அண்மையில் நமதூரில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜனாஸா தொழுகை நல்லடக்கம் என எல்லாம் முடிந்த பின்னர், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஸலாம் கொடுக்கும் நிகழ்வு.
இறந்து போனவரின் வாழ்க்கைத் துணை நைந்து போய் காட்சியளிக்கின்றார். முதுமையின் தள்ளாமையும், இறப்பின் சோகமும் ஒன்று சேர - அவரால் வரிசையில் நிற்கக் கூட முடியவில்லை. அருகே அவரின் பிள்ளைகள் கண்களில் கண்ணீருடன் நிற்கின்றனர்.
அவரின் பிள்ளைகள் அனைவருமே வெளிநாட்டில் நல்ல நிலைமையில் இருக்கின்றனர். இங்கே ஊரில் இறந்துபோனவரும், அவரது வாழ்க்கை இணையரும் மட்டுமே தனியாக வீட்டில் இருந்திருக்கின்றனர். இரண்டு பேருமே நோயாளிகள். தாயாரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், அவரது பிள்ளைகள் உட்பட அனைவரும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச்சென்று விட்டனர்.
மறுமணம் செய்யும் வயதிலும் அந்த முதியவர் இல்லை. அவரது பிள்ளைகளும் அருகில் இல்லை எனும்போது, இனி அவர் மட்டும் மீண்டும் பாரம் நிறைந்த தனிமைக் கூட்டுக்குள் தள்ளப்படுவார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு ஒரு பழைய திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அப்படியே அச்சடித்தாற்போல நமதூரின் துயரத்தைச் சொல்வது போலவே இருந்தது. உலகம் முழுக்க மனிதர்கள் உணரும் துயரத்திற்கு மொழி இன பிராந்திய வேறுபாடுகள் ஏது?
காலத்தால் கசக்கி எறியப்பட்ட காகிதம்தான் முதுமை. ஆதரவும் அரவணைப்பும் கூடுதலாகத் தேவைப்படும் அந்த கனிந்த பருவத்தில், முதியவர்கள் மீது உறவுகளால் திணிக்கப்படும் தனிமையை, ஒரு கலைஞன் எப்படி தன் படைப்பின் வழியே கேள்விக்குள்ளாக்குகின்றான் என்பதற்கு காலஞ்சென்ற ஜப்பானிய திரை இயக்குநர் யசூஜிரோ ஓஸூ (YASUJIRO OZU) இயக்கிய “ தோக்கியோ ஸ்டோரி http://www.youtube.com/watch?v=rCgMpwDBC-Y TOKYO STORY “ திரைப்படம் ஒரு சாட்சியாக நிற்கின்றது.
ஜப்பானில் தென்மேற்கு சிறு நகரமான ஓனோமிச்சியில், ஓய்வுபெற்ற தம்பதியான சூகிச்சியும், டோமி ஹிரயாமாவும் தங்களது மணமாகாத கடைசி மகள் கியோக்கோவுடன் வசித்து வருகின்றனர். கியோக்கோ ஆசிரியையாக பணிபுரிகின்றார்.
இந்தத் தம்பதிக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாக மொத்தம் அய்ந்து பிள்ளைகள்.
மூத்த மகன் மருத்துவராக பணி புரிகின்றார். இரண்டாவது மகன் போரில் மடிந்து விடுகின்றார். அவரது கைம்பெண் மனைவி மறுமணம் செய்யாமல் தனியே வசித்து வருகின்றாள். மூன்றாவது மகள் சிகை அலங்காரக் கூடம் ஒன்றை நடத்தி வருகின்றார். இம்மூவரும் தலைநகர் தோக்கியோவில் வசித்து வருகின்றனர்.
ஓனோமிச்சிக்கும் தலைநகரான தோக்கியோவிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஒஸாகா நகரில் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வருகின்றான்.
முதிய தம்பதி இதுவரை தலைநகர் தோக்கியோ சென்றதில்லை. திடீரென்று ஒருநாள் அங்கு சென்று பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு உண்டாகின்றது. தொடர்வண்டியில் புறப்பட்டுச் சென்று மூத்த மகன் வீட்டில் தங்குகின்றனர். மகனின் இரண்டு குழந்தைகளும் தாத்தா பாட்டியோடு அவ்வளவாக ஒட்டுறவாடவில்லை.
வார விடுமுறை நாளில் தோக்கியோ நகரத்தை பெற்றோருக்கு சுற்றிக்காட்ட வேண்டும் என மூத்த மகன் திட்டமிட்டிருக்கின்றார். வெளியில் கிளம்பும் சமயம் பார்த்து தவிர்க்க இயலாத மருத்துவப் பணி ஒன்று குறுக்கிடுகிறது. இதனால் நகர உலா கைவிடப்படுகிறது.
வேறு வழியின்றி தனது பேரப்பிள்ளையோடு அருகிலுள்ள திடலுக்கு உலாவச் செல்கின்றார் பாட்டி டோமி ஹிரயாமா. அப்போது அவர் பேரனின் எதிர்கால விருப்பத்தைக் கேட்டறிகின்றார் .
பேரன் வளர்ந்து பெரியவனாகும் வரைக்கும் தான் இருக்க வேண்டும் என விரும்புகின்றார். வாழ்வின் நீட்டிப்பு மீதான அவரின் எதிர்பார்ப்பும் அது சாத்தியமில்லை என்ற உண்மையும் சந்திக்கும் புள்ளியில் அவர் கண் கலங்குகின்றார்.
பரபரப்பான நகர வாழ்வின் நெருக்கடிகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி தன் வயதான பெற்றோருடன் நகர் உலா செல்வதற்காக மூத்த மகனும் மகளும் ஆயத்தமாக இல்லை. இறுதியில் கைம்பெண்ணான மருமகள் மனம் உவந்து முதிய தம்பதியை நகர உலாவிற்கு அழைத்து செல்கின்றாள்.
கணவனும், குழந்தைகளும் இல்லாத வெறுமையிலும் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதியவர்களின் நகர தங்கலின்போது தன்னால் இயன்றவரை அவர்களுக்கு அவள் மன நிறைவை கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்.
பெற்றோருடன் நேரம் கொடுப்பதில் உள்ள விருப்பமின்மை வெளிப்படாமல் இருக்க சுடு நீர் ஊற்று குளியல் விடுதிக்கு அவர்களை மூத்த மகனும் மகளும் அனுப்பி விடுகின்றனர்.
விடுதியில் உள்ளவர்களின் இராக்காலக் களியாட்டக் கூச்சல்களின் விளைவாக முதியவர்களின் தூக்கம் கெடுகின்றது. இளையவர்களின் இருப்பிடத்தில் நமக்கு வேலையில்லை என்கின்றார் சூகிச்சி. இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பெரும் இடைவெளியை அங்கு இருவருமே உணர்கின்றனர். அங்குள்ள சூழல் ஒத்துப்போகாததால் அவர்கள் விடுதியை விட்டு வெளியேறி பிள்ளைகளின் வீடு வந்து சேருகின்றனர்.
தோக்கியோவில் உள்ள தனது பழைய நண்பர்களை தேடிப்போய் பெரியவர் சூகிச்சி சந்திக்கின்றார். அனைவரும் இரவு நெடு நேரம் வரைக்கும் குடித்து தீர்க்கின்றனர். போதை தலைக்கேறவும், அவர்களின் ஆழ்மனதின் திரை விலகி விடுகின்றது. நண்பர்கள் ஒவ்வொருத்தராக மனம் திறக்கின்றனர்.
முதியவர் சூகிச்சியின் மனப்போராட்டமும் வெளியில் வந்து விழுகின்றது.
“மனிதர்களுக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும் பிரச்சினைதான். குழந்தைகள் இருந்து அவர்கள் பெரியவர்களான பின்னர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒத்துப்போவதில்லை என்பதும் பிரச்சினைதான்“ என நண்பர்களிடம் பகிர்கின்றார் சூகிச்சி.
ஊர் திரும்பும் முதிய தம்பதியை வழியனுப்புவதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு பிள்ளைகள் வருகின்றனர். பிள்ளைகளிடம் பிரியாவிடை கொடுக்கும்போது ஏனோ இறப்பின் நினைவுகள் மேலிட டோமி ஹிரயாமா கண் கலங்குகின்றார்.
பயணத்தின் இடைவழியிலேயே டோமி ஹிரயாமாவிற்கு உடல் நலம் குன்றுகின்றது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு தம்பதியர் சொந்த ஊரான ஓனோமிச்சி போய் சேர்கின்றனர்.
ஊர் போய் சேர்ந்ததும் டோமி ஹிரயாமாவின் உடல் நிலைமை மிகவும் மோசமடைகின்றது. தோக்கியோவில் உள்ள பிள்ளைகளுக்கு தந்தி பறக்கின்றது.
இளைய மகனைத் தவிர அனைவரும் வந்து சேர்கின்றனர். தாயார் டோமி ஹிரயாமாவின் உயிர் சொட்டு சொட்டாக ஒழுகிக்கொண்டே இருக்கின்றது. இரவின் இறுதிக் கணங்களில் தாயாரின் கடைசி உயிர்த்துளியும் தீர்ந்து விடுகின்றது.
நெடுநாட்கள் கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த டோமி ஹிரயாமாவிற்கு திடீரென நகர வாழ்க்கையின் பரபரப்பும், பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான குடும்ப வாழ்க்கையின் வசந்தங்களும் அறிமுகமாகின்றன.
இந்த புதிய பட்டறிவின் தாக்கமும் இவை அனைத்தும் சில நாட்களே நீடிக்கக் கூடிய தற்காலிகத் தன்மை பெற்றவை என்ற ஏமாற்ற உணர்வும் ஒருங்கே சேர்ந்து அவரை மனதளவில் நிலைகுலைய வைக்கின்றது. இறுதியில் அதுவே அவரது இறப்பிற்கும் காரணமாகின்றது.
தாயார் இறந்த பிறகே இளைய மகன் வந்து சேருகின்றான். வணிக விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் தந்தி கிடைக்கவில்லை என்கின்றான். தாயாரின் உடலருகே பணிந்து அமர்ந்து தாமதமான வருகைக்கு மன்னிப்புக் கோருகின்றான்.
தாய் டோமி ஹிரயாமாவின் உடலருகே அனைவரும் ஒன்று கூடி கண்ணீர் விடும் அதிகாலை வேளையில் தந்தை சூகிச்சி கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றார். “என்ன அழகான உதயம்? ஆனால் வெப்பமான பகல் பொழுதுகள்“ என தனக்குத்தானே சொல்லிக்கொள்கின்றார்.
ஜப்பானிய தத்துவ மரபு தந்த மனக்கொடையின் விளைவாக தன் வாழ்வின் துயரத்தை அழகியல் உணர்வுகளோடு சூகிச்சி கடந்து செல்லும் தருணங்கள் அவை.
இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். கடைக்குட்டி கியோக்கோவின் திருமணத்திற்கு பிறகு தந்தை இன்னும் தனிமையில் இருக்க வேண்டி வரும். எனவே இனிமேல்தான் அவர் தன் உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தந்தைக்கு அறிவுரை கூறுகின்றனர்.
பரஸ்பர அறிவுரைகளுக்கும், நன்றி தெரிவித்தல்களுக்கும் பின்னர் அனைவரும் உடனே புறப்பட்டுச் செல்லுகின்றனர். மருமகள் மட்டும் சற்று தாமதிக்கின்றாள்.
அவர்களின் இந்த தன்னலம் வழியும் பரபரப்பைக் காணும் கடைசி மகள் கியோக்கோ அது பற்றி தந்தையிடம் முறையிடுகின்றாள்.
“என்ன செய்ய? அவரவருக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கின்றதே...? போகத்தான் வேண்டும்“ எனக் கூறி கடைசி மகளை சமாதானப்படுத்துகின்றார் தந்தை.
கைம்பெண்ணான மருமகளும் தோக்கியோவிற்கு புறப்படும் நேரம் வருகின்றது.
மருமகளின் அன்பான கவனிப்பிற்கு பலமுறை நன்றி சொல்லும் சூகிச்சி, அவளை நல்லவள் எனவும் பாராட்டுகின்றார். இறந்த கணவனைப் பற்றிய நினைப்பை விட்டு விடுமாறும் தனிமையில் உழலாமல் மறுமணம் செய்து கொள்ளுமாறும், அதுதான் அவளுக்கு நல்லது எனவும் சூகிச்சி அறிவுறுத்துகின்றார்.
“நீங்கள் நினைப்பது போல நான் நல்லவள் இல்லை. காரணம் நான் உங்கள் மகனை அறவே நினைக்காத நாட்களும் உண்டு. தனிமையைக் கலைக்கும் எண்ணம் அவ்வப்போது வந்து போகத்தான் செய்கின்றது“ எனக் கூறுகின்றாள் மருமகள். இதைக் கூறும்போது எப்பொழுதும் புன்னகை தவழும் அவளின் கண்களில் கண்ணீர் சிந்துகின்றது.
இரண்டு தனிமைகளின் உரையாடல் முடிவிற்கு வருகின்றது. மருமகளும் புறப்பட்டுச் செல்கின்றாள். கடைசி மகள் கியோக்கோவும் பணிக்கு சென்று விடுகின்றாள். தனித்து விடப்படும் முதியவர் சூகிச்சியை ஏகாந்தம் சுற்றி வளைக்கின்றது.
மனைவி இல்லாத தனிமையை போகிற போக்கில் பக்கத்து வீட்டுக்காரி நினைவூட்டி செல்கின்றாள்.
“இப்படியாகும் என தெரிந்திருந்தால் நான் என் மனைவியுடன் கனிவாக நடந்திருப்பேன். இனி வரும் நாட்கள் மிகவும் நீளமானவை“ என அண்டை வீட்டுக்காரியிடம் சொல்கின்றார் சூகிச்சி.
சூகிச்சியும் அவரது கைம்பெண் மருமகளும் தங்களைத் தாங்களே வெறுமையின் ஆழத்தில் நின்றுகொண்டு செய்யும் தன் விசாரணையானது துயரம் ததும்பும் தனிமைக்கு ஒரு ஞான சாரத்தை அளிக்கின்றது.
விளக்கு அணைந்தவுடன் விழுந்து கவியும் இருளைப்போல, தனிமை முழு வேகத்துடன் சூகிச்சியை மீண்டும் வளைத்துக் கொள்கின்றது. இந்த காட்சியின் வழியாக பார்வையாளர்களின் தலையிலும் தனிமையின் சுமை மலை போல கனக்கின்றது.
அதே நேரத்தில் கடலில் தன்னந்தனியாக ஒரு படகு விரைந்து செல்லும் நிறைவுக் காட்சியின் வழியாக தனிமை என்பது ஒரு தேக்கமல்ல அதுவும் பயணத்தின் ஒரு பகுதிதான் என்ற செய்தியையும் சேர்த்தே பதிக்கின்றார் படத்தின் இயக்குநர்.
மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அழகியல் கலந்த உணர்வு நிலையுடன் இயற்கையுடன் பிணைத்து அணுகும் ஷின்தோ, பௌத்த தத்துவ மரபுகளைப் பெற்ற நாடு ஜப்பான். இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் பெரும் ஆர்வம் உள்ளவர்கள் ஜப்பானியர்கள்.
அதே ஜப்பானில்தான் அமெரிக்க நுகர்வுப் பண்பாடு பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. கண்மூடித்தனமான உழைப்பு அதன் துணை விளைவான அளவுக்கதிகமான உற்பத்தி போன்ற அம்சங்கள் ஜப்பானியரை தனிமைக்குள் தள்ளியிருக்கின்றது. சக மனிதனிடம் பேணப்பட வேண்டிய உறவின் தொடர் நிலை குறித்து ஆழ்ந்த அறியாமையிலேயே ஒவ்வொரு ஜப்பானியரும் உள்ளனர்.
குடும்பங்களில் மூத்தோர் – இளையோர் இடையேயான உறவுப் பாலங்களில் உள்ள பெருத்த இடைவெளிக்கும் இதுதான் காரணம். எனவேதான் ஒவ்வொரு ஆன்மாவையும் வெறுமை கலந்த தனிமை சிறை வைத்துள்ளது. அதுவே அங்கு தேசீய குணமாகவும் உருவெடுத்துள்ளது.
இதன் விளைவாக தற்கொலைக்கான உலகின் முதல் பதினைந்து நாடுகளின் பட்டியலில் ஜப்பானும் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகள் ஏதோ நேற்று இன்று நடப்பவை அல்ல. அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இதுதான் நிலைமை என்பதற்கு 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தோக்கியோ ஸ்டோரி படமே சாட்சி. ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி எட்டாண்டுகள் கழித்து உருவாக்கப்பட்ட படம் இது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட, தனி மனித சுதந்திர வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பது அமெரிக்க வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையை, அணுகுண்டுப் பேரழிவிற்கு மிக நெருக்கமான கால கட்டத்திலும் ஜப்பானிய மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இன்றளவிலும் அந்த நிலைதான் தொடருகின்றது. ஜப்பானின் இந்த வாழ்வியல் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?
இப்படத்தை இயக்கிய - காலஞ்சென்ற ஜப்பானிய இயக்குநர் யசூஜிரோ ஓஸூ திருமணம் முடிக்கவில்லை. இறுதி வரை அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். அவரது அய்ம்ப்தெட்டாம் வயதில் அவரின் அம்மா இறந்து போகின்றார். இவர் தனது அறுபதாம் வயதில் காலமாகின்றார்.
முதுமையடைந்த தாயின் தனிமை, திருமணமாகாத தனது சொந்த தனிமை, ஜப்பானின் குடிமைச் சமூகத்தில் நிலவும் தனிமை போன்றவற்றிலிருந்துதான் தோக்கியோ ஸ்டோரிக்கான கதையை யசூஜிரோ ஓஸூ நூற்று எடுத்திருக்கின்றார்.
அவரது வாழ்க்கை முழுக்க தனிமை உணர்வு அடி நீரோட்டமாக ஓடியிருக்கும் போலும். ஏனெனில் அவரது ஏனைய படைப்புகள் நெடுக தனிமை மென்மையாக இழையோடுவதை அவதானிக்க முடிகின்றது.
மனிதன் மீது திணிக்கப்படும் தனிமையை தன் படைப்புக்களின் வழியே தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகின்றார் இயக்குநர்.
முதுமையில் தன்னை தனிமை கவ்வுவதற்கு அனுமதிக்காமல், திருமணமற்ற ஒரு வாழ்க்கையின் வழியாக இயக்குநர் யசூஜிரோ ஓஸூ அதனை முன் சென்று எதிர் கொண்டிருப்பாரோ எனப்படுகின்றது.
மனித வாழ்வின் மீது திணிக்கப்படும் தனிமையை, தன் நிஜ வாழ்க்கையின் மூலமாகவும் படைப்புகளின் வாயிலாகவும் எதிர்த்து நின்றிருக்கின்றார் இயக்குநர் யசூஜிரோ ஓஸூ.
இந்தத் திரைப்படத்தின் வாயிலாக தனிமைக்குள் தள்ளப்படும் முதுமையின் முழு வடிவத்தையும் முகத்தில் அறையும் வீச்சோடு காண முடிகின்றது.
இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் நாம் வாசித்தது போன்ற நடப்புகளை, தனித்த ஓரிரண்டு நிகழ்வுகள் என ஒதுக்கித் தள்ள முடியாது. முன்னெப்போதையும் விட சொல்லவும், கேட்கவும் இதுபோன்ற கதைகள் நமதூரில் இன்று நிறையவே உள்ளன.
ஒரு காலத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் உயர்சாதி குடும்பங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருந்த இந்த முதுமையின் தனிமையானது மெல்ல நகர்ந்து நமதூர் வரை எட்டியிருக்கின்றது.
உலகில் கல்வியறிவு பரவலாக இல்லாத காலகட்டத்திலேயே பெரிய, சிறிய, குறு தொழில் முனைவோர், வணிகர்கள் என நம்மவர்கள் தனக்குத்தானே முதலாளிகளாக இருந்தனர் .எண்ணற்ற ஆட்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்தனர். கூட்டுக் குடும்பத்துடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள அனைவருக்குமே நேரம் இருந்தது.
இன்று கல்வி பரவலாகியிருக்கின்றது . உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் நம் நாட்டிற்குள் நிலை பெற்ற பிறகு தொழில் முனைவோர், வணிகர்கள் என்ற வர்க்கமே மறைந்து போய் - படித்தவர்களில் கிட்டதட்ட அனைவருமே கார்ப்பரேட் என்ற பெரு வணிக நிறுவனங்களில் சம்பளத்திற்குப் பணிபுரிவோராக மாறிவிட்டனர்.
இந்த புதிய வாழ்க்கை நிலைமை கை நிறைய பொருளாதாரத்தை நமக்கு அள்ளித் தந்திருக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திருக்கலாம் .நமது வாழ்க்கைத் தரத்தை பல வழிகளில் மேம்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்துடன் சேர்த்து அது நமக்கு விட்டுச் சென்றவை என்னென்ன என்ற கணக்கையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.
கார்ப்பரேட்டிசத்தின் பக்க விளைவுகளாக ஒற்றைக் குடும்ப முறையும் (Nuclear Family System), முதிய வயதுடைய பெற்றோர் தனித்து விடப்படுதலும் சமூகத்திற்குள் ஓசையின்றி கூடுதலாகி வருகின்றது.
கார்ப்பரேட்டிசம் அறிந்ததெல்லாம் மலை போல உற்பத்தியும், பிழிந்தெடுக்கும் உழைப்பும், கை நிறைய அச்சடித்த பணத்தாள்கள்களும்தான்.
அது அறிய வேண்டியது ஒன்று உள்ளது. அதுதான் மனித உறவுகளின் அருமை.
பொருள் தேடுவதின் நிமித்தம் நமது முதியோர்களைத் தனிமையின் தயவிற்குள் விட்டுச் செல்கின்றோம். வாழ்க்கை என்பது எறிந்தவனை நோக்கியே திரும்ப வரும் பூமராங் ஆயுதம் போன்றது. அந்த முதுமையின் தனிமை பின்னொரு காலகட்டத்தில் நம்மிடம் திரும்ப வரும்போது அதை தாங்கிக் கொள்ளும் திறன் நம்மிடம் இருக்குமா? |