| |
ஆக்கம் எண் (ID #) 41 | | | ஞாயிறு, டிசம்பர் 6, 2015 | | தாக்கிப் பொழிந்த வான் இயற்பெயர்: பஞ்சவர்ணம்; பூர்விகம்: ராமநாதபுரம். பிறந்தது திருவாரூர் அருகிலுள்ள சாட்டியக்குடி கிராமம்.
சமூக அக்கறை கொண்ட கவிஞர்; சமூகப் பார்வையாளர். சென்னையிலுள்ள அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர்.
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி அறக்கட்டளை விருது, பாவலர் விருது, கவிஞர் தின விருது என பல விருதுகள் பெற்றவர். தமிழக அளவில் கவிதைப் போட்டியில் பங்கேற்று, இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பீ.ஜெ.அப்துல் கலாமிடம் முதற்பரிசைப் பெற்றவர். இவரது நூல்கள் பல்கலைக் கழகத்தில் பாடப்புத்தகமாக உள்ளது. |
| இந்த பக்கம் 4266 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
நிலமே கரைந்து
நீராய் ஓட
மீன்களும் திகைப்பில்
மெதுவாய் நீந்த
அடர்மழைக் காட்டில்
உயிர்கள் பதற
நெடும் பொழுதாடி
களித்தாய் மழையே...!
குற்றம் புரிந்தோம்
‘நீர்நிலைக்கொன்’ றென
வீட்டுச் சிறைகளில்
அடைத்தாய் மழையே...
பள்ளமும் மேடும்
சமமாய்த் தெரிய
சமத்துவப் பாடல்
இசைத்தாய் மழையே...
வெடித்துக் கிடந்த
நதிகள் பெருகி...
சாலைகள் எல்லாம்
ஆறுகளாக...
‘தடதடதட’ வென
தாக்கிப் பொழிந்து
தத்துவம் பலப்பல
உரைத்தாய் மழையே...
நினைந்து நினைந்தே
ஞாபகம் ஓய
உள்ளம் முழுதும்
வெள்ளம் சூழ
நடையாய் நடந்தே
இடர்கள் கடந்த
முன்னோர் வாழ்வைச்
சொன்னாய் மழையே...
இருளை இருளாய்ப்
பழக்கிய மழையே...
இயல்பைப் புரட்டி
மிரட்டிய மழையே...
ஏரிகள் மனையாய்
மாறிய கோபத்தின்
எச்சரிக்கை நீ
அறிந்தோம் மழையே...
காக்கும் கடவுள்
அழித்திடலாமா
கருணை உயிரைக்
குடித்திடலாமா
வான்வழித் தாக்குதல்
கேள்வி ஞானம்
வானே தாக்கினால்
என்செய்வோம் மழையே...
தண்ணீர் உன்னால்
தவியாய்த் தவிக்கும்
மானுடத் தவறுகள்
மன்னித்து அருள்வாய்
எல்லாத் துயரும்
இல்லாதவர்க்கே
என்பதறிந்து
பொழிவாய் மழையே...
உணவும் நீயே
உற்பத்தி நீயே
வள்ளுவன் சொன்ன
வான் சிறப்பெங்கே
இப்படி அடித்தால்
எப்படிப் பொறுப்போம்
அளவாய் அளவாய்
பொழிவாய் அமுதே... |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|