இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்...
நீங்கள் உங்கள் மேஜையில் இருக்கும் லேப்டாப் மூலம் தட்டச்சு அடித்து, நினைத்த இணையதளங்களுக்கு அனுப்பி விடுவீர்கள். அறிவும், படிப்பும், திறமையும் உங்களிடம் உள்ளது. என்னிடம் எழுதும் திறன் உங்களை விட குறைவுதான். இருந்தபோதிலும் நமதூர் இணையதளத்தில் 42 பொதுக் கட்டுரைகள் எழுதி, 28.12.2013 அன்று ஓர் இணையதளம் மூலம் “எழுத்தாளர்” விருது பெற்றேன். என்னுடன் இன்னும் மூவரும் விருது பெற்றனர். எங்களுக்கு எழுத்துத் திறன் இருக்கப்போய்தானே சிறந்த விருது கிடைத்தது? (அல்ஹம்துலில்லாஹ்!)
எழுதிய கட்டுரைகளை உலகறியச் செய்ய தட்டச்சில் யாரும் அடித்துத் தர முன்வர மாட்டேன் என்கிறார்கள். “உரிய பணம் தருகிறேன்” என்று கூறினாலும், “இரண்டு பக்கங்களுக்குள் தந்தால் அடித்துத் தருகிறேன்” என்று கட்டுப்பாடு போடுகிறார்கள். சிந்தனை ஆற்றை கிணறாக்கி கொடுக்க முடியவில்லை. இந்த இணையதளத்திற்கு கட்டுரை கடைசியாக 6 மாதங்களுக்கு முன் எழுதியதாக ஞாபகம்.
“புல்ஸ்கேப் பேப்பரில் எழுதினால் தட்டச்சில் முக்கால் பக்கம் வரும் எழுத்தில் அச்சடிக்கனும். ஆனால் பூதக்கண்ணாடி எழுத்து மாதிரி அரைப்பக்கம் வீதம் பெரிய எழுத்தில் அச்சடிக்கிறார்கள். எது சொன்னாலும் துரத்திவிடும் பார்வை. வெளியூர்களில் போய் கொடுத்தால், முஸ்லிம்களின் பெயர்கள், அரபி வார்த்தையைத் தட்டச்சு செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை.
நிலைமை இப்படியே போனால் நான் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன். என்னால் சாப்பிடாமல் ஒருநாள் பூராவும் இருக்க முடியும். ஆனால் நினைத்த கட்டுரைகளை தினமும் எழுதி வைக்காமல் என்னால் இருக்கவே முடியாது. எனது எழுத்தாணி 40 வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் இருந்து விழித்து வந்து நள்ளிரவில் உதயமான பல வரிகளை எழுதி வைக்க என ஒரு டைரி வைத்துள்ளேன். அதை தேவைப்படும் காலம் சேர்ப்பேன். எழுதுவேன். யாரையும் தாக்க மாட்டேன். “பேனாதானே மூளையின் நாக்கு?”
ஊரில் அனைத்து இயக்கத் தலைவர்களுடனும், அவர்கள் இயக்க மக்களுடனும் அன்பும், பாசமும் உள்ளவன். எனக்கென்று ஒரு இயக்கம் மனதில் ஒரு இடத்தில் ஒட்டி இருக்கிறேன். நீங்கள் கட்டுரையைப் படித்துப் பாராட்டி, புகழ் வார்த்தை வீசியதால்தான் இந்த அளவு உயர்வு புகழ் ‘விருது’ கிடைத்திருக்கிறது. நீங்கள்தான் அறிவாளி - நான் அந்த அளவுக்கு இல்லீங்க!
நான் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கிறேன். சிறப்பான பாரம்பரியமிக்க வணிகர் குடும்பம்! என் மருமக்கள் படித்த பட்டதாரிகள். டாக்டர் கிஸார் DCH என் மருமகன். இன்னொரு மருமகன் அமெரிக்காவில். மற்றொரு மருமகன் சஊதியில். வேறு மருமகன் பி.ஆர்க். துபையில். பேத்தி இருவர் ஆலிமாக்கள். எனது பொழுதுபோக்கு எழுதுவதும், உருவமற்ற ஓவியம் கற்றுக்கொடுப்பதும். அவ்வளவுதானுங்க. மேடைப் பேச்சு வராது.
பொதுச் சேவையில் சந்தோஷம்.
நான் சென்னையில் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவன். மண்ணடியில் சொந்த வீடு சௌகார்பேட்டை சைனா பஜார் (வளைவில்) வெளிநாட்டுக்கு ஆர்டர் பொருட்கள் ஏற்றுமதி தொழிலா என் தந்தை ஆரம்பித்து வைத்தார்கள். தந்தையும், நல்வணிகர். இலங்கை புறக்கோட்டை சம்மாங்கோட் பள்ளி இருக்கும் வீதியில் 70 வருடக் கடை இருந்தது.
நான் பொதுச்சேவை செய்வதில் ஆர்வம் மிக்கவன். சென்னையில் இருந்தபோது சென்னை முழுதுமுள்ள நகைக்கடைகளில் சேல்ஸ்மேன், கவுண்டர் பாய்ஸ், டேலி அக்கவுண்டன்ட், எடுபிடி சிறுவேலைக்கு நமதூர் பிள்ளைகள் 500க்கும் அதிகம் சேர்த்துள்ளேன். (இதற்காக எந்தப் பிள்ளையிடமும் கமிஷன் பெற்றதில்லை.) எல்லாம் பொதுச்சேவை மனப்பான்மையில்தான். அப்படி நானே பிரியப்பட்டு தேர்ந்தெடுத்துக்கொண்டு பணி செய்தேன்.
சென்னையை விட்டு 2007இல் ஊர் வந்து தங்கினேன். 2004இல் கேரி பேக் ஒழிப்பு இயக்கத்தைத் துவக்கி, நான் எந்தப் பொருளையும் துணிப் பையில் வாங்கிச் செல்வேன். யாரையும் கட்டுப்படுத்த மாட்டேன். அதுபற்றி தனிக்கட்டுரை தருகின்றேன்.
2004இல்தான் உருவமற்ற ஓவியம் கற்றுத் தர என் வீட்டு மாடியில் நேரடி ஓவியப் பயிற்சிப் பள்ளி - விடுமுறைக் காலங்களில் மட்டும் துவக்கி, இரண்டு ஆண்டுகள் இலவசமாக கற்றுத் தந்தேன். 2010 முதல் அருகாமையிலுள்ள பள்ளியில் ஓவிய மாஸ்டர் ஆனேன். (இது தனிக்கட்டுரை மூலம் விவரிக்க வேண்டும்.) எனது பொதுச்சேவையில் என்னைக் கிண்டல் அடிப்பவரை நான் அறிவேன். அதே வேளையில் பாராட்டுபவரை மறந்ததில்லை. இரண்டு வகையான மக்களால்தான் உலகம் ஆளப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்.
நமதூரில் பொதுச் சேவை எப்படி நடக்கிறது?
பொதுச் சேவை நமதூரில் சிறப்பாக நடத்துகிறார்கள். வெளிநாட்டில் கடின வேலை பார்த்து அவர்கள் நிம்மதியாக சம்பாதித்து உறங்காமல், தான் பிறந்த மண்ணுக்கும், அதில் பிறந்த ஏழை - எளியோர், முதியோர், ஊனமுற்றோர், ஏழை விதவைப் பெண்கள் அனைவரின் கல்வி நலன், வைத்திய உதவி, சிறுதொழில் உதவிக்காக தன் பணத்தை ஒதுக்கித் தருவதை மனதாரப் பாராட்டுகிறேன். கல்விக்காக இக்ராஃவைத் துவக்கினார்கள். அதில் நூறு சதம் வெற்றி கண்டதால் படிப்படியாக ஏழை காயல் வாசிகளுக்கு வைத்திய உதவி, வசதியற்ற காயல் வாசிகளுக்கு சிறுதொழில் உதவியும் செய்து வருவது அறிந்து, நான் எனது நண்பர் இக்ராஃ தர்வேஷ் மற்றும் ஷிஃபா ஸிராஜியையும் சந்தித்து, ஊரில் பல ஏழைகளுக்கு உதவி பெற்றுத் தந்து வருகிறேன். எனக்கு இதனால் மன அமைதி ஏற்படுகிறது.
ஊரின் நாலாபக்கமும் - குறிப்பாக காயிதேமில்லத் நகர் முதல் கோமான் தெரு வரை, பெரிய நெசவுத் தெரு முதல் கொச்சியார் தெருவைத் தாண்டியும், சுலைமான் நகர் சுனாமி நகர் முதல் ஜெய்லானி காலனி சீதக்காதி நகர் வரை எல்லா மக்களிடமும் நான் நடந்தே போய் இப்படி ஒரு திட்டம் இருப்பதை அந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கூறுகின்றேன். இதற்காக பலர் பொதுச் சேவையர் இருக்கிறார்கள்.
எனக்கு ஒரு ஆசை. ஊர் முழுக்க ஐநூறு பேருக்காவது வைத்திய உதவி, சிறுதொழில் உதவி (கடன் - வட்டி கிடையாது) கல்வி உதவி வாங்கித் தர ஆவலாக இருக்கிறது. ஏழைப் பெண்கள் என் வீட்டு முகவரிக்கு வரலாம். வசதியற்ற ஆண்கள் தாயிம்பள்ளி முஅத்தின் அலி பாய் அல்லது கே.டி.எம். தெரு ஆயிஷா கடை உஸ்மானிடம் கோரிக்கை மனு தரலாம். அங்கு என்னை சந்திக்க வரலாம். அவர்கள் இருவரும் நான் வரும் நேரம் சொல்வார்கள். தகவல்கள் உண்மையாக இருத்தல் வேண்டும். அல்லது மனு நிராகரிக்கப்படும்.
காயல் வாசிகளுக்கு மட்டும் இதன் விபரங்களை நேரில் சொல்கிறேன். உதவிக்கரமாக உலகம் பூராவும் உழைத்து வாழும் வாலிபர்களுக்கு நீங்கள் துஆ செய்து வாழ்த்துங்கள். நான் அவர்களின் உதவி அமைப்புக்கு உற்ற நண்பன். அவ்வளவுதான்.
காயல் நகர் அல்லாதவர்களுக்கு இத்திட்டத்தில் இடம் உள்ளதா?
காயல் நகரில் பிறந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மற்ற படி வேறு ஒரு வகையில் உள்ளது. நேரில் கேட்கவும். இதுபற்றி விளக்கம் தரப்படும்.
ஒரு சமயம் ஒருவர் தொழிலுக்கு 79 ஆயிரத்து 900 ரூபாய் உதவி கேட்டு மனு ஆபிஸில் கொண்டு கொடுத்தார். இவ்வளவு தொகையெல்லாம் தர மாட்டார்கள் என்று கூறியதால், அடுத்த நாள் பாதிப்பணம் கேட்டு மனு தந்தார். இப்படிப்பட்டவர்கள் மனு நிராகரிக்க வழி உண்டு. (சில தேவை சிறுதொழில் உதவிக்கு மட்டும் பணம் பெற்றுத் தருகிறேன்.)
உலகளாவிய காயல் மன்ற அமைப்பினர்கள் நம்மூரில் படித்த பிள்ளைக்கு அவர்கள் வாழும் நாடுகளில் வேலை வாங்கித் தந்து வழிகாட்டியாகலாம். ஊரில் 65 வயது ஏழை ஆண் பெண்கள் அறிந்து உதவிப்பணம் தரலாம். இத்திட்டத்திற்கு நான் எப்போதும் இலவச சேவை செய்ய விரும்புகிறேன். என்னை இதில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். நன்றி.
|