“நோய்லெ பாய்லெ கிடக்காம சீக்கிரமாப் போய் சேரணும்” வயதான பின்னர் சில பெரிசுகள் அடிக்கடி இப்படிப் புலம்புவதுண்டு. நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம் எனும் முதுமொழிக்கேற்ப, என்னதான் பில்கேட்ஸ் லெவலுக்கு நம்மிடம் பணம் இருந்த போதிலும் ஆஸ்பத்திரியில் பில்
கட்டாமல் நாம் வாழ்வதுதான் உண்மையான செல்வம்.
ஆரம்பகாலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதன் உணவைத் தேடி அலைந்து வேட்டையாடியபோது மிருகங்களால் ஏற்பட்ட காயங்கள்,
மரக்கிளைகளில் இருந்து விழுந்து கை, கால் எலும்பு முறிந்து ஏற்பட்ட காயங்கள், வண்டுகள், புழுக்கள், பூச்சிகள் பாம்புகள் ஆகியவற்றின்
தீண்டுதலால் நோய்க்கு ஆளானது - இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவத்தை நாடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அன்று அவனுக்கு சுலபமாகக்
கிடைத்த மரப்பட்டைகள், பச்சிலைகள், மூலிகைகள், மண் ஆகியவற்றால் மருந்துகளைத் தயாரித்து தனக்குத் தானே மருத்துவம் செய்யும்
அறிவையும் பெற்றுக் கொண்டான்.
காலப்போக்கில் அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும், அனுபவங்களையும் பெற்று மருத்துவம் செய்ய தனித்துவம் பெற்று வைத்தியர்கள் எனும்
பெயரில் பல மருத்துவர்கள் உருவாகினார்கள். அரண்மனை வைத்தியர்கள், குருகுல வைத்தியர்கள், கானகத்தில் வாழும் சித்தர்கள் இப்படி பல்வேறு
தகுதிகளைப் பெற்று மருத்துவ உலகம் தனது எல்லையை விரிவு படுத்தத் துவங்கிற்று.
இதில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயூர்வேத
மருத்துவம், யூனானி மருத்துவம், சீன மருத்துவம் என பல வழிமுறைகளில் மருத்துவ சிகிச்சைகள் கையாளப்பட்டு வந்தது. இன்று மருத்துவ
உலகம் சொல்ல முடியாத அளவிற்கு அபார வளர்ச்சியையும், நவீன முறைகளையும் தன்னுள் புகுத்தி, தனது சாம்ராஜ்ஜியத்தை வான் எல்லையைத்
தொடும் அளவிற்கு உயர்த்தியுள்ளது பெருமைக்குரியதே!
அந்தப்புரத்தில் தம் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்த மகாராணி திடீரென தலை சுற்றி மயக்கமடைந்து விழ, பதறியடித்துக் கொண்டு சபை
என்றும் பாராமல் உள்ளே நுழைந்து,
“மன்னா...! தங்கள் பத்தினி மயங்கி விழுந்துவிட்டார்கள்!!”
என செவிலியப் பெண்கள் மன்னனிடம் கூற,
“யார் அங்கே...? அரண்மனை வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள்!”
என மன்னன் கட்டளை பிறப்பிக்க, அந்தப்புரத்திற்குள் சென்ற வைத்தியர் மகாரணியின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணித்து,
“மன்னாதி மன்னா! உமது மடியில் தவழ இந்த சோழ நாட்டிற்கு ஒரு வாரிசு வரப்போகிறது...”
எனும் நற்செய்தியைக் கூறி, மன்னரின் முத்துமாலையைத் தட்டிச் செல்லும் எத்தனை கதைகளை நாம் படித்திருக்கின்றோம்? ஆக, அரசனானாலும்,
ஆண்டியானாலும் மருத்துவர்கள் ஒரு மரப்பெட்டியைச் சுமந்து கொண்டு நோய்வாய்ப்பட்டவன் வீட்டிற்குச் சென்று வைத்தியம் செய்வதுதான் வழக்கமாக
இருந்து வந்தது.
இதில் நமதூர் மட்டும் விதிவிலக்கா எனில் இல்லை எனலாம். எனக்கு நினைவு தெரிந்த காலங்களில், குதிரை வண்டியிலிருந்து முன்னேறி நமதூரில்
சைக்கிள் ரிக்ஷா ஓடிய காலம். கண்ணைப் பறிக்கும் கலரில் வண்ண வண்ண இருக்கைகள்... உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி...
சிறுவர்களுக்கான மடக்கு இருக்கை... பின்னால் ஜன்னல்... சுற்றிலும் திரை... கதவுகளுக்குப் பகரமாக வெறும் தடுப்புக் கம்பிகள்... அழுத்தும்
கால் பெடலுக்கு கீழே தொங்கவிடப்பட்ட பெல்லில் நரம்புக் கயிற்றை இழுத்து ‘நங்... நங்’ என்று ஒலியெழுப்பிக் கொண்டு ஊரில் வலம் வந்து
கொண்டிருந்த சைக்கிள் ரிக்ஷா காலகட்டம் அது.
அன்று நமதூரில் மருத்துவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருந்தனர். மதிப்பிற்குரிய அரசு மருத்துவர் டாக்டர் ஜானகி அம்மாவை
மறக்க இயலாது. மருத்துவம் என்பது மகத்தான சேவை என்பதை உணர்ந்து பணியாற்றிய தியாகி அவர். செந்நிறத்தில் பிரேம் போட்ட பெரிய மூக்குக்
கண்ணாடி, ஷிஃபான் சேலைக்கு மேல் போட்ட வெள்ளை நிறக் கோட்டு, வீட்டில் சதா குரைத்துக் கொண்டிருக்கும் வெள்ளை வெளேரன்ற நாய்க்குட்டி,
சிவன் கோவில் தெருவில் முதல் வீட்டில் வசித்து வந்த ஜானகி அம்மாளுக்கு திருமணம் ஆன புதிது. இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து
இன்முகத்தோடு வைத்தியம் பார்க்கும் அழகே தனி!
நள்ளிரவில் ஏற்படும் சுகக்குறைவுக்கு ஒரு பெண்மணி துணைக்கு வந்தால் மட்டும் போதும்! ரிக்ஷாவில் பத்தே நிமிடத்தில் நமது வீட்டு வாசலில்
வந்திறங்கும் கடமை உணர்வு மிக்கவர். வந்ததும் இனாமல் பாத்திரத்தில் வெந்நீர் போடச் சொல்லி கண்ணாடி சிரிஞ்சுகளை அதில் கொதிக்க வைத்து,
ஸ்டீல் இடுக்கியால் அவற்றை எடுத்து சுத்தம் செய்து, பாட்டிலில் உள்ள மருந்தை உறிந்து எடுத்து, சுகக்குறைவானவரிடம் குசலம் விசாரித்துக்
கொண்டே இடுப்பில் இதமாக சொறுகி “ஆங்... எல்லாம் சரியாகி விட்டது! இனி கவலைப்பட வேண்டாம்...” என ஆறுதல் சொல்லி, தான் கொண்டு
வந்த சதுர வடிவிலான தோல் பேக்கை எடுத்துக் கொண்டு, கொடுப்பதை மட்டும் ஃபீஸாகப் (திறந்து பார்ப்பது கூட கிடையாது) பெற்றுக் கொண்டு
செல்லும் அந்த மகத்துவமிக்க மருத்துவ சேவகியை நான் இன்றும் நினைவு கூர்கின்றேன்.
இந்த வரிசையில் நமதூரில் பல நல்ல குணம் கொண்ட மருத்துவர்களும் இடம் பெறுவார்கள். அன்று நாம் அழைத்தவுடன் அவசரத்திற்கு ஓடி வந்த
அன்புள்ளம் கொண்ட மருத்துவ மாணிக்கங்களில் சிலர் வயது முதிர்ந்த நிலையில், இறையருளால் இன்றும் நம்முடன் இருக்கத்தான்
செய்கின்றார்கள்.
இது அன்றைய காட்சி. கொஞ்சம் வருடங்கள் நகர்ந்தன. காலச்சக்கரத்தின் கடும் வேகத்திற்கேற்ப மனித மனங்களிலும் மாற்றங்கள் பல குடியேறத்
துவங்கின. அதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கில்லை என்பது போல, தனது (கிளினிக்) மருத்துவ நிலையத்திற்கு அருகிலேயே ஒருவர் மயங்கி
விழ, ஓடோடிச் சென்று பொதுமக்கள் டாக்டரை அழைக்க,
“அவரை எடுத்துக் கொண்டு இங்கே வாருங்கள்!”
என டாக்டர் அடம் பிடிக்க, ஒரு மாத்திரையை நாவிற்கடியில் வைத்தால் உயிர் பிழைத்திருக்க வேண்டிய அந்த ஜீவன், இத்தகைய பிடிவாத
குணமுள்ள மருத்துவர் வந்து பாராததால் பரிதாபமாக உயிரிழந்த கொடுமையை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். மனசாட்சியுள்ளவராக
இருப்பின், இச்செயல் அந்த மருத்துவரைக் காலமெல்லாம் உறுத்திக்கொண்டே இருக்கும்.
தற்காலத்தில், இரவில் எவருக்காவது சுகவீனம் ஏற்பட்டால் அவசரத்திற்கு நமது இல்லம் வர மருத்துவர்கள் மறுக்கின்றனர். “அங்கே கொண்டு
போங்க... இங்கே கொண்டு போங்க... இல்லை காலையில் கிளினிக்குக்கு கொண்டு வாங்க...” என தட்டிக்கழித்து, செய்வதறியாத குழப்ப
நிலைக்கு தள்ளப்படும் நோயாளிகள் நிலை பரிதாபத்திற்குரியதே! இவர்கள் ஏன் இப்படி வரத் தயங்குகின்றனர்? மருத்துவம் படிக்கும்போதே மகத்தான
மக்கள் சேவையை மனதில் வளர்த்துக்கொள்ளத் தவறியதாலா? அல்லது வியாபார நோக்கில் மருத்துவம் மருவிப்போய் விட்டதாலா?
ஒரு முறை என் இளைய சகோதரி வயிற்று வலியால் துடிதுடிக்க, இரவில் ஒரு மருத்துவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். அந்த மகா
மருத்துவர் டி.வி.யில் சீரியஸாக சீரியல் பார்த்து முடித்துவிட்டுதான் “என்னாச்சு?” என்று கேட்டார். வலியின் கொடுமையால் தளர்ந்து தவித்த என்
சகோதரியின் நிலை கண்டு புழுவாய்த் துடித்தேன். சர்வ சாரதாரணமாக சீரியல் பார்த்துவிட்டு சாவகாசமாய் வந்து மாத்திரை தந்த அந்த மகா
புருஷனை என்னவென்று சொல்ல?
இது ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன் நான் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு, கை - கால் மூட்டுகள் பாதித்தவனாக நமதூருக்கு அருகில்
உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றேன். டோக்கன் எடுத்து வரிசையில் அமர்ந்தேன். சில மணி நேரத்திற்குள் எனது முறை வரவே,
உள்ளே சென்று ஸ்டூலில் அமர்ந்தேன். டாக்டர் என்னை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. தனது கணினியில் ஏதோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் இருப்பு கொள்ளாமல் இருமிக்கொண்டே இருந்தேன். சரி ஏதோ மருத்துவம் சம்பந்தமாக இண்டெர்நெட்டில் பிஸியாக இருப்பார் என எண்ணிய
எனக்கு அடுத்தடுத்த வினாடிகள் அதிர்ச்சியையளித்தன. காரணம், அவர் தான் சொந்தமாக வாங்கப் போகும் கார் பற்றிய விபரங்களை ஆராய்ந்து
கொண்டிருந்தார். அதுவும் வேலை நேரத்தில் நோயாளியை அருகில் வைத்துக் கொண்டு! இப்படி செய்வது எனக்கு எரிச்சலை மூட்டியது.
அட, இதெல்லாம் கூட பரவாயில்லைங்க. சில நேரங்களில் மூச்சு பேச்சற்று மயக்க நிலையில் கிடக்கும் ஒருவரது தொண்டைக் குழியில் உயிர்
மூச்சின் கடைசி சுவாசம் உள்ளதா என பார்த்துச் சொல்லக் கூட இந்த மருத்துவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடு
என தட்டிக் கழிப்பது ஏன்? சட்ட விதிகள் ஏதேனும் தடைக்கற்களாக நிற்கின்றனவா? குற்றவாளியாக்கப்பட்டு விடுவோம் எனும் அச்சத்தின் உச்ச
கட்டமா? இல்லை மரணித்தவர் வீட்டாரிடம் பீஸ் வாங்க சங்கடம் தோன்றுவதாலா? என்னவென்பது புரியாத புதிராகவே உள்ளது. இது குறித்த
ஆதங்கத்தை ஒரு மருத்துவரிடம் கேட்ட்தற்கு, “அட இதற்கெல்லாம் டாக்டர் வந்துதான் கன்ஃபார்ம் பண்ணணுங்கிற அவசியமில்லை. இரண்டு மூன்று
சிம்டம்ஸ் இருக்கு அதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் ஒரு சாதாரண ஆள் கூட பார்த்து உயிர் இருக்கா போயிடுச்சான்னு தெரிஞ்சுக்கல்லாம்” என படு
கேஷுவலாக கூறினார். இவரது கடமை உணர்வையும் ஊருக்கு உழைக்கும் மனபாண்மையையும் என்னவென்று சொல்வது?
அண்மையில் எனது நண்பரது உறவினர் ஒருவர் திடீரென மயக்கமுற்று மூச்சு பேச்சின்றி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த நிலையில் பல
மருத்துவர்களுக்கும் போன் போட்டு அழைத்தபோது வர மறுத்தனர் மருத்துவர்கள். இனி இவர்களிடம் கெஞ்சிப் பலனில்லை என ஆட்டோவை
வரவழைத்து, அவரைச் சுமந்து கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். அங்கு சென்ற சில நிமிடங்களில் அந்த ஆத்மா நிரந்தரமாக
நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டதெனும் அதிர்ச்சித் தகவலை அறிந்து மனம் வெதும்பி வீட்டிற்குத் திரும்ப கொண்டு வந்து, ஆக வேண்டிய
காரியங்களைப் பார்த்தனர். அந்த நிகழ்வு என் மனதில் ஆழ்துளைக் கிணறு போல ஊடுறுவிச் சென்றது. இந்நிகழ்வை என்னால் மறக்கவே
இயலவில்லை. அதன் வேதனையும், தாக்கமும் என்னை வாட்டியெடுத்து வருத்தியதன் விளைவே இக்கட்டுரையின் பிறப்பு எனலாம்.
மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பல கிளினிக்குகள் நவீனமயமாக்கப்பட்டு, அவைகள் வியாபார நோக்குடன் மட்டும் செயல்பட்டு வருவதால்,
நோய்களும் நவீனமயமாகி விதவிதமான மருந்துகள், வினோதமான சிகிச்சை முறைகள் என - பணம் பறிக்கும் பகல் கொள்ளையர்களின் கூடாரமாக
அவைகள் மாறி வருகின்றன. சேவை என்பது வெறும் சொல்லளவில் மட்டும்தான் இவர்களிடம் இருக்கின்றது. மனித நேயம் என்பதெல்லாம் மறந்து
அல்லது மறத்துப்போன ஒன்றாகி விட்டது.
ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் அரங்கேறும் அவலங்களோ சொல்லி மாளாது. கேட்பார் கேள்வி இல்லை என்பதால் நோயாளிகளைக்
கொல்லாமல் கொன்று புதைக்கும் பணப்பறிப்பு எனும் பகல் கொள்ளைதான் பெரும்பாலான மருத்துவர்களிடமும், மருத்துவமனைகளிலும்
காணப்படுகின்றது. பலசரக்குக் கடைகளில் போடும் பில் அளவிற்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தந்து, அதையும் அவர்கள் நடத்தும்
மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி... அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்.
இது இவர்களின் வியாபாரத்தைப் பெருக்கும் நவீன யுக்தி. அப்பாவி பொதுமக்களின் இயலாமையை தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி வயிறு
வளர்க்கும் இதுபோன்ற இரண்டாம் தர மருத்துவர்களை நாம் இனம் கண்டு கொள்வதுடன், இத்தகைய இரக்கமற்ற மருத்துவர்களை ஒரு
தலைவலிக்குக் கூட நாம் நாடாமல் புறக்கணிப்பதோடு இன்னும் விழிப்போடு இருக்க வேண்டும். இத்தகைய மருத்துவர்கள் மக்கள் சேவையில்
மகத்தான பங்கு வகிக்கும் மருத்துவப் படிப்பின் மகிமையை உணராத வரை, மனிதநேயம் என்பது இவர்களுக்கு வெறும் கிள்ளுக்கீரை போன்றதே!
பொதுமக்களின் மனநிலை அறிந்து சேவை அடிப்படையில் தம் வாழ்வின் இலட்சியத்தை வகுத்துக் கொண்டு அதையே வழிநடத்திச் சென்று, அலட்சியப்
போக்கில்லா இலட்சிய மருத்துவர்களாக இவர்கள் திகழ வேண்டும் என்பதே மக்களின் நாட்டம். மனம் திருந்துவார்களா...? இத்தகைய
மருத்துவர்கள்...! |