இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எழுதுவதற்கு எழுத்தாற்றலையும், நல்ல சிந்தனைகளையும் உருவாக்கித் தந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் (அல்ஹம்துலில்லாஹ்!)
எனது கட்டுரையைப் படிக்கும் – உலகளாவிய நாடுகளில் வாழும் எனது அன்பு வாசகர்கள் ஒரே வரியில் கருத்தை மறக்காமல் தாருங்கள். உங்களின் கருத்துதான் எனக்கு டானிக். நான் திருத்திக்கொள்ள முடியும். திரும்பவும் உற்சாகமாக எழுதவும் முடியும்.
மனிதன் பண்பாடாக வாழ வளர முக்கிய பங்கு வகிப்பது நல்ல நூல்கள் என்பதால், ஆங்காங்கே நூலகங்கள் தோன்றின. நல்ல நூல்கள் நமது இனிய நண்பன். நூலகங்களுக்குச் சென்று வரலாற்று நூற்களைத் தேடிப் படித்து குறிப்பெடுத்து, இணையதளங்களில் எழுதுங்கள்! வீடுகளில் சேமித்து வைத்த நல்ல நூற்கள் அவர்கள் மறைவுக்குப் பின்னால் காணாமல் போய் அழிகிறது. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமிய ஹிஜ்ரீ ஆண்டு கணக்கைப் பாதுகாத்து வந்ததால், 2015இல் ஹிஜ்ரீ 1436 தொடர்வதை அறிகின்றோம். வரலாற்றைப் பாதுகாத்து வந்த முஸ்லிம் எழுத்தாளர்களை நாம் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது.
வரலாற்றைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துங்கள்!
காயல்பட்டினம் 1200 வருடங்களுக்கு முந்தியது என்று கூறுகிறோம். இதற்கான சான்றை யார் வைத்துள்ளார்கள்? நமது இணையதளங்களில் எழுதி வையுங்கள். ஆய்வுகொள்ள வரும் சரித்திர மாணவர்களுக்கு அது பயன் தரும். இந்த உண்மைகளை காயல் நகர எழுத்தாளர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் எம்.ஏ. அவர்கள், எஸ்.இ.அமானுல்லாஹ், காயல் மகபூப் போன்றோர் கவனம் செலுத்தி, நமது இணையதளத்தில் ஆதார நூல்களைப் பட்டியலிட்டு வைக்க வேண்டும். (அவர்களுக்கு நினைவு மறதி வருமுன் எழுதி வைக்க வேண்டும்.)
நமதூரில் பல நூலகங்கள் இருந்தன. கவனம் செலுத்தாததால் அவை மூடப்பட்டுவிட்டன. 2015இல் கூட சில நூலகங்கள் மிஞ்சி இருக்கிறது. அவற்றில் இன்று காணப்படும் நூலகங்கள் YUF நூலகம், ஜலாலிய்யா நூலகம், கே.டி.எம். தெருவில் சீதக்காதி நூலகம். சீதக்காதி நூலகத்தின் தலைவராக, நூலகராக 2007 முதல் இன்று வரை நான் செயல்பட்டு வருகிறேன். இலவச பணிதான்! நல்ல நூல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான்!!
கட்டுரைப் போட்டி அல்லது பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளும் நமதூர் மாணவ-மாணவியருக்கு அவர்கள் கேட்கும் நூல்களை வழங்கிப் படிக்கத் தந்து, திரும்ப வாங்கிப் பாதுகாக்கின்றேன். இதுதான் நூலகரின் பணி!
நான், மறைந்த இஸ்லாமிய இதழ்கள் 100 சேகரித்து வைத்துள்ளேன். இணையதளத்தில் வெளியிடவுள்ளேன்.
நமது முன்னோர்கள் சேகரித்த நூல்கள் எங்கே?
‘வான்புகழ் காயல்பட்டணம்’ எனும் நூலை 1951இல் வெளியிட்ட எம்.கே.செய்யித் அஹ்மத் அவர்கள் (தீவுத்தெரு), ‘முஸ்லிம் தமிழ் பாரம்பரியம்’ என்ற நூலையும் வெளியிட்டார்கள். அப்துல் ஹை ஆலிம் (நமதூரின் முதல் நூலகமான காஹிரா நூலகத்தின் நிறுவனர்) அவர்கள், முஸ்லிம் லீக் முத்து காக்கா அவர்கள், நற்சிந்தனை ஹஸன் ஹாஜி அவர்கள், பாவலர் அப்பா அவர்கள் மற்றும் அவர்களது மகன் பாவலர் யூஸுஃப் அவர்கள், எல்.கே.அப்பா அவர்கள், எம்.கே.டி.அப்பா அவர்கள், காயல் பிறைக்கொடியான் கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன் அவர்கள், கவிஞர் டி.எம்.கே.செய்யித் அஹ்மத் அவர்கள், எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள், பாளையம் இப்றாஹீம் அவர்கள், சாமு ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்கள் எழுதிய நூற்களைப் பதிப்பித்த ஷாஹுல் ஹமீத் அப்பா மற்றும் வைத்தியர் சேட் இஸ்மாஈல் – ஆகிய மறைந்த பெரியார்களும், நம் சமகாலத்தில் வாழ்ந்து வரும் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் காக்கா (அல்லாஹ் நோய் நொடியற்ற வாழ்வாக அவர்கள் வாழ்வை நீடித்தருள்வானாக!) ஆகியோரெல்லாம் தேடித் திரட்டிய நூல்கள் எங்கே போயின?
‘முத்துச்சுடர்’ டிசம்பர் 2014 இதழில், ‘காயல் ஷாம் ஷிஹாபுத்தீன் ஒலி (ரலி)’ என்ற தலைப்பில் பக்கம் 21 முதல் 25 வரை வெளியாகியுள்ள - புலவர் கவிஞர் அபுல் பரக்காத் எம்.ஏ. அவர்கள் எழுதிய கட்டுரையில், ஷாம் ஷிஹாபுத்தீன் மகான் எழுதியது மொத்தம் 64 பாமாலை நூல்கள் என்றும், அவற்றுள் 31 பாமாலை நூல்கள் இன்று ஆங்காங்கே காணக் கிடைப்பதாகவும் கூறுகிறார். அந்த 31 நூல்களின் பெயர்களையும் அக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார்.
இதே இதழில், ‘மண் மணம் - தகவல் களஞ்சியம் 6’இல் பெரிய பீயெஸ் கூறுகையில், காயல்பட்டினம் மகுதூம் தெருவில், 1903இல் புலவர் வீட்டில் செண்பகத் தமிழ் அரங்கு நடந்ததாக பக்கம் 26, 27இல் ஆதாரம் காட்டுகிறார்கள். இவை சிறப்பான தகவல்களாகும்.
‘முத்துச்சுடர்’ மாத இதழின் நிறுவனர் மறைந்த எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம், அதன் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்கு அலீ ஹாஃபிஸா, ‘ஷாம் ஒலி ஊழியர்’ எஸ்.கே.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் ஆகியோரும் நிறைய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தனர்.
இவ்வாறு வாழ்ந்து மறைந்தவர்களின் இல்லங்களிலும், வாழ்ந்து வருவோர் இல்லங்களிலும் சென்று, அங்குள்ள நூல்களை கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் விலை கொடுத்து வாங்கி, ஓரிடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். கிடைத்த நூல்களின் பிரதியைப் படம் பிடித்து, இணையதளத்தில் எழுதிப் பாதுகாத்து வைக்க வேண்டும். இனியும் மறந்தோமானால், அவையெல்லாம் காலத்தால் மறைந்து அழிந்துவிடும்.
இந்தப் பணியைச் செய்திட, ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் எம்.ஏ. தலைமையில் குழு அமைத்து, அதில் இணையதள இலக்கிய ஆர்வலர்களான மக்கி நூஹுத்தம்பி, இக்ராஃ தர்வேஷ் முஹம்மத், டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், என்.எஸ்.இ.மஹ்மூது, எம்.என்.எல்.ரஃபீக், முத்துச்சுடர் ஸாலிஹ் ஆலிம், சாளை நவாஸ், இலங்கை ஷாஜஹான் துரை, துளிர் ஷேக்னா, எஸ்.இ.அமானுல்லாஹ், காயல் மகபூப் ஆகியோரை ஆலோசகராகப் போட்டு பணி செய்யும்போது நானும் இணைந்துகொள்கிறேன். காலத்தால் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை துவங்க வேண்டும். இது ஊருக்கு செய்யும் மகத்தான பணியாகும். |