இணையதள இணைபிரியாத வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
விடுதலைப் போரில் கலந்து கொண்டு முஸ்லீம்கள் குறித்தும் ஜனவரி 26 குடியரசுத் தினத்திலும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திலும் நாம் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் விடுதலைப் போராட்ட முஸ்லிம்களை புரிந்து கொள்ளவே இக்கட்டுரை. பல நூலிலிருந்து தேடி எடுக்கப்பட்டது.
முஸ்லீம்கள் பலர் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களும், சித்திரவதைக்கு ஆளாகி சிறையில் உயிருக்கு போராடி பலியானவர்களும் வரலாற்றில் காணக் கிடக்கிறது. அவை ஏன் மறைக்கப்பட்டது? அனைத்து பேரையும் விபரமாக விளக்கமாக எழுத முடியாவிட்டாலும் குறிப்பிடதக்கவரை மறக்காமல் எழுதி இருக்கிறேன்.
விடுதலைப் போராட்டத்திற்கு காயல் கடற்கரை ஓரம் கப்பலில் வந்து பாதுகாத்து குஞ்சாலி மரைக்காயருக்கு உதவிய சதக் மரைக்காயர் ஒரு காயல்வாசி என்று வரலாற்று ஆசிரியர் வி.என். சாமி குறிப்பிடுகிறார். அவர் பற்றி விரிவான விளக்கம் கிடைக்கவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அரசு பதிவு அதிகார பத்திரங்கள் மூலம் தேடித் தரலாம். இந்த நூல் படிக்கும்வரை இதுகூட தெரியாமல் இருந்தோமே. நினைத்துப் பார்த்து மனதிருப்தி கொள்ளலாம்.
மொகலாய சக்ரவர்த்தி பகதூர்ஷா:
1775 அக்டோபர் 24ஆம் தேதி அக்பர்ஷாவுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ல் அரியணை ஏறும்போது தனது பெயரை அபுஜாபர் சிராஜுத்தீன் பகதூர்ஷா காஜி என்று மாற்றிக் கொண்டார். உர்து, அரபி, பார்ஸி மொழிகளை கற்றறிந்தார். இவர் ஓரு கவிஞர். கஜல் என்ற பாடலை பாடினார். ஜீனத்து மஹல் என்ற பெண்ணை மணந்தார். 1857 ல் சிப்பாய்க் கலவரம் நடந்தபோது, ஆங்கிலேய இராணுவ அதிகாரி வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதை பார்வையிட வந்த கர்னலை சுட்டுக் கொன்றார். சிறையை உடைத்து இந்திய கைதிகளை வெளியேற்றினார். மீரட்டில் புரட்சி நடந்தது. டில்லி சக்ரவர்த்தியாக இருந்த பகதூர்ஷா திருட்டு, கொள்ளையிடுவோரின் கைகளைத் துண்டிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயருக்கு எதிராக பகது|ர்ஷா ஆட்சியினர் சதி செய்தனர். 1858 ல் மன்னர் பகதூர் ஷா ஆட்சியின் மீது பிரிட்டீஸ் அரசு குற்றம் சாற்றியது. 1857 மே 16 ல் நடந்த கலவரத்தில் டில்லி அரண்மனையில் 49 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஐரோப்பிய பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட பகதூர்ஷா மன்னரே காரணம் என்று கூறியதுடன் இந்திய புரட்சிப்படையை தூண்டிவிட்டதாக மன்னர் பகதூர்ஷாவை பிரிட்டீஸ் அரசு ரங்கூனுக்கு நாடு கடத்தியது.
அவர்களுடன் மனைவி ஜீனத் மஹல், மகன் ஜவான் பகத் ஆகியோரையும் நாடு கடத்தியது. இந்திய மொகலாய கடைசி மன்னரான பகதூர்ஷா சமாதி பர்மாவில் உள்ளது. பகதூர்ஷா கட்டிய செங்கோட்டை டெல்லியில் உள்ளது. இந்த கோட்டையின் விஸ்தீரணம் அழகு பகதூர்ஷா ஆட்சியின் காலத்தை நமக்கு எடுத்து வைக்கிறது.
விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீரம்:
கேரளம் கண்ணனூரில் ஆட்சி புரிந்த ராணிபீவி பிரிட்டீஷார் கண்ணனூர் துறைமுகம் வழியாக செல்வதற்கு தடை விதித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட பிரிட்டீஸார் 1783ல் திடீரென கண்ணனூரைத் தாக்கினார். எதிர்பாரத ராணி பீபி தோல்வியடைந்தார். பிரிட்டீஸ் படை அவர்களை சிறையில் தள்ளியது. இந்த வீரமங்கை திப்பு சுல்தானின் படைகளை அழைத்து வைத்துக் கொண்டு பிரிட்டீஸாரை பலமுறை வென்று முறியடித்துள்ளார்.
பேகம் ஹஜ்ரத் மஹல் ஓரு வீரப் பெண்மணி:
வட நாட்டிலுள்ள அயோத்தியை அவுத்து என்று அழைப்பார்கள். டில்லி குத்புத்தீன் ஐபெக் காலத்தில் டில்லியில் சுல்தான் ஆட்சி 1765ல் நடைபெற்றது. பேகம் ஹஜ்ரத் மஹல் அவுத் பகுதியை ஆட்சி செய்து வந்தார். வாள்வீசும் வீரமங்கையான இவரின் இயற்பெயர் முஹம்மது கனூம் (புத்தி கூர்மை படைத்தப் பெண்) என்ற பெயர் பெற்றவர். நவாப் வாஜித் அலிஷபியை திருமணம் செய்தபோது இஃபத்திகார் உன்னிஸா என்ற பெருமைக்குரிய பெண் என்ற பட்டத்தையும்பெற்றார். பிரிட்டீஸார் இவரிடம் பலமுறை போரிட்டு தோல்வி அடைந்தனர். கடைசியாக இந்த வீரப்பெண்ணை தங்களிடம் சரணடைய வேண்டும் என்று பிரிட்டீஸார் ஓலை அனுப்பியது. பிரிட்டீஸ் படையில் சிக்காமல் நேபாளம்சென்று விட்டார்.
ஆபிதா பானு பேகம் என்ற பீஅம்மா:
1920 ல் ஆபீதாபானு பேகம் என்ற பீஅம்மா கதர் ஆடை அணிந்து டெல்லி லக்னோ முதலிய இடங்களுக்கு சென்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்து தமது 74வது வயதில் 1924ல் மரணமடைந்தார். கதர் அடையால் தன்னை கபனிட வேண்டும் என்ற அவரின் தேசிய பற்றை இறுதி மரணத்தருவாயில் செய்து முடித்தனர்.
பேகம் அயிஜாஸ் ரஸ_ல்:
உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா ஊரில் 1909ல் நவாப் சர்ஜுல்பிகாரின் மகளாகப் பிறந்தார். நவாப் அயிஜாஸ் ரஸ_லை திருமணம் செய்தார் விடுதலைப் போராட்டத்தில் பலமுறை கலந்து கொண்டார். இந்திய அரசியல் நிர்ணயசபையில் 1946 முதல் 1950 வரை இருந்தார். 1958 ல் உத்திரப் பிரதேச சட்டசபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1969 முதல் 1971 வரை உத்திரப் பிரதேச அமைச்சராக இருந்தார். இன்னும் ஏராளமான முஸ்லிம் வீர மங்கைகளின் வரலாறுகள் உள்ளன. அவற்றை யாவும் எழுதுவதென்றால் பக்கம் கூடும். ஆதலால் விடுதலைப் போரில் முஸ்லிம்கள் நூலை வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வ.உ.சி.க்கு கப்பல் வாங்கித் தந்த முஸ்லிம்:
வஉ சிதம்பரனார் பிள்ளை(வஉசி) அவர்கள் பிரிட்டிஸ்காரர்களுக்கு எதிராக ஓட்டிய கப்பல் கம்பெனி 1906ல் சுதேசி ஸ்டீம்நேவிக்சேசன் கம்பெனி துவங்கினார். இந்தக் கப்பலை 1906 அக்டோபர் 16ல் துவக்கினார். இந்த கப்பலை வாங்கிட பக்கீர் முஹம்மது ராவுத்தர் இரண்டு இலட்சம் ரூபாய் கொடுத்து பங்குகளை வ.உ.சி. சார்பில் வாங்கினார்.
நேதாஜி இராணுவத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முஸ்லீம்:
இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தை நேதாஜி பர்மா(மியான்மரி)ல் துவங்கியபோது அதற்கு அதிகமான நிதி தேவைப்பட்டது. இந்திய வம்சாவழியினரான முஸ்லிம்கள் அன்று பர்மாவில் நிதிகளை அள்ளித் தந்தார்கள். 1943ல் நேதாஜி தனது இராணுவத்திற்கு நிதி சேர்க்கப் போவதாகவும், எனது கூட்டத்தில் விழும் மாலைகளை ஏலமிட்டு நிதி சேர்க்கப் போவதாகவும் அறிவித்தார். பெயர் சொல்ல விரும்பாத இந்திய வமிசாவழி முஸ்லிம் அன்றைய கூட்டத்தில் விழுந்த மாலைகளை 5 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இன்னொரு நாள் கூட்டத்தில் விழுந்த மாலைகளை இந்திய முஸ்லிம் 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இந்திய வமிசாவழியைச் சார்ந்த ஹபீப் என்ற வாசனைத் திரவிய வியாபாரி (திஞ்சூசூ என்ற கம்பெனி அதிபர்) தனது 3 இலட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்திற்கு நிதி அளித்தார். இதுபோல் ரங்கூன் அமீர் ஹம்ஸா என்ற கோடீஸ்வரர் இவரும் இந்திய வம்சாவளி முஸ்லிம். ஒரு கோடி ரூபாயை ஆசாத் ஹிந்து வங்கி தொடங்குவதற்காக 1944ல் கொடுத்தார். மற்றொரு முஸ்லிம் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் 50 இலட்ச ரூபாயையும், நிலங்களையும் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவ செலவிற்காக கொடுத்ததாக நேதாஜி சென்ற பலநாடுகளில் கூறிவந்தார்.
2-10-1943ல் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் நேதாஜிக்கு ஆலோசகராக கரீம்கனி, அஜீஸ் அஹ்மது, இஹ்சான் காதர், ஷாநவாஸ், புர்கானுதீன் (பாயும் சிங்கப்படை) என்று பெயர் கொண்டவரை நம்பிக்கை கொண்டவராக நேதாஜி நியமித்து இருந்தார்கள்.
எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டது ஏன்? நேதாஜியின் இராணுவத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம் சிப்பாய்கள் (இராணுவ வீரர்கள்) இருந்தனர்.
கொரில்லா படையில் முஸ்லிம்கள்:
மலேசியா, ஹாலந்து, பர்மா, பிரான்ஸ் நாட்டில் கொரில்லாப் படையை இந்திய முஸ்லீம்கள் அமைத்திருந்தனர். 22 கொரில்லாப் படைவீரர்கள் கொல்லப்பட்டு வீரமரணமடைந்தனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு நேதாஜிக்காக உளவு பார்த்ததாக 147 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். சித்திரவதைக்கு ஆளாகி வீரமரணமடைந்தார்கள். நேதாஜிக்கு யார் யார் வெளிநாட்டில் பணஉதவி செய்தார்கள். ராணுவத்தில் பதவி வைத்த இந்த முஸ்லிம்களை பிரிட்டீஸ் அரசு பட்டியலிட்டு கொடுமைப்படுத்தி பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றார்கள். பலரை சிறையில் தள்ளி சித்திரவதை செய்தும், சிலரை நாடு கடத்தியும் விட்டனர்.
விடுதலைப் போருக்காக நடந்த புரட்சி இயக்கங்கள்:
வெள்ளையரை எதிர்த்து இந்தியா பூராவும் கலவரங்களும், புரட்சிகளும் வெடித்தது. 1857 ல் சிப்பாய் கலவரம் என்ற புரட்சி நடந்தது. கிலாபத் இயக்கம் 1919 -21 ல் நடந்தது. கிலாபத் இயக்கத்தில் முஸ்லிம் பெண்கள் பர்தாவுடன் கலந்து கொண்டனர். கேரளம் மலபாரில் மாப்பிள்ளைமார்கள் கிளர்ச்சி ஆரம்பமானது. 1921 பிப்ரவரி 16 ல் மொய்தீன் பூக்கோயா தங்கள் என்ற மார்க்க கல்வி அறிஞரை பிரிட்டீஷார் கைது செய்தனர். பின்னர், கேரளா பூராவும் மாப்பிள்ளைமார்கள் அணிஅணியாக கிளர்ச்சி எறநாடு, வள்ளுவநாடு, மலபார் தாலுகாக்களில் நடந்தது. இதனால் 10 ஆயிரத்து 520 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் முஸ்லிம்களை நாடு கடத்தியது. கேரளாவிலிருந்து கோவைக்கு 65 பேர் பயணம் செய்ய வேண்டிய சரக்கு வண்டியில் 100 முஸ்லிம்களை அடைத்து வைத்து பிரிட்டீஸ் அரசு அனுப்பியது. இதனால் மூச்சு திணறி இடிபாடுகளுக்கிடையே 65 முஸ்லிம்கள் இறந்தனர். பிரிட்டீஸாரின் ஆட்சியாளர்களால் கொடுமை இழைக்கப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் சுதந்திர இந்திய விடுதலைக்கு பாடுபட்ட முன்னோடிகள் ஆவார்கள்.
காந்தி நடத்திய போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு:
காந்தி நடத்திய இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு அதிகமாகவே இருந்தது. காந்தி 1919 ல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், 1930-32 வரிகொடா இயக்கம், 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம், அன்னிய துணி புறக்கணிப்பு (கதர் ஆடை அணிதல்), கள்ளுக்கடை மறியல், ரௌலட் சட்டம் எதிர்ப்பு அணி, ஆகஸ்ட் புரட்சி, சத்தியாகிரகம் போன்ற அனைத்து போராட்டத்திலும் காந்தியின் பின்னணியில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் திரண்டு வந்து வெள்ளையனை எதிர்த்து வீரமரணம் அடைந்தனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை:
1891 முதல் 1903 வரை பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. பிரிட்டீஸ் அரசு ராணுவம் 1650 தடவை சுட்டனர். 5650 குண்டுகள் சுடப்பட்ட போது 56 முஸ்லிம்கள் குண்டுக்கு பழியாகி வீரமரணம் அடைந்தனர்.
உலமாக்களின் பங்கும், பத்திரிகையாளரின் எழுச்சியும்:
விடுதலைப் போரில் இந்தியா முழுவதிலுமுள்ள மத்ரஸா மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களான உலமாக்களும் பங்கேற்றனர். வடநாட்டிலுள்ள உத்திரபிரதேசம் வடமேற்கு பகுதியிலுள்ள ஷஹாரன்பூர் மாவட்டத்தில் தேவ்பந்த் நகரில் தாருல் உலூம் மத்ரஸா 1867ல் அந்த மத்ரஸா மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிரியர்களும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றுபிரிட்டீஸ் அரசு அந்த மத்ரஸா மாணவர்களையும், உலமாக்களையும் கைது செய்து சிறையில் போட்டது. வடநாட்டிலுள்ள பலஊர்களில், உர்து ஆங்கிலப் பத்திரிகை 22 நாட்டின் சுதந்திர போராட்ட செய்திகளை வெளியிட்டு சுதந்திர உணர்ச்சியை தூண்டியது. அதனால் அந்த பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் வாடினார். இதே வரிசையில்தான் தமிழ்நாடு, கேரளப் பத்திரிகைகள் பத்து விடுதலைப் போராட்ட செய்திகளை எழுதி மக்களை விழிப்புணர்ச்சிப் படுத்தியது.
காயல்பட்டினத்தைச் சார்ந்த பத்திரிகை ஆசிரியர் கைது:
செ.யி.ம. செய்யிது அஹ்மது மௌலானா 1878 ல் காயல்பட்டினத்தில் பிறந்தார். 1925 ல் அல்ஹிதாயா மாத பத்திரிகையில் நாட்டின் விடுதலை குறித்து கனல் பறக்கும் கட்டுரைத் தீட்டினார். கோபம் கொண்ட பிரிட்டீஸ் அரசு செய்யிது அஹ்மது மௌலானா அவர்களை கைது செய்து சிறையில் வைத்து கொடுமைபடுத்தியது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் 1926 ல் அந்தப் பத்திரிகையிலிருந்து விலகி கமருஸ்ஸலமான் (காலச் சந்திரன்) என்ற பத்திரிகையை துவக்கினார். அதன்பெயரை தமிழ், அரபி, ஆங்கில மொழியில் வெளியிட்டும் இருந்தார். 1926 ஆகஸ்ட் கமருஸ்ஸமான் பத்திரிகையில் அல்ஹிதாயாவை விட்டு வெளியேறிய காரணத்தை விவரித்து இருந்தார். மீண்டும் இந்திய சுதந்திர போராட்ட செய்திகளை வெளியிட்டார். எச்சரிக்கப்பட்டாலும், பயப்;படாமல் இந்திய சுதந்திரத்தை பற்றி எழுதி வெளியிட்டு வந்தார். (1926 கமருஸ்ஸமான் (காலச் சந்திரன்) மாத இதழ் என்னிடம் ஒரு பிரதி உள்ளது. இந்த பிரதியை ரூபாய் பத்தாயிரம் வரை கேட்ட ஒரு நபர் உண்டு) காயல்பட்டினத்தில் பிறந்த இவர் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி. நமதூரின் ஒரு தெருவுக்கோ, நகருக்கோ பெயரிடலாம். இந்தப் போராட்ட வீரரை நமது இக்கால வாரிசுகள் புரிந்து கொள்ளவே தேடிப்பரப்படுகிறது.
நமதூர் தைக்கா தெரு பகுதியில் இவர்களின் வாரிசுகள் வாழ்வதாக தெரிகிறது. விடுதலைப் போரில் தமிழ்நாட்டில் பங்கு கொண்ட ஊர்கள் எத்தனை?
சென்னை முதல் குமரி வரை 88 ஊரைச் சார்ந்த 315 பேர்கள் கலந்து கொண்டு சிறை பிடிக்கப்பட்டனர். சித்திரவதைக்கு ஆளாகி வீரமரணம் அடைந்துள்ளார்கள். லாகூர் சதி வழக்கில் கைதாகி சென்னை சிறையில் 1915ல் பிரிட்டீஸார் செக்கு இழுக்கச் செய்து கொடுமைபடுத்தப்பட்ட ஷேக் இமாம் சென்னை சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு வீரமரணமடைந்தார். இவரைப் போல ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை நாடு எப்போது எண்ணிப்பார்க்கப் போகிறது?
கட்டுரைக்கு உதவிய ஆதார நூல்களுக்கு நன்றி:
1. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (தினமணி ஓய்வுபெற்ற தலைமை நிருபர், சாமி அவர்கள்) பக்கம் 1110. விலை 500 ரூ 2009 ல் முதல் பதிப்பு, பாவலர் பதிப்பகம், குருவிக்காரன் தெரு, மதுரை -625009
2. இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு – ஆசிரியர் ஷேக்தாவூது (1986) தஞ்சை
3. இந்திய விடுதலை வெற்றி – மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1961 பக்கம் 310
4. விடுதலைப் போரில் திப்பு சுல்தான் 2012 பதிப்பு
5. 1806 ல் வேலூர் புரட்சி பாரதி பதிப்பகம் 2013
6. இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 1 முதல் 3 பாகம்
7. இடம்பெற்ற புகைப்படம் (Photo) இரண்டும் விடியல்வெள்ளி ஆகஸ்ட் இதழில் எடுத்தது. அவர்களுக்கு நன்றி.
புகைப்படங்கள் உதவி:
விடியல் வெள்ளி - 08 ஆகஸ்ட் 2013 |