இணையதள இணைபிரியாத வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வரலாற்றை நாம் பாதுகாத்தால்தான் நமது பாரம்பரிய பெருமையை நாம் அறிய முடியும். நாம் எகிப்திலிருந்து வந்தோம் என்றும் சொல்லிக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது. இந்த காயல் நகரை எகிப்தில் உள்ள காஹிர் நகர் மக்கள் எந்தளவு உணர்ந்து இருக்கிறார்கள்?
நமது தமிழகத்தின் அருகாமையிலள்ள பாண்டிச்சேரி ஒருகாலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. இன்று கூட பாண்டிச்சேரியில் பிறந்து பாஸ்போர்ட்டில் பாண்டிச்சேரி பிரதிநிதி என்றாகிவிட்டால் பிரான்சில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் காயல்வாசிகளின் முன்னோர்கள் எகிப்திய மக்களின் வழிவந்து குடியேறியவர்கள் என்ற உணர்வு எகிப்திய மக்களுக்கு உள்ளதா? – நம்மில் யாராவது அதை எகிப்திய அரசுக்கு எடுத்துரைத்தோமோ? எண்ணிப் பார்க்க வேண்டும்.
வரலாற்றை பாதுகாக்க வேண்டாமா?
நமதூரின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் யார்? நமதூரின் மேன்பாட்டுக்கும், மார்க்க ஞான வளர்ச்சிக்கும் உதவிய ஆலிம்கள் யார்? யார்? அவர்கள் எந்தத் தெருவில் பிறந்தார்கள். அவாக்ள் செய்த மார்க்க சேவை என்ன? என்பதை அறிந்து வைப்பதும் இணையதளம் மூலம் முழு உலகுக்கே எடுத்து வைக்கும்போதுதான் கல்வியின் கண்ணை திறப்பவர்களின் பட்டியலில் இடம் பெறுகிறோம். வரலாற்றை தேடுவதும் ஒருவகை ஆய்வுக் கல்வியாகும். கண்டிப்பாக ஒவ்வொரு மனிதருக்கும், ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அதை காலத்தோடு மங்கி மறைந்து போகாமல் எடுத்து வைப்பது நமது ஊரின் இணையதளங்களின் கடமையாகும்.
இணையதளங்கள் என்ன செய்ய வேண்டும்?
நமதூரின் இணையதளங்கள் செய்திகள் கட்டுரைகளை வெளியிடுகிறது. செய்திகளை மட்டும் வெளியிடும் இரண்டு இணையதளம் உண்டு. செய்தி என்பது படித்ததோடு சரி. கட்டுரை என்பது காலாகாலம் பாதுகாக்க வேண்டியவைகளாக கருதப்பட வேண்டும். ஒரு கட்டுரை ஆசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் பலநூல்களைப் படித்து கட்டுரைகளை தருகிறார். இதுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கற்பனை கட்டுரை சிலகாலத்தில் மங்கி மறைந்து விடும்.
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இரண்டு நபித்தோழர்கள் (ஸஹாபிகள்) எப்போதும் இருப்பார்கள். ஒருவர் அபூஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள். அதிகம் நினைவாற்றல் உள்ளவர்கள். நபிகளாரின் போதனையை மக்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டுபவர்கள். மற்றவர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள். ராவி –நபிகளார் சொன்னதை பதிவு செய்பவர்கள் அன்றைய காலகட்டத்தில் மிருகத்தோலில் அல்லது ஒட்டக எலும்புகளில் எழுதி வைப்பதாகக் கூறுவதுண்டு. நமதூர் இணையதளங்கள் அவர்களின் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரையாளர்களின் கட்டுரைகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மலராக வெளியிடலாம்.
இதனால் கட்டுரையாளர்களின் கருத்து, ஆய்வுநிலை எல்லா மக்களுக்கும் சென்றடையவும் பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், அரசு தனியார் நூலகங்களுக்கு இணையதளம் வெளியிடும் கட்டுரை, மலர்களை அவர்களுக்கு அனுப்பியும் வைக்கலாம். இப்படி செய்யும்போது இணையதளங்களை பார்க்காத மக்களுக்கு இது காலத்தால் பிரயோஜனப்படும். கட்டுரையாளர்களை நம் ஊரும் நாடும் அறிந்து கொள்ள முடியும். இந்த முறையை இணையதளங்கள் பின்பற்றுவார்களா?
முந்தைய பழைய நூல்களை பாதுகாப்பீர்:
நமதூரில் அரபுத் தமிழ்நூல்கள் ஏராளமாக இருந்தது. அரபித்தமிழ் நூல்களைத் தந்த பெருமை நமதூரைச் சாரும். நமதூரின் பழைய காப்பியங்கள், பாமாலைகள் கடல்கடந்த நாட்டைச் சார்ந்த பேரறிஞர் டாக்டர் உவைஸ் அவர்கள் பாதுகாத்து வைத்து அவற்றிலிருந்து பல கட்டுரைகளைத் தந்தார். எம்.ஆர்.எம்.அப்துர்ரஹீம், ஆர்.பி.எம். கனி அவர்கள், காரைக்கால் சாஹிபு மரைக்காயர் போன்றவர்கள் நமதூர் புலவர்களின் நூல்களை தேடி பாதுகாத்து அதன்மூலம் பல தகவல்களை இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் இலக்கிய மாநாடு வரும்போது அங்கு வெளியிட்டு பெருமை தேடிக் கொள்வார்கள்.
நமதூரின் மிகப் பழமையான நூல்களை தேடிப் புதுப்பிக்க வேண்டும். வான்புகழ் காயல்பட்டினம் 1951ல் எழுதிய எம்.கே. செய்யத் அஹமது (தீவுத் தெரு) அவர்கள் தேடிய இஸ்லாமிய நூட்கள் அவர்கள் மறைவுக்குப் பின் என்ன ஆனது? முஸ்லிம் லீக் முத்துகாக்கா தேடிய பழைய நமதூர் நூல்கள் எங்கே போனது? நன்மார்க்க பதிப்பகம் மூலம் சிறு நூல்களை வெளியிட்ட கே.டி.எம். தெரு ஹஸன் காதிரி அவர்கள் நூல் என்ன ஆயிற்று? பாவலர் அப்பா பாவலர் யூசுப் அவர்கள் தேடிய அரிய நூல்கள், கவிஞர் S.M.B. மஹ்மூது ஹூ ஸைன், M.L. சாகுல் ஹமீது(S.K.) ஆகியோர்கள் தேடிய நூல்கள் அவர்களின் மறைவுக்குப் பின் எங்கே போனது?நாம் இப்படியே எதையும் காணாமல் இருந்தால் அந்த அரிய காப்பியங்கள், பாமாலைகள், அரபுத்தமிழ் நூல்கள்,முனாஜாத்துகள் தேடி வைக்காவிட்டால் பழைய பேப்பர் கடைக்குப் போய் வீணாகிவிடும் என்பதை ஊர் மக்கள் அனைவரும் உணர வேண்டும். அத்துடன் நம்ம ஊர் செல்வந்தர்கள் ஆர்வம் காட்டி ஓர் இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். நமது பழைய நூல்களை இணையதளத்தில் ஏற்றி வைக்கலாம். இதுவும் ஓர் கல்வி பயணம்தான். கூடவே பயனள்ள காரியமாக இருக்கும்.
நமதூரில் இன்று வாழக்கூடிய L.S. இப்றாஹீம் காக்கா ஓர் இலக்கியப் பிரியர். அவர்களிடம் மூட்டை மூட்டையாக நமதூர் பழைய நூல் இருக்கலாம். அவர்கள் மக்கள் யாரும் இலக்கியப் பரியர்களாக இருப்பது போல தெரியவில்லை. அவற்றை ஓர் இலக்கிய அமைப்பு ஏற்படுத்தி பணம் கொடுத்து வாங்கி நூலின் பெயர், நூலாசிரியர்கள் காலம், அதன் நடைகள் குறித்து இணையதளத்தில் பதிவு செய்து வைக்கப்பட வேண்டும். இதுபோல் காயல்பட்டணம் வரலாறு தமிழில், ஆங்கிலத்தில் எழுதிய R.S.. அப்துல் லத்தீப் அவர்களிடம் எந்த நூல்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு இணையதளத்தில் ஏற்றும் முயற்சி செய்யலாம். சாமுசிஹாபுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் பாமாலை அனைத்தும் மார்க்க அமைப்புக்கு உட்பட்டது. அவைகளை மீண்டும் புதுப்பித்து வெளியிடலாம். தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கம் முயற்சியில் ஈடுபட செல்வந்தர்கள் முன்வரவேண்டும்.
காசீம்புலவர் அவர்களின் திருப்புகழ் பாடலை கூட தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இதுவரை கொண்டுவரும் முயற்சியை ஏன் எடுக்கவில்லை.? சீறாபுராணம் எழுதிய உமறுப்புலவர் மட்டும்தான் முஸ்லிம் புலவர்கள் வரிசையில் வைத்துள்ளார்கள். நியாயம்தானா? தமிழகம்எங்கும் குறிப்பாக காயல்பட்டினத்தில் அனேக புலவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் நூல்களை முதலில் தேடிவைப்போம். அதன்பின் பாடநூலில் ஏற்றும் முயற்சியை மேற்கொள்வோம்.
அப்துல் ஹை ஆலிம் அவர்களின் கல்விப் பயணம்:
காயல்பட்டினத்தில் ஆங்கிலக் கல்வி கற்கக்கூடாது என்று கூக்குரல் போட்ட காலத்தில் உலமாக்களை எதிர்த்து போராடிய ஒருவர் 17-2-1898 ல் காயல்நகரில் பிறந்தார்கள். இலங்கையில் படித்தார்கள். ஆங்கில அறிவும், தமிழ் ஞானமும் பெற்றவர்கள். இலங்கை கண்டி மற்றும் காலிப்பகுதியில் இலங்கைவாழ் காயல் நகர மக்களுக்காக தமிழ் ஆங்கில சிங்கள பள்ளியை சிலகாலம் நடத்தினார்கள். ஊருக்குவந்தார்கள். 15-01-1927ல் காஹிரா பாடசாலையை சித்தன் தெரு ஸிகஸ்டம்ஸ் சாலை சந்திக்கும் இடத்தில் ஆலிம்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அப்துல்ஹை ஆலிம் அவர்கள் துவங்கினார்கள். இப்பள்ளியில் தமிழ், ஆங்கில மொழி தவிர குர்ஆன் காலை மாலை ஓதும் மத்ரஸாவையும் இணைத்தே இருந்தார்கள். பல ஹாபிழ்களையும், உருவாக்கினார்கள்.
இடவசதி குறைவின்காரணமாக 1932ல் மஹ்லறா வடபகுதி தோட்டத்தில் சிலகாலம் காஹிரா பள்ளியை அங்கு நடத்தினார்கள். இலங்கை வாழ்காயல்வாசிகளிடம் நிதிஉதவி பெற்று 1933ல் கருத்தம்பி மரைக்காயர் தெருவில் (இன்று ஐ.ஐ.எம். நூலகம் இயங்கும் பகுதியில்) விசாலமாக காஹிரா பாடசாலையை ஆரம்பித்தார்கள். திறமையாக குர்ஆன் ஓதிக் கொடுத்து பெருமை தேடினார்கள். இந்தப் பள்ளியில் அன்று 85 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் பணி செய்தார்கள். தனது காஹிரா பாடசாலையின் முன்பகுதியில் தந்தையின் பெயரால் நூஹிய்யா நூலகத்தையும் மகள் பெயரில் ஹவ்வா வாசகசாலையையும் கூடவே துவங்கி தமிழ், ஆங்கில நாளேடு வார மாத இதழ்களை காயல்நகர் மக்கள் படித்து மகிழ அறிமுகம் செய்தார்கள். ஊரிலுள்ள அனைவர்களும் உலகைப் புரிந்து கொள்ள நூஹிய்யா நூலகம் மூலம் நல்ல நூல்களை படிக்கத் தூண்டினார்கள். காலப்போக்கில் குடும்ப நெருக்கடியால் பணப்பற்றாக்குறையால் 1944ல் L.K. லெப்பைத் தம்பி அவர்களிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தார்கள்.
அதன்பின் சிலகாலம் அப்பபாபள்ளித் தெரு தனது வீட்டிலும் சிலகாலம் காஹிரா பள்ளி இருந்த பழைய இடத்திலும் குர்ஆன் மட்டும் ஓதிக்கொடுக்கும் இடமாக மாற்றி கொண்டார். அப்துல் ஹை ஆலிம் அவர்கள் 31-07-1984 ல் வபாத் (மரணம்) ஆனார்கள். L.K. லெப்பைத் தம்பி அவர்கள் 1901 ஜனவரி 26ல் பிறந்தார்கள். இலங்கை எஹிலியா கொடையில் ஆரம்ப கல்வி கற்று சென்னை வந்து முத்தியாலு பேட்டை உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். முதல் மெட்ரிக் படித்த காயல் மாணவர் என்ற சிறப்பை டு.மு. லெப்பைத் தம்பி என்ற L.K. மாமா பெற்றார்கள். தனது தொழிலில் சம்பாதித்த பணத்தை L.K. பள்ளிக்கே செலவழித்தார்கள். இவர்கள் வபாத் 16-01-1983 ஞாயிறுமாலை 5 மணி L.K. மாமா ஜனநாயக சபை என்ற ஊர்கட்சியின் தலைவர் ஆவார்கள்.
வடபகுதியில் முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பம்:
காயல்நகரின் வடபகுதியில் அந்தக் காலத்தில் மக்கள் சேவா சங்கம் என்ற ஊர் கட்சியின் கோட்டையாக இருந்தது. அங்கே உள்ள மாணவர்கள் கிழக்குப் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு படிக்க வர மாட்டார்கள். வடபகுதி மக்களுக்காக முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டதே அதற்கு காரணம் ஆகும். 1933ல் பெரிய ஜும்ஆப் பள்ளி வளாகத்தின் எதிர்புறம் மறைந்த பெரியவர்களான வெ. முகம்மது முகைதீன் அவர்கள் சி.மு.க. சேகு முஹம்மது அவர்கள் கோமான் தெரு அம்பலம் அஹ்மது ஹசன் அவர்கள் போன்றோரின் முயற்சியால் முஸ்லிம் மகாஜன சார்பில் முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பமானது. இதுவே காலபோக்கில் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியாக சதுக்கைத் தெருவில் இயங்க ஆரம்பித்தது. வடபகுதியின் ஊர் கட்சியின் பெயர் மக்கள் சேவா சங்கம். இதன் தலைவர் M.K.T. முஹம்மதுஅபூபக்கர் அவர்கள் ஆவார்கள்.
ஆதார நூல்கள்:
1. முத்துச்சுடர் ஜனவரி 1985ல் பாவலர் யூசுப் அவர்கள் எழுதிய காயல் பெரியவர்களுக்கு புகழ் மாலை 9 (கவி வரியிலிருந்து) அப்துல் ஹை ஆலிம் குறித்து தகவல் சேர்த்தேன்.
2. L.K. அப்பா சிறப்பு மலர் (சென்னை இலட்டு மாத இதழ் 15-02-83)
குறிப்பு: 1927 ல் தங்கத்தின் விலை 10 கிராம் ரூபாய் 18.
1932-33 ல் 10 கிராம் தங்கம் விலை 30 ரூபாய்.
1944 ல் 10 கிராம் தங்கத்தின் விலை 62 ரூபாய்.
(ராணி வார இதழில் இருந்து சென்னை பாலம் கையேடு 1994ல்)
|