இணையதள இனிய வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல் நகரில் பிறந்து, வெளிநாடுகளில் வேலை செய்து, தன் குடும்பத்தையும் பாதுகாத்து, ஊரிலுள்ள ஏழை மக்களின் கல்வி, வைத்தியம் மற்றும் தொழில் உதவிக்குக் கை கொடுத்து உதவும் உங்கள் நல்லெண்ணங்களை நாங்களும், ஊரில் அனைத்து ஆண் - பெண்களும், பிரமுகர்களும் பாராட்டி, என்றும் ‘துஆ’ செய்து வருகிறோம். நீங்கள் என்றும் நலமாக, வளமாக, நீடித்த ஆயுளுடன், நிறைந்த சுகத்துடன் வாழ வேண்டும் என எப்போதும் விரும்புகின்றோம். உங்கள் எண்ணம் மகத்தானது - சுயநலமில்லாத புனிதமானது.
நேரம் கிடைப்பது அரிது; பயன்படுத்துபவர்கள் நமதூரில் குறைவு?
காலம் பொன் போன்றது. பணம் கொடுத்தால் பொன்னை வாங்கிக்கொள்ள முடியும். நமது வயதில் சிறு வயதை (கோடி பணம் கொடுத்தாலும்) திரும்ப வாங்கிக்கொள்ள முடியுமா? நினைத்துப் பார்த்தால் மாபெரும் உண்மை புரியும். நமதூரைச் சேர்ந்த – ஊருக்காக உழைக்கும் எத்தைனயோ பேர்கள் மறைந்து சேவை செய்கிறார்கள். அவர்களை நாம் தேடிக் கண்டுபிடித்து, பாராட்டி கவுரவிக்க முன்வர வேண்டும். ஊரில் எந்த சங்கம் - சதுக்கையைப் பாருங்கள் அல்லது சில பள்ளிவாசல்களின் வராண்டாவில் பார்த்தால் தெரியும் மாலையில் ஓயாத அரட்டை. இது எப்போது மாறப்போகிறது? ஒன்றும் தெரியாவதர்கள் இல்லை. தலைவர் தலைமையில் அரட்டை தேவையா? நமதூரில் உள்ள பல பொது இடம் சங்க மண்டபம் என்றால் கேள்வி கேட்க மாட்டோம். பள்ளிவாசல் முன் வராண்டாவில் அரட்டையை நீக்குவார்களா? இவர்களில் யாரும் சின்னப் பிள்ளைகள் அல்ல. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இப்படி இருப்பதை மாலை நேரம் மஃரிபு வரை காணலாம். வேதனையாக உள்ளது. எப்போது திருந்தப் போகிறார்கள்?
சேவைச் செம்மலைப் பாராட்டி, கவுரவித்து, விருது தருவோம்
சதுக்கைத் தெரு ஹஸன் சார் அவர்களை நான் நேரில் கண்டதில்லை. பலமுறை பார்க்கச் சென்றபோது, காண முடியலே. அவர்கள் நமதூர் பிள்ளைகளுககு சிங்கப்பூர், இதர நாடுகளில் வேலை பெற்றுத் தந்து வருவது அறிகின்றேன். பம்பாயில் வாழும் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஸலீம் காக்கா அவர்களும், உள்நாட்டில் வேலை வாங்கித் தருகிறார் என்று பல வருடங்களாக அறிகின்றோம். இவர்களைப் போல, இப்னு ஸஊத் வேலை வாங்கித் தருகிறார். யாராக இருந்தாலும் நாம் அவாகளை கவுரவித்து விருது வழங்க வேண்டும். செய்தோமா?
வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மேலான கவனத்திற்கு!
(1) இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு ஊர் தழுவிய பாராட்டு விருது தர பொதுநல அமைப்புகள், தனவந்தர்கள் முன்வர வேண்டும். அதுபோல, வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் அதிகம் சேவை செய்த நாடு வரிசைப்படுத்தி கவுரவிக்க வேண்டும்.
(2) நமது மாணவ-மாணவியரிடம் நல்ல திறமை உள்ளது. ஆண்டுக்கு இரு பெருநாட்கள் அல்லது சுதந்திர தினம், குடியரசு தினங்களி் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, அறிவியல் போட்டி நடத்தி, நமது மாணவ-மாணவியரின் திறனை ஊர் அறியச் செய்ய வேண்டும். திறமையை மூடி மறைக்கக் கூடாது. காலம் கடத்தவும் கூடாது.
(3) வளரும் சிறார்களை அழகாக வளர்ப்பதில் பெற்றோரின் பெரும் பங்கு தேவைப்படுகிறது. நமதூரில் விளையாட்டில்தான் கவனக் குறைவாக இருக்கின்றோம். புட்பால், ஹாக்கி, பூப்பந்து, ஓட்டப்பந்தயங்களிலும் நம் மாணவர்களை ஈடுபட வைக்கலாம் ‘டிரில் மாஸ்டர்’க்கான பயிற்சி வகுப்புகளை நாம் கண்டுகொள்வதில்லை. பெரிய பெரிய டிகிரி பெற அதிக பணம் செலவழிக்க வேண்டும். டிகிரி கிடைத்துவிட்டால் முஸ்லிம் மாணவர்களுக்கு வேலை தர யார் இருக்கிறார்கள்? ஓவியப் படிப்பு, டிரில் மாஸ்டர் படிப்பு படித்தவர் குறைவாக இருப்பதால் உடனடியாக வேலை கிடைக்கும். அதில் முயற்சி மேற்கொண்டு பெற்றோர் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தரலாம்.
“முஸ்லிம்கள் துப்பாக்கி பயிற்சி செய்தால் அவனை தீவிரவாதியாக ஜோடித்துக் காட்டுவார்கள்.” பஞ்சாப் பாரன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றால் அவனுக்கு ‘தேசியவாதி’, ‘எல்லையைப் பாதுகாக்கப் போகிறவன்’ என்ற முரண்பாடு நம் நாட்டில் மறையும் வரை மதவாதப் போக்கு மாறாது.
நம் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியே தெரியவில்லை. காரணம், நம்மூரில் நீச்சல் குளங்கள் இல்லை. சிறு வயது முதல் நீந்திப் பழகினால், வளரும் காலம் நீச்சலில் ஆர்வம் வரும். நீச்சல் போட்டி, துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்புள்ளதை நாம் எல்லோரும் அறிந்து, நம் பிள்ளைகளுக்கு அதன் ஆற்றலை உருவாக்கித் தர வேண்டும். ஒரு பக்கம் விளையாட்டு. மறுபக்கம் கை நிறைய வருவாய் தரும் தொழில். இதில் கவனம் செலுத்த வேண்டும்.
(4) கீழக்கரை இளைஞர்கள் எங்காவது வேலை தேடி அலைவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தொண்டி, நம்புதாழை இளைஞர்களும் சுலப வேலைவாய்ப்பு முறைக்கு கீழக்கரை கப்பல் கம்பெனி முதலாளி கை கொடுப்பதால், மெரின் (கப்பல்) சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கிறார்கள்.
கீழக்கரை முதலாளி கை கொடுக்கிறார்கள் என்பதை வெளிநாட்டில் வேலை பார்க்கும் நமதூர் இளைஞர்கள் அறிந்து, நமதூரில் படித்தவர்களுக்கு உடனே வெளிநாட்டில் வேலை வாங்கித் தர முடியும். முயற்சி செய்தால் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட்டு, உங்களைப் போல அவர்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து, தன் குடும்ப உயர்வுக்குப் பாடுபட முடியும். இதில் தெருவாசி, கொள்கைகளைப் பார்க்க வேண்டாம். அவர்கள் ஏழையா என்று மட்டும் பாருங்கள். அந்த இளைஞனுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். நமதூர் பொது அமைப்புகள் மூலம், வெளிநாடு செல்லும் செலவை முதலில் ஏற்று, முதல் சம்பளம் கிடைத்ததும் எடுது்துக்கொள்ள வழி செய்தல் அவசியம்.
மொத்தத்தில் நம் ஊரில் அனைவரும் ஆங்கிலத்துடன், அரபி எழுதப் படிக்க, லேப்டாப்பில் டைப் செய்ய Diploma In Arabic படிக்கலாம். ஒன்றுமே படிக்காத நான் உங்களுக்குப் புத்தி சொல்வதாக நினைக்காதீர்கள். நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்களேன்... நன்றி.
உங்கள் மாமா ALS. |