கடற்கரையில், நான் சார்ந்த குருவித்துறைப் பள்ளி மஹல்லாவுக்குச் சொந்தமான தொழுமிடத்தில் நான் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.
ஒருநாள் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, தொழுமிடத்தை விட்டும் வெளியேறிய தருணத்தில் திடீரென ஒருவர் என்னிடம் வந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். அவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள காயலர் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
“அஸ்ஸலாமு அலைக்கும்...”
“வ அலைக்குமுஸ்ஸலாம்...”
“நீங்க எஸ்.கே.ஸாலிஹ்தானே...?”
“ஆமா...”
“காயல்பட்டணம்.காமில் உங்கள் செய்திகளை நாள்தோறும் தவறாமல் படித்து வருபவன் நான்... கருத்துக்கள் கூட எழுதியிருக்கிறேன்...” என்று கூறி தன் பெயரைக் கூறினார்.
“ஓ... அது நீங்கதானா...? உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!! இப்போ விடுமுறையில் வந்திருக்கிறீங்களோ...?”
“இல்லையில்லை... ஸஊதி வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டேன்... இன்ஷாஅல்லாஹ் இனி ஊரில்தான்!”
ஸஊதி உள்ளிட்ட வளைகுடாவுக்குச் செல்வோர், ஒன்று - போன வேகத்தில் பூமராங் போல திரும்பி வருவர். அல்லது வாழ வேண்டிய வயதையெல்லாம் வளைகுடாவிலேயே கழித்துவிட்டு, அடுத்தவர் பணிவிடை தேவைப்படும் காலத்தில் ஊர் வந்து சேர்வர். இதுதான் இந்த ஊரில் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் நடைமுறை. அப்படியிருக்க, நமதூர் கணக்குப் படி இன்னும் 10 ஆண்டுகள் வசிக்க வேண்டிய நிலையில் இவர் ஸஊதியை முடித்துவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னது என்னையுமறியாமல் என் புருவத்தை உயரச் செய்தது.
“ஏன் திடீர்னு...?”
“அல்ஹம்துலில்லாஹ்! ஓரளவுக்கு சம்பாதிச்சாச்சி... அல்லாஹ் தந்த 3 ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தாச்சி... இனியும் அங்கே இருப்பதை விட, ஊரில் எதையாவது செய்துகொண்டு, பொதுக் காரியங்களிலும் ஈடுபடலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். அல்லாஹ் இன்று அதை நிறைவேற்றித் தந்திருக்கின்றான்... இப்ப வந்தாத்தானே ஊரில் நாலு காரியங்களைச் செய்ய முடியும்...?”
திட்டமிட்ட வாழ்வு அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்? நிச்சயம் இவரைக் கொண்டு நமதூருக்குப் பல பயன்பாடுகள் இருக்கும் என்று மனதிற்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். சிறிது நேரம் ஸஊதி கதைகளைக் கேட்க அவர் சொல்லச் சொல்ல அவர் மேலுள்ள மதிப்பீடு கூடிக்கொண்டே சென்றது.
நேரம் தவறாமை, குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கை, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, நன்கு சிந்தித்துணர்ந்த பின் - தான் சரியெனக் கருதும் ஒன்றை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமை... இன்னும் பல குணங்களை அவர் பேச்சின் மூலம் உணர முடிந்தது.
நாட்கள் சென்றன. எமது கடற்கரை நண்பர் வட்டத்திற்குள் அவரும் முழுமையாகத் தன்னை இணைத்துக்கொண்டார். வயது வேறுபாடுகள் எங்கள் குழுவுக்கு ஒரு பொருட்டேயல்ல. 25இல் துவங்கி, 45 வயது வரை உள்ள எம் குழுமத்தினருள் இப்போது 50உம் ஒட்டிக்கொண்டுள்ளது, அவ்வளவுதான்.
பொதுவாழ்வில் ஆர்வப்பட்டுள்ள இவரைச் சும்மா விட இயலுமா? ஊரின் - நான் சார்ந்த பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று, அவரையும் - அவரது எண்ணத்தையும் அறிமுகப்படுத்தினேன். விளைவு...? அடுத்த சில நாட்களில் நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பழைப்பாளராக அவர் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்தபோது அவர் இக்ராஃவின் மக்கள் தொடர்பாளரானார். இன்னபிற அமைப்புகளுக்கும் தனது உடலுழைப்பையும், ஆலோசனைகளையும், நன்கொடைகளையும் தன்னாலியன்ற அளவுக்கு வழங்கினார். இப்படியாக 2 ஆண்டுகள் வரை காலம் கடந்தது.
ஒருநாள் கடற்கரையில் அமர்ந்தபோது, “துஆ செய்ங்க... ஒரு மெடிக்கல் ஷாப் ஆரம்பிக்கலாம்னு நெனச்சிருக்கேன்... கொடிமர பள்ளி காம்ப்ளக்ஸ்-ல என் தம்பி கடை வைத்திருந்த இடத்தில் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கிறேன்...” என்றார்.
இவர் சற்று மாறுபட்டு எதையாவது செய்தால் நன்றாக இருக்குமே என மனதளவில் எண்ணினாலும், ஆவலுடன் அவர் கூறியதைக் கேட்டதும், “அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான்” என்று சொல்லாமல் இருக்க இயலவில்லை.
இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயல்பான வாழ்க்கை ஆகியவற்றில் எமக்குள்ள ஈடுபாடு காரணமாக, எங்கள் கடற்கரை அரட்டைகள் பெரும்பாலும் அவை சார்ந்தவையாகவே இருக்கும். அப்படியிருக்க, 2013 அக்டோபர் மாதத்தில் ஒருநாள், நண்பர் சாளை பஷீர் அவர்கள் சென்னையிலிருந்துகொண்டு தொலைதொடர்பு வழியே எனக்கொரு தகவலைத் தந்தார்.
“ஸாலீ... திண்டுக்கல் பக்கத்தில் வானகம் என்று ஒரு இடம் இருக்குதாம்... அங்கு நம்மாழ்வார் என்ற ஒரு முனிவர் இருக்கிறாராம்... இயற்கை விவசாயம், வேதிப்பொருட்கள் கலக்காத உணவு முறை, இயல்பான வாழ்க்கை நெறி ஆகியவற்றை வாழ்ந்தே காட்டுகிறாராம்... மாதம் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறதாம்... போகலாமா?”
“போகலாம் காக்கா... இன்னும் யாரும் ஆர்வப்பட்டாலும் இணைத்துக்கொள்கிறேன்... குறைந்தது 5 பேராவது போவோம்...” சிறிதும் தயக்கப்படாமல் உடனடியாக மறுமொழி பகர்ந்தேன் நான்.
அப்போது கடற்கரையில் என்னுடன் இந்த 50 வயது நண்பரும் (மாமா), ‘மெகா’ நூஹ் காக்காவும் இருந்தனர். கிடைத்த தகவலைக் கூறினேன். இருவருமே உடனடியாக சம்மதிப்பர் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. 3 நாட்கள் பயிற்சியையும் முடித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.
அதன் பிறகு, நண்பர் சாளை பஷீரின் ஆலோசனைகளையும் பெற்று, “கம்பங்கூழும், கரட்டு மேடும்” என்ற தலைப்பில் - பாகம் 1, பாகம் 2 என இரு பாகங்களாக கட்டுரை எழுதினேன். காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் அதுவே எனது முதல் கட்டுரை. அதற்கு முன் நான் பெரிதாக எதிலும் எழுதியதில்லை. (உணர்வு வார இதழில் ஒளி அச்சுக்கோர்வையாளராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் (DTP Operator, Page Layout Designer) பணியாற்றிய 2000ஆம் ஆண்டில் சில துணுக்குச் செய்திகள் மட்டும் நான் எழுத வெளியிடப்பட்டுள்ளது.)
இந்த 3 நாட்கள் முகாம், நாங்கள் ஊர் திரும்பிய பின் எங்கள் வாழ்வியலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தின. அன்றாடப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்களைச் செய்தோம்... அவற்றுக்கான பயன்களையும் கண் முன் அனுபவித்தோம். இந்நிலையில், எனது கட்டுரைகளை வாசித்த நமதூரின் சில நண்பர்கள், வானகத்தில் நம்மாழ்வார் அய்யாவின் அடுத்த முகாம் நடத்தப்படவுள்ள அறிவிப்பு வெளியானதும், அதில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்தனர். நானும் வர வேண்டும் என பலர் அழுத்திக் கேட்டுக்கொண்டதால் உடன் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். இவ்வாறிருக்க, டிசம்பர் மாதம் 31ஆம் நாளன்று 23.00 மணியளவில் திடீரென எனக்கு செய்தி கிடைக்கிறது நம்மாழ்வார் அய்யா இறந்துவிட்டார் என்று. நான் அதிர்ச்சியிலிருந்து மீள சிறிது அவகாசம் பிடித்தது. இதற்கடையே, ஏதோ அதை என் குடும்பத்து மரணம் போலக் கருதி, பலர் எனக்கு ஆறுதல் தெரிவித்து தொலைதொடர்பு வழியே பேசினர். அதன் பிறகு சில வெளியூர் பயணங்களால், மாலை நேர கடற்கரை அமர்வில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
நாட்கள் சென்றன... என் 50 வயது நண்பரும், நானும் வழமை போல மீண்டும் சந்தித்துக் கொண்டோம் கடற்கரையில். யார் அவர் என்பதை எனது முந்தைய கட்டுரையை உணர்ந்து படித்தவர்கள், இக்கட்டுரையின் துவக்கத்திலேயே அறிந்திருப்பர். அவர் வேறு யாருமல்ல! இதே காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் அடிக்கடி அடிக்கோடிட்டு அழகிய கருத்துக்களை - குறிப்பாக மாணவர்கள் பற்றிய செய்திகளின் கீழ் அதிக ஆர்வத்துடன் கருத்துப் பதிவு செய்யும் என்.எஸ்.இ.மஹ்மூது என்ற என்.எஸ்.இ. மாமாதான்.
“ஸாலி பாய்! துஆ செய்யுங்க... கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டன... மருந்துகளை அடுக்கி வைப்பதற்கேற்ப தட்டுகள் எல்லாம் செய்துவிட்டேன்... ஒரு நாளைக்கு வந்து பாருங்களேன்...”
மாமா மீது எனக்குள்ள நீங்காத அன்பின் காரணமாக அவர்களது அழைப்பை என்னால் தவிர்க்க இயலவில்லை.
“வர்றேன் மாமா! ஆனா...”
“என்னங்க...? சும்மா சொல்லுங்க...”
“ஏன் மாமா... ஊர்ல ஆங்கில மருந்துக் கடைக்கா பஞ்சம்...?”
என்னைப் பொருத்த வரை, நான் ஒன்றும் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவனல்ல. மாறாக, எந்த மருத்துவம் எப்போது தேவையோ அப்போதுதான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவன். இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன்.
இந்த ஆங்கில மருந்துகள் பரவலாவதற்கு முன்பு வரை - இருமல், காய்ச்சல், புண், தொண்டை வலி உள்ளிட்ட மேலோட்டமான உடல் நலக் குறைவுகளுக்கு பாட்டி வைத்தியம்தான் செய்தோம் நாம். அதற்காக நம் யாவர் வீட்டிலும் அஞ்சறைப் பெட்டி இருக்கும். குறிப்பாக, புது மகவு பிறந்த வீடுகளில் அது அவசியம் இருக்கும். வயதில் மூத்தவர்கள் தரும் ஆலோசனைகள் படி, ‘கஞ்சாச்சா’ எனும் உதவியாள் - குழந்தை பெற்ற தாய்க்கு பல மருந்துகளையும் செய்து கொடுப்பார். வீட்டில் யாருக்கு எது என்றாலும் அஞ்சறைப்பெட்டிதான் தீர்வு கொடுக்கும். ஆனால் இன்றோ அது பத்தரிக்கைகளில் வெளியாகும் நாட்டு மருந்துக் குறிப்புகளுக்கு தலைப்பாகத் திகழ்வதோடு தன் பணியை நிறுத்திக் கொண்டுள்ளது.
“காக்கா... கொஞ்சம் இளைப்பா இருக்கு! லேசா தலை வலிக்குது... ஜாயிண்ட் பெய்ன் கொஞ்சம் இருக்கு... ஏதாவது மாத்திரை தாங்களேன்…” என்று கேட்கும் மக்களின் எண்ணிக்கையும், “அப்படியா, இந்த மாத்திரையை டெய்லி சாப்பாட்டுக்குப் பின் மதியம், இரவு என ரெண்டு வேளை போடுங்க” என்று 3 வகை மாத்திரைகளைக் கொடுக்கும் சான்றிதழ் பெறாத மருத்துவர்களின் எண்ணிக்கையும் இங்கே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இப்படியிருக்க, நான் ஆதங்கப்பட்டதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
“அது சரிதான்! ஏன் வேற ஏதோச்சும் யோசனை வச்சிருக்கீங்களா...?” என்.எஸ்.இ. மாமா கேட்டார்.
“யோசனைன்னு என்ன மாமா...? நாமல்லாம் ஒன்னாதானே நம்மாழ்வார் அய்யாவிடம் பாடம் படித்துவிட்டு வந்துள்ளோம்... மற்றவர்களுக்கு வேண்டுமானால், இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கட்டும். நம்மைப் பொருத்த வரை இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்லவா மாமா...?”
இதையே சராசரியான ஒரு மனிதரிடம் நான் கூறியிருந்தால், என்னை அறுத்துக் கிழித்திருப்பார். “இவ்வளவு அவதிகளுக்கிடையில், கடைக்கு இடம் பார்த்து, உள் கட்டமைப்புகளெல்லாம் ஏற்படுத்திய பிறகு, கடையைப் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், இவன் கடையையே மாற்றச் சொல்கிறானே...?” என்று நிச்சயம் நினைத்திருப்பார். இதில்தான் வேறுபடுகிறார் மாமா.
“சரி அப்ப என்ன செய்யலாம்...?
ஏதோ இப்போதுதான் கடை வைக்க எண்ணம் வைத்திருப்பது போல அவர் கேட்டதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை.
“ஏன் மாமா... வேதிப் பொருட்கள் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்கும் ஒரு ஆர்கானிக் உணவுப் பொருளகத்தை ஆரம்பிக்கலாமே மாமா...?”
“அதுவும் சரிதானே என்ன...?”
இப்படிக் கூறிச் சென்றவர்தான். அதன் பிறகு அவரைக் கடற்கரையில் சந்திக்க எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தன. ஏதோ நம் மனதில் பட்டதைச் சொன்னோம்... அவரும் கேட்டுச் சென்றார் என்ற நினைப்பில் நானும் அது பற்றி மறந்தே போய்விட்டேன். இரண்டொரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தார்.
“ஸாலி பாய்! நீங்க சொன்னத நானும் வீட்டில் போயி யோசிச்சேன்... சரின்னு பட்டதால, உடனடியா என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்... ஆர்கானிக் உணவுப் பொருள் விற்கும் கடைகள் சிலவற்றைப் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்...” என்று சொன்னவர், அடுத்த சில நாட்களில் சென்னையிலுள்ள பதினைந்து, பதினாறு கடைகளை - அலைச்சலைப் பொருட்படுத்தாது பார்த்தறிந்து விபரங்களைச் சேகரித்து எடுத்தும் வந்துவிட்டார்.
“மாமா... சிவகாசியில சின்னதா ஒரு கருத்தரங்கம் நடக்குதாம்... நான் போகலாம் என்று இருக்கிறேன்... வர்றீங்களா...?”
“எப்போ போகனும்...?”
அடுத்த நாளே நாங்கள் பயணித்துச் சென்றோம். அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, தேவையான விபரங்களைச் சேகரித்தோம். கருத்தரங்கம் நடைபெற்ற இடமே ஒரு வேதிப்பொருள் கலக்கா உணவுப் பொருளகம்தான். எனவே, கூடுதலாக அதன் விபரங்களையும் பெற்ற பின், சில நாட்டு விதைகளையும் குறைந்த விலை கொடுத்துப் பெற்று வந்தோம்.
நாட்கள் சென்றன. காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி காம்ப்ளக்ஸில் இறையருளால் திறப்பு விழா கண்டது NSE ORGANIC FOOD STORE - NSE இயற்கை உணவுப் பொருளகம்.
முற்றிலும் குளிரூட்டப்பட்டு, ஏதோ அமெரிக்கா, ஃப்ரான்ஸ் போன்ற மேலை நாடுகளில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பார்த்துப் பார்த்து கச்சிதமாக அடுக்கியமைத்துள்ளார் தன் கடையை.
அழிவின் விளிம்பிலிருக்கும் குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, சாமை உள்ளிட்ட சிறுதானிய வகைகள், அரிசி - பருப்பு வகைகள், ப்ளீச் செய்யப்படாத சீனி வகைகள், தேயிலைத்தூள் வகைகள், சீரகம், கடுகு உள்ளிட்ட பொருட்கள், வத்தல் - மல்லி போன்ற மசாலா பொருட்கள், சேமியா வகைகள், இட்லி - சப்பாத்தி மாவு வகைகள், சோப்பு - ஷாம்பு வகைகள், எண்ணெய் வகைகள், சீனி வகைகள், உடனடியாக உட்கொள்ளும் வகையிலான குளிர்பான வகைகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், மகப்பேறு கண்ட மகளிருக்கான உணவுப் பொருட்கள், தின்பண்டப் பொருட்கள்...
மொத்தத்தில், அதிகாலையில் தேனீர், காலையில் பசியாற, மதிய உணவு, மாலை தயாரிப்புகள், இரவுணவு என அனைத்துக்குமே அங்கு உணவுப் பொருட்கள் பட்டியல் உள்ளது.
விட்டால் நானே ஒரு பலசரக்கு கடைக்காரன் போல பட்டியலிட்டுக் கொண்டே இருப்பேன். அத்தனைப் பொருட்களிலும் சிறிதளவு கூட வேதிப்பொருட்கள் கலக்கப்படவில்லை. ஒருவேளை அவர் கவனத்தையும் மீறி ஏதேனும் இருப்பதாகத் தெரிந்துவிட்டாலோ, அப்பொருளுக்கு இலங்கை அரசிடம் விடுதலைப் புலிகள் பட்ட பாடுதான் நிலை.
“ஆர்கானிக்-ன்னு எழுதிட்டா ஆர்கானிக்காயிடுமா...? அது எப்டி கரெக்ட்...டா சொல்ல முடியும்?” சிபிஐ ரேஞ்சுக்கு நம் மனதில் கேள்வியெழும். சமைத்தால் தனீ மணம்... உட்கொண்டால் உயிரோட்டமுள்ள சுவை... இன்னும் என்ன வேண்டும் இவற்றின் தரத்தை நிரூபிக்க? என்றாலும், கடைக்குள்ளேயே சில பொருட்களில் பின்வருமாறு வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது:-
“மாமா... உடன்குடியில ஒரு கடை இருக்காம்... அங்கே செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய் கிடைக்குதாம்... என் தங்கையும் வாங்கி வைத்திருக்கிறாள்... ஒருநாள் இட்லிப் பொடியை நல்லெண்ணெய்யில் குழப்பித் தந்தாள்... இடவசதியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இட்லி உள்ளே போய்க்கொண்டே இருந்தது மாமா... நம்ம கடையில உள்ள எண்ணெய்யை விட விலை குறைவுதான். போய்ப் பார்ப்போமா...?”
“எண்ணெய் செக்குல ஆட்டப்படுவது எல்லாம் சரீ... அந்த எண்ணெய்க்கான எள், கடலை எல்லாம் ரசாயணம் கலக்காமல் பயிரடப்பட்டவைதானா...?”
இதே கேள்வியை என் தங்கையிடம் கேட்டபோது, “அது எப்படி? எல்லாத்தையும் சரிக்கு சரி பார்க்க முடியுமா...?” என மறு கேள்வியே விடையாகக் கிடைத்தது.
“பார்க்கனும்ல...? வேதிப்பொருள் கலந்தது வேண்டாம் என்றால் அது எண்ணெய் ஆவதற்கு முன்பும் அப்படித்தானே இருக்க வேண்டும்...?”
மாமா இவ்வாறு சொல்லவும்,
“மாமா, இத்தனை ஷறுத்து, ஃபர்ளு எல்லாம் பார்ப்பீங்கன்னு தெரியாது... பல்கலைக் கழகத்திற்கு பத்தாங்கிளாஸ் நான் போயி ஆலோசனை சொன்னது தப்புதான் மாமா...”
“அப்டியெல்லாம் இல்லங்க... பொதுமக்களுக்கு புதிதாக ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறோம்... செய்றத ஒழுங்காவும், நம்பகமாவும் செஞ்சாத்தானே சரிவரும்...?”
இது சராசரி வணிகர் ஒருவர் தன் கடைத் திறப்பின்போது திருவாய் மலர்ந்து, வாடிக்கையாளர்கள் நிறைந்த பின் காற்றில் பறக்க விடும் வெற்றுத் தத்துவமல்ல! இவர் கொள்கைப் பிடிப்புள்ள “உரத்தவர்”.
நானும் கடை திறந்த நாள் முதல் பல மாதங்களாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு பொருளாக எடுத்து எடுத்துப் பார்த்து, அவற்றுள் சிலவற்றை தனிக்கூடையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
“மாமா, இவையெல்லாம் என்ன? ஆர்டர் வந்திருக்கா?”
“துஆ செய்ங்க... ஆர்டருக்கெல்லாம் பஞ்சமில்ல... பொருள கொடுத்த பிறகு பெயரைக் கெடுத்துடக் கூடாதே... அதனால, காலாவதி (expiry) நாள் நெருங்கும் பொருட்களையெல்லாம் தனியே எடுத்து வைக்கிறேன்...”
“அதையெல்லாம் என்ன பண்ணுவீங்க மாமா...?”
“எங்க வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவேன்... ஒன்றிரண்டு கூடுதலாக இருந்தால், வாங்குபவர்களிடம், இத்தனாம் தேதிக்குள்ள இதைப் பயன்படுத்தி முடிச்சிருங்கன்னு சொல்லி விற்கிறேன்...
இன்னொன்னு தெரியுமா...? கடைகள்ல வாங்குற அரிசி, பருப்புல வண்டு இருக்கிறதில்லை... இதுல இருக்குது பார்த்தீங்களா...?” என்று ஒரு பருப்பு பாக்கெட்டை எடுத்துக் காண்பித்து அவரே விளக்கமும் அளித்தார். “வண்டு இருந்தா பயப்பட வேண்டியதில்லை... புழுதான் இருக்கக் கூடாது... இந்த வண்டு எல்லாம் வரக்கூடாதுன்னு அதுக்கும் தனியா மருந்து அடிக்கிறாங்க... நம்ம பொருட்கள்ல அப்டி அடிக்கிறதில்லை என்பதால், இந்த வண்டுகள்தான் இதன் நம்பகத்தன்மைக்கு சான்றுகள்! காலாவதியாகும் தேதி முடிவதற்குள்ளேயே சில பொருட்களில் வண்டுகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்... அப்புறம் என்ன? வண்டைப் பார்த்து வாடிக்கையாளர் முகம் சுளித்துவிடக் கூடாதே என்று கருதி, அதையும் என் வீட்டிற்கே எடுத்துச் சென்றுவிடுவேன்... அல்லது என்னை முழுமையாக நம்புபவர்களிடம் விபரம் சொல்லிக் கொடுத்துவிடுவேன்...”
அவர் சொல்லச் சொல்ல உடம்பெல்லாம் புல்லரித்தது. எல்லோரிடமும் - குறிப்பாக இறைவனையும், இறுதி நாளையும் நம்புவோரிடம் இருக்க வேண்டிய இப்பண்புகள் அனைத்தும் மாமாவிடம் முழுமையாக இருப்பதைக் காண முடியும்.
“மாமா... ரெண்டு மாசமா எங்க வீட்ல உங்க ஆர்கானிக் பொருட்கள் மட்டும்தான் சமைக்கப்படுகிறது... இவ்ளோ நாள் மூட்டு வலி என்று அவதிப்பட்ட என் வீட்டு பெரிய மனுஷியெல்லாம் இப்ப நின்று தொழுவுறாங்க...” - இப்படி ஒரு வாடிக்கையாளர்.
“அரிசி 70 ரூபாய் சில்ற என்றதும் அதிர்ச்சியோடுதான் வாங்கிச் சென்றேன் மாமா... ஆனால், சாதாரணமாக கடைகள்ல வாங்குற அரிசி போல இல்ல இது! அது ஒரு குட்டான் போடுறோம்னா, இதுல முக்கால் குட்டான் போட்டாலே போதும் மாமா... அவ்வளவு பொலிப்பமாக இருக்கு...” - இப்படி ஒருவர்.
“இதைச் சாப்பிடத் துவங்கிய பிறகு, என் வீட்டில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வழமைக்கு மாற்றமான அளவுக்கு அது குறைந்திருக்கிறது...” - வேறு சிலர்.
நமதூரில் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவருக்காக (அல்லாஹ் அவர்களுக்கு முழு உடல்நலத்தை வழங்கியருள்வானாக...) அவர்களது குடும்பத்தாரும், இனி ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் பொருட்களை வாங்கிச் செல்வதும் வாடிக்கை.
ஹாங்காங்கிலிருக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரன் கம்பல்பக்ஷ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத். இயற்கை மருத்துவம், எளிய வாழ்வியல் முறையில் தீராத தாகம் கொண்டவன். அதற்காகவே இணையதளங்கள் வாயிலாகவும், பல்வேறு நூற்களின் மூலமும், பல மருத்துவ நிபுணர்களிடம் தொடர்புகொண்டும் - ஏராளமான தகவல்களை மனதில் தேக்கி வைத்துள்ளான். என் வீட்டில் யாருக்குப் பிணி ஏற்பட்டாலும் நான் ஆலோசனை பெறும் முதல்வன் அவன்தான்.
ஆர்கானிக் உணவுப் பிரியனாக இருக்கும் அவன் என்னிடம் சொன்னது:
“கெமிக்கல் கலக்காத உணவு நகர்ப்புறங்களில் மட்டுமே கிடைத்த காரணத்தால், ஆர்வமிருந்தும் வாங்க இயலவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, நமதூரிலேயே அமைந்துள்ள இக்கடை - இறைவனின் மாபெரும் அருட்கொடை என்றே சொல்வேன்... எங்கள் குடும்பத்தில் இப்போது கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆர்கானிக் உணவுகளையே உட்கொள்கிறோம்...”
இதைப்போன்று எத்தனை பேர் ஆர்வமிருந்தும் தகவல் தெரியாமலிருக்கின்றனரோ என்ற எண்ணமும், நம் தூண்டுதலில் நம்மாழ்வார் அய்யாவிடம் பயிற்சி பெறுவதற்காக தனது 3 நாட்களை ஒதுக்கிக் கலந்துகொண்டு, அதன் விளைவாக பெரியளவில் முதலீடு செய்து கடையையும் திறந்துவிட்டாரே என்.எஸ்.இ.மாமா...? அதற்குத் துணை நிற்க வேண்டியது எனது கடமையல்லவா என்ற மகிழ்ச்சி கலந்த எனது ஆதங்கமும்தான் இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியவை.
சாதாரணமாக ஒரு குடும்பத்திற்கு பலசரக்கு சாமான்கள் வாங்க மாதம் 3 ஆயிரம் ரூபாய் செலவாகிறது எனில், இந்த ஆர்கானிக் சாமான்களை வாங்கினால் அது 3 ஆயிரத்து 500 அல்லது 4 ஆயிரம் என்று வரும்தான். ஆனால், அதனால் கிடைக்கப் பெறும் பலன்களோ பலப்பல.
அரிசி உண்மையான அரிசியின் வாசம் மற்றும் சுவையுடன் உள்ளது. பருப்பு உண்மையான பருப்பின் வாசம், சுவையுடன் உள்ளது. சமைக்கும்போதே நல்லதொரு மணம் சுற்றுப்புறத்தையெல்லாம் அழைக்கிறது.
இறையருட்கொண்டு ‘அம்மா’ தரும் இலவச அரிசியை உண்டு வரும் ஒரு சிலருக்கு, மொத்தப் பொருட்களையும் இங்கு வாங்குவது எட்டாக்கனிதான் என்றாலும், நமதூரைப் பொருத்த வரை நடுத்தர மக்கள் நிறைந்துள்ள பகுதி இது. அவர்கள் நினைத்தால் இன்றே தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலும்.
எனக்கும் ஓர் அனுபவம் கிடைத்தது. நம்மால் முடிந்தளவுக்கு பொருட்களை வாங்குவோம் என - சீரகம், கடுகு என சில பொருட்களையும், வத்தல் - மல்லியையும் வாங்கி வந்தோம். அரவை நிலையத்திற்குக் கொண்டு சென்று, நானே காத்திருந்து வத்தல் - மல்லியை அரைத்து வாங்கி வந்தேன்.
வழமை போல மீன் சமையலுக்கு இரண்டு கரண்டி எடுத்துப் போட்டாள் என் மனைவி. மதிய உணவின்போது, ஒவ்வொரு கவள உணவுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. அவ்வளவு காரம். உடனே வந்து மாமாவிடம் கூறினேன்.
“இன்னா லில்லாஹி... நான்தான் உங்களிடம் சொல்லி இருக்கனும், மறந்துட்டேன்... தப்பா நினைச்சிடாதீங்க...
விளைச்சலை அதிகமாக்குறோம்-னு சொல்லி எல்லாப் பயிர்களுக்கும் மருந்துங்கிற பெயரில் விஷத்தைத் தெளிப்பதால், பயிர்கள் விளைகின்றன... மண் மலடாகி வருகிறது... அவற்றின் மூலம் பயிர் செய்யப்பட்ட பொருட்களோ எடையால் அதிகமாக உள்ளனவே தவிர, தரத்தால் மிகவும் மோசம்!
ஆனால், இது ஆர்கானிக் மசாலா. ஒரு வத்தலுக்கு உள்ளபடியே என்ன காரம், வாசனை இருக்க வேண்டுமோ அது அப்படியே இருக்கும்... இப்படித்தான் இங்குள்ள எல்லாப் பொருட்களும்! எனவே, சாதாரணமாக கடைகளில் 1 கிலோ வாங்கும் அதே பொருளை இங்கு முக்கால் கிலோ வாங்கினால் போதும்!! அந்த வகையில், செலவுக் கணக்கும் எல்லாம் சரி சமமாகவோ அல்லது இந்த ஆர்கானிக் உணவுப் பொருட்களின் செலவு குறைவாகவோதான் இருக்கும்” என்றார்.
“உணவே மருந்து” என்பதே நம்மாழ்வார் அய்யாவின் தாரக மந்திரம். அதே அடிப்படையில், இங்குள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் பல நோய்களை - வருமுன் தடுப்பனவாகவும், வந்த பின் குணப்படுத்துவனவாகவும் உள்ளன. மலச்சிக்கல் நீங்க, கொழுப்பு கரைய, தேவையான அளவு கொழுப்பு ஏற, மகளிருக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க, இரத்தச்சோகை நீங்க - அது வராமல் தடுக்க, புற்றுநோய் கட்டுப்பட - அது வருமுன் தடுத்திட என பலவிதமான நோய்களையும் தடுக்கவும் - குணமாக்கவும், பல விதமான உணவுப் பொருட்களே மருந்துகளாக உள்ளன.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, வெறுமனே பொருளைக் கொடுத்தோம்; காசை வாங்கி கல்லாவில் போட்டோம் என்றில்லாமல், ஒவ்வொரு பொருளின் தன்மை, அதன் பயன்கள் என சளைக்காமல் பாடம் நடத்துகிறார் ஆர்கானிக் மாமா. மொத்தத்தில், தான் மருந்துக்கடை துவங்கவிருந்த ஆவலை - இங்குள்ள உணவுப் பொருட்களின் மருத்துவக் குணங்களை விளக்குவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்துகொண்டார் என்றே கூற வேண்டும்.
நம்மாழ்வார் அய்யாவின் முகாமில் பங்கேற்ற பின்னர், “கம்பங்கூழும், கரட்டு மேடும்” கட்டுரை எழுதிய பின், ஹாங்காங்கிலிருந்து என்னைத் தொடர்புகொண்ட என் அன்பு நண்பன் இம்ரான் உஸைர்,
“மச்சான்! இந்தக் காலத்துல யார்கிட்ட சொன்னாலும் இனி உடலை வளச்சி விவசாயமெல்லாம் பண்ணப்போறதில்லே... அதுவும் நம்ம ஊர்ல அதுக்கு சான்ஸே இல்லே... ஆனா, நம்மூர்ல ஒரு ஆர்கானிக் உணவுப் பொருள் கடை திறந்தா நல்ல வரவேற்பு இருக்கும்...” என்றான்.
என்.எஸ்.இ. மாமாவிடம் என் கருத்தை விதைத்து, இன்று இப்படியொரு வணிக நிறுவனம் துவங்க அவனது இந்த வாக்கியம்தான் முதன்மைக் காரணம்.
நம்முடைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்கள், இப்பொறுப்பிற்கு வரும் முன்பு வரை, காயாமொழிக்கு அருகிலுள்ள வள்ளிவிளை எனும் ஒரு கிராமத்திலுள்ள திரு. சக்திகுமார் என்பவரிடமிருந்து - பூச்சிக்கொல்லி விஷம் கலக்காமல் பயிரிடப்பட்ட காய்கறிகளை வரவழைத்து, ஆதாயம் எதிர்பாராமல் அடக்க விலைக்கே விற்று சில ஆண்டுகளாக சேவை செய்து வந்திருக்கிறார். அவரது இந்த ஆர்வத்தைப் பார்த்த திரு. சக்திகுமார், தனதூரிலிருந்து காயல்பட்டினம் வரை அப்பொருட்களைக் கொண்டு வருவதற்கான செலவைக் கழித்துக்கொண்டாராம். இவ்வாறாக விற்கப்பட்ட இந்தக் காய்கறிகளுக்கு எங்கள் சொளுக்கார் தெரு வரை வாடிக்கையாளர்கள் இருந்தனர் என்பதை அந்த வாடிக்கையாளர்களே சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இதுகுறித்து மாமாவிடம் கூறி, “காய்கறி வணிகத்தையும் துவங்கலாமே...?” என்று கூறினேன். “காய்கறிகள் விரைவாக அழுகிவிடக் கூடியவை... துவக்கமாக இப்பொருட்களை நன்கு விற்றுப் பழக்கப்படுத்திக்கொள்கிறேன்... அதற்குப் பிறகு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின், காய்கறிகளையும் விற்கலாம் - இன்ஷாஅல்லாஹ்” என்று கூறியிருக்கிறார் ஆர்கானிக் மாமா.
தோட்டங்களையெல்லாம் அழித்து, வீடுகளைக் கட்டிவிட்டோம்...
தோப்புகளையெல்லாம் விற்றுவிட்டோம்...
குறைந்தபட்சம், இதுபோன்ற பூச்சிக்கொல்லி விஷம் கலக்காத உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்கியேனும் உண்டால் அது இயற்கை விவசாயத்திற்கும், இந்தத் தலைமுறைக்கும் நாம் செய்யும் மிகப்பெரும் சேவை என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
கடை முகவரி:
NSE இயற்கை உணவுப் பொருளகம்
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி அருகில்
ஆறாம்பள்ளித் தெரு – காயல்பட்டினம். தொடர்பு எண்: +91 97863 42923 |