஆஞ்சநேயர் என்றும், இளம்பரிதி என்றும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் அம் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வார்த்தையைப் பேசலானார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இரண்டு மணி நேர அவகாசத்தில் நகரைக் காலி பண்ண வேண்டும் - அதாவது நகரை விட்டுச் செல்ல வேண்டும் என்று உயர் பீடம் முடிவு செய்து அறிவிக்கிறது. செய்யத் தவறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்”. அவ்வளவுதான். விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இவர்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைத்தார்கள் போலும்.
ஏன், எதற்கு என்று ஒன்றும் புரியாத சிலர் காரணங்களைக் கேட்டபோது, ஆஞ்சநேயர் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். (மரத்திற்கு அல்ல!) “முஸ்லிம்கள் கட்டளைக்குப் பணிய வேண்டும்... இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும்” என்றதோடு அவர், தனது கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டார். இதுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொன்னாரோ இல்லை துப்பாக்கியே தங்களுக்கு துணை என்று காட்டினாரோ தெரியாது. அவரது மெய்பாதுகாவலர்கள் சிலரும் தங்கள் தலைவர் செய்ததைப் போலவே செய்து, தங்களின் Fire Power-ஐக் காட்டினர்.
உண்மைச் செய்தி “பட்டாசு வெடிகளோடு” மக்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அப்பாவி மக்கள் வித்தியாசமாகவே நினைத்தனர். அதாவது, அரசுப் படைகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டார்கள். ஆகவே, எல்லா மக்களையும் வெளியேறும்படி விடுதலைப் புலிகள் கேட்கிறார்கள் என்றுதான் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
அந்த அளவிற்கு அவர்கள், “தம்பிமார்”களை தங்களுக்குத் தீங்கு செய்யாதவர்களாகவே நினைத்தனர். புலி தங்கள் மீது நகத்தை வைத்து பிறாண்ட ஆரம்பித்து விட்டது என்பதை அவர்கள் உணரவேயில்லை. தாங்கள் மட்டும்தான் துரத்தப்பட்டோம் என்பதை அவர்கள் அறிய வெகு காலம் பிடித்தது. அப்படியான சூழலில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.
புலிப் போராளிகள் மேலும் மேலும் அதிகமாகத் தெருக்களில் குவிய ஆரம்பித்ததைப் பார்த்த முஸ்லிம்கள் பெரிதும் குழம்பினர். இரண்டு மணி நேரத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டும். துப்பாக்கி ஏந்தியவர்கள் தெருக்களில் ‘பொத்’ ‘பொத்’ என்று வாகனங்களிலிருந்து இறங்கத் துவங்கிவிட்டனர்.
பெரிய சமர் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் தயாராகிறது போலும் என்று நினைத்த அவர்கள் அவசர அவசரமாக தங்கள் உடமைகளைப் பொதிகளாக்கத் துவங்கினர். துணிமணிகள், நகைகள், பணம் என்று எது எதுவெல்லாம் அவசியமென்று தெரிகிறதோ அவற்றையெல்லாம் எடுத்தனர். விடுதலைப் புலிகள் பஸ், வேன் என்று போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். சில முஸ்லிம்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
தங்கள் வசிப்பிடங்களை விட்டும் மக்கள் வெளியேறத் துவங்கியதும், அடுத்த ஆணை வந்தது. “ஐந்து முனைச் சந்தி”யில், வெளியேறும் முஸ்லிம்கள் அனைவரும், “q"வரிசையில் நிற்கும்படி அறிவிப்புச் செய்யப்பட்டது. வரிசையில் நின்ற மக்களின் வயிற்றில் அங்குதான் அடிக்கப்பட்டது.
எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் முன்பு அறிவிக்கப்படாததால் மக்கள் தங்கள் விருப்பப்படி பொருட்களை எடுத்திருந்தனர். இப்போது ஆண் புலி, பெண் புலி எல்லோரும் முஸ்லிம்கள் அவர்களிடம் இருக்கும் பணம், நகைகள் மற்றும் பொருட்களையெல்லாம் தங்களிடம் தந்து விட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறி, ஒருவருக்கு ரூ.150 தொகையும், ஒரு ஜோடி உடுப்பும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றனர்.
மக்கள் குமுறத் தொடங்கினர். பெண்கள் அழ ஆரம்பித்தனர். ஆனால் புலிகளின் உறுமலும், அவர்களின் கைகளிலிருந்த - அவர்களை விட பயங்கரமான ஆயுதங்களும் அம் மக்களை மவுனியாக்கின. மக்கள் கைகளிலிருந்த பொதிகள் எல்லாம் இப்போது கை மாறின – கைப்பற்றப்பட்டன. சூட்கேசுகள் திறக்கப்பட்டன. ஓர் உடுப்பு மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
கைலி உடுத்தி இருந்தவர்க்கு இன்னொரு கைலி தரப்பட்டது. கால் சட்டை போட்டிருந்தவருக்கு இன்னொரு கால் சட்டை, புடவை கட்டியிருந்தவர்க்கு இன்னொரு புடவை, பாவாடை தாவணியில் இருந்தவர்களுக்கு இன்னொரு செட். என்னே தாராள மனம்...? பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்களால், பணம், அடையாள அட்டை, சொத்துகளுக்குரிய ஆவணங்கள், வாகனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
இது பகற்கொள்ளை. சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் உடைமைகளைத் தொடுவதில்லை. சுபாஷ் சந்திர போஸை முன்மாதிரியாகக் காட்டிய விடுதலைப் புலிகளின் தலைவருக்கு, சுபாஷின் போராட்ட வாழ்வில் இதுபோன்ற நிகழ்வைக் காட்ட முடியாது.
பெண் போராளிகள் பெண்களின் நகைகளைப் பறித்தனர். சில பெண் புலிகள் - பெண்களின் காதுகளில் இருந்த ஆபரணங்களை முரட்டுத் தனமாக இழுத்துப் பறித்ததில், இரத்தம் வழிந்தது. ‘ஆ’வெனக் கத்திய பெண்கள் வாயை மூடுமாறு, பெண் புலிகளின் கனல் கக்கும் கண்களால் சொல்லப்பட்டனர். சில ஆண் புலிகள் பலமாக உறுமவும் தவறவில்லை. குழந்தைகளின் நகைகளும் தப்பவில்லை. அதற்கெல்லாம் மேலாக, ஒரு கைக்கடிகாரம் கூட கொடுக்கப்படவில்லை. Yes, their time was bad. ஆனால், யாருடைய time bad என்பதை அறிய 19 வருடங்கள் பிடித்தன.
35 பணக்கார முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சில முஸ்லிம் நகை வியாபாரிகள், தங்கம் எங்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்று கேட்டு பலவந்தப்படுத்தப்பட்டனர். ஒரு நகை வியாபாரி மற்றவர்கள் முன்பாக அடித்துக் கொல்லப்பட்டார். அவர்களை விடுவிக்க பெரும்பணம் கேட்டனர் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். 30 லட்சம் வரை சிலர் கொடுத்தனர். இருந்தும், கடத்தப்பட்ட வர்த்தகர்கள் படிப்படியாகவே விடுவிக்கப்பட்டனர். சிலர் வெளியே வர சில வருடங்கள் ஆயின. அவர்களில் 13 பேர் திரும்பவேயில்லை. ஆம், திரும்பி வர இயலாத இடத்திற்கு அவர்கள் சென்றுவிட்டனர்.
யாழ்பாண முஸ்லிம்களைப் பொருத்த வரையில், விடுதலைப் புலிகள் அவர்களிடம் மிகவும் கடுமையாக - கொடுமையாக நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கும், அங்குள்ள ஹிந்து சமூகத்திற்கும் இடையே மிகவும் சுமுகமான உறவு இருந்தது. அவர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு மூன்று இடங்களில்தான் செறிந்து வாழ்ந்தார்கள்.
சோனக தெரு, ஒட்டு மடம், பொம்மை வெளி பகுதிகளில்.
வர்த்தகத் துறையில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். இரும்பு வியாபாரம், லாரி போக்குவரத்து, நகை வியாபாரம், இறைச்சிக் கடை என்பன அவர்களின் தனிச் சொத்து போல் இருந்தன. அந்நாளில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த L.K.S. மற்றும் A.K.S. நகை வியாபாரிகள் அங்கு பிரபல்யமாக இருந்ததையும் குறிப்பிடலாம்.
1975 அளவில் மேயர் ஆல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்ட புதிய நகரசபை அங்காடியில் யாழ்பாண முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தினர். அதிலிருந்த மூன்று பகுதிகளில் இரண்டு பகுதி இவர்கள் வசமே இருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்முதலாக நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மேயர் துரையப்பாவைத்தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் பல கல்விமான்கள், அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களும் இருந்தனர். தமிழ் மொழியில் அங்குள்ள ஹிந்துக்களுக்கு இணையாகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் பலர் இருந்தனர். கொழும்பு சாகிரா கல்லூரியின் அதிபர் மர்ஹூம் A.M.A.அசீஸ் (இவரிடம் அன்றைய காயலர்கள் - எனது மைத்துனர் மர்ஹூம் டாக்டர் சுலைமான், லண்டன் டாக்டர் செய்யிது அகமது போன்ற பலர் மாணவர்களாக இருந்தனர்) உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர், மேல் நீதிமன்ற நீதிபதி M.M.ஜமீல், கல்வித் துறை இயக்குநர் மன்சூர் போன்ற எண்ணற்றவர்களைக் குறிப்பிடலாம். அரசியலில் பலர் இருந்தனர். யாழ்ப்பாண துணை மேயர்களாக பஷீர் அவர்களும், சுல்தான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்படியெல்லாம் இருந்தும் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இதற்குக் காரணம் என்ன?
வடபகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவே இருந்த வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அங்குள்ள ஹிந்துக்களுக்கு சமமான எண்ணிக்கையில் இருந்தனர். இங்கு இரு சாராரின் உறவு வடபகுதியில் இருந்தது போல் சுமுகமாக இருக்கவில்லை. அடிக்கடி பலப்பரீட்சையில் அது சிக்கியது. சிறு சிறு உரசல்கள் பின்பு மோதல்களாக உருவெடுத்து உறவைக் குலைத்தன.
இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் சிலரும் இருந்தனர். பின்பு, சில சில கசப்புகளின் காரணமாக அவர்கள் வெளியேறத் துவங்கினர். ஒதுங்கியவர்கள் சிலர், பிற இயக்கங்களில் சேர்ந்தவர்கள் சிலர், அரசு பக்கம்சாய்ந்தவர்கள் சிலர். இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை மீறிய செயல். ஆகவே அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் வசம் இருந்த சில முஸ்லிம் இளைஞர்களை அவர்களே சுட்டுக்கொன்றனர்.
விடுதலைப் புலிகளின் சார்பில் கிழக்கு மாகாணத்திற்கு அன்று கருணா என்ற விநாயகமூர்த்தியும், கரிகாலனும் பொறுப்பாக இருந்தனர். இன்றைய அரசில் கருணா ஒரு துணை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களால் கிழக்கு மாகாண புலிகள் முகாமில் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு - வெறுப்பு உணர்வு தூண்டப்பட்டது.
இதே வேளை, அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட துணை ஊர் காவல்படையில் இருந்த முஸ்லிம்கள் ஹிந்து தமிழர்கள்பால் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்கள் - கருணா, கரிகாலன் ஆகியோரை முஸ்லிம்கள் மீது பாரிய அளவில் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. அதற்காக அவர்கள் வடக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்து, பேசலாயினர்.
இதன் விளைவாக, கிழக்கில் சில முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டன. வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டன. ஆண் - பெண் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிவாயில்களும் தாக்குதலுக்கு இரையாயின. மட்டக்களப்பு, சம்மாந்துறை மஸ்ஜிதுகளில் தொழுகையில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.
உச்சகட்டமாக, ஆகஸ்டு 1990இல், காத்தான்குடி முஸ்லிம்களை நகரை விட்டும் வெளியேறும்படி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என அது அச்சுறுத்தியது.
ஆகஸ்டு 03ஆம் திகதி இரவு, ஆயுதம் தாங்கிய 30 விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடம் தரித்து, சுமார் 08.10 மணியளவில், காத்தான்குடியில் மீரானியா ஜும்ஆ மஸ்ஜித், ஹுஸைனிய்யா மஸ்ஜித், மஸ்ஜிதுல் நூர், பவ்சி மஸ்ஜித் ஆகிய இடங்களில் - இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இறந்தவர்கள் 147 பேர். அதில் - வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள், சிறுவர்களும் அடங்குவர்.
இந்த அனர்த்தத்தை - மனிதப் படுகொலையை நேரில் கண்ட 40 வயது முஹம்மது இப்றாஹீம் என்ற வர்த்தகர், சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். நியுயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அவர் கூறியதாவது:- “நான் குனிந்து தொழுதுகொண்டிருந்தேன்... பயங்கரவாதிகள் சுடத் துவங்கினர்... அது 15 நிமிடங்கள் நீடித்தது. நான் இறந்தவர்களோடு படுத்துக்கொண்டதால் தப்பினேன்...” என்றார்.
முஹம்மது ஆரிஃப் என்ற 17 வயது இளைஞன், “நான் பக்கத்திலிருந்த கதவு வழியாகத் தப்பி, சுவர் ஏறிப் பாயும்போது, ஒரு விடுதலைப் புலி பயங்கரவாதி, சிறுவன் ஒருவனின் வாயில் துப்பாக்கியைத் திணித்து, பின்பு வெடிக்க வைத்ததைக் கண்ணால் கண்டேன்...” என்று நியுயோர்க் டைம்ஸ் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தான்.
இந்த பள்ளிவாயில் படுகொலையில் ஐந்து வயது, பத்து வயது சிறுவர்கள் பலர் இருந்ததையும், பலியானதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒரு பாலச்சந்திரனுக்காக, பாலகனைக் கொல்லலாமா என்று துடிதுடிக்கும் தமிழகத்து தமிழீழ ஆர்வலர்கள், இதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று நீங்கள் கேட்கும்போது, என்ன பாவம் செய்தார்கள் பள்ளியில் தொழுத இம் மக்கள் - இந்த பாலகர்கள்? பாலச்சந்திரன் பாவம் செய்தவன்தான். அப்பாவிகளை - பாலகர்களைக் கொன்ற கொலைகாரத் தந்தை ஒருவனுக்கு மகனாகப் பிறந்தது பாவமில்லையா?
இந்நிலையில், சாவகச் சேரியில் நடந்த ஒரு சம்பவம், அதனை விடுதலைப் புலிகள் எடுத்துக் கொண்ட முறை, அதனை அவர்கள் கையாண்ட விதம், வடக்கு முஸ்லிம சமூகத்தின் எதிர்காலத்தையும், விடுதலைப் புலிகளின் வரலாற்றையும் இருட்டாக்கியது.
செப்டம்பர் 04ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாயிலைத் தாக்க முற்படவே, முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர். (அக்காலத்தில் அப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.) ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களை விடுவித்ததோடு, சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என எச்சரித்தது. அடுத்து, செப்டம்பர் 25ஆம் திகதி, சாவகச்சேரி பகுதியை விட்டு வெளியேற, ‘அனுமதி பாஸ்’ கேட்டு, மறுக்கப்பட்டு, தகராறு செய்த முஸ்லிம் இளைஞன் “காணாமல் போனான்”.
இந்நிலையில் ஒரு முஸ்லிம் கடையில் வாள் 75 எண்ணிக்கையில் இருப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதோடு, முஸ்லிம்களின் வீடுகள் - கடைகள் அனைத்தையும் சோதனை செய்ய ஆரம்பித்தனர். இது சலிப்பை உண்டாக்கியது. அக்டோபர் 15ஆம் திகதி, சாவகச்சேரியின் 1000 முஸ்லிம்களும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வவுனியா பகுதிக்கு வெளியேறிச் செல்லுமாறு கட்டளையிடப்படவே, அவர்கள் வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து, மன்னார் பகுதியிலிருந்துதம், ஏனைய வடபகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர் - துடைத்து எறியப்பட்டனர். கடைசியாக அக்டோபர் 30இல் வெளியேற்றப்பட்டவர்கள்தான் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள்.
தமிழகத்தின் தமிழீழ ஆர்வலர்களைக் கேட்க விரும்புகிறேன் - இது நியாயம்தானா? எந்த அடிப்படையில் நீங்கள் இந்த மனித வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியும்? பள்ளிவாயிலில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இலங்கை முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்று ஆத்திரப்படும் உங்களிடம் இதற்கு என்ன பதில் உள்ளது?
ஆகஸ்டு 13ஆம் திகதி 2009ஆம் வருடம் நான் மருத்துவ சோதனைக்காக சென்னை வந்திருந்தபோது, ஒரு பிற பல தொலை காட்சியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர், இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் பேசுமாறு என்னைக் கேட்டார். சம்மதித்தேன்.
அதன்படி, தி.நகரின் பாடசாலை மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரை அழைத்து நடந்த கூட்டத்தில் நான் விளக்கினேன். இந்த இணையதளத்திற்கு அறிமுகமான ஒரு சிலரும் வந்திருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், உண்மை நிலை வெளியே வரக்கூடாது என்ற அடிப்படையில் அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு குழப்பியதால் கூட்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மூன் டிவி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது.
விடுதலைப் புலிகள் தங்களுக்கே உரிய மமதையில், அடுத்த சிறுபான்மையினரான முஸ்லிம்களை மதிக்கவில்லை. பெரும்பான்மை சிறுபான்மையை மிதிக்கிறது என்று ஆர்ப்பரித்த அவர்கள், சிறுபான்மை மற்றொரு சிறுபான்மையை மிதிக்கலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால்தான் அவர்களின் நிலை இன்று இந்தளவிற்கு அருகிப் போய்விட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதில்லை. அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை. இப்போது சொல்லுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி LTTE விடுதலைப் புலிகளை ஆதரிப்பார்கள்? |