இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா அண்மையில் சென்னையில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி, முதல்வர், கவர்னர், பக்கத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என முக்கியஸ்தர்கள் நிறைய பேர் கலந்துகொண்டனர். பழைய நடிக-நடிகையர் முதல் இக்கால
நடிக-நடிகையர், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா சம்பந்தப்பட்ட பலரும் அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தியாவுக்கு சினிமா வந்து நூறாண்டுகளுக்கும் மேலாகிறது என்றாலும், முறைப்படியான முதல் இந்திய சினிமா தாதாசாகேப் பால்கே என்பவரால் 1913இல் தயாரிக்கப்பட்டது என்பதால், அதையொட்டி இந்த 2013ஐ “நூற்றாண்டு விழா” என கொண்டாடுகின்றனர். “ராஜா ஹரிச்சந்திரா” என்ற படமே இந்தியாவின் முதல் படம் - அதாவது முதல் சினிமா.
1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாளன்று பாரிஸில் கிராண்ட் கஃபே என்ற இடத்தில் லூமியே சகோதரர்களால் முதன்முதலாகக் காட்டப்பட்ட சலனப்படம் இரண்டே ஆண்டுகளுக்குள் - 1897இல் இந்தியா வந்துவிட்டது. 1897இல் ஆர்தர் ஹேவலக் சென்னை ராஜதானி கவர்னராக இருந்தபோது, 1890இல் கட்டப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில், சென்னையின் அன்றைய மேட்டுக்குடி மக்களுக்காக முதன்முதலில் சினிமா (அதாவது துண்டுப் படங்கள்) திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. (அந்த விக்டோரியா பப்ளிக் ஹாலை - சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கை அடுத்தாற்போல் இன்றும் காணலாம்.) முதன்முதலாக சில அமெரிக்கத் துண்டுப்படங்களே சினிமாவென காண்பிக்கப்பட்டது. “புகைவண்டியின் வருகை” (Arrival of a train) “தொழிற்சாலையை விட்டு” (Leaving the factory) போன்ற சில துண்டுப் படங்கள் அப்போது மக்களுக்கு திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது. சினிமாவுக்கு ஆரம்பத்தில் வேறு வேறு பெயர்கள் புழக்கத்தில் இருந்தன. பயாஸ்கோப், சினி ஃபோட்டோ, கிராப்ஸ், மோட்டுா போட்டோஸ்கோப் என பல பெயர்கள் அதற்கு இருந்தன. என்றாலும் இறுதியில், “சினிமாட்டோகிராஃப்” (Cinemotograph) (சுருக்கச் “சினிமா”) என்ற பெயரே நிலைத்தது.
இயல்பாகவே மேடை நாடகம், தெருக்கூத்து, நாட்டியம், கதாகாலட்சேபம் என்று இயங்குகலைகளில் ஆர்வங்கொண்ட தமிழர்களுக்கு சினிமா பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. சென்னை, சேலம், கோவை போன்ற இடங்களில் சினிமா தயாரிக்கும் ஸ்டூடியோக்களும், திரைப்படக் கொட்டகைகளும் அமைக்கப்பட்டன. மவுனப் படங்களும், துண்டுப் படங்களுமே அப்போது மக்களின் சினிமா ஆர்வத்திற்குத் தீனி போட்டது.
முதல் தமிழ் பேசும்படமான “காளிதாஸ்” 1931இல் திரையிடப்பட்டது. காளிதாஸ் தமிழ் மட்டும் பேசவில்லை. இடையிடையே தெலுங்கும், இந்தியும் பேசியது. புராணக் கதைகளே அதிகமாக தமிழில் சினிமாவாக எடுக்கப்பட்டது. கல்கியின் “தியாக பூமி” அப்போதே ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது.
தியாகராஜ பாகவதர், கின்னப்பா, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விசுவநாததாஸ், செருகளத்தூர் சாமா, டைரக்டர் கே.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என தமிழ் சினிமா மெல்ல மெல்ல தனது பயணத்தைத் துவக்கியது. காங்கிரஸ் பெருந்தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சினிமாவுக்கு பெரும் துணையாக இருந்தார். அதன் பிறகு சினிமாவை திராவிட தலைவர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். பெரியார் தனது வாழ்நாள் இறுதி வரை சினிமாவுக்கு எதிராகவே இருந்தார். அண்ணா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைஞர், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். என ஒரு பெரும் பட்டாளமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தது.
இது சினிமாவின் ஒரு சுருக்கமான வரலாறு. இன்று சினிமா காற்றுவெளியெங்கும் பரவி, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சினிமாவில் இருந்து இன்று ஒருவன் - அவன் விடுபட்டால் கூட - விலகி இருக்க முடியாது. வீட்டின் படுக்கையறையில் இடம் பிடித்துள்ள தொலைக்காட்சி, இரண்டு இன்ச் அளவேயான செல்ஃபோன் குட்டித்திரை இவைகளிலிருந்து தப்பித்து வருவது என்பது இன்று ஒருவனுக்கு சாத்தியமே இல்லை. இவற்றிலிருந்து அதிர்ஷ்டவசமாக ஒருவன் தப்பினாலும், பேருந்து பயணங்களின்போது சினிமாவை ஒருவன் சந்தித்தே தீர வேண்டும். கண்ணையும், காதையும் மூடினால் மட்டுமே இன்று ஒருவன் சினிமாவின் தாக்கத்திலிருந்து தப்பிப் பிழைக்கலாம். ஆனால் அது முடியாத காரியமன்றோ...?
ஊடகங்கள் பெரும்பாலும் இன்று சினிமாவை நம்பியே காலம் தள்ளுகின்றன. சினிமா இல்லையெனில் தொலைக்காட்சியே இல்லை எனும் அளவுக்கு தொலைக்காட்சியை சினிமா ஆட்டிப் படைக்கிறது. அது மட்டுமல்ல! அரசியலையும் சினிமாவே இன்று தீர்மானிக்கிறது. 1967இல் அண்ணா முதல்வரானதிலிருந்து எடுத்துக்கொண்டால், இடையில் ஓ.பன்னீர் செல்வம் தவிர - கடந்த 45 ஆண்டுகளாக தமிழக முதல்வர்கள் அனைவரும் சினிமா தொடர்பானவர்களே. உலகின் மற்ற பகுதியினருக்கு சினிமா ஒரு புதிய சாதனம். கலைவடிவம், கேளிக்கை. தமிழனுக்கோ அது சிறிதளவு கேளிக்கை பெருமளவு வாழ்க்கை. சினிமாவால் நன்மையா, தீமையா? என்ற பட்டிமன்ற வழக்குகள் பழங்கதையாகிவிட்டன.
சினிமாவின் இன்றியமையாத் தன்மையை இன்று எவருமே கேள்விக்கு உட்படுத்துவதில்லை. நல்ல சினிமா, கெட்ட சினிமா, பொழுதுபோக்கு சினிமா, சீரியல் சினிமா என வகைப்படுத்தலாமேயன்றி, “சினிமா” என்ற ஒன்றின் இருப்பை இன்று எவரும் மறுக்க முடியாது.
“தணிக்கையின்றி இரண்டு சினிமா எடுக்க என்னை அனுமதித்தால், உடனே திராவிட நாடு வாங்கித் தருவேன்” என்றார் அண்ணா. சினிமாவைத் துணையாகக் கொண்டு ஆட்சியையே பிடித்தார் எம்.ஜி.ஆர். இன்று சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல. அது ஒரு தொழில். கோடிகள் புரளும் கார்ப்பரேட்கள் இன்று அதில் முதலீடு செய்கிறார்கள். மக்களின் பொதுக் கருத்தை இன்று சினிமாவே உருவாக்குகிறது. ஆதரவு, எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என இன்று எல்லாமே சினிமாவை மையமிட்டே சுழல்கின்றன.
நமக்கு சினிமா பிடிக்கும் அல்லது பிடிக்காது. அது ஹராம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட நிலைப்பாடு. எனக்கும் கூட அவ்வளவாக சினிமா பார்க்கப் பிடிக்காதுதான். ஆனால், அதற்காக “சினிமாவே நமக்குத் தேவையில்லை” என்று நான் நினைத்தால், அது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வதைப் போலத்தான். கிட்டத்தட்ட இன்று தமிழ் முஸ்லிம் சமூகமும் இதுபோன்ற ஒரு இருட்டு உலகில்தான் குருட்டாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையின் தொனிப்பொருளே இதுபற்றிக் கொஞ்சம் பேசுவதுதான்! ஏனெனில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளின் பிடியில் சிக்கி ஏற்கனவே நிறைய பலன்களை முஸ்லிம்கள் இழந்திருக்கிறார்கள்.
>> ஆங்கிலேயன் மீதுள்ள வெறுப்பில், “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்ற அக்கால முஸ்லிம்களின் பிடிவாதத்தால் இன்று வரை முஸ்லிம்கள் இழந்தது மிக அதிகம்! கல்வியில் முஸ்லிம்கள் பின்தங்கிப் போக இது தலையாய காரணமாக அமைந்தது.
>> அரசு வேலைக்குப் போனால், அதிகாரிகளுக்கு அடிமையாக இருக்க நேரிடும் என்ற நம்மவர்களின் மனோபாவம் நமக்கு அளித்த நன்மை என்ன? எந்தவொரு உயர்பொறுப்பிலும் இன்று முஸ்லிம்கள் இல்லை. இப்படியாக காலத்தோடு இயைந்து போகாமல் - காலத்தை எதிர்த்து எதிர்நீச்சல் அடிப்பதால் ஆகப்போவதென்ன...? எதுவுமில்லை.
சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த காட்சி ஊடகம். இது காட்சி ஊடகங்களின் காலம். நாம் பேசும் எந்தவொரு கருத்தும் நிமிட நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்து விடுகிறது. இவ்வளவு சக்திவாய்ந்த ஊடகத்தை முறையாகப் பயன்படுத்தாமல், “ஹராம்” என ஒதுக்கித் தள்ளுவதில் என்ன அறிவுடைமை இருக்கிறது...?
சினிமா ஒருபோதும் ஹராமல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமானால் ஹராமாக இருக்கலாம். அதை நாம் மாற்ற முயல வேண்டும்.
நமது உயிரினும் மேலான நபிகளாரை இழிவு செய்யும் “இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” (Innocense of Muslims) படத்தைத் திரையிடுவதை எதிர்த்து நாம் போராடலாம். போராட வேண்டும். போராடினோம். வெற்றியும் கிடைத்தது.
ஆனால், முஸ்லிம்களை தவறாக விமர்சிக்கும் அல்லது சித்தரிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எதிராக நாம் ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்க முடியாது. அது நம்மை நிதானமற்றவர்கள், எதிர்க்கருத்தைத் தாங்கக் கூடிய பக்குவமற்றவர்கள் என்ற அவப்பெயருக்குத்தான் சொந்தக்காரர்கள் ஆக்கும். இப்போதே கூட பிற சமூகத்தவர்களுக்கு நம்மைக் குறித்து இதுபோன்ற எண்ணம்தான் இருக்கிறது. நடிகர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாலும், தியேட்டர் மீது கல் வீசுவதாலும் பிரச்சினை தீர்ந்துவிடுமா...? சிந்திக்க வேண்டும்.
ஒரு கருத்தை இன்னொரு கரத்தால்தான் வெல்ல முடியும். நீண்டகால நோக்கில் பார்த்தால், இதுவே பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் படைத்தது. சினிமா தேனா்றிய காலந்தொட்டு, இன்றைய ஆர்யா, சூர்யா காலம் வரை தமிழ்த்திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தவறாகவே சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் யார்? அவர்களின் வாழ்வியல் நெறி என்ன? வாழ்க்கை முறை என்ன? என்பன குறித்து அறியாதவர்களே சினிமா உலகில் இருக்கிறார்கள்.
இதற்கு நாமும் ஒரு காரணம். நாம் பெரும்பாலும் ஒரு மூடுண்ட சமூகமாகவே இன்று வரை இருந்து வருகிறோம். நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நமது வாழ்வு முறைமைகள் குறித்து பிற சமூகத்தவர்களுக்கு அதிகம் தெரியாது. முஸ்லிம்கள் என்றால் கைலி கட்டுபவர்கள், பிரியாணி சாப்பிடுபவர்கள் என்பது போன்ற சித்திரம்தான் பலரது மனங்களிலும் வலுவாகப் பதிவாகியுள்ளது. நமது வாழ்க்கை முறை குறித்து தெரிய வரும்போதே, நம்மைப் பற்றிய தவறான சித்தரிப்புகள் பலவும் அடியற்ற மரம்போல் சாய்ந்து விடும்.
சினிமாவைக் குறித்து நமது கடந்தகால கண்ணோட்டங்களை நாம் புறந்தள்ள வேண்டும். இதற்கு நமது பக்கத்து மாநிலமான கேரளத்தவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேரளாவில் வசிக்கும் முஸ்லிம்களின் வாழ்வியலை வெகு நுட்பமாகச் சித்தரிக்கும் பல திரைக்காவியங்கள் மலையாள மொழியில் அவ்வப்போது வெளிவருகின்றன. மலையாள மொழி இலக்கியமும் முஸ்லிம் மக்களின் வாழ்வோட்டத்தை மிக அழகான - வசீகரிக்கும் மொழியில் எடுத்துரைக்கின்றன.
பிரேம் நசீர், மம்முட்டி, மாமுக்கோயா, கொச்சின் ஹனீபா, டைரக்டர் சித்தீக் லால் போன்ற முஸ்லிம்கள் (இன்னும் பெயர் தெரியாத நிறைய பேர்) மலையாள திரைத் துறையில் பணியாற்றி வருகிறார்கள். சென்ற வருடம் அங்கு எடுக்கப்பட்ட “ஆதமின்டே மகன் அபு” ஹஜ்ஜுக்குச் செல்ல பொருளாதார வழி தேடும் ஓர் ஏழை முஸ்லிம் கணவன் - மனைவி பற்றிய படம். துளி ஆபாசமும் அதில் இல்லை. படம் சக்கை போடு போட்டது. மாநில அரசின் விருதையும், மத்திய அரசின் விருதையும் அது பெற்றது. இதுபோன்று, மத்திய கிழக்கு (அரபு) நாடுகளில் வீட்டுப் பணிக்குச் செல்லும் பெண்கள் குறித்த மனப்பதிவு ”கத்தாமா” (வேலைக்காரி) படம் மூலம் வெளிப்பட்டது. மலையாளத்தில் இயல்பான கமர்ஷியல் சினிமாக்களே கூட முஸ்லிம்களின் வாழ்வு குறித்து மிக இயல்பாகத்தான் சித்தரிக்கிறது.
எனவேதான் தமிழ்நாட்டில் முடக்கப்பட்ட “விஸ்வரூபம்” கேரளாவில் வெகு இயல்பாக ஓடியது. காரணம், அது அவர்களுக்குச் சம்பந்தமில்லாத இன்னொரு (தமிழ்) மொழியில் இருப்பதால் மட்டுமல்ல! அதற்கு பதில் சொல்லும் வகையில் அவர்களால் இன்னொரு படம் தயாரிக்க முடியும் என்ற மன தைரியத்திலும்தான்! கமலஹாசன் போன்றோர் அங்கு போய் தீ மூட்ட முடியாது.
கன்னடம், தெலுங்கு சினிமா குறித்த விபரங்கள் அதிகம் எனக்குத் தெரியாது. எனவே அவற்றை இங்கே தவிர்ப்போம்.
உலக அளவில் இன்று இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டு திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. உலக அளவிலான பல திரை விருதுகளை அவை சர்வசாதாரணமாகப் பெற்று வருகின்றன.
ஈரானியப் படங்களின் இயல்பான கதை சொல்லல் முறை, யதார்த்தத்தை மீறாத காட்சியமைப்பு, தெளிவான திரைக்கதை, அளவான இசை, மிகை நடிப்பை நாம் எங்கேயும் பார்க்க முடியாது. உச்சபட்ச மனிதாபிமானத்தை அவற்றில் நாம் பார்க்கலாம். யதார்த்தத்தை ஒவ்வோர் அணுவாக விவரித்து, முடிவை இயக்குநரே சொல்லாமல் மக்களிடம் விட்டுவிடுவதை பல ஈரானியப் படங்களில் பார்க்கலாம்.
சக பள்ளி மாணவனுடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து விடுகிறான் ஒரு மாணவன். வீட்டுப் பாடங்களை அவன் செய்ய முடியாமல் நாளை பள்ளியில் அடி வாங்குவானே... என்ற எண்ணத்தில், பக்கத்திலுள்ள அவன் கிராமத்திற்குச் சென்று கொடுக்குமு் கதைதான் - “நண்பனின் வீடு எங்கே?” (Where is my friend’s house). அதுபோல, தங்கையின் காலணிகளைத் தைக்கக் கொடுக்கப் போன இடத்தில் தவற விட்டுவிட்டு, அண்ணனும் - தங்கையும் ஒரே காலணியைப் பயன்படுத்தி புதிய காலணியைப் பெறும் கதையைக் கொண்ட படம்தான் “குழந்தைகளின் சுவர்க்கம்” (Heaven of Children).
உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர்களான மொஹ்ஸின் மக்லூஃப், மஜீத் மஜீதி, ஜாபர் பனாவரி, அப்பாஸ் கியோரஸ்தமி, சையத் ரஸா மீர் கரீமி போன்றோர் ஈரான் மக்களின் வாழ்வியல் சித்திரத்தை இன்று உலகமெங்கும் எடுத்துச் செல்கின்றனர்.
சினிமா பெரும் வீச்சுள்ள சாதனம். பொய்யும், புனைச்சுருட்டும், இட்டுக்கட்டுதலும் இரண்டறக் கலந்துள்ள இவ்வுலகில் நாம், நம்மை சரியான காலத்திலும், சரியான அளவிலும் வெளிப்படுத்தாவிடில் நஷ்டம் நமக்குத்தான்.
எந்த விஞஞான சாதனமும் இஸ்லாமுக்கு எதிரானதல்ல - சினிமா கருவிகள் உட்பட. இன்று இந்திய சினிமாவில் - குறிப்பாக தமிழ் சினிமாவில் வன்முறையும், ஆபாசமும், பெண் சீண்டலும் அளவு கடந்து காட்சிகளாக வைக்கப்படுகின்றன. குடும்பத்தோடு இன்று ஒரு தமிழ்ப்படத்தை யாராலும் மனக்கூச்சமின்றி பார்க்க முடியாது. இத்துனைக்கிடையிலும், “பேராண்மை”, “இயற்கை”, “ஈ”, “சாட்டை”, “தங்க மீன்கள்” போன்ற நல்ல படங்களும் தவறாமல் வெளிவரத்தான் செய்கின்றன. இதில், “அங்காடித் தெரு”வையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மைப் பற்றிய பிறரின் தவறான புரிதல்களுக்கு நாம் நம்மை வெளிப்படுத்தாததே இதற்குக் காரணம். தமிழக முஸ்லிம்களின் வாழ்வியலைச் சித்தரிக்க எத்தனையோ களங்கள் உண்டு. மேலப்பாளையம் பீடி சுற்றும் பெண்களின் வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது. அதுபோல, பத்தமடை பாய் சுற்றும் பெண்கள், வெற்றிலைக் கொடிக்காலில் வேலை செய்யும் பெண்கள், மீன்பிடித் தொழிலில் தங்களது கணவனுக்கு உதவியாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர முஸ்லிம் பெண்கள், அரசு பயங்கரவாதத்தால் சீரழிந்த குடும்பத்தினரின் வேதனைக் கதைகள், ..........இப்படி எவ்வளவோ இருக்கின்றன.
காலாகாலமாக, தமிழ் முஸ்லிம்களை திரைப்படங்கள் உண்மையாக சித்தரிக்கவில்லை. கட்டம் போட்ட கைலியும், சில்க் ஜிப்பாவும், துருக்கி தொப்பியும் அணிந்து, “நம்பள்கி... நிம்பள்கி” என்று பேசித் திரியும் ஈட்டிக்காரனை்தான் இவர்கள் பார்வையில் முஸ்லிம்! இதுபோன்ற ஒரு நிஜ முஸ்லிமை இன்று தமிழ்நாடெங்கும் சல்லடை போட்டு சலித்தாலும் கிடைக்க மாட்டான். காரணம், முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக திரைத்துறையைப் புறக்கணித்த நிலை இன்று ஓரளவுக்கு மாறியிருக்கிறது. நாசர், இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் சினிமாவில் உள்ளனர் என்றபோதிலும், நிறைய கம்யூனிகேஷன் படித்த இளைஞர்கள் இத்துறையில் ஆர்வங்காட்டி, சினிமாவைக் கைவசப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒரு காலத்தில் தொலைக்காட்சி ஹராம் என்றவர்கள், அதன் பயன்பாடு தெரிய வந்ததும் தினந்தினம் அதில் உரையாற்ற ஆரம்பித்துவிட்டனர். “எல்லாத் துறைகளிலும், வாழ்வின் எல்லா பக்கங்களிலும் முஸ்லிம்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டார்களா...? சினிமாவைப் போய் பெரிதாகப் பேச வந்துவிட்டாயே...?” என்று சிலர் கேட்கலாம். அது நியாயமான கேள்வியும் கூட.
ஆர்ப்பரித்துச் சீறி ஓடும் வெள்ளத்தில் தத்தளிப்பவனின் நோக்கம் ஆபத்தின்றி கரை சேர்வதுதான். அதற்காக, நீரில் மிதந்து வரும் ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொள்ளக் கூடாது என்று யாராவது சொல்வார்களா...?
-சொல்பவர்கள் குறித்து நாம் என்ன எண்ணுவோம்...?
-----------------------------------------------------------------------------
துணை நின்ற நூற்கள், இதழ்கள்:-
(1) “எம் தமிழர் செய்த படம்” - தியோடர் பாஸ்கரன், உண்மை பதிப்பகம், சென்னை
(2) “பேசும் பொற்சித்திரம்” - அம்ஷன் குமார், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
(3) “ஈரானிய சினிமா” - ப.திருநாவுக்கரசு, நிழல்கள் வெளியீடு, சென்னை
(4) “சமநிலைச் சமுதாயம்” - ஜனவரி 2011 இதழ்
|