135 வருட பாரம்பரியம் மிக்க செய்தி ஓடையிலிருந்து கிளை ஓடை ஒன்று சன்னமாக ஒலித்தோடத் தொடங்கியுள்ளது.
இந்து குழுமத்திலிருந்து “ தி இந்து “ என்ற அதே பெயரிலேயே தமிழ் நாளிதழை தொடங்கி உள்ளனர். இதன் ஆசிரியராக கே.அசோகன் பொறுப்பேற்றுள்ளார். இவர் விகடன் குழுமத்தில் பணியாற்றியவர்.
2003 ஆம் ஆண்டு வரை தினமணி நாளிதழின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். அந்த ஆண்டு நடந்த குஜராத் இன அழித்தொழிப்பு பற்றிய உண்மையான செய்திகளுக்காக இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை தி இந்து தான் விருப்பத்திற்குரியதாகவும் நம்பகமானதாகவும் நீடித்து வருகின்றது.
அதன் பிறகு இந்தியாவில் வெளியாகும் பெரும்பாலான தேசிய ஆங்கில நாளிதழ்களை அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இது வரை நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பில் தேசிய, வட நாட்டு அச்சு ஊடகங்கள் ஆற்றிய பெரும் பங்களிப்புகள் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஃபாஸிஸ்டுகள் இங்குள்ள பெரும்பாலான ஊடகங்களை முஸ்லிம்களுக்கு எதிரான போரில் திரி சூலமாகவே பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரையில் நேரடியாக பங்கெடுக்காத ஊடகங்கள் கூட இந்து ஃபாஸிஸ்டுகளின் அக்கிரமங்களை இருட்டடிப்பு செய்து கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.
இந்த இடத்தில்தான் இந்து ஆங்கில நாளேடு நிமிர்ந்து நிற்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை மதச்சார்பின்மையின் காவலனாகவே கேடயத்தை உயர்த்தி பிடிக்கின்றது இந்து ஆங்கில நாளேடு.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இடது சாரிகள், மதச்சார்பின்மை வாதிகளுக்கு எதிரான இந்திய ஃபாஸிஸ்டுகளின் அவதூறுகள், பொய் பரப்புரைகள், தாக்குதல்கள், இன அழித்தொழிப்புகள் போன்றவற்றை தன்னால் இயன்ற அளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ஆவணப்படுத்தி இடித்துரைக்கும் துணிவான பாரம்பரியம் இந்து ஆங்கில நாளேட்டிற்கு மட்டுமே உண்டு.
தெளிந்த உயர் ஆங்கிலம், மதச்சார்பின்மை, ஆட்சியாளர்களை அண்டாத போக்கு, சூழலியலில் கரிசனம், ஆதி வாசிகள், தலித்துக்கள் போன்ற விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய அக்கறை என்பனவற்றுடன் இதழியலில் இந்து ஆங்கில நாளேட்டிற்கென தனி ஒரு பாதை உண்டு.
அவையாவன ...
• செய்திகளை அதன் ஆழ அகலங்களுடனும் உடன்பாடான, எதிர்மறையான கூறுகளுடனும் அலசுதல்.
• ஆய்வுக்கண்ணோட்டமும் தீர்வும் நிறைந்த அரசியல் பொருளாதார கட்டுரைகள்.
• ஆளும் வர்க்கத்தையும், பெரும்போக்கு சமூக நடத்தைகளையும் உறுதியான தலையங்கங்கள் மூலம் கேள்விக்குள்ளாகுதல்.
• ஆசிரிய தலையங்கத்திற்கு இணையான, தரமான வாசகர் கடிதங்கள்
• செய்திகளின் உள்ளடக்கம், தலைப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஏற்படும் பிழைகளை வாசகர்கள் சுட்டிக் காட்டவும், தேவையேற்பட்டால் அதற்கான விளக்கத்தை அளிக்கவும் READERS EDITOR என ஒரு பத்தியை துவக்கி அதற்கென தனி ஆசிரியர், தொலை பேசி எண் உள்ளிட்டவற்றை ஒதுக்கி உள்ளனர்.
• ஆசிரியர் குழுவினரின் கருத்தோடு இணைந்து செல்லாத கட்டுரைகளையும் தலையங்கப் பகுதியிலும் OPEN PAGE இலும் வெளியிடுதல்.
• குற்றச் செய்திகளை சமூக பொறுப்புணர்வுடன் வெளியிடுதல். குறிப்பாக தகாத உறவுகள் தொடர்பாக இங்குள்ள தமிழ் நாளிதழ்கள் செய்வது போன்ற நேரடி வர்ணணைகளை எக்காலத்திலும் வெளியிடாதது.
• இசை, ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, நடனம், திரைப்படம், சூழலியல், மொழியியல், சுற்றுலா, உணவு, மருத்துவம் கல்வி விளையாட்டு, வணிகம், பொருளாதாரம், அறிவியல், வரலாறு, விவசாயம், கட்டிடக்கலை, வாழ்வியல் பண்பாடு போன்ற துறை சார்ந்த பதிவுகள் தொடர்ச்சியாக இடம் பெறும். அந்த பதிவுகள் மேம்போக்கானவையாக இல்லாமல் துறை சார்ந்த விரிவான அலசலாகவும் இருக்கும்.
குறிப்பாக திரை உலக கிசு கிசுக்களுக்கு இங்கு இடமில்லை.
• குழந்தைகள், மாணவர்கள், வளர் இளம் பருவத்தினர், பெண்கள், முதியவர்கள் என எல்லா பிரிவினருக்கான செய்திகளும் இடம் பெறும்.
இவ்வாறாக ஆங்கில இந்து நாளிதழின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பென்னம் பெரும் ஆலமரத்தின் விழுதாக கிளைத்திருக்கும் தி இந்து தமிழ் நாளிதழும் மேற்கண்ட சிறப்பம்சங்கள் அனைத்தையும் தாங்கி வெளி வர வேண்டும் என்பதே நமது பெரு விருப்பமாகும்.
செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் வெளி வந்து கொண்டிருக்கும் தி இந்து தமிழ் நாளிதழை வாசித்ததில் ஏற்பட்ட மனப்பதிவுகள்:
~~~ வகை வகையாக,அழகியலுடன், விவரமாக வரும் செய்திகள்
~~~ எளிதாக வாசித்து கடந்து செல்லும் வகையில் துணுக்கு செய்திகள்
~~~ சிறுபான்மையினர், ஆதிவாசிகளுக்கு நடந்த அநீதிகளின் பதிவுகள்
~~~ சுவாரசியமான அறிவியல் துணுக்கு செய்திகள்
~~~ மாற்றுக் கல்வி முறையை பின்பற்றும் கல்விக்கூடங்கள் பற்றிய கவனக் குவிப்பு
~~~ இந்து ஃபாஸிசத்தின் அரசியல் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை
~~~ கூடன் குளம் அணு உலை கழிவை மதுரையில் புதைக்க ஆளும் வர்க்கம் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தியது
~~~ பன்னாட்டு விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளதிமீர் புதின் எழுதிய அரசியல் கட்டுரையின் மொழியாக்கம்
என தரத்தில் நம்பிக்கையூட்டுகின்றது.
குறைகளாக பட்ட விஷயங்கள் :
## 3 ரூபாய் விலையில் 36 பக்கங்களைத் தருகின்றது இந்து ஆங்கில நாளேடு. ஆனால் தி இந்து தமிழ் நாளிதழின் விலை 4 ரூபாய். பக்கங்களோ 16 தான்.
## முதல் நாளிலேயே தமிழக ஆளுங்கட்சியின் புகழ் பாடும் வகையில் பக்கம் பக்கமாக விவரணங்கள். அம்மா குடிநீர் குடுவை, தாது மணல் அள்ள தடை போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பான வர்ணனைகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
பாதுகாக்கப்பட்ட குடி நீரை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவது அரசின் அடிப்படை கடமை. அதை விற்கும் ஒரு அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும் ?
அதே போல தாது மணல் கொள்ளை விஷயத்தை மக்கள் மன்றத்தில் ஆஷீஷ் குமார் என்ற மாவட்ட ஆட்சியர் போட்டு உடைத்ததின் விளைவாக வேறு வழியின்றி தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுவும் மிக கால தாமதமான நடவடிக்கை.
இரு கழக ஆட்சிகளின் முழு ஆசியுடனும் துணையுடனும்தான் இந்த சுரண்டல் இது வரை நடந்து வந்துள்ளது.
## விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தல், வெறியூட்டும் துவேஷ முழக்கங்களுடன் கரைப்பு ஊர்வலம் நடத்துதல் போன்றவை இந்துத்வ ஃபாஸிச அமைப்புக்களின் நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளவை எனபது ஊரறிந்த உண்மை. இந்த வெறுப்பு விழாக்களுக்கு உடன்பாடான செய்திப்பதிவு கொடுத்திருப்பது என்பது பொது வாழ்வில் அவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்கவே வழி வகுக்கும்.
## கார்ப்பரேட் உலகு, நுகர்வு பண்பாடு, இந்து ஃபாஸிசத்தின் முகவர்களாகவும் பண்பாட்டு தூதுவர்களாகவும் செயல்படும் ஜெய மோகன், பத்ரி சேஷாத்ரி, பா. ராகவன் போன்றோரின் ஆக்கங்கள் வருவது அச்சத்தையும் அய்யப்பாடுகளையும் கிளப்புகின்றது.
தி இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் குழுவானது இனி வரும் காலங்களில் இவற்றை தவிர்க்கும் வகையில் செயல்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் வெளி வந்து கொண்டிருக்கும் தினத்தந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு, தின மலர் தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் தரமும் அனைவரும் அறிந்ததே. வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு, குழந்தைகளும் பெண்களும் வாசிக்க முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்தவை.
தினமணி மட்டும் இந்த பட்டியலில் வராமல் இருந்தது.
டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், ஐராவதம் மகா தேவன், போன்ற சான்றோர்கள் கோலோச்சிய பாரம்பரியம் மிக்க தினமணியின் போக்கில் கடந்த சில வருடங்களாக வீழ்ச்சி ஏற்பட்டு வருவதை கவனிக்க முடிகின்றது. ஆபாச வர்ணனை செய்திகள் இதுவரை இடம் பெறவில்லைதான். ஆனால் தில்லி வைத்திய நாதன் ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு பக்கச் சார்பு, அ.தி.மு.க, பா.ஜ.க. ஆதரவு, கிசு கிசுப்பு செய்திகள் என அதல பாதாளத்தை நோக்கி தினமணியானது உருண்டு செல்கின்றது.
தினமணியின் சறுக்கல் தொடங்கிய கால கட்டத்தில் மதச்சார்பின்மை, அதிகாரத்தை சாராமை போன்ற விழுமியங்களுக்காக பெயர் போன தி இந்து பாரம்பரியத்திலிருந்து தமிழ் நாளிதழ் முகிழ்த்திருப்பது நம்பிக்கையூட்டுகின்றது.
“ ஒரு நாடு ஒரு பண்பாடு “ என்ற பேரினவாத கருத்தியலுடன் இயங்கும் மதன் உலாவும் விகடன் குழுமத்திலிருந்து வந்த கே.அசோகன் அவர்கள் பன்மைச் சமூக கருத்தியலுக்கு (plural society concept) ஆதரவானவர்.
கே. அசோகன் அவர்களின் தலைமையில் தி இந்து நாளிதழானது தமிழகத்தின் பெரும்போக்கு ஊடக ஓட்டத்தில் ஒரு மாற்று தமிழ் ஊடகமாக உருவெடுக்கும் என்ற நமது எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் பொய்க்காது என நம்புவோமாக!
|