எம் ஜி ஆர் மறைந்து இருபத்தேழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம் ஜி ஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம் ஜி ஆர் இன்றும் வாழ்கிறார். இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின்போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் யார் ஒருவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.
தலைவர்கள் என்போர் தாங்கள் வாழும் வரையிலும் மட்டுமல்ல; வாழ்ந்து மறைந்த பிறகும் கூட மக்களின் நினைவுகளில் கூடாரம் அடித்துத் தங்கி இருப்பதெனில், அவர் இந்த சமூகத்தை எந்த அளவில் ..எவ்வாறு பாதித்திருக்கவேண்டும்...? என்ற கேள்வி எழுவது இயல்பே. எவர் ஒருவரும் - அவர் தலைவராக இருந்தாலும் சரி... அல்லது சாதாரண மனிதராக இருந்தாலும் சரி... முக்கியமாக அவரது கொள்கை சார்ந்து நினைவு கூறப்படுவதை விடவும் அவரது பிம்பம் சார்ந்துதான் அதிகமதிகம் நினைவு கூறப்படுகிறார். இது இந்தியாவில் முதலில் காந்திக்கு வாய்த்தது. நமது காலத்தில் அவ்வாறான பிம்பத் தோற்றம் காரணமாக மக்கள் மனங்களில் இடைவிடாது இடம் பிடித்திருப்பவர் எம் ஜி ஆர்.
சினிமாவில் அவர் நல்லவர்; தீமைக்குத் துணை போக மாட்டார்; அநீதிகளைக் கண்டு பொங்கி எழுவார்; பெண்களின் காவலன்; மதுவுக்கு எதிரானவர்; ஏழை-எளியவர்களை அரவணைப்பவர்; அவரைத்தான் கதாநாயகிகள் காதலிப்பார்கள்; அவராக யாரையும் காதலிக்க மாட்டார்; இப்படியான எம் ஜி ஆரின் பிம்பம் நிஜத்திலும் அவருக்கு கை கொடுத்தது. அவரது அரசில் சில தவறுகள் நடந்தபோதும், சில குற்றச்சாட்டுக்கள் அவரது அரசு மீது முன்வைக்கப்பட்ட போதும் மக்கள் அவரைக் கைவிடவில்லை.
“அவரு நல்லவரு... கூட இருக்கறவங்க கண்டபடி நடந்தா பாவம் அவரு என்ன செய்வாரு...?”
இப்படியான பாதுகாப்பை மக்களே அவருக்கு அளித்தனர். சாதாரணமாக ஆட்சியாளர்கள் மீது எழும் அதிருப்தி அவரைப் பொறுத்த மட்டில் எழவே இல்லை. இத்துனைக்கும் அவரது ஆட்சியிலும் தவறுகள் நடந்தன. அதை எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதாக்கின. இருந்தபோதும் எம் ஜி ஆர் அவற்றை நீந்திக் கடந்து வந்தார்.
அவர் சிறந்த நடிகரில்லை. சுமாரான நடிகர் என்று கூட அவரைச் சொல்ல முடியாது. சினிமாவில் அவரது எதிரியான சிவாஜி கணேசனோ, நடிப்பில் புகுந்து விளையாடக் கூடியவர். நடிகர் திலகம். பராசக்தி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. எந்தப் பாத்திரத்திலும் அனாசயமாக நடிப்பவர். என்றாலும் எம் ஜி ஆர் தனது குறைந்தபட்ச நடிப்பை வைத்துக்கொண்டே அவரையும் எதிர்கொண்டார்.
எம் ஆர் ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது ,அவர் கதை முடிந்தது என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் எம் ஜி ஆரின் மீள் வருகையால் நிறைவேறாமல் போனது.
அவரது கணீர்க்குரல் சிதைந்து போனது. அவர் திரையில் திணறித் திணறி பேசியபோது அவரது ரசிகர்கள் அழுதார்கள். கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்குப் பிறகு அதே போன்ற ஒரு நிலை அவருக்கு மீண்டும் வந்தது. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து ,பேச்சுப் பயிற்சியை அவர் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் அவர் திணறி திணறி பேசியபோது, ”தலைவா ...பேசாதே...நீ! இதுவரை பேசியதே போதும்..” என்று அவரது தொண்டர்கள் கதறினார்கள். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் துயரங்களில் இருந்து மீண்டு வரும் ஒரு நிஜ ஹீரோ என்ற அவரது பிம்பம் அழுத்தமாக இந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் பதிவானது.
கிட்டத்தட்ட அரசியலிலும் தனது எதிரியான –பழுத்த அரசியல் அனுபவம் பெற்ற - கருணாநிதியை அவர் அப்படித்தான் சமாளித்தார். வாதத்தில் வல்லவரான கருணாநிதியை தனது சாதாரண பேச்சால் சட்டமன்றத்தில் அவர் எதிர்கொண்டார். நெடுஞ்செழியன், காளிமுத்து, எஸ் டி எஸ் போன்ற அரசியல் ஜாம்பவான்களை அவர் பக்கத்தில் வைத்துக் கொண்டாலும், கருணாநிதியை அவர் எப்போதும் தாமே எதிர்கொண்டார். அவரை நடிகர், வெளிவேஷம் போடுபவர், புகழுக்காக ஏங்குபவர் அவர் தர்மம் செய்வதெல்லாம் விளம்பரம் கருதியே... .என்றெல்லாம் பலரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை வீசினாலும்.... ”சரி...விளம்பரம் கருதியே இந்த உதவிகள் செய்யப்பட்டாலும் இவ்வாறான உதவிகளை செய்து வேறு யாரும் கூட இதே விளம்பரத்தைப் பெறட்டுமே...” என்று அவரது கடும் விமர்சகரான சோ ஒருமுறை கூறினார்.
பிறப்பால் எம் ஜி ஆர் தமிழரல்லர் .கேரளத்தைச் சேர்ந்தவர். ஆனால் தனது சிறு வயது முதலே தமிழகத்துக்கு வந்து தமிழராகவே மாறிப்போனவர். அவரது தமிழ் அடையாளத்தை அவரது அரசியல் எதிரிகள் கேள்விக்குட்படுத்தியபோது, அதை எதிர்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார். அதன் விளைவாகவே, அவரது ஆட்சியில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், பெரியாரின் தமிழ் எழுத்து சீதிருத்தம் தமிழ் அறிஞர்களுக்கு உதவி போன்றவற்றைப் பார்க்கவேண்டும். புலிகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்து ,அவர்களுக்கு பொருளாதார உதவி செய்தததும் இந்த அடிப்படையில்தான்.
தமிழ்ச் சூழலில் எம் ஜி ஆர் தமிழகத்தில் பிறக்காத தமிழராக இல்லாமல் போனது வேறொரு வகையில் அவருக்கு வசதியாகப் போனது. இங்குள்ள எந்த சாதியையும் தூக்கிப் பிடிக்கும் கட்டாயம் அவருக்கு இல்லாமல் போனது. எனவே சாதி வன்மமற்ற ஒரு பார்வை அவரிடம் இருந்தது. இதன் காரணமாகவே மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த எட்மண்டை ,அவருக்கு முற்றிலும் தொடர்பில்லாத சைவப் பிள்ளைமார்கள் அதிகமாக வசிக்கும் நெல்லைத் தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடச் செய்து வெற்றி பெறச் செய்யவும் முடிந்தது. இன்றைய தமிழ்ச் சூழலில் இது எவ்வளவு பெரிய மகத்தான காரியம் என்பதை சமூக ஆர்வலர்கள் அறிவார்கள்.
மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி எம் ஜி ஆர் குறித்து இவ்வாறு ஒருமுறை சொன்னார்:-
“சாதி ,மத பேதமற்று தமிழர்களின் ஆதரவை ஒருங்கே பெற்ற தமிழகத்தின் கடைசித் தலைவர் எம் ஜி ஆர் “
அது உண்மையும் கூட...! |