சென்னை, மதுரை...... ஏன், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குச் செல்வது என்றால் கூட எனக்குப் பிடிப்பதேயில்லை. காரணம் நகர்ப்புற வாழ்வின் பரபரப்பை என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. என்றாலும், சில காலமாக சென்னைக்குச் செல்வதில் மட்டும் கொஞ்.....சம் ஆர்வம். அதற்குக் காரணம் என் பாசத்திற்குரிய தம்பி குளம் முஹம்மத் தம்பி, சகோதரர் சாளை பஷீர் உள்ளிட்ட சிலரின் உறுதுணையுடன் - சென்னையில் எனது ஓரிரு நாட்கள் பயணத்தை முற்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வேன். பரபரப்பான அந்த ஊரிலும் கூட ஒரு தோப்புக் குளியல், ஒரு கபாப் இஸ்த்தல், சில உறவினர்கள் - நண்பர்களைச் சந்தித்தல் ஆகிய இன்பமூட்டும் நிரல்களுடன், நான் எதற்காகப் பயணித்தேனோ அதையும் சாதித்துக் கொள்வதும், திட்டமிடப்பட்ட பணிகள் நிறைவுற்ற பின் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், கிடைத்த வாகனத்தில் புறப்பட்டு ஊர் வந்து சேருவதும் வழமையாகிவிட்டது.
அந்த அடிப்படையில், சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் காண காயல்பட்டினத்திலிருந்து நானும், நண்பர் முஜாஹித் அலீ, எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் நெல்லை விரைவுத் தொடர்வண்டியில் சென்னைக்குக் கிளம்பிச் சென்றோம். இலங்கை - மீள்பார்வை மாதமிருமுறை இதழின் துணையாசிரியர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீனை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற பின், மண்ணடியில் இரண்டு அறைகள் எடுத்து தங்கினோம். எம் குழுவினருடன், சகோதரர் சாளை பஷீரும் இணைந்துகொண்டார்.
எழுத்தாளர்கள், இலக்கியப் படைப்பாளிகளுடன் அவர்களது இல்லங்களில் சிறப்பு சந்திப்பு, புத்தகக் கண்காட்சியில் சந்திப்பு என பல புகழ்பெற்ற இலக்கியவாதிகளையெல்லாம் சாதாரணமாகக் கண்டு கருத்தறிந்து வந்தோம்.
மொத்தம் மூன்று நாட்கள் சென்னையில்... புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பிடித்த நம்மாழ்வார் அய்யாவின் வானக நிர்வாகிகளால் நடத்தப்படும் இயல்வாகைப் பதிப்பகம் உட்பட எல்லாப் பதிப்பகங்களின் லட்சக்கணக்கான நூல்களையும் இடது - வலது புறங்களில் தலையைத் திருப்பி, ஓரக்கண்களால் விழுங்கினோம். சில நூற்களைக் காசு கொடுத்து வாங்கவும் செய்தோம்.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள் என பலர் அங்கே - ஏதோ நம்ம ஊர் குத்துக்கல் தெருவில் நண்பன் செம்பருத்தி இப்றாஹீமைச் சந்திப்பது போல மிகவும் எளிதாகவும், இயல்பாகவும் காட்சியளித்தனர்.
நிறைவு நாளன்று, என்னோடிருந்த அனைவரும் மீண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் படையெடுக்க, நானோ கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற அனாட்டமிக் தெரபி எனும் செவிவழி தொடு சிகிச்சை கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டேன். (கொஞ்......சம் ஃப்ளாஷ் பேக் போய்விட்டு வருவோம்...)
என் குழந்தைப் பருவம் தொட்டு, பதின்பருவம் தொடர்ந்து தற்போதைய ‘இளம்’பருவம் வரை, எனக்கு நோய் வந்தால் அதோடு சண்டை பிடிப்பது என் வழமை. காய்ச்சல், தடுமல், இருமல் என எப்போதாவது என்னைத் தேடி வரும் நோய்கள், “ஹூம்... போயும் போயும் இவனைத் தேடியா நாம வந்தோம்...?” என்று அலுத்துக்கொள்ளும் அளவிற்கு, அவற்றை என் மனதால் வெறுக்கடிப்பேன். மருந்து, மாத்திரைகளைப் பெரும்பாலும் தீண்டுவதில்லை. சில நேரங்களில் உறவினர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக எனது போராட்டத்தை அவ்வப்போது நான் தற்காலிகமாக ஒத்திவைத்துக்கொள்வதுமுண்டு!
இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில் ஏதாவது நிழல் தரும் மரங்களைக் கண்டுவிட்டால், சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அங்கே அமர்ந்துவிட்டோ, சிறிது படுத்துறங்கிவிட்டோ வருவேன்... ஓடும் தண்ணீரைக் கண்டால், (நான் ஆயத்தமாக வரவில்லையென்றாலும்) ‘தற்காலிக’ ஏற்பாடுகளுடன் குளித்து இன்புற்றுவிட்டுத்தான் அடுத்த வேலையில் நாட்டம் காண்பிப்பேன். (இப்படியே சொல்லிக்கொண்டு போனால், இதுவே பல கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.)
இவ்வாறு இருந்த எனக்கு, கடந்த சில ஆண்டுகளாக - சகோதரர் சாளை பஷீர், செம்பருத்தி இப்றாஹீம் உள்ளிட்ட எங்கள் கடற்கரை நண்பர் வட்டத்தின் தொடர் உரையாடல்கள் காரணமாக, மாற்றுமுறை வாழ்வியல் பால் இனம் காணப்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவே, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற - இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார் அய்யா அவர்களது வாழ்வின் கடைசி முகாமில் பங்கேற்றதும், அதன் பிறகு அது தொடர்பான எனது இரண்டு கட்டுரைகளும்.
இத்தனை நாட்கள் முறையான திட்டங்கள் எதுவுமின்றி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட எனக்கு, இந்த முகாமைத் தொடர்ந்து - இயற்கை வாழ்வியல் நெறியின் பால் அறிவு சார்ந்த பேணிக்கை ஏற்பட்டது. (ஃப்ளாஷ் பேக் முடிவு!)
சில வாரங்களாக ஹீலர் பாஸ்கர் அவர்களின் அற்புதமான உரைகளை YouTube இணையதளத்தில் மனைவி, மக்களோடு பார்த்து வந்தேன். (அவரைப் பற்றி அறியாதவர்கள், இக்கட்டுரையின் நிறைவில் அறிந்துகொள்வர்.)
உறவினர் ஒருவரது உடல் நலக் குறைபாட்டிற்குத் தீர்வு கேட்பதற்காக ஹீலர் பாஸ்கர் அவர்களின் அலுவலகப் பொறுப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் சென்னையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரிலேயே சந்தித்து விளக்கம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
“நாமும் சென்னையில்தானே இருக்கிறோம்...? புத்தகக் கண்காட்சியைத்தான் இரண்டு நாட்கள் பார்த்தாகிவிட்டதே...? இன்று மட்டும் திட்டத்தை மாற்றிக்கொள்வோம்” என்று கருதி, என் குழுவினரை விட்டுப் பிரிந்து, தனியாக மெட்ரோ ரயிலேறி தாம்பரம் சானட்டோரியம் நிலையத்தில் இறங்கி, சில நிமிடங்கள் நடந்து, நிகழ்விடம் சென்றடைந்தேன்.
இங்கே ஒரு தகவலைக் குறிப்பிட்டாக வேண்டும். நமதூரில் நகர்நலச் சேவைகள் ஆற்றிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற வேகம் அனைத்துலக காயல் நல மன்றங்களிடமும் காணப்படுகிறது. அதன் தாக்கமாக, நகரில் பல்வேறு மருத்துவ முகாம்கள், கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் செய்து வரும் இச்சேவைகளுக்கு இறைவனிடம் நிறைவான நற்கூலிகள் அவர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
எனினும், மருத்துவ முகாம்களை நடத்தியதன் மூலம் - அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று வந்த அல்லது இதுவரை அறவே சென்றிராத பொதுமக்களை சில மருத்துவர்களின் அல்லது மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக ஆக்கி விட்டோமோ என்ற குற்ற உணர்வு என் மனதை நீண்ட காலமாக வருத்திக்கொண்டே இருந்தது. இதற்கு விடை காணும் நோக்குடன், நான் பிரதிநிதியாக இருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் நண்பர் ஃபாஸுல் கரீம், அதன் துணைத்தலைவர் நண்பர் முஹம்மத் யூனுஸ் ஆகியோருடன் இதுகுறித்து பலமுறை கலந்துரையாடினேன்.
அம்மன்றம் சார்பில், அண்மையில் நமதூரில் நடைபெற்ற உள்ளூர் கலந்துரையாடல் கூட்டத்தில், மாற்றுமுறை மருத்துவ முகாம்கள், சிறுதானிய உணவுத் திருவிழா, பாரம்பரிய வாழ்க்கை முறையின்பால் மீளல் உள்ளிட்ட அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டு நானும், சகோதரர் சாளை பஷீர் அவர்களும் அம்மன்ற அங்கத்தினரிடம் உரையாடினோம்.
இவ்விரு உரையாடல்களின் நிறைவிலும், எமது ஆதங்கத்தில் நியாயமிருப்பதாகக் கூறிய பங்கேற்பாளர்கள் கத்தரில் நடைபெற்ற முறைப்படியான மன்றக் கூட்டத்திலும் இவ்வகையிலான மாற்றுமுறை மருத்துவ மற்றும் வாழ்வியல் நிகழ்ச்சிகளை நடத்திட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அண்மையில், KCGC அமைப்பின் சார்பில் நடைபெற்ற இன்பச் சிற்றுலாவிலும் இது தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அதில் பங்கேற்றோர் கூறியது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது.
துவக்கமாக இந்த ஹீலர் பாஸ்கர் அவர்களை நமதூருக்கு வரவழைத்து முகாம் நடத்துவது குறித்து, கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் நிறைவில் அவரிடம் நான் விருப்பம் தெரிவிக்க, நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்ட பின் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அடிப்படைச் செலவினங்கள், உள்ளூரில் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பார்த்துக்கொள்ளுமாறும், தனக்கென வேறெந்த ஊக்கத்தொகையும் தரத் தேவையில்லை என்றும் அவர் கூறியதே எனக்கு ‘வழமை’க்கு மாற்றமாகப் பட்டது.
10.00 மணி முதல் 18.00 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கில், மதிய உணவு இடைவேளைக்குப் பின்புதான் என்னால் கலந்துகொள்ள முடிந்தது. “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!” என்று துவங்கிய மனிதர் பேசினார், பேசினார்... பேசிக்கொண்டேயிருந்தார். பொதுவாக நீண்ட நேரம் உரையாற்றுவோர் எவ்வளவு ஆர்வமூட்டும் வகையில் பேசினாலும், அதிகபட்சம் 40 நிமிடங்களுக்கு மேல் சென்றால் மனித வாய் மரணிக்காமலே பிளக்கும் என்பது உலகப் பொது நியதி. ஆனால், இவர் பேசப் பேச, எங்கே நிறுத்திவிடுவாரோ என்ற எண்ணமே மேலோங்கியது - எனக்கு மட்டுமல்ல; அங்கிருந்த எல்லோருக்கும்தான்!
நோய்களை இரண்டாகப் பிரிக்கிறார்... உடலில் தானாக வரும் நோய், தேடிப் பெறும் நோய். சர்க்கரை, இரத்த அழுத்தம், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற அனைத்தும் தானாக வருவது; வெட்டு, கீழே விழுவதால் ஏற்படும் காயம் போன்றவை தேடிப் பெறும் நோய்களாம். தானாக வரும் நோய்களை - மருந்து, மாத்திரைகளின்றி - அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை முறைப்படுத்திக்கொண்டால் தானாகவே போக்க இயலும். தேடிப் பெறும் நோய்களுக்குத்தான் அலோபதி, சித்தா, ஹோமியோ என மருந்துகள் தேவைப்படும் என்கிறார்.
எல்லா நோய்களுக்கும் அடிப்படை 5 அம்சங்கள் என்று கூறிய அவர், (1) இரத்தத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் குறைபாடு, (2) இரத்தத்தில் ஒரு பொருள் முற்றிலும் இல்லாமல் போதல், (3) இரத்த அளவு குறைவு, (4) மனம் கெட்டுப்போதல், (5) உடல் செல்கள் அறிவற்றுப் போதல் ஆகியவைதான் அந்த ஐந்து அம்சங்கள் எனப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றுக்கும் மனங்கவரும் வகையில் மணிக்கணக்கில் விளக்கமளித்தார். ஏதோ, நம் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்து, நமது நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்துக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது போலிருந்தது அவரது பேச்சுக்கள்.
சாப்பிடும் ஒழுங்குகளைக் கூறுகிறார்: சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும்... நன்கு மென்று, எச்சிலுடன் முழுமையாகக் கலக்கவிட்டு, கூழாக்கி விழுங்க வேண்டும்... இடையில் நீர் அருந்தக் கூடாது... சாப்பிடும்போது பேசக் கூடாது... உணவை உணர்ந்து, உணவை மட்டுமே எண்ணத்தில் முழுமையாகக் கொண்டு உண்ண வேண்டும்... உணவு, நீர் தவிர காற்றுக்கும் இடம் வைக்க வேண்டும்... குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு உணவுண்ணக் கூடாது... உணவுண்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது... இப்படிப் பல!
நீர் அருந்தும் ஒழுங்குகளைக் கூறுகிறார்: பாத்திரத்தில் வாய் வைத்து அருந்த வேண்டும்... ஒரு வாயில் உட்செலுத்தும் நீரை, நான்கு விடுத்தங்களாக உள்ளே அனுப்ப வேண்டும்... வாய்க்குள் நீரைச் சிறிது நேரம் வைத்திருந்து, எச்சில் கலக்கவிட்டு விழுங்க வேண்டும்... நன்கு சப்பிக் குடிக்க வேண்டும்... இப்படிப் பல! மொத்தத்தில், இன்றைய நாகரிக உலகத்தில் எதையெல்லாம் அநாகரிகமாக (இன்டீஸன்ட் என்று கூறி) தவிர்த்து வந்தோமோ அவையனைத்தையும் செய்யச் சொல்கிறார்.
ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, க்ரைண்டர், ஹீட்டர், மோட்டார் பம்ப் செட், இன்டக்ஷன் அடுப்பு, எரிவாயு அடுப்பு போன்றவற்றின் பரவலுக்கு முன்பு நாம் நம் உடலைச் சுழற்றிச் செய்த அனைத்தையும் மறந்ததன் விளைவுதான் இத்தனைக்கும் காரணம் என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார்.
“இருந்தாலும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை... உடம்பில் மொத்தம் 9 வகை joints மூட்டுகள்தான் உள்ளன. அவற்றைச் சுழற்றி சிறிது இயக்கினாலே போதும்” என்று கூறி, தான் அமர்ந்திருந்த மேசையில் எழுந்து நின்று, 10 நிமிடம் செய்யத்தக்க ஓர் உடற்பயிற்சியைச் செய்து காண்பித்தார். (ஒரு குட்டி டான்ஸே ஆடினார்!) அப்பயிற்சிக்குள் அத்தனை மூட்டுகளும் சில நிமிடங்களில் சுழற்றி அசைக்கப்படுகிறது.
அவர் பேசப் பேச, கேட்டுக்கொண்டேயிருந்த எனக்கு - “ஆமா... இதையெல்லாம் ஏற்கனவே எங்கோ கேட்ட மா........திரி இருக்கே...?” என்று எண்ணியபோதுதான் உணர்ந்தேன் - அனைத்துமே பாலர் பருவத்தில் நான் ஹாமிதிய்யாவில் கற்ற மார்க்க ஒழுக்க நெறிமுறைகளில் உள்ளவைதான் அவை என்பது.
இக்கருத்துக்கள் புதியவர்கள் பெயரில் வெளிப்பட்டால்தான் நம் கவனம் கூர்மையாகிறது. “கால ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்...)” என்று நான் துவங்கினால், பல கம்ப்யூட்டர்கள் ஒன்று ஷட் டவுன் ஆகும் அல்லது வேறு இணையதள பக்கங்களை நாடும். என்ன செய்வது? காலம் செய்த கோலம்!
கருத்தரங்கம் நிறைவுற்று வெளியே வந்து, அங்கே தொங்க விடப்பட்டிருந்த பதாகைகளையும், பரத்தப்பட்டிருந்த கடைகளையும் பார்த்தேன். ஹீலர் பாஸ்கர் அவர்களின் மொத்த உரைகளையும் உள்ளடக்கிய “அனாட்டமிக் தெரபி - செவிவழி தொடு சிகிச்சை” எனும் தலைப்பிலான பெரிய நூல், அவரது உரைகளைக் கொண்ட டிவிடி குறுந்தகடுகள் என ஓர் ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினேன்.
அவரது உரையிலும் கூறினார்... பதாகையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது: இந்த டிவிடிகளை யாருக்கு வேண்டுமானாலும் பிரதி எடுத்துக் கொடுக்கலாம்... காப்புரிமை கிடையாது...
“எல்லாத் துறைகளும் வணிகக் கோணத்தில் (கார்ப்பரேட் தன்மையில்) பார்க்கப்படும் இக்காலத்தில் இப்படியும் இருக்கிறார்களா...?” என்று வியந்தே போனேன்.
சென்னைப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஷுஅய்ப் காக்காவை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு, நான், நண்பர் முஜாஹித், எழுத்தாளர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் ஆகிய மூவரும், கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று, நண்பர்கள் ஜாவித், களவா இப்றாஹீம் குழுவினரின் துணையுடன் அருகேயுள்ள மலைப் பகுதியான வயநாட்டில் இரண்டு நாட்கள் தங்கி, இயற்கையை ஆசை தீர கண்களாலும், மனதாலும் விழுங்கிவிட்டு ஊர் திரும்பினோம்.
திரும்பிய வேகத்தில், நமதூரில் “சேனல் 7” என்ற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை நடத்தி வரும் தம்பி எம்.எம்.ஷாஹுல் ஹமீதைக் கண்டு பேசி, ஹீலர் பாஸ்கரின் அரிய தொடர் உரைகளை ஒளிபரப்பக் கேட்டுக்கொண்டேன். உடனேயே இசைவு தெரிவித்ததோடு நில்லாது, இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்த விபரங்களை உள்ளடக்கிய பிரசுரத்தையும் ஜும்ஆவில் வினியோகிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். தற்போது, அன்றாடம் 11.00 மணி, 19.00 மணி என இரண்டு முறை ‘சேனல் 7’இல் ஒளிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்கு மேல் என்ன தேவை...? கேட்டாச்சி... கேட்டதைப் பகிர்ந்தாச்சி... வாழைப்பழத்தை உறித்து வாயிலும் வெச்சாச்சி... தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியைப் பார்ப்போர் நிச்சயம் நற்பயன் பெறுவர் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
எங்கள் குடும்பத்தில் ஒவ்வொன்றாக வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். உடல் கழிவுகளை வெளியேற்ற அங்கு பயிற்றுவிக்கப்பட்ட சில செய்முறைப் பயிற்சிகளைக் கடைப்பிடித்ததற்கு கண் முன் பலன் தெரிகிறது.
தூரப்பார்வை காரணமாக இத்தனை காலம் கண்களைக் கூசிக்கொண்டு பார்த்து வந்த எனக்கு தற்போது அந்தப் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது... சிறு வயதில், பள்ளியில் என் வகுப்பாசிரியர் முதுகில் அடிப்பார்... எனக்கு உடனடியாக இளைப்பு வந்து விடும். பள்ளிக்கு விடுமுறை எடுக்க அனுமதி என்பது என் தாயாரிடம் குதிரைக் கொம்புதான்... ஆனாலும், இந்த இளைப்பு வந்துவிட்டால், ஒரு 3 நாட்களாவது விடுமுறை எடுக்க வேண்டி வரும். அவ்வளவு அவதிப்படுவேன்... சில நாட்களுக்கு முன்பு வரை அந்த இளைப்பு எனக்கு இருந்தது... எனினும், முதுகில் அடிக்க வாத்தியார் இல்லாததால் பெரும்பாலும் வெளியில் தெரியவில்லை... எனினும், நீண்ட பெருமூச்சை இழுத்தால் இளைப்பதை உணர முடிந்த எனக்கு, தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை... கொஞ்சங்கொஞ்சமாக உடல் எடையும் குறைந்து வருகிறது... அந்தந்த வேளைகளில் பசி எடுக்கிறது. பசித்த பின் புசிப்பதால், உண்ணும் உணவு எளியதாயினும் எல்லையற்ற இன்பம் கிடைக்கிறது.
“சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல! அதற்காக லேப் டெஸ்ட், மருந்து - மாத்திரைகள் எல்லாம் அவசியமே இல்லை... அவையனைத்தும் நம்மை நிரந்தரமாக அவற்றுக்கு அடிமையாக்கும் செயலே...! ஏற்கனவே மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருவோர், இன்சுலின் போட்டுக்கொள்வோர் - நான்கு வருடங்கள் மருந்து எடுத்திருந்தால் நான்கு மாத கால அளவில் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைத்து, முற்றிலும் மருந்தே சாப்பிடாமல் நோயின்றி வாழலாம்... அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம்... நான் சொல்லும் முறைப்படி உண்டு, பருகி, உடல் உழைப்பு செய்து, வாழ்க்கை நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொண்டால், வாழ்நாளெல்லாம் வியாதியின்றி நிம்மதியாக வாழலாம்... மருந்து மாத்திரைகளுக்கும் குட்பை சொல்லலாம்...” என்று அழுத்தமாகக் கூறினார்.
அதில் பெற்ற நம்பிக்கை காரணமாக, தற்போது என் குடும்பத்தில் சர்க்கரை நோய்க்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்போருக்கு பாடம் நடத்தத் துவங்கியுள்ளேன். அவர்களும் இயங்கத் துவுங்கியுள்ளனர். இறைவன் அதில் நல்ல பலனைத் தருவான்... தந்த பிறகு அந்த நல்ல செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசையும் உள்ளது! இத்தனை நாட்கள் கணினியில் ‘பிஸி’யாக இருந்த நான் - என் மனைவி பேச்சைக் கேட்டு, வாஷிங் மெஷினில் அரைகுறையாகத் துவைத்து அணிந்த எனது உடைகளை, கடந்த 2 வாரங்களாக என் உடல்நலனைக் கருத்திற்கொண்டு - நானே கையால் துவைத்து, பளிச்சிடும் வெண்மையுடன் மணக்க மணக்க அணிகிறேன். கையால் துவைப்பதால், குனிந்து நிமிரும் எனக்கு ஹீலர் பாஸ்கர் சொல்லித் தந்த உடற்பயிற்சி தேவையில்லை என்றே படுகிறது...
எழுத்தில் ஓரளவுக்குச் சொல்லிவிட்டேன். இறைவன் நாடினால், மன்றங்கள் துணையுடன் சேவை நடவடிக்கைகள் துவங்கலாம், தொடரலாம். நமதூர் காயல்பட்டினத்தில் இந்நிகழ்ச்சியை நடத்திடுவது குறித்து உங்கள் கருத்தைக் கூறுவீர்களா...?
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! |