பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அல்லாஹ்வுக்கு விருப்பமானது இறை இல்லம் என்னும் மஸ்ஜித்களாகும் – அல்லாஹ்வுக்கு வெறுப்பானது கடை வீதியாகும். இதை பலமுறை பல பயான்களிலும் நாம் கேட்டிருப்போம். ஆனால் அல்லாஹ்வுக்கு விருப்பமான இறை இல்லத்தை நாம் அதிகம் நேசிப்பதைவிட அவனுக்கு வெறுப்பான கடை வீதியைத்தான் அதிக விருப்பமாக வைத்திருக்கிறோம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஒரு காலத்தில் இறை இல்லங்களை அலங்கரித்தவர்களாக நமது பெரியோர்கள் இருந்தார்கள். சிறுவர்கள், இளைஞர்கள் எல்லாம் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி மற்றும் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று விடுவார்கள் என்றாலும் பெரியவர்கள், அதிலும் வயது முதிர்ந்தவர்கள் ஓய்வின் காரணமாக ஊரிலேயே தங்கிவிடுவர்.
அவர்கள் அனைவருமே! ( இதிலே ஒருசிலர் விதிவிலக்கு) பள்ளிவாசலுக்கு தொழ வருவதோடு பள்ளியினுள் வெகு நேரமிருந்து குர்ஆன் ஓதிவிட்டு அதன்பின் பொழுது போக்கிற்காக பள்ளியின் வெளி வளாகங்கள், கூடங்களில் அமர்ந்து நண்பர்களுடன் நேரத்தைப் போக்கினார்கள் என்பதைவிட ஊர் மக்களின், மஹல்லாவாசிகளின் பிரச்சனைகளை அலசி , ஆராய்ந்து தீர்த்து வைத்தார்கள் என்றே சொல்லலாம்.
காலம் செல்லச் செல்ல அவைகள் எல்லாம் மறைந்து மறந்தும் போயின. இன்று பெரும்பாலான பெரியோர்கள் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வருவதோடு நிறுத்திக்கொண்டார்கள் – அதன் பின் எந்த தொடர்பும் வைப்பதாக தெரிய வில்லை. அதற்கு அவர்களின் உடல் நிலைக் காரணமாகவும் இருக்கலாம் அல்லது இன்றைய தலை முறையினரின் போக்கை வெறுத்து ஒதுங்கியதாகவும் இருக்கலாம். எது எப்படியோ! பெரியோர்கள் பொதுக்காரியங்களை விட்டு ஒதுங்குவார்களானால் அது மக்களுக்கும், ஊருக்கும் நஷ்டம் என்பதை இன்றைய தலைமுறையினர் உணரவேண்டும்.
முக்கியம் இந்த கட்டுரையின் நோக்கம் என்னவெனில் சமீபத்தில் பெய்த, பெய்து கொண்டிருக்கிற மழையினால் ஊரில் உள்ள மிகுதியான பள்ளிவாசல்களின் வளாகங்களும், கப்ருஸ்தான்களும் மூழ்கி இருக்கின்றன. இதனால் பள்ளிக்கு தொழ வருகிறவர்களுக்கு மிகுந்த இடைஞ்சலாக உள்ளதுடன் கப்ரில் மையித்தை அடக்கவும் இடையூராகவே இருக்கும் என்பதை உணர்த்தவே எழுதுகிறேன்.
இதற்கு மிக, மிக அவசியமாக, அவசரமாக ஓர் தீர்வு உடனே காணவேண்டும். விரைவில் தீர்வு காணாவிடில் இடைஞ்சலும், இடையூறும் மட்டுமல்ல – நோயும், பாவமும் நம் மீது உண்டாகும் என்பதை உணர்த்துகிறேன்.
முன்பு எப்போதும் இல்லாத அளவில் இப்பொழுது மழை பெய்கிறதாவும் அதனால்தான் இவ்வளவு நீர் தேக்கம் என்றும் சொல்லப்படுகிறது. – இது ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். ஏனெனில் எமக்கு தெரிய 1970-களில் இதைவிட மேலாக, தொடராக பலமுறை மழை பெய்ததுண்டு. அப்போதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதுண்டு – அவை பூமியாலும், வெயிலினாலும் சில தினங்களிலே உறிஞ்சப்பட்டுவிடும்.
மேலும் அந்த நீர் பள்ளி வளாகங்களிலோ, கப்ருஸ்தான்களிலோ தேங்கியது இல்லை அல்லது நாள்கணக்கில் தேங்கியது இல்லை. ஏனென்றால் அன்று தெருக்கள், ரோடுகள் எல்லாம் இன்று இருப்பதுபோல் இவ்வளவு உயரமாக இருந்ததில்லை – இன்னும் சொல்லப்போனால் ரோடுகள் பள்ளமாகவும் ரோட்டின் இரு ஓரங்களும் உயரமாகவும் இருந்தது அதன் காரணமாக அனைத்து முடுக்குகளிலிருந்தும் வரும் நீர் ரோடுகள் வழியாக பள்ளமான பகுதியை (கிழக்கு) நோக்கி சென்று கடலில் கலந்தது.
ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கிய நீர் பூமியால் உறிஞ்சப்பட்டும் வெயிலினாலும் இரண்டொரு தினங்களில் நீர் மறைந்து பூமியின் மேல்பகுதி காய்ந்தது.
அது மாத்திரமல்ல அன்று தெருக்கள் சுத்தமாக இருந்தது குப்பைகளை மக்கள் குப்பைத் தொட்டியில் கொட்டினார்கள் – எந்த கழிவுகளும் தெருக்களில் வீசப்படவில்லை. அதனால் மழையின் காரணமாக ஓடும் வெள்ளம் குப்பைக் கூளமின்றி தெளிவாக இருந்ததால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இரண்டொரு நாள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரிலும் கொசுப் பெருக்கம் இல்லை – டெங்கு இல்லை.
மழைநீர் தேங்கிவிட்டால் தவலைகள் அதிகரித்துவிடும் அந்த தவலைகள் கொசுக்கள் இடும் முட்டைகளை தின்று வந்தன – அதன் காரணமாக கொசுவின் இனப்பெருக்கம் இல்லாததால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்பில்லாமல் போயிற்று. ஆனால் இன்று நேர்மாறாக உள்ளது. தவலை இனங்களை காண்பது அரிதாகிவிட்டதால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து டெங்கு காய்ச்சல் மற்றும் பல நோய்களும் பரவுகின்றன.
ரோடுகள் உயர்ந்து இறை இல்ல வளாகங்களும், கப்ருஸ்தான்களும் பனிந்துவிட்டப்படியால் ரோட்டில் ஓடும் மழைநீர் அனைத்தும் குப்பைக் கூளங்களுடன் பள்ளி வளாகத்தினுள் தஞ்சம் புகுந்து விடுகிறது – அதை வெளியேற்ற முடியவில்லை – அல்லது வெளியேற்ற முயலுவதில்லை.
மேலும் தேங்கி நிற்கும் நீரால் கண்டிப்பாக நோய்கள் பரவுகிறது காரணம் நகர் முழுவதும் முழுமையாக குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் , குப்பை வண்டிகள் வரும் வரை காத்திராத மக்கள் குப்பையை ரோட்டிலேயே வீசிவிட்டு செல்வதாலும் அதில் உள்ள மாமிச கழிவுகள் உட்பட அத்தனையும் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டு தேங்குகின்ற நீருடன் நின்றுவிடுகிறது, பல நாட்கள் குப்பைக்கூளங்களுடன் நீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இப்பொழுது அடித்த பெரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர் உயர்ந்து இருப்பதாலும் , வெயில் அதிகம் இல்லை என்பதாலும் நீர் வற்றுவதற்கு வெகுநாட்கள் ஆகும்.
கப்ருஸ்தான்களில் நீர் தேங்கி நிற்கக்கூடாது – மையித்துகளை நீருடன் அடக்கக்கூடாது என்று ஆலிம்கள் நமக்கு எடுத்துச்சொல்கிறார்கள். நீர் தேங்காத இடம் இல்லை என்ற நிலை இருந்தால் மையித்துகளை பாக்ஸ்களில் (பெட்டிகளில்) வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்ற மார்க்கக் கட்டளையை நமக்கு எடுத்து இயம்புகிறார்கள்.
இந்த நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டும் – இப்படி கப்ருகளில் நீர் தேங்கி இருப்பது காரணமாக பெட்டிகளில் மையித்தை வைத்து பெட்டியுடன் அடக்கம் செய்யத் தொடங்கினால் நாளடைவில் இதுவே வழமையாக்கப்பட்டு யூத, கிருஸ்துவ கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.
இந்த நிலை ஏற்படாது என்று எவராலும் உறுதியாக சொல்ல முடியாது – எந்த ஒன்றிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினம். அப்படிப்பட்ட பாவமான கலாச்சாரங்கள் நம்மவர்களிடம் வராமல் இறைவன் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
நம்ம வீட்டுக்கருகில் 2,3 நாட்கள் மழைநீர் தேங்கி நின்றால் நாற்றம், கொசுத் தொல்லையை சகிக்கமுடியாமல் உடனே அதை அப்புறப்படுத்துகிறோமே அதே போல் இறை இல்லங்கள் , கப்ருஸ்தானில் மழையின் காரணமாக இடையூறுகள் ஏற்படாதவண்ணம் பராமரிக்க வேண்டியது நமது
ஜமாஅத்தார்களின் கடமை. இது விசயத்தில் அந்தந்த ஜமாஅத்தை சார்ந்தவர்கள் அக்கறை எடுத்து துரிதமாக செயல்படுவதுதான் நல்லது.
இதற்கு நிரந்தர தீர்வு காண்பது என்பது உடனே முடியாதுதான் , இருந்தாலும் தற்காலிகமாக தடுப்பதற்கு சில வழிமுறைகளை செய்யலாம். பள்ளிவாசல் வளாகங்கள் மற்றும் கப்ருஸ்தான்களுக்குள் நுழையக்கூடிய (GATE)வழிகள் அத்தனையையும் ஹாளோ பிளாக் கற்கள் அல்லது செங்கல் சிமெண்ட் கொண்டு 1 அல்லது 1½ அடிகள் இடத்திற்கு தக்கவாறு உயர்த்தி கட்டிவிட்டால் வெளியிலிருந்து (ரோட்டிலிருந்து) உள்ளே வரக்கூடிய வெள்ளம் தடுக்கப்படும்.
உள்ளே விழுகிற மழையை யாராலும் தடுக்க இயலாது , மேலும் வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வெள்ளம்தான் அதிகமாக இருப்பதுடன் கூளம்குப்பைகளுடன் வந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறதாகவும் இருக்கிறது. எனவே மேற்கூறப்பட்ட பிரகாரம் அனைத்து பாதைகளையும் அடைத்து விட்டால் அல்லது குறைந்தபட்சம் மணல் மூடைகளை கொண்டு அடுக்கி நீர் உள்ளே புகாதவாறு இப்பொழுதே தாமதமில்லாமல் தடுத்துவிட்டால் பாதிப்புகள் பெரிய அளவில் வராது மக்களுக்கும் சிரமங்கள் குறையும். அதன்பின் சாவகாசமாக நிரந்தரமான தீர்வுகளை முயற்சித்து முறைப்படி செய்து கொள்ளலாம்.
இறை இல்ல நிர்வாகத்திலே எந்த ஒரு ஜமாஅத்’தோ , கொள்கையோ விதிவிலக்கல்ல எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கிறோம். யாரும் – எவரும் எங்கள் ஜமாஅத்’திலே சரியாகத்தான் செய்கிறோம் என்று மார்த்தட்டி சொல்ல இயலாத அளவில்தான் இறை இல்லப் பணிகள் நடைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.
இனிமேலும் காலம் தாமதிக்காமல் எப்படியாயினும் நிரந்தரமான தீர்வு கண்டே ஆக வேண்டும். இப்படியே சும்மா இருந்தோமானால் வருடங்கள் செல்ல, செல்ல விபரீதங்கள் அதிகரிக்கும் என்பதை மனதில் நிறுத்தி நிரந்தர தீர்வுக்கு முயற்சி மேற்கொள்வோமாக – அதற்கு வல்ல ரஹ்மான் அருள் செய்வானாக.
|