| |
ஆக்கம் எண் (ID #) 109 | | | சனி, அக்டோபர் 5, 2013 | | ஆட்டோ விபத்து! பள்ளிச்சிறுவர்கள் மரணம் 2!! படுகாயம் 7!!! சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 3612 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களின் குழந்தைகள், பள்ளிக்கூடங்களுக்கு ஆட்டோவில் செல்பவர்களாக இருந்தால்
அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன் இதை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து அந்த குழந்தைகளை பேராபத்திலிருந்து காக்க உதவும்படி வேண்டுகிறேன் -
வஸ்ஸலாம்.
- கட்டுரை ஆசிரியர்.
|
பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த மாணவர்களில் இருவர்
உயிரிழந்தனர் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்களை வீட்டுக்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ பிரதான வீதியில் அதிவேகமாக வந்து
கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளை இடைமறித்து தெருவில் வளையும்போது நிலை தடுமாறி கவிழ்ந்து இருமுறை உருண்டதாம்.
அதில் பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், இன்னொரு மாணவர் தீவிர சிகிச்சை
அளித்தும் பயனின்றி இறந்தார். படுகாயமடைந்த 7 மாணவர்களில் இருவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக
திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது, அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நினைவுகள்
வரும்போதெல்லாம் ‘அந்த பாலாப்போன ‘ பைக்’ காரன் குறுக்கே வந்துட்டானே, 20 வருசமா ஓட்டுறேனே எந்த ஆக்ஸிடெண்டும் ஆனதில்லையே
என்று புலம்புகிறதை பார்க்க பரிதாபமாக உள்ளது.
ஆட்டோவில் பயணம் செய்த மாணவர்கள் கூறியதாவது - நாங்கள் இந்த ஆட்டோவில்தான் மூன்று வருடமாக பள்ளிக்கூடம் சென்று வருகிறோம்.
ஆட்டோ மாமா மிகவும் நல்லவர் , வேகமாகத்தான் ஓட்டுவார் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. சில நேரம் முன்னால் போகிற கார்,
பைக்’குகளை ஒவர்டேக் செய்து எங்களுக்கு வேடிக்கை காட்டுவார் , நாங்களும் ஜாலியாக வருவோம். இன்றும் வேகமாகத்தான் வந்தார், வேடிக்கை
எல்லாம் காட்டவில்லை. எதிரே பைக் வந்ததை பார்த்தோம் ஆனால் எப்படி ஆட்டோ கவிழ்ந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.
விபத்துக்குள்ளான ஆட்டோவில் மொத்தம் 13 சிறுவர்கள் பயணம் செய்தனராம், அனைவரும் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவர்களே!
அதில் 4 பேர்கள் காயமேதுமின்றி அதிசயமாக தப்பினராம். முன்பக்கமாக ஆட்டோ ஓட்டுநருடன் வலபக்கத்தில் 2 மாணவரும் இடது பக்கத்தில் ஒரு
மாணவரும் நின்றுக்கொண்டு பயணம் செய்திருக்கின்றனர் – அதில் ஒரு மாணவர் இறந்து விட்டார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை – இந்த விபத்தினால் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.
------------------------------------
மேலே கண்ட செய்திகள் உண்மையில் நடந்தவை அல்ல. ஆனால், அதை போன்றோ அல்லது அதைவிட கொடூரமாகவோ விபத்துகள் விரைவில்
ஏற்படுவதற்குண்டான வாய்ப்புகள் பல இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன – அல்லாஹ்தான் அப்படி ஒன்றும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும்.
பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களின் வரம்பு மீரிய செயல்களை பல இடங்களில் பார்க்கலாம். பதினைந்து சிறுவர்களுக்கு மேல்
ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் ஆட்டோக்கள் பலவற்றை நீங்கள் காணலாம். புளிமூட்டை மாதிரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு
செல்கிறார்கள் சில வேளை (மூச்சு) திணறுதல் கூட அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆட்டோக்களில் இருக்கையில் அமர்ந்து செல்லும் அளவுக்கு 8, 10 சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அளவான வேகத்தில் சென்றால் பரவாயில்லை.
இவர்களோ இருக்கையில் 9 பேர்களும் ( குஷன் சீட்டில் 5 எதிர் பலகையில் 4 ) ஸ்டேன்டிங்கில் 4 பேர்களும் பின் பக்கம் சாமான்கள் வைக்கும்
இடத்தில் 4,5 பேர்களுமாக 17 அல்லது 18 சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனர். அவர்கள் ஓட்டிச்செல்லும் வேகத்திற்கு
கட்டுப்பாடு இல்லை – அதிக வேகத்தில் சென்றால்தான் கூடுதலான சவாரிகள் அடிக்க முடியும் என்பதால் அதிக வேகமாக ஓட்டுகின்றனர்.
முன்பு, ஒருசில ஆட்டோக்களில் ஒருசில நேரங்களில் இருந்த நிலைமாறி இப்பொழுது பல ஆட்டோக்களில் பள்ளிக்கூட சிறுவர்களை முன்பக்கமும்
ஏற்றிச்செல்வதை பரவலாக காணலாம். பின்பக்கம் இருக்கும் மாணவர்களோ! கதவின் மேல் உட்கார்ந்து கொண்டும் , தலை, கைகளை வெளியே
நீட்டி விளையாடிக்கொண்டும் செல்வதை மிகுதமாக பார்க்க முடிகிறது. இதையெல்லாம் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் பொருட்படுத்துவதில்லை –
அக்கறையற்ற பெற்றோர்களோ அதை கவனிப்பதுமில்லை, கண்டிப்பதுமில்லை – தன் பிள்ளைகள் பிணமாக வந்தாலும் அதைப்பற்றிக் கவலைக்
கொள்வதாக தெரியவில்லை.
இன்று பொறுப்பற்ற பெற்றோர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது – பொறுப்போடு நடப்பவர்கள் வெகு சிலரே! உண்மையிலேயே
பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு அக்கறை இருக்குமானால் ஆட்டோக்களை தவிர்த்து பள்ளிக்கூட வேன்களிலேயே பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு
அனுப்புவர். பள்ளிக்கூட வேனில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வர். அப்படி ஒருவேளை பள்ளிக்கூட
வாகனத்தில் இடம் இல்லையெனில் பிள்ளைகள் மீது அக்கறையுள்ள பெற்றோர் எப்படியும் பள்ளிக்கூட நிர்வாகத்துடன் போராடி மாற்று ஏற்பாடுகளை
பள்ளிக்கூடத்திலேயே செய்வர் ஆட்டோவோ பிற வாகனமோ தேவைப்படாது.
சில இடங்களில் பெற்றோர்களே பள்ளிக்கூட வாகனங்களை தவிர்க்கின்றனர் – காரணம் பள்ளிக்கூட வாகனம் என்றால் குறித்த நேரத்திற்கு
பள்ளிக்கூடம் அனுப்ப பிள்ளைகளை தயார் பண்ண வேண்டுமே! 20 செகண்ட் கூட பள்ளிக்கூட வாகனம் காத்திருக்காதே! தவறினால் வேறு
வாகனத்தில்தான் அனுப்ப வேண்டும் அல்லது அன்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப இயலாது போய்விடுமே என்று.
ஆனால் ஆட்டோ அல்லது தனியார் வாகனம் என்றால் 2,3 நிமிடங்கள் காத்திருப்பார்கள், மேலும் தாமதமானாலும் அடுத்த பிள்ளைகளை
ஏற்றிக்கொண்டு வந்தபிறகு, நம்ம பிள்ளையை ஏற்றிக்கொண்டு போவார் என்ற எண்ணத்தில் ஆட்டோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இப்படி செய்யும் பெற்றோர்கள் பல தவறுகள் உண்டாவதற்கு தாங்களே மறைமுகமாக ஊக்கமளிக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை.
மேலும் ஆட்டோக்காரர்கள் அதிக வேகமாக ஓட்டுவதற்கு பிள்ளைகள் தாமதமாக வருவதும் ஒரு காரணமே! – குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா
பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டுமே! என்பதால், வேகமாக ஓட்டவேண்டிய சூழல் உருவாகிறது.
எது எப்படியோ, பிள்ளைகளை வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களிலேயே படிக்க வைக்கலாம். பிள்ளைகள் குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில்தான்
படிக்க வேண்டும் என்ற அளவிற்கு எந்த பள்ளிக்கூடமும் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றவில்லை என்பது மட்டுமல்லாது, சில பள்ளிக்கூடங்கள்
மார்க்கத்திற்கு மாற்றமான செயல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
ஒருவேளை உங்களுடைய மனதுபடி குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க விரும்பினால் அதற்காக அக்கறை எடுத்து முன்கூட்டியே பள்ளிக்கூட
வாகனத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் – அப்படி அந்த வாகனத்தில் குறித்த நேரத்திற்குள் ரெடியாகி செல்வதால் உங்கள் பிள்ளைகள் நேரத்தை சரியாக
கடைபிடிப்பார்கள். வேனுக்காக (பிறருக்காக) நாம் காத்திருக்கனும் , நமக்காக வேன் ( பிறர் ) காத்திருக்கக் கூடாது என்ற நல்ல ஒழுக்கத்தையும் ,
நேரம் தவறாமையையும் கடைபிடித்து முன்னேற்றம் காணுவார்கள்.
ஏதோ காரணங்களால் உங்கள் பிள்ளையை பள்ளிக்கூட வாகனத்தில் அனுப்ப இயலவில்லை என்றால் வெளிவாகனமோ, ஆட்டோவோ எதில் ஏற்பாடு
செய்தாலும் – அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச்செல்லாத , முறையாக ஓட்டக்கூடியவர்கள் ஓட்டக்கூடிய வாகனங்களை ஏற்பாடு
செய்யவும். மேலும் நேரத்திற்கு ,நேரம் உங்கள் பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். முறையாக
ஓட்டுகிறார்களா ?, அளவான குழந்தைகளை ஏற்றிச்செல்கிறார்களா ? சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் போய் சேர்கிறதா ? என்பதையெல்லாம்
கவனிக்க வேண்டும்.
ஓட்டுநர் நமக்கு பழக்கப்பட்டவர்தானே! 3 வருடமாக அவருடைய ஆட்டோவில்தானே நம் பிள்ளை பள்ளிக்கூடத்திற்கு போய்வருகிறது, இதுவரை எந்த
ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லையே என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கக் கூடாது – இப்படி அசட்டையாக இருந்து ஒரு வேளை ஏதும் விபத்து
அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகளே!
விபத்தும், அசம்பாவிதமும் முற்கூட்டியே சொல்லிக்கொண்டு வருவதில்லை – ஏதோ ஒரு நேரத்தில் திடீரென்று ஏற்படும். எனவே நாம் கவனமாக
இருந்தால் பாதிப்பு ஏற்படாது – கவனக்குறைவாக இருந்தால் பாதிக்கப்படுவது நம் குழந்தைகளே!
இயற்கையாக ஏற்படக்கூடிய விபத்துகளுக்கு நாம் பொறுப்பு அல்ல – அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவது அதை நாம் நினைத்தாலும் தடுக்க
முடியாது. ஆனால் நாம் நம் குழந்தைகள் மீது மிகவும் அக்கறை செலுத்தி அவர்களை கவனித்தோமானால் இயற்கையாக ஏற்படும் விபத்திலுமிருந்தும்
நம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இறைவன் காப்பாற்றுவான்.
இந்த கட்டுரையை எழுத காரணம் கடந்த சில வாரங்களாக ஆட்டோக்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பரிதாப நிலையை அடியேன் கண்டதே!
மிகவும் ஆபத்திற்கு உரித்தான வகையிலேதான் ஆட்டோ ஓட்டுநர்களின் செயல்பாடுகள் இருக்கிறது.
ஒருமுறை என் கண்ணில்பட்ட காட்சி, ஓர் ஆட்டோவின் பின் சீட்டில் சில மாணவர்கள் இருந்தார்கள், ஆனால் ஒரு சிறுவன் மட்டும் ஓட்டுநருக்கு
அருகில் நின்று கொண்டிருக்க, ஓட்டுநர் ஆட்டோவை இயக்கினார், அவரை நிறுத்தி , முன்பக்கமாக பையனை நிறுத்திக்கொண்டு ஆட்டோவை
ஓட்டாதீர்கள் என்றேன். உடனே அவர் , இந்த பையனையா ? என்றார் ( ஏதோ அந்த பையன் என் சொந்தக்காரன் என்பது போல்) இவன் என்று
இல்லை, எந்த பிள்ளையையும் முன் பக்கம் வைக்காதீர்கள் என்றேன், அவர் “சரி” என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு, அந்த பையனை பின் சீட்டுக்கு
மாற்றாமல் முன் பக்கம் நின்ற நிலையிலேயே ஓட்டிச்சென்றார் – இத்தனைக்கும் அப்போது, பின் சீட்டில் அதிக குழந்தைகள் இல்லை.
இன்னொரு சம்பவம் பலமுறை கண்ணில்பட்டது, குழந்தைகள் ஆட்டோவில் ஏறியவுடன், ஓட்டுநர் கதவை அடைப்பதில்லை – கதவை அடைக்காமலே
சிறிது தூரம் (100 மீட்டர்) ஓட்டிச்சென்று மற்றொரு குழந்தையை ஏற்றுகிறார் – அந்த சிறிது தூரம் போகும் வரை அதில் உள்ள குழந்தை கதவை
அடைப்பதற்காக எத்தனித்து கீழே விழப்பார்க்கிறது. இந்த செயல் ஆட்டோ ஓட்டுநரின் பொறுப்பின்மையை பிரதிபலிக்கிறது.
எனவே, இந்த மாதிரி அடாவடித்தனம் பண்ணும், அஜாக்கிறதையாக இருக்கும் நபர்களை என்ன செய்வது – இப்படிப்பட்டவர்களால்தானே! விபத்துகள்
உருவாகிறது. எனவே, பெற்றோர்கள்தான் பிள்ளைகள் மீது அக்கறைக் கொண்டு இவைகளை கவனிக்க வேண்டும்.
நம் ஊரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை பொறுத்தவரை சிலரே பல தவறுகளை செய்கின்றனர் – அந்த சிலரின் செயல்பாடுகள் கண்கானிக்கப்பட்டு
வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்களில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது – காரணம் அதிகமான முறை
ஆட்டோக்களை உபயோகித்து வருகிறேன் – பல பகுதியிலும் உள்ள ஆட்டோக்களில் சவாரி செய்திருக்கிறேன். அந்த நல்லவர்களுக்கு பாதிப்பு
ஏற்படக்கூடாதே! என்பதால் தவறு செய்பவர்களுக்கு தண்டனைக் கிடைக்க தாமதமாகிறது.
அனைத்து ஆட்டோக்காரர்களும் கட்டணம் கூடுதலாகத்தானே வாங்குகிறார்கள் அதனால் எப்படி அதில் பல நல்லவர்கள் இருப்பார்கள் என்று கேட்க
வேண்டாம் – கட்டணம் கூடுதலாக வாங்குவதால் மட்டும் ஒருவர் கெட்டவராகிவிட முடியாது. நல்லவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் - கொள்ளை
அடிக்காமல் நடைமுறையில் உள்ள கட்டணத்தை வாங்குபவர்களை மட்டுமே. இன்ஷா அல்லாஹ்! கட்டணமும் விரைவில் கட்டுப்பாட்டில் வரும்
என்பதை எதிர்பார்க்கலாம்.
முடிவாக, இந்த கட்டுரை சொல்கின்ற எந்த ஒரு விபத்தும் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக. பெற்றோர்கள் முழு ஈடுபாடுடன் தங்கள்
குழந்தைகள் மீது கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ்! காப்பாற்ற வேண்டும் – ஒருவேளை கட்டுரையில் வந்திருப்பது போல் ஏதும் விபத்து ஏற்படுமாயின் ஆட்டோ ஓட்டுநர் மட்டும் அல்ல
பெற்றோர்கள் மீதும் பொது நலவழக்கு போட்டு அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
குறிப்பு: கட்டுரையின் தலைப்பும், ஆரம்ப செய்திகளும் படிக்க மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இன்றையக் கால சூழ்நிலையில்
மக்களுக்கு, “ வரும் முன் காப்போம் “ என்ற செயல்பாடுகள் குறைந்துவிட்டது. அதனால் அவர்களுக்கு சில விசயங்களை மெல்லினமாக எழுதினால்
மனதில் பதியாது. எனவேதான் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். அதன் மூலம் அவர்களின் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்
என்பதற்காக வித்தியாசமாக எழுதி இருக்கிறேன். |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|