எனது இல்லத் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக டிசம்பர்-24, 2014 அன்று விடுமுறையில் நான் ஊர் வந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு நமதூரில் பெய்து தீர்த்த பெருமழையின் தாக்கமும் அதனால் ஏற்பட்ட மழை நீர்த்தேக்கமும், பாசிபடிந்த வெட்டை வெளியும், இன்றும் குளங்குட்டைகளாகக் காட்சியளிக்கின்றன. விடாது பெய்த அடைமழை புறநகரைப் புரட்டி எடுத்தது ஒருபுறமிருக்க நகரின் உட்பகுதிகளிலும் அதன் கோரத் தாண்டவத்தின் ஈரச்சுவடுகளைக் என்னால் காண முடிந்தது.
காயலின் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த பேமாரியால் வீதியெங்கும் வெள்ளக்காடு, வீடிழந்து வாடியோர் பலர், பள்ளிவாசல்களில் புகுந்த வெள்ளம் படைத்தவனை வணங்கக் கூட இடையூறாய் நின்று இடம் தர மறுத்தது. மையவாடிகளில் மூட்டளவு நீர் இருக்க இறந்தவர் உடலை அடக்கம் செய்யக் கூட இயலாத நிலை. நகர்நல அமைப்புகளால் வழங்கப்பட்ட அன்னதானமும், அவசரகதியில் நடந்தேறிய ஆயத்தப் பணிகளும் ஆங்காங்கே நடந்த வண்ணமிருந்ததை நாம் அறிவோம். பள்ளிகள் விடுமுறை, பகல் இரவு என்று பாரமல் சதா பெய்த மழையால் பாதைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேசமாய்க் காட்சியளித்த காயலில் வற்றாத தண்ணீரும் வாடியோர் தம் கண்ணீரும் வாழ்நாள் முழுக்க நம்மால் மறக்க இயலாது.
கனமழையால் கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடக்க, வியாபாரிகளுக்கும் பெரும் இழப்பு. அவசரத் தேவைக்குக் கூட எங்கும் செல்ல இயலாத சூழல். வழியெங்கும் தேங்கிய நீரால் விழி பிதுங்கி வர மறுக்கும் வாகனங்கள், விழுந்த இடியால் இறந்து போன இன்வெர்ட்டர்கள், தொலைந்து போன தொலைக்காட்சிகள், அறுந்த விழுந்த மின் கம்பிவடங்கள், சரிந்து விழுந்த மரங்கள், உடைந்து போன கழிவுநீர்த் தொட்டியின் மூடிகள் என அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு காயலர்கள் அடைந்த துன்பமும், துயரமும் கொஞ்சம் நஞ்சமல்ல.
நாளுக்கு நாள் மழை வலுக்கவே, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கைவிட்டு அள்ளும் அளவிற்கு கிணறுகளில் நீர் நிரம்பி வழிந்தன.
ஒட்டுமொத்த காயலும் குட்டித் தீவாய் மாறி, நீர் வழிந்தோட வழியின்றி திக்குமுக்காடித் தவித்தது. நகராட்சியும் தம் பங்கிற்கு கனரக இயந்திரத்தால் நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் இருந்து வடிகாலுக்கு செல்ல வீதியோரங்களில் பள்ளம் தோண்டியது.
உள்ளூர் நிலை இதுவெனில் புறநகர் நிலை இன்னும் கொடுமையாக இருந்தது. கோயில்கள் யாவும் குளத்தின் நடுவில் குடியிருக்க மிதக்கும் வீடுகளில் வசிக்க வழியின்றி இடம்பெயர்ந்தோர் ஏராளம். நமதூர் தொலைபேசி நிலையம் (எக்ஸ்சேஞ்சிற்கு) படகில்தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு சூழ்ந்துள்ள தண்ணீரால் அது, ஏதோ தாமிரபரணி ஆற்றுக்கு நடுவில் அமைந்துள்ள கல் மண்டபம் போல் காட்சியளித்தது.
கடந்த ஆண்டு நமதூர் புறவழிச்சாலையிலிருந்து கூலக்கடை பஜார் வழியாக கே.எம்.டி.மருத்துவமனைக்கு வலப்புறம் உள்ள ஓடை வரை நகராட்சி மூலம் மழை நீர் வடிகால் சிமெண்ட் ஓடை அமைக்கப்பட்டது ஓரளவிற்கு நல்ல பலன் தந்தது எனலாம். இல்லையெனில் வழிந்தோட வழியின்றி காயலே மூழ்கியிருக்கும்.
மழை நீர் பாதையை வெட்டி விடுவதில்தான் எத்தனை பிரச்சனைகள்? மேற்குப் பகுதி குடியிருப்புக்கள் யாவும் நீரில் தத்தளிக்க கிழக்குப் பகுதி வழியாக கடலுக்கு வெட்டி விட சாலையின் குறுக்கே குழாய் பதித்தபோது அப்பகுதியில் நீர் தேங்கும் என்பதால் அங்கு வசிப்போர் அதை தடுத்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, வழியின்றி பாதிக்கப்பட்டோர் மண்வெட்டி, கடப்பாறை என களத்தில் இறங்க பிரச்சனை உருவானது. மாவட்ட ஆட்சியரும் நகராட்சி ஆணையரும் மக்களை சமாதானப்படுத்தினர். மழைநீரால் அவதிக்குள்ளானோர் மாற்று வழி தெரியாமல் மலைத்துப் போய் நின்றனர்.
ஏன் இந்த நிலை? இந்த மழைக்கே தாக்குப் பிடிக்க இயலாத காயல் இனி வருங்காலங்களில் இதை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
முன்னொரு காலத்தில் இதை விடவும் அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. அன்று ஏன் காயல் மூழ்கவில்லை? ஏன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை? இன்று மட்டும் ஏன் இந்த அவல நிலை? தொலைநோக்குத் திட்டங்களும், ஆக்கப்பூர்வமான பணிகளும் இல்லாமைதான் இதற்குக் காரணம்.
வெட்டைகள் யாவும் வீடுகளாக மாறிவிட்டன. பொட்டல் வெளிகள் கூட மனைகளாக விற்கப்பட்டு, வீடுகள் கட்டி புதிய பல குடியிருப்புக்களும் வந்துவிட்டன. மழைநீர் வடிகால்கள் மேடுபடுத்தப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் உருமாறிப் போயிற்று. வரைபடத்தில் இருந்த குளங்கள் யாவும் காணாமல் போயின. ஓடைகள் எல்லாம் ஒழிந்து ஓமடிந்து போயின. எனவேதாம் போக்கிடமின்றி தவித்த மழைநீர் தம் போக்கில் புகுந்து விளையாடி உள்ளது.
மாதங்கள் உருண்டோடியும் மழைநீர் இன்றளவும் கூட புறநகரில் வற்றிய பாடில்லை! ஊருக்கு வெளியே உள்ள குளங்களில் ஊற்று போல் நீர் பெருகி புற நகருக்குள் புகுவதை நான் எனது கண்ணால் கண்டேன். அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை என்பதை - கைக்குழந்தையுடன் முட்டளவு நீரில் கடந்து செல்லும் ஒரு பெண்மணியைக் கண்டு உணர்ந்து கொண்டேன்.
புகைப்படம் எடுப்பதற்காக சில நிமிடங்கள் மட்டுமே தண்ணீரில் நின்ற எனக்கு அன்று முழுவதும் கால்களில் அரிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானேன். அன்றாடம் தேங்கிய தண்ணீர்ல் நடந்து செல்லும் அம்மக்களின் நிலை எண்ணி வருந்தினேன். விதவிதமான பூச்சிப் புழுக்கள், இதுவரை கண்டிராத மீன்கள், வினோத உயிரினங்கள் என பலவற்றை தேங்கிக் கிடக்கும் பச்சை நிற தண்ணீரில் என்னால் காண முடிந்தது. இதனால் கொசுத்தொல்லையும், கொடிய நோய்களும் வர வாய்ப்புள்ளது.
தெருவோரம் குப்பை கொட்டுதல், குழி வெட்டி பள்ளம் ஏற்படுத்துதல் போன்ற - மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளை நம்மால் தடுத்து நிறுத்த இயலும். ஆனால் இயற்கையின் சீற்றத்தை எவ்வாறு எதிர்கொள்ள இயலும்? முறையான முன்னோக்குத் திட்டமும், செயல்வடிவமும் இல்லாத நிலையில் இதுபோன்ற இன்னல்களுக்கு இன்னும் நாம் ஆளாகத்தான் வேண்டும்.
அரசு வகுக்கும் திட்டங்களும், அதன் சட்டங்களும் பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டவை. அவை சரியாகத்தான் உள்ளன. ஆனால் அவற்றை நாம் முறையாகப் பின்பற்றுகின்றோமா என்பதுதான் இங்கு கேளவிக்குறியே!
நாம் அனைவரும் அறிந்தோ, அறியாமலோ ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு சில விதிகளை மீறிக்கொண்டேதான் இருக்கின்றோம். இதில் நகராட்சியை மட்டும் குறை கூறிப் பயனில்லை! அரசு ஊழியர்களும், அதன் அதிகாரிகளும் பல தருணங்களில் விலை போவதுதான் இத்தகைய இடர்களுக்கு மிக முக்கிய காரணம்.
>> அரசு விதிகளின் படி மழைநீர் வடிகால் பகுதிகளில் மனைப் பட்டா வழங்குதல் கூடாது.
>> காணாமல் போன குளங்களைக் கண்டறிந்து அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் தேங்க வழி செய்தல் வேண்டும்,
>> ஓடைகளை மீட்டெடுத்து அவற்றை தூர் வாரி துப்புரவு படுத்த வேண்டும்,
>> கோடைகாலங்களில் தொடர் பணி செய்து மழைக்காலத்திற்கு முன்பாக அப்பணிகளை நிறைவு செய்தல் வேண்டும்.
>> பொதுமக்களாகிய நாமும் அரசு விதிகளை மதித்து அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்காமல் வீட்டு வசதி வாரியம் நமக்கு அனுமதித்த வரையறைக்குள் நாம் நம் மனைகளில் வீடுகள் கட்ட முன் வர வேண்டும்.
ஆக, இந்த மழை நமக்கு அளித்துள்ள பாடம் யாதெனில், எது மேடான பகுதி? எது தாழ்வான பகுதி? எங்கு நீர் தேங்கும்? எங்கு நீர் போகும்? என்பதை தெள்ளத் தெளிவாகப் படம் போட்டு நமக்கு விளக்கிச் சென்றுவிட்டது.. மழை நீரை அதன் பாதையில் செல்ல விடாமல் நாம் மனைகள் கொண்டு தடுத்தால் இதுதான் வினை என்பதையும் உணர்த்திச் சென்றுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய இடர்களில் இருந்தும் இழப்புகளில் இருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
[இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள படங்கள், 2014 டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டவை.] |