ஆசியா அழகாக இருப்பாள். ஒரு மலர்ப்பந்து போல வீடு முழுவதும் துள்ளி வருவாள்.
“முஸ்தாக் மாமா”ன்னு கூப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டது போலத் தோன்றும்.
சில கவலைகள் இயற்கையின் அழகில் மறைந்து போகும். சில கவலைகள் அன்னையின் அரவணைப்பில் மறைந்து போகும். சில கவலைகள்
அல்லாஹ்வின் நினைப்பில் மறைந்து போகும். ஆனால் ஒரு சில நொடிகளில் ஒரு மனிதனின் “எல்லா”க் கவலைகளும் மழலையின் சிரிப்பில்
கரைந்து போகும்.
ஆசியா - மாஷாஅல்லாஹ் ரியல் எஸ்டேட் செய்யது காக்காவின் தங்கச்சி மகள்.
என் உம்மா தனியாக இருப்பதாலும், ஆசியா வீட்டில் இவளைத் தவிர்த்து அவர்கள் வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஏதுவாகவும், செய்தலி
லாத்தா, அவளை எங்கள் வீட்டில் விட்டுச் செல்வாள்.
வரும்போதே ஒரு பை நிறைய விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டு சாமான்களைக் கொண்டு வருவாள். எங்கள் வீட்டில் உள்ள
விளையாட்டுப் பொருட்களையும் சேர்த்து விளையாடத் தொடங்குவாள். அவள் அழகாக அடுக்கி வைக்கும் பொருட்களைக் குலைத்து சீண்டுவதும்,
அவள் சிணுங்குவதும் எனக்குப் பிடிக்கும்.
“ஆசியா...” உம்மாவின் அழைப்பு கேட்டதும், தன் வீடு செல்ல ஆயத்தமாவாள்.
அவள் விளையாட்டு சாமான்களையெல்லாம் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொருட்களையெல்லாம் அதனதன்
இடத்தில் வைத்துவிட்டு “மாமா, போய்ட்டு வாரேன்” என்று சிரித்துப் பிரிவாள்.
அன்று, முப்பது வயது இளைஞன் மூன்று வயது பெண் பிள்ளையிடம், “எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கும்” ஒழுங்கைக்
கற்றுக்கொண்டான்.
கற்றல் என்பது வெறும் பள்ளிக்கூடம், புத்தகங்கள் சார்ந்த விஷயங்கள் மட்டுமன்று. இவையாவும் கற்றலின் துவக்கமே! நம்மைச் சுற்றி கூர்ந்து
நோக்கும்போது, நோக்கிய விஷயத்தை உள்ளிருத்தி உணரும்போது உண்மையான அறிவை - ஞானத்தைப் பெற முடிகின்றது.
எந்த ஒரு பல்கலைக் கழகமும், தடித்த புத்தகங்களும் சொல்லத் தர முடியாததை, நம்மைக் கடந்து போகும் சாதாரண மனிதர் உணர்த்திவிட்டுப்
போவார். இதை உணர - இதையே போதனையாய் ஏற்றுக்கொள்ளத் தேவைப்படுவது எல்லாம், நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தலும்,
கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வப்படுதலும் மட்டுமே.
ஹாமிதிய்யாவில் படிக்கும்போது, எங்கள் முதல்வர் மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் உரிய நஹ்வி நூருல் ஹக் அவர்கள், ஒவ்வொரு வகுப்பு
துவங்குவதற்கும் முன்பாக நடைபெறும் முதல்வர் உரையின்போது, முன்னங்கால்களைச் சற்று அழுத்தி, குதிகால்களைத் தூக்கி, சற்றே
முன்மடங்கிய ஆட்காட்டி விரலை நீட்டி, “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள்” என்று சொன்ன மந்திர வார்த்தை வாழ்க்கையின் ஒவ்வொரு
கட்டத்திலும் ஒவ்வொரு போட்டியிலும், வாழ்வாதாரம் தேடித் திரிந்த ஒவ்வொரு பயணத்திலும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது;
இருக்கிறது.
ஒரு முறை நம் ஊரின் கலைப் பொக்கிஷம் ஏ.எல்.எஸ். மாமாவுடன் நடந்து செல்லும்போது, நடுரோட்டில் கிடந்த கல்லை அப்புறப்படுத்திவிட்டு,
தொடர்ந்து நடக்கிறார். என் கால்களோ நகர மறுக்கிறது. உள் அவமானத்தில் மனமும், காலும் கனத்துப் போய்விடுகிறது. “எனக்கு ஏன் இது
தோன்றவில்லை...?” கேள்வி கல்வியாய் நெஞ்சில் பதிந்து விடுகிறது.
இன்று வரை நடக்கும்போது திக்ர் செய்துகொண்டே செல்லும் பழக்கம் ஏ.எல்.எஸ். மமாவிடமிருந்து கற்றதுதான்.
“கோபாங்களை உள்ளிருத்தவும், சோகங்களைக் கடந்து போகவும் கற்றுத் தந்தவன் என் நண்பன் ஷேக் தாவூத்.
அண்மையில் என் மனதை மிகவும் ஆக்கிரமித்த பாதிப்பு, முகப்புத்தகத்தில் வாசித்தது:
தன்னை ஒருவன் வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றான்... கொஞ்சமும் பதறாத அந்தக் குழந்தைச் செல்வம்,
“ம்... எங்கே என் பார்ஸ்வேர்டைச் சொல்லு!” என்கிறது. திருடன் திரு... திரு......
எவ்வளவு அடிப்படையான விஷயம், நமக்கு ஏன் தோன்றவில்லை?
மாமியாருக்கு சுகமில்லை. திருச்செந்தூர் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள். அப்படி அவர்கள் சொல்வதே
பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட மரண தேதியை அறிவித்துவிட்ட மாதிரிதான்.
இதோ, கோவாவிலிருந்து சென்னை நோக்கி, ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ ரெயில் நகரத் தொடங்கிவிட்டது. கடந்து செல்லும் இயற்கை அழகு எதுவும்
என் கண்ணில் படாமல் உள்ளிருக்கும் சோகம் தடுக்கிறது. முன்னிருக்கை காலியாகவே இருக்கிறது. ஹுப்ளியில் 55 வயது மதிக்கத்தக்க நபர்
புன்முறுவலுடன் ஸலாம் சொல்லி இணைகிறார். சிறிது அறிமுக மவுனம் தொடர்கிறது. தன் சட்டைப் பையில் தயாராக வைக்கப்பட்டிருந்த பேப்பரை
எடுத்து ஏதோ எழுதுகிறார். நான் அவரைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்கிறேன்.
“தம்பி...” என்ற விளித்தலுடன் என் கையில் தரப்பட்ட அந்தக் காகிதத் துண்டைப் பார்க்கிறேன். அவரது முழுப் பெயர், முதல் அழைப்பு விடுக்கப்பட
வேண்டிய நபர், இரண்டாவது அழைப்பிற்கான நபர், தொடர்புக்கான அலைபேசி எண்கள், கொண்டு வந்த உடமைகள் விபரம் அனைத்தும் அதில்
எழுதப்பட்டிருக்கிறது.
ஆச்சரியமும், ஏன் இது என்ற கேள்வியும் எழ, இரண்டிற்கும் விடை தேடும் கண்கள் கொண்டு அவரைப் பார்க்கிறேன்.
“தம்பி, இந்தப் பயணத்தில் எனக்கு மவுத்து ஏற்பட்டால், நீங்க, இந்தத் துண்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்... என்
ஆடைகள் விலகி இருப்பின் ஒழுங்குபடுத்துங்கள்... தயவுசெய்து என்னையும், இந்த உடமைகளையும் என் உறவினர்கள் வரும் வரைக் காத்திருந்து
ஒப்படைத்து விடுங்கள்... இதற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்குத் தருவான்...”
கொஞ்...சம் யோசித்துப் பாருங்கள்! சப்தங்கள் தொலைத்துவிட்ட, மவுனம் குடிகொண்ட ஏசி அறை... தன் எதிரே மவுத் குறித்த உரையாடல்.
பெரும் கனத்த மவுனம் அந்தப் பெட்டி முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. நீண்ட நேரம் பேச்சே வரவில்லை. வெளியில் இயற்கை அழகாகவும், வெற்று
நிலமாகவும், ஓடையாகவும் கடந்து செல்கிறது.
அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனோ “எனக்கும் மரணம் வரும்; என் முகவரியையும் அவரிடம் கொடுக்க வேண்டும்” என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை இந்தக் கற்றல்
உள் சென்று தங்கி, உணர்ந்து - உணர்ந்ததை நடைமுறைப்படுத்த இன்னொரு பயணம் தேவைப்படலாம். அதுவரை அல்லாஹ் ஹயாத்தை நீளமாக்கி
வைக்கட்டும் - எல்லோருக்கும்!!! |